17/09/2017

கடந்து வந்த பாதைகள்--- களஞ்சியம் கவிதைப் போட்டி-71 (வெற்றிக் கவிதை)

71வது கவிதைப்போட்டியில் என் கவிதையை முதலாவதாகப் தேர்வு செய்த நடுவர் திரு. கோபிநாத், சேலம், அவர்களுக்கு என் மனம், மொழி மற்றும் மெய்யால் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் எமக்கு வாய்ப்பளித்த தமிழ்ப்பட்டறை தளத்திற்கும், தலைவர் சேக்கிழார் அப்பாசாமி ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.












கடந்து வந்த பாதைகள்
********************
தமிழினமே! தமிழினமே!
தன்மானத் தமிழினமே!
தனிமனிதத் துதியாலே
தனைமறந்த தமிழினமே!


கடந்துவந்த பாதைதனை
மறந்துவிட்ட தமிழினமே!
நடந்துவந்த சுவடிகளை
தொலைத்துவிட்ட தமிழினமே!

அறிவு செல்வம் வீரமென்று
அனைத்திலுமே முதன்மை கொண்டு
அகிலத்தையே ஆட்டிவைத்த
ஆளுமையை ஏன் மறந்தாய்?

செறிவுநிறை நூல்கள் கொண்டு
செழுமைமிகு சிந்தை கொண்டு
செங்கோலில் தமிழ் பிடித்து
செலுத்தியதை ஏன் மறந்தாய்?

நீர் சேர்க்க அணையமைத்து
நீர் வடிய வழியமைத்து
நீர் செய்த மேலாண்மை
நீர் இன்று ஏன் மறந்தாய்?

வானுயர கோவில்கட்டி
கோனுயர கோட்டைகட்டி
ஊணுயற கூடம்கட்டி- இன்று
தானுயர ஏன் மறந்தாய்?

தமிழ்மூன்றும் கற்காமல்
தமிழ்மறையைப் பயிலாமல்
தமிழனாக நிற்காமல்
தமிழ்மரபை ஏன் மறந்தாய்?

கடந்துவந்த பாதைதனை
நினைந்திடுவாய் தமிழினமே!
குனிந்துகுனிந்து வீழாமல்
நிமிர்ந்துடுவாய் தமிழினமே!

------- செ. இராசா----
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1904554636530110/ 

No comments: