05/08/2020

ஹிந்தி தேவையா?




அன்பு நண்பர்களே.... கண்டிப்பாக இது அரசியல் சார்ந்த பதிவல்ல. எமக்கு
எந்த அரசியல் சாயப் பூச்சுகளிலும் நம்பிக்கையும் இல்லை விருப்பமும் இல்லை. சரி தலைப்புக்குள் செல்வோம்.

நான் 2002 ஆம் வருட கால கட்டத்தில் வேலை நிமித்தமாக அஸ்ஸாம் மேகாலயா சென்றபோது எனக்கு ஹிந்தி மொழி தெரியாமல் மிகவும் வருத்தப்பட்டேன். குறிப்பாக திராவிடக் கட்சிகளின் மேல் மிகுந்த கோபம் கொண்டேன். பிறகு 2006ல் கத்தார் வந்தபோதும் வளைகுடா நாடுகளிலும் ஹிந்தி பேசுவதைக் கண்டேன். எப்படியோ நானும் நன்றாகக் கற்றுக் கொண்டேன். அதாவது அதற்கான சூழலுக்குள் தள்ளப்பட்டேன்.

பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் டகாலோ என்ற மொழி தேசிய மொழியாக உள்ளதுபோல் இந்தியாவிலும் குறிப்பிட்ட காலம்வரை ஹிந்தி மொழி கட்டாய மொழியாக இருப்பதில் தவறு இல்லை என்றே நினைத்து வந்தேன்.

ஆனால், பரந்துபட்ட புத்தக வாசிப்பாலும் என் அனுபவங்காலும் அதில் ஏற்பட்ட உள்ளுணர்வாலும் சில கருத்துக்கள் என் மனதில் ஆழமாக எழுந்தவைகளையே இங்கே பகிரலாம் என்று நினைக்கின்றேன்.

1. மும்மொழிக் கொள்கை உள்ள #அண்டை #மாநிலத்தவர்கள் அனைவரும் ஹிந்தியை நன்றாகக் கற்றுக்கொண்டுள்ளார்களா? கற்ற கல்வியின் வாயிலாக அனைவரும் பேசுகின்றார்களா? இல்லை....

2. நம் பள்ளிகளில் #ஆங்கிலம்_வழி_பயிலும் மாணவர்களுக்கே ஆங்கிலத்தில் நன்றாக எழுத அல்லது பேச பயிற்றுவிக்கப் பட்டுள்ளார்களா? (நான் பெரும்பான்மையினரைச் சொல்கின்றேன்)

3. #தமிழ்நாட்டில் #தமிழ்நாட்டு_ஊடகங்களில் நம் மொழியில் பேசுவதைக் கௌரவமாக நினைக்கின்றார்களா?! இல்லை பேசத்தான் தெரியுமா?!

4. #இருமொழிக்_கொள்கையே சரியாகப் பின்பற்றப்படாபோது மும்மொழி வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

5. 1935ல் இருந்தே ஹிந்தியை நுழைக்க முற்படுவதும் அதை எதிர்ப்பதும் வாடிக்கையான ஒன்றாக இருந்த போது மாநிலங்கள் விரும்பாதவரை இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்பட வேண்டும் என்று சொன்ன #நேரு_வாக்குறுதியை ஏன் தொடர்ந்து மீற முற்படுகிறார்கள்?!

6. தமிழ்நாட்டில் ஏற்கனவே எங்கள் மொழியை நாங்களே கெடுத்துக் கொண்டிருக்கும் போது நீங்களும் வந்து கெடுக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்?
மொத்தமாக #டங்கிலீஸ் என்பதை #டங்ஹிந்திலீஸ் என்று மாற்ற வேண்டுமா?
(மன்னிக்கவும்...உண்மை சுடத்தான் செய்யும்)

7. பல மொழிகள் கற்பது தவறே அல்ல. நீங்கள் அனைத்து அரசு பள்ளிகளிலும் விருப்பப் பாடங்களாக வையுங்கள். ஆனால்
கட்டாயப் பாடங்களாக்கி சித்திரவதை செய்ய நினைக்காதீர்கள். காரணம் ஹிந்தி #ஆசிரியர்கள்_யாரும்_மேலிருந்து குதிக்கப் போவதில்லை. தமிழிலேதான் ஹிந்தியும் பேசுவார்கள்... அப்புறம் குச் நகி ஆயகா....
(இங்கேயும் பெரும்பான்மையினரையேச் சொல்கின்றேன்.. சிலர் விதிவிலக்கு)

8. இறுதியாக ஒன்றே ஒன்றுதான்.
யாராக இருந்தாலும் #அந்தந்த_சூழல் தான் அவனை தயாராக்குகிறது. அவனுக்குத் தேவையெனில் அவனே படிப்பான். கட்டாயப் படுத்த வேண்டிய அவசியமில்லை.

எனவே தயவுகூர்ந்து அரசியல் பார்வைகளைத் தள்ளி வைத்து விட்டு இயல்பான பார்வையில் பார்க்க வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

உங்களில் ஒருவன்

செ. இராசமாணிக்கம்

03/08/2020

உன் பொன்நிற மேனியைச்சொல்லவா..

 


உன் பொன்நிற மேனியைச்சொல்லவா...
உன் பொசுபொசு கன்னத்தைச் சொல்லவோ..
எதைச் சொல்ல?!!

ஒவ்வொரு முறையும்
என் விரல்கள் தீண்டும்போது
உன் அனல் மூச்சில் பதில் தருவாயே.
அதைச் சொல்லவா?

இல்லை...
உன்னைக் கிள்ளி அள்ளி
என் இதழ்களின் இடைவெளியில் இடுகின்ற
......................
...அந்தத் தருணத்தைச் சொல்லவா?

அப்பப்பா.....
எதைச் சொல்ல?!!

ஏனோ தெரியவில்லை
இத்தனை வயதானாலும்
இன்னும் குறையவில்லை
உன் மேலுள்ள ஈர்ப்பு!

ஆம்...
நீ என்றும் என் செல்லப் பூரியே...

செ. இராசா

(என் மகள் என் பையனிடம் சவால் விட்டுள்ளாள். இந்தப் படத்தைக் கண்டவுடன் அப்பாவிற்கு எச்சில் ஊறுமென்று........அவளின் கணிப்பை நான் பொய்யாக்கவில்லை)

மும்மொழிக் கொள்கை


 

மும்மொழிக் கொள்கையை முற்றிலும் ஏற்றிடா
செம்மொழி நாடாளும் சாமியே- நம்மொழியை
நம்நாட்டில் உள்ளவர்கள் நன்றாகக் கற்றால்தான்
நம்மூரில் வேலையெனச் சொல்

(முக்கியமாக ஊடகங்களில்....)

ஐம்பொறி அடக்கு

 #ஐம்பொறி_அடக்கு
#வள்ளுவர்_திங்கள்_122

#கண்
காணொளியில் மட்டுமே காட்சியைப் பார்க்காமல்
வானொ
லியைக் கொஞ்சம் வணங்கு

#காது
இயந்திர ஓசைகள் எப்போதும் ஏனோ
இயற்கையொலி கேட்பாய் இசைந்து

#மூக்கு
அரபி திரவியத்தை அள்ளி இடாமல்
சிரமேற்கும் மல்லி சிறப்பு

#வாய்ச்_சுவை
துரித உணவால் துயரப் படாமல்
உரிய உணவினை உண்

#வாய்ச்_சொல்
எண்ணிய வேகத்தில் எப்போதும் பேசாமல்
நுண்மாண் நுழைபுலத்தில் நில்

#மெய்
குளிரூட்டி உள்ளேயே குன்றுதல் நீக்கி
வெளியேற்று நீர்;வியர் வை

#ஐம்பொறி_அடக்கு
இயற்கை வழியிலே எப்போதும் சென்றால்
இயற்கையே தந்திடும் கை

அடக்க நினைத்தால் அடங்க மறுக்கும்
அடங்கிட வேண்டின் அறி

ஐம்பொறி பற்றி அறிவுடன் ஆய்ந்திட
ஐந்தையும் வெல்லும் மனம்

#வள்ளுவ_வழி

வள்ளுவம் சொல்லும் வழியினைப் பற்றுவோர்
வெல்வது நிச்சயம் பார்!

✍️செ. இராசா

ஆங்கிலத்த கலந்து கலந்து

 


ஆங்கிலத்த கலந்து கலந்து
அசிங்கப்படுத்துறான்..
ஆண்டதமிழ்ப் பரம்பரைன்னு
அலட்டிக்கொள்கிறான்...

வானொலியில் வாயிகிழிய
வறுத்து எடுக்கிறான்...
காணொளியில் கருத்துச்சொல்லி
கழுத்தை அறுக்கிறான்..

தம்பி நிறுத்து....என்ன சொல்ல வர்றீங்க?!

மும்மொழிகள் வேணான்னு
முரண்டு பிடிக்கிறான்..
நம்மொழியில் ஆங்கிலத்த
எதுக்கு கலக்குறான்?

டங்கிலீசில் பேசிப்பேசி
தமிழக் கெடுக்கிறான்....
இந்திபீசு நகிநகீன்னு
எரிஞ்சு விழுகுறான்...

ஐயோ... .என்னப்பா சொல்ற...

எம்மொழியும் கத்துக்கலாம்
தப்பு இல்லீங்கோ
என்மொழியை கெடுக்கிறது
தப்பு தானுங்கோ

பன்மொழியில் பேசுவது
புலமை தெரியுங்கோ
எம்மொழின்னு சொல்றதுக்கு
நீங்க யாருங்கோ?!!!

சுதந்திர இந்தியாவில் மாநில உரிமைகள்
மதிக்கப்பட வேண்டும்...
ஆங்கிலம் கலக்காத தமிழில் அவசியம் பேச வேண்டும்....

#மொழிச்_சுதந்திரம்_நமது_உரிமை

02/08/2020

கண்ணீர்த்துளி தமிழ்ப்பட்டறைக் கவியரங்கம்

 


 #தமிழ்ப்பட்டறைக்_கவியரங்கம்
நாள்: 02.08.2020
தலைமை: #பாடலாசிரியர்_நிகரன்_அவர்கள்
தலைப்பு: #கண்ணீர்த்_துளி

#தமிழ்த்தாய்_வாழ்த்து

இந்த "நான்" என்னும் உடலுக்குள்
எப்போதும் உயிர் மூச்சாய் உலாவும்
தமிழ் அன்னையின் தாழ்களை
தலையில் தாங்கி வணங்குகிறேன்!

#தமிழ்ப்பட்டறை_மாணவன்_நான்

எதுகை மோனையென
எதை எதையோ எழுதியவன்
இங்கே வந்தபின்தான்
இலக்கணம் அறிந்து கொண்டேன்..

ஹைக்கூ சென்றியூவென
பொய்கூவாய் கூவியவன்
இங்கே வந்தபின்தான்
மெய்க்கூவல் கூவுகின்றேன

எசப்பாட்டு இல்லையெனில் என்
நிசப்பாட்டு இல்லீங்க
கவிச்சரம் இல்லையெனில் இந்தக்
கவி ராசா இல்லீங்க

ஆம்...
தமிழ்ப்பட்டறை எனக்குத்
தமிழ்ப்பால் ஊட்டிய இரண்டாம் தாய்
இல்லை இல்லை...
இன்னும் ஊட்டிக்கொண்டிருக்கும்
அட்சயத்தாய்..அதிசயத்தாய்
அந்த இரண்டாம் தாய்க்கு
என் முதலாம் வணக்கமும்
அதன் முதலாம் தமையனுக்கு
என் இரண்டாம் வணக்கமும்

ஆமாம்அது யாரு?அந்தத் தமையன்?
வேறு யாரு? அந்த வேர்தான் யாரு
நம்ம "

ஐயா தான்
வணக்கம் ஐயா

#கவித்தலைமை
********
பட்டறையின் நடுவராய்
பாட்டெழுதும் கவிஞராய்
பட்டையைக் கிளப்புகின்ற
பைந்தமிழ் ஆசானுக்கு
இந்த அன்பின் அடிபொடியின்
இன்பப் பெரு வணக்கம்!

##தலைப்பு:
++++++++++++
#கண்ணீர்த்_துளி

சிரித்தால் சிரிப்பு வரும்
அழுதால் அழுகை வரும்
அப்படித்தானே?!
இல்லை..இல்லை
அழுதால் கண்ணீர் வரும்?

ஆனால்...
சிரித்தாலும் கண்ணீர் வருகிறதே...

ஆம்..
புண்பட்ட மனங்களின்
ரணங்களை குறைப்பது மட்டுமல்ல
இன்பத்தின் உச்சியிலே
இமைகளை நனைப்பதும்
கண்ணீரே..

பிறந்ததை உறுதி செய்ய
பிஞ்சுகளிடும் பிள்ளையார் சுழி மட்டுமல்ல
இருந்ததை உறுதி செய்ய
இருப்போர் தூவும் அங்கீகார மொழியும்
கண்ணீரே..

ஆனால்
இந்தக் கண்ணீர் பற்றித்தான்
எத்தனை எத்தனை
மூட நம்பிக்கைகள்..

ஆண்களின் கண்ணீர்
கோழைத்தனமாம்!
பெண்களின் கண்ணீர்
ஆபத்தான ஆயுதமாம்!

“வெங்காயம்”

ஆம்
அது உரித்தால்கூடத்தான்
கண்ணீர் வரும்...
காரணம்
இரசாயண மாற்றமே ஒழிய
இருபால் மாற்றமல்ல...

போதும்..
கண்ணீரிலும்
இனம் பிரிக்காதீர்...

புத்தகம் படித்தும்
படம் பார்த்தும் அழுததுண்டா?!
எனில் நீங்களே மென்மையானவர்கள்

அட கொஞ்சம் பொறுங்கள்....
உண்மையில் நீங்களே பலமானவர்கள்

ஆம் சொல்வது அறிவியல்...
சந்தேகமெனில்
கூகுள் மாமாவைக் கேளுங்கள்!

அழுகையில் மட்டும்தான்
அழுத்தமெனும் நதி
அமைதிக் கடலில்
அடக்கமாகிறது!

அழுகையில் மட்டும்தான்
ஆன்ம ஒளி
ஆத்ம ஜோதியில் ஐக்கியமாகிறது!

அது மட்டுமா?!

கண்ணீர் பக்தியின் உத்வேகம்
கண்ணீர் உணர்ச்சியின் உற்சாகம்
கண்ணீர் அன்பின் அடையாளம்
கண்ணீர் மனிதனின் மா வைத்தியம்

இங்கே
சில கண்ணீர்
சூர்ப்பணகை கண்ணீர்போல்
சூனியமாக்க வல்லவை!

ஆனால்
சில கண்ணீர்
மாணிக்கவாசகரின் கண்ணீர் போல்
மகத்துவம் வாய்ந்தவை!

இங்கே
சில கண்ணீர்
பிக்பாஸ் கண்ணீர்போல்
பித்தலாட்டமானவை!

ஆனால்
சில கண்ணீர்
திருமணத்துக் கண்ணீர்போல்
திவ்யமானவை!

அழுங்கள் அழுங்கள்
அழுகையில்தான்
ஆன்மா குளிக்கும்!

அழுங்கள் அழுங்கள்
அழுகையில்தான்
அழுத்தத் தீ அணையும்!

#நன்றியுரை
****
உருக்கமான பாடல்களால்
உருகிடுவார் இரசிகர்கள்!
கண்ணீர் துளிகளினால்
கைகளைக் குலுக்கிடுவார்!
அப்படி இல்லையெனில்
அகத்தினுள் குலுங்கிடுவார்!
எப்படி படைத்தேனோ
எமக்கது தெரியாது..

இணைய வழி என்பதால்
இமையின் வலி புரியாது..

நன்றாய் இருந்தெதனில்
நற்றமிழின் பெருமையென்பேன்!
ஏதோ இருந்ததெனில்
எளியோனின் பிழையென்பேன்!
பிழையைப் பொருத்தருள
பிரியமுடன் வேண்டி
நன்றி கூறி விடைபெருகிறேன்
நன்றி வணக்கம்!

---செ. இராசமாணிக்கம்

குழலூதும் கண்ணா

 


குழலூதும் கண்ணா! குருவாயூர் மன்னா!
குவலயத்தின் இன்னா குறையலையே ஏன்னா?
அவலத்தை சொன்னால் அழுவாய்நீர் வண்ணா!
கவலைநீக்க வாண்ணா கனிந்து!

✍️செ.இராசா

எட்டிஎட்டி போறபுள்ள கொஞ்சம் கேளுல

 


#எட்டிஎட்டி_போற_புள்ள கொஞ்சம் கேளுல- இந்த
பட்டிக் காட்டு மாமன் நெஞ்சில் நீதான் இருக்கல!

சுட்டி சுட்டி பேசும் பேச்சு தப்பா தெரியல- யோவ்
பட்டி தொட்டி இட்டுக் கட்டும் எனக்குப் புடிக்கல!

என்ன இல்லை என்ன இல்லை சொல்லு பய புள்ள- நீ
என்னைக் கட்ட என்ன வேணும் என்ன சொல்லுல!

உன்னை சொல்லிக் குத்தம் இல்லை ஏனோ தெரியல- யோவ்
உன்னைக் கண்டா என்னில் ஏனோ ஏதும் தோணல!

ஆத்தி ஆத்தி ஆத்தி ஆத்தி என்ன வாய் டா- இது
நாத்தீ வச்சி பேசும் புள்ள வேண்டாம் ஓடுடா!

-செ. இராசா-

கேளுல, இருக்கல, சொல்லுல...... இவையெல்லாம் சிவகங்கை வட்டார வழக்காய் வரும் சொற்கள்

01/08/2020

மும்மொழி

மும்மொழி என்பதனை முன்மொழிவோர் கூட்டத்தை

எம்மொழியால் வையலாம் சொல்

இன்னாப்பா...வள்ளுவரு வந்துகினாரு

 

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
 
இன்னாப்பா...
 
இன்னா இன்னான்னு கூவுற.....
இது திருக்குறள்பா...
 
அட..சோக்காகீது..பா..
 
வள்ளுவரு வந்துகினாரு
..........வடசென்னை பாருங்கோ
அள்ளுவிடும் பாஷையில
..........அசத்துகிற ஆளுங்கோ
இன்னாமா கூவுறாரு
..........இன்னான்னு கேளுங்கோ
அண்ணாத்தே நம்மாளு
..........அந்தாண்ட நவுருங்கோ
 
✍️செ.இராசா