24/07/2017

நேர்படப் பேசு---களஞ்சியம் கவிதைப் போட்டியில் (63) பங்குபெற்ற கவிதை


நேர்படப் பேசு தமிழா- நீ
நேர்படத் தமிழால் பேசு!
கூர்படப் பேசு தமிழா-சிந்தை
கூர்படத் தமிழால் பேசு!


திராவிடம் பேசிடும் தமிழா- நீ
தமிழினம் வாழ்ந்திடப் பேசு!
மார்க்சியம் பேசிடும் தமிழா- தமிழ்
மார்க்கத்தின் பெருமையைப் பேசு!

குரலினை உயர்த்திடும் தமிழா- திருக்
குறளினை உரக்கமாய்ப் பேசு!
கம்பனை படித்திடும் தமிழா- தமிழ்க்
கவிஞனைப் பெருமையாய்ப் பேசு!\

சாதியை ஒழித்திடத் தமிழா- தமிழ்
சாதியென் சாதியெனப் பேசு!
சரித்திரம் திரும்பிடத் தமிழா- இனி
சகலரும் சமமெனப் பேசு!

நாவினை பழக்கிடத் தமிழா- தமிழ்
நாட்டிலே தமிழிலே பேசு!
வீரியம் விதைத்திடத் தமிழா-நீ
வீட்டிலே தமிழிலேப் பேசு!

தமிங்கலம் பேசிடும் தமிழா- நீ
தமிழினைச் சரியாய்ப் பேசு!
ஆங்கிலம் போற்றிடும் தமிழா- நீ
அதையாவது சரியாய்ப் பேசு!

மொழியினை கலந்திடும் தமிழா- நீ
மொழி வதை நிறுத்திப் பேசு!
கவிதைகள் படைத்திடும் தமிழா- நீ
கவிதையால் தழிழனைப் பேசு!

நேர்படப் பேசு தமிழா- நீ
நேர்படத் தமிழால் பேசு!
கூர்படப் பேசு தமிழா-சிந்தை
கூர்படத் தமிழால் பேசு!
-----------/////------/////---------


நேர்படப் பேசு (2வது படைப்பு)
**************************

நேர்படப்பேசு...நேர்படப் பேசு...
என்றும் எங்கும் நேர்படப் பேசு...

வாழ்க்கையில் தாழ்ந்திடும் நிலை வந்தாலும்
வாட்டிடும் வறுமையால் வதங்கி நின்றாலும்
நெஞ்சத்தின் நினைவிலே தாழ்ந்து விடாது
நெஞ்சினை நிமிர்த்தியே நேர்படப் பேசு!

கொற்றவன் ஆனவன் குற்றம் புரிகினும்
கூற்றுவன் போலவே நாடி வருகினும்
நேரிடும் இன்னலோ கோடி ஆகினும்
நேர்மையின் பார்வையால் நேர்படப் பேசு!

எதிரியின் கூடத்தில் எவர் நின்றாலும்
எதிர்க்கும் கரங்களில் எது இருந்தாலும்
எதிர்ப்பால் நஞ்சினை ஊட்ட வந்தாலும்
எதிரிக்கு எதிரியாய் நேர்படப் பேசு!

கற்றவர் பெற்றவர் யாரென் றாயினும்
மற்றவர் குடிகளில் குற்றங்கள் செய்திடின்
நெற்றிக்கண் பார்வையால் குற்றத்தை பொசுக்கியே
நேசத்தின் பெருமையை நேர்படப் பேசு!

அறத்தினை குழைப்பவன் மகனென் றாயினும்
அநீதிகள் இழைப்பவன் எவனென் றாயினும்
அகத்தினில் தர்மத்தை மறந்து விடாது
அதர்மத்தை அழித்திட நேர்படப் பேசு!

மதத்தினை விளக்கிடும் குருவென் றாயினும்
மதத்தால் மனிதனை பிரித்திட நினைத்திடின்
மனிதத்தை காத்திடும் கடவுளாய் மாறியே
மனிதத்தை காத்திட நேர்படப் பேசு!

நேர்படப்பேசு...நேர்படப் பேசு...
என்றும் எங்கும் நேர்படப் பேசு...

------ செ. இராசா---------

மனமார்ந்த வாழ்த்துக்கள்
*************************
கவிதைகள் எழுதிடும் போட்டியிலே- இரு
கவிதைகள் எழுதியே பதிவிட்டேன்!
நேர்படப் பேசிடும் கவிதைகளாய்-சிந்தை
கூர்படத் தமிழால் பதிவிட்டேன்!

எதிர்பார்த்து எழுதிய போட்டியிலே-நான்
ஏனோ வெற்றியை ருசிக்கவில்லை!
கவிஞர்கள் எழுதிடும் போட்டியிலே-நான்
கிறுக்கிய எழுத்துக்கள் சிறக்கவில்லை!

குறைகள் உள்ளதாய் எண்ணவில்லை- நான்
நிறைகள் குறைந்ததாய் எண்ணுகின்றேன்!
குறைகள் இல்லாப் படைப்புகளை- நான்
நிறைவுடன் எழுதிட முயலுகின்றேன்!

தமிழினைக் காக்கும் தளங்களிலே-நான்
தமிழ்ப்பட்டறைத் தளமே சிறப்பென்பேன்!
பத்தரை மாற்றுத் தங்கமென- நான்
தமிழ்ப்பட்டறை தளத்தினை காணுகின்றேன்!

தமிழால் வென்ற கவிஞர்களை- என்
தமிழால் இங்கே வாழ்த்துகின்றேன்!
தமிழினை காத்திடும் அனைவரையும்-என்
தமிழின் மொழியால் வணங்குகின்றேன்!

வாழ்க வளமுடன் கவிஞர்களே!
வாழ்க வளமுடன் தமிழர்களே!
வாழ்க வளமுடன் தலைவர் அவர்களே!
வாழ்க வளமுடன் நிர்வாகிகளே!

No comments: