27/07/2017

அப்துல்கலாம் ஐயா நினைவாஞ்சலி



 (நாட்டுப்புறப் பாடல் வடிவில்)

ஐயாவபத்தி எழுத நானும்
ஆசை வச்சேங்க!
ஐயாமாரே பிழை இருந்தால்
என்னை மன்னியுங்க!

ராமேஸ்வரம் தீவு- நம்ம
புனித பூமிங்க!
ஐயா பிறந்ததாலே- அதுக்கு
இன்னும் பெருமைங்க!

பள்ளியிலே படிக்கும்போதே-பல
பணிகள் செஞ்சாருங்க!
படுத்தும்வறுமை வந்தபோதும்-அவர்
படிப்பில் கெட்டிங்க!

கல்லூரியில் படிக்க- ஐயா
திருச்சி போனாருங்க!
அதுக்கு மேல படிக்க- ஐயா
சென்னை போனாருங்க!

பணிகளிலே திறமையாக-நல்ல
புதுமை செஞ்சாருங்க
நம்மநாடு வளர்ந்திடத்தான்-ஐயா
நிறையா செஞ்சாருங்க!

செயற்கைகோள்கள் செஞ்சு- ஐயா
நிறைய விட்டாருங்க!
ஏவுகணைகள் செஞ்சு- ஐயா
ஏவி விட்டாருங்க!

நம்ம நாட்டு மூளையாலே- ஐயா
நாட்டை காத்தாருங்க!
ஆன்மீகமும் பேசி- ஐயா
அன்பு செஞ்சாருங்க!

பார்த்த நாடு எல்லாருமே
பயந்து போனாங்க!
கலாம் ஐயா பேரச்சொன்னால்
கலங்கிப் போனாங்க!

குடியரசுத் தலைவராக- ஐயா
சேவை செஞ்சாருங்க!
குறையில்லாத தலைவராக- ஐயா
சிறப்பு செஞ்சாருங்க!

அப்துல்கலாம் ஐயாவால
நமக்குப் பெருமைங்க!
அவருமட்டும் இல்லையினா
நிறைய இல்லீங்க!

எதிர்காலம் ஐயாபேர
நினைச்சு போற்றுங்க!
என்றைக்குமே ஐயா புகழ்
நிலைச்சு நிக்குங்க!

--------நன்றி--------

யார் அவர்?

அன்பின் உருவமவர்!
ஆற்றலில் அணுசக்தியவர்!
இளைஞர்களின் இதயமவர்!
ஈகையின் இருப்பிடமவர்!
உண்மையின் உறைவிடமவர்!
ஊழலின் எதிரியவர்!
எளிமையின் அடையாளமவர்!
ஏற்றத்தின் உச்சமவர்!
ஐயரில் ஐயரவர்! (ஐ- தலைவன்)
ஒரு குறையும் இல்லாதவர்!
ஓர் குறள்போல் உயர்ந்தவர்! (ஓர்- ஒப்பற்ற)
ஔதாரியம் (பெருந்தன்மை) நிறைந்தவர்!
அஃதே ஐயா அப்துல் கலாம்!


மதங்களைக் கடந்து
மனிதத்தால் உயர்ந்த
மகா ஆத்மா அவர்!
மனமாலே மொழியாலே
மகிழ்வோடு வணங்குகின்றேன்!

----- செ. இராசா-----

25/07/2017

செருப்பு தூக்கிய கிருஷ்ணர்


பாரதப் போரின் உச்சம்
பார்க்கும் கண்களில் அச்சம்!
பீறிடும் எரிமலைக் கனலாய்
பீஷ்மரும் பிணமலைக் குவித்தார்!

போரினில் ஐவரை அழிக்க
போட்டார் சபதம் பீஷ்மர்!
தர்மத்தின் நடுநிலை காக்க
தன்னிலை மறந்தார் பீஷ்மர்!

பதிகளைக் காத்திட வேண்டியே
பாஞ்சாலி கிருஷ்ணரை நாடினாள்!
சகலமும் அறிந்த கிருஷ்ணரோ
சகுனிபோல் திட்டமும் தீட்டினார்!

பீஷ்மரின் பாதத்தில் வணங்கியே
ஆசிகள் வாங்கிடக் கூறினார்!
பரிபோல் பார்வையை செலுத்தியே
அடிகளை வணங்கிடக் கூறினார்!

காலடி ஓசையைத் தவிர்த்திட
காலணி தவிர்த்திடக் கூறினார்!
திரௌபதி காலணி இரண்டையும்
திருக்கரம் பற்றியே கழற்றினார்!

கடவுளாய் இருந்த போதிலும்
கர்மத்தில் யோகியாய் மாறினார்!
பாதணி தூக்கியச் செயலினால்
பரதனைப் போலவே மாறினார்!

தீர்க்க சுமங்கலி ஆசியை
பீஷ்மரும் வரமெனத் தந்தார்!
யாரோ மாதென எண்ணியே
பீஷ்மரும் வாக்கினை வழங்கினார்!

ஆட்ட நாயகன் கிருஷ்ணனே
ஆட்டத்தின் போக்கை மாற்றினார்!
சபதத்தை வரமாய் மாற்றியே
சர்வத்தில் தர்மத்தை நிறுத்தினார்!

24/07/2017

எப்ப அண்ணே வருவீக--- எசப்பாட்டு

ஆத்தாள விட்டுப்புட்டு
அப்பனையும் விட்டுப்புட்டு
ஊருக்கு போன அண்ணேன்........
எல்லாரும் கேக்குறாக .....
எப்ப அண்ணே வருவீக....

காசு பணம் சேக்கனுன்னு
கண்ணாலம் கட்டனுன்னு
வெளிநாடு வந்தேன்டா....தம்பி
கருவாடு ஆனேன்டா.......
காசுதாண்டா சேரவில்லை....

என்னண்ணேன் சொல்லுறீக?..
விவசாயம் செத்துப்போச்சு......
காணி நிலமும் வித்து போச்சு
காசு பணம் வேணுமுன்னு
கடன்காரன் வர்ரான் அண்ணேன்.....

என்னடா தம்பி செய்யுறது........
நாலு வருஷம் ஓடிடுச்சு
நம்ம கடன் அடையலயே......!
ஊரு விட்டு வந்ததால
உள்ளதும் போச்சுதேடா..........?!

ஹைக்கூ (முதல் முயற்சி)

சர்க்கரை பதுக்கல்
தினமும் நடக்கிறது
சாரை சாரையாய் எறும்புகள்!



அடிக்க அடிக்க
சிரிப்புச் சத்தம்
கிரிக்கெட் போட்டி!



கத்தியால் கிழித்தும்
சிரிப்புச் சத்தம்
பிரசவ அறை!

மனமார்ந்த வாழ்த்துக்கள்

கவிதைகள் எழுதிடும் போட்டியிலே- இரு
கவிதைகள் எழுதியே பதிவிட்டேன்!
நேர்படப் பேசிடும் கவிதைகளாய்-சிந்தை
கூர்படத் தமிழால் பதிவிட்டேன்!


எதிர்பார்த்து எழுதிய போட்டியிலே-நான்
ஏனோ வெற்றியை ருசிக்கவில்லை!
கவிஞர்கள் எழுதிடும் போட்டியிலே-நான்
கிறுக்கிய எழுத்துக்கள் சிறக்கவில்லை!

குறைகள் உள்ளதாய் எண்ணவில்லை- நான்
நிறைகள் குறைந்ததாய் எண்ணுகின்றேன்!
குறைகள் இல்லாப் படைப்புகளை- நான்
நிறைவுடன் எழுதிட முயலுகின்றேன்!

தமிழினைக் காக்கும் தளங்களிலே-நான்
தமிழ்ப்பட்டறைத் தளமே சிறப்பென்பேன்!
பத்தரை மாற்றுத் தங்கமென- நான்
தமிழ்ப்பட்டறை தளத்தினை காணுகின்றேன்!

தமிழால் வென்ற கவிஞர்களை- என்
தமிழால் இங்கே வாழ்த்துகின்றேன்!
தமிழினை காத்திடும் அனைவரையும்-என்
தமிழின் மொழியால் வணங்குகின்றேன்!

வாழ்க வளமுடன் கவிஞர்களே!
வாழ்க வளமுடன் தமிழர்களே!
வாழ்க வளமுடன் தலைவர் அவர்களே!
வாழ்க வளமுடன் நிர்வாகிகளே!

----- செ. இராசா-----

நேர்படப் பேசு---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (63) பங்குபெற்ற கவிதை


நேர்படப் பேசு தமிழா- நீ
நேர்படத் தமிழால் பேசு!
கூர்படப் பேசு தமிழா-சிந்தை
கூர்படத் தமிழால் பேசு!


திராவிடம் பேசிடும் தமிழா- நீ
தமிழினம் வாழ்ந்திடப் பேசு!
மார்க்சியம் பேசிடும் தமிழா- தமிழ்
மார்க்கத்தின் பெருமையைப் பேசு!

குரலினை உயர்த்திடும் தமிழா- திருக்
குறளினை உரக்கமாய்ப் பேசு!
கம்பனை படித்திடும் தமிழா- தமிழ்க்
கவிஞனைப் பெருமையாய்ப் பேசு!\

சாதியை ஒழித்திடத் தமிழா- தமிழ்
சாதியென் சாதியெனப் பேசு!
சரித்திரம் திரும்பிடத் தமிழா- இனி
சகலரும் சமமெனப் பேசு!

நாவினை பழக்கிடத் தமிழா- தமிழ்
நாட்டிலே தமிழிலே பேசு!
வீரியம் விதைத்திடத் தமிழா-நீ
வீட்டிலே தமிழிலேப் பேசு!

தமிங்கலம் பேசிடும் தமிழா- நீ
தமிழினைச் சரியாய்ப் பேசு!
ஆங்கிலம் போற்றிடும் தமிழா- நீ
அதையாவது சரியாய்ப் பேசு!

மொழியினை கலந்திடும் தமிழா- நீ
மொழி வதை நிறுத்திப் பேசு!
கவிதைகள் படைத்திடும் தமிழா- நீ
கவிதையால் தழிழனைப் பேசு!

நேர்படப் பேசு தமிழா- நீ
நேர்படத் தமிழால் பேசு!
கூர்படப் பேசு தமிழா-சிந்தை
கூர்படத் தமிழால் பேசு!
-----------/////------/////---------


நேர்படப் பேசு (2வது படைப்பு)
**************************

நேர்படப்பேசு...நேர்படப் பேசு...
என்றும் எங்கும் நேர்படப் பேசு...

வாழ்க்கையில் தாழ்ந்திடும் நிலை வந்தாலும்
வாட்டிடும் வறுமையால் வதங்கி நின்றாலும்
நெஞ்சத்தின் நினைவிலே தாழ்ந்து விடாது
நெஞ்சினை நிமிர்த்தியே நேர்படப் பேசு!

கொற்றவன் ஆனவன் குற்றம் புரிகினும்
கூற்றுவன் போலவே நாடி வருகினும்
நேரிடும் இன்னலோ கோடி ஆகினும்
நேர்மையின் பார்வையால் நேர்படப் பேசு!

எதிரியின் கூடத்தில் எவர் நின்றாலும்
எதிர்க்கும் கரங்களில் எது இருந்தாலும்
எதிர்ப்பால் நஞ்சினை ஊட்ட வந்தாலும்
எதிரிக்கு எதிரியாய் நேர்படப் பேசு!

கற்றவர் பெற்றவர் யாரென் றாயினும்
மற்றவர் குடிகளில் குற்றங்கள் செய்திடின்
நெற்றிக்கண் பார்வையால் குற்றத்தை பொசுக்கியே
நேசத்தின் பெருமையை நேர்படப் பேசு!

அறத்தினை குழைப்பவன் மகனென் றாயினும்
அநீதிகள் இழைப்பவன் எவனென் றாயினும்
அகத்தினில் தர்மத்தை மறந்து விடாது
அதர்மத்தை அழித்திட நேர்படப் பேசு!

மதத்தினை விளக்கிடும் குருவென் றாயினும்
மதத்தால் மனிதனை பிரித்திட நினைத்திடின்
மனிதத்தை காத்திடும் கடவுளாய் மாறியே
மனிதத்தை காத்திட நேர்படப் பேசு!

நேர்படப்பேசு...நேர்படப் பேசு...
என்றும் எங்கும் நேர்படப் பேசு...

------ செ. இராசா---------

மனமார்ந்த வாழ்த்துக்கள்
*************************
கவிதைகள் எழுதிடும் போட்டியிலே- இரு
கவிதைகள் எழுதியே பதிவிட்டேன்!
நேர்படப் பேசிடும் கவிதைகளாய்-சிந்தை
கூர்படத் தமிழால் பதிவிட்டேன்!

எதிர்பார்த்து எழுதிய போட்டியிலே-நான்
ஏனோ வெற்றியை ருசிக்கவில்லை!
கவிஞர்கள் எழுதிடும் போட்டியிலே-நான்
கிறுக்கிய எழுத்துக்கள் சிறக்கவில்லை!

குறைகள் உள்ளதாய் எண்ணவில்லை- நான்
நிறைகள் குறைந்ததாய் எண்ணுகின்றேன்!
குறைகள் இல்லாப் படைப்புகளை- நான்
நிறைவுடன் எழுதிட முயலுகின்றேன்!

தமிழினைக் காக்கும் தளங்களிலே-நான்
தமிழ்ப்பட்டறைத் தளமே சிறப்பென்பேன்!
பத்தரை மாற்றுத் தங்கமென- நான்
தமிழ்ப்பட்டறை தளத்தினை காணுகின்றேன்!

தமிழால் வென்ற கவிஞர்களை- என்
தமிழால் இங்கே வாழ்த்துகின்றேன்!
தமிழினை காத்திடும் அனைவரையும்-என்
தமிழின் மொழியால் வணங்குகின்றேன்!

வாழ்க வளமுடன் கவிஞர்களே!
வாழ்க வளமுடன் தமிழர்களே!
வாழ்க வளமுடன் தலைவர் அவர்களே!
வாழ்க வளமுடன் நிர்வாகிகளே!

பார்வையே கவிதை


கயல்விழிப் பார்வையை வார்த்தையில் வடித்திட
கலைநயப் பார்வையை கண்களில் ஏற்றியே
கவிஞனாய் பார்க்கிற கண்களின் மொழியினை
காதலின் பார்வையாய் தவறாய் கணித்திட
கன்னியோ பார்வையை நிலத்தில் செலுத்திட
கவிஞனின் பார்வையோ தாழ்ந்து நோக்கிட
கன்னியும் பார்வையால் மெல்ல சிரித்திட
கவிஞனின் பார்வையோ தடங்கள் மாறிட
கன்னியின் பார்வையை கண்களால் கவ்விட
கவிஞனின் பார்வையோ காதலில் மூழ்கிட
கன்னியின் பார்வையே கவிதை என்றானாம்!

விவேகானந்தர் பொன்மொழிகள் (எனது பாணியில்)


கண்ணுக்கு புலப்படும் கடவுள் என்றே
அண்ணனும் தம்பியும் நினைத்திட வேண்டும்!
கண்ணில் காணா கடவுளை எல்லாம்
அதற்குப் பிறகே வழிபட வேண்டும்!


அன்பு குறைந்தால் மரணம் என்றே
அகிலம் உண்மையை உணர்ந்திட வேண்டும்!
அன்பு விரிந்தால் வாழ்க்கையும் விரிந்திடும்
அகிலத்தின் சிறப்பை அறிந்திட வேண்டும்!

உண்மை நேர்மை உள்ளவர் என்றால்
உலகம் எதிர்த்தால் எதிர்த்திட வேண்டும்!
நம்மால் எதுவும் முடியா தென்ற
நினைப்பை நினைவினில் நீக்கிட வேண்டும்!

அகத்தினில் விழித்திடும் கலைகளைப் பயின்று
மின்னலின் வேகத்தில் எழுந்திட வேண்டும்!
அடிமன எண்ணம் அடைந்திடும் வரைக்கும்
மின்னலின் வேகத்தில் உழைத்திட வேண்டும்!

19/07/2017

மனதோரம் மழைச்சாரல்/ கவிச்சாரல்---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (62) பங்குபெற்ற கவிதை


மனதோரம் மழைச்சாரல்
வருகின்ற நன்நேரம்
மனம்பேசும் கவிச்சாரல்
வரிகளாய் வடியாதோ?!


மனதோரம் புதைந்துள்ள
மலிவான ரகசியங்கள்
கண்ணீரில் கவியாகி
கரைந்துருகிப் போகாதோ?!

மனதோரம் வழிகின்ற
வீணான சபலங்கள்
மறைபோன்ற நல்கவியால்
வீழாமல் தடுக்காதோ?!

மனதோரம் எரிக்கின்ற
கணங்களின் நினைவலைகள்
மருந்தான கவிகளினால்
கனத்தினை குறைக்காதோ?!

மனதோரம் உதிக்கின்ற
சிலகவிகள் நம்நெஞ்சில்
மனத்தினை மாற்றுகின்ற
சிறுபொறி ஆகாதோ?!

மனதோரம் மலர்கின்ற
மணம்வீசும் கவிகளினால்
மடியாத காதல்களும்
மணம்செய்யத் துடிக்காதோ?!

-------செ. இராசா-------

யார் அவன்?

உள்ளே விழுந்து உலகத்தை மறந்து
உலகம் தன்னுள் உருள்வதாய் நினைத்து
உருண்டும் புரண்டும் உவகையால் நகைத்து
உளறலால் தன்னை உரைப்போன் யார்?