05/08/2020

ஹிந்தி தேவையா?




அன்பு நண்பர்களே.... கண்டிப்பாக இது அரசியல் சார்ந்த பதிவல்ல. எமக்கு
எந்த அரசியல் சாயப் பூச்சுகளிலும் நம்பிக்கையும் இல்லை விருப்பமும் இல்லை. சரி தலைப்புக்குள் செல்வோம்.

நான் 2002 ஆம் வருட கால கட்டத்தில் வேலை நிமித்தமாக அஸ்ஸாம் மேகாலயா சென்றபோது எனக்கு ஹிந்தி மொழி தெரியாமல் மிகவும் வருத்தப்பட்டேன். குறிப்பாக திராவிடக் கட்சிகளின் மேல் மிகுந்த கோபம் கொண்டேன். பிறகு 2006ல் கத்தார் வந்தபோதும் வளைகுடா நாடுகளிலும் ஹிந்தி பேசுவதைக் கண்டேன். எப்படியோ நானும் நன்றாகக் கற்றுக் கொண்டேன். அதாவது அதற்கான சூழலுக்குள் தள்ளப்பட்டேன்.

பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் டகாலோ என்ற மொழி தேசிய மொழியாக உள்ளதுபோல் இந்தியாவிலும் குறிப்பிட்ட காலம்வரை ஹிந்தி மொழி கட்டாய மொழியாக இருப்பதில் தவறு இல்லை என்றே நினைத்து வந்தேன்.

ஆனால், பரந்துபட்ட புத்தக வாசிப்பாலும் என் அனுபவங்காலும் அதில் ஏற்பட்ட உள்ளுணர்வாலும் சில கருத்துக்கள் என் மனதில் ஆழமாக எழுந்தவைகளையே இங்கே பகிரலாம் என்று நினைக்கின்றேன்.

1. மும்மொழிக் கொள்கை உள்ள #அண்டை #மாநிலத்தவர்கள் அனைவரும் ஹிந்தியை நன்றாகக் கற்றுக்கொண்டுள்ளார்களா? கற்ற கல்வியின் வாயிலாக அனைவரும் பேசுகின்றார்களா? இல்லை....

2. நம் பள்ளிகளில் #ஆங்கிலம்_வழி_பயிலும் மாணவர்களுக்கே ஆங்கிலத்தில் நன்றாக எழுத அல்லது பேச பயிற்றுவிக்கப் பட்டுள்ளார்களா? (நான் பெரும்பான்மையினரைச் சொல்கின்றேன்)

3. #தமிழ்நாட்டில் #தமிழ்நாட்டு_ஊடகங்களில் நம் மொழியில் பேசுவதைக் கௌரவமாக நினைக்கின்றார்களா?! இல்லை பேசத்தான் தெரியுமா?!

4. #இருமொழிக்_கொள்கையே சரியாகப் பின்பற்றப்படாபோது மும்மொழி வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

5. 1935ல் இருந்தே ஹிந்தியை நுழைக்க முற்படுவதும் அதை எதிர்ப்பதும் வாடிக்கையான ஒன்றாக இருந்த போது மாநிலங்கள் விரும்பாதவரை இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்பட வேண்டும் என்று சொன்ன #நேரு_வாக்குறுதியை ஏன் தொடர்ந்து மீற முற்படுகிறார்கள்?!

6. தமிழ்நாட்டில் ஏற்கனவே எங்கள் மொழியை நாங்களே கெடுத்துக் கொண்டிருக்கும் போது நீங்களும் வந்து கெடுக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்?
மொத்தமாக #டங்கிலீஸ் என்பதை #டங்ஹிந்திலீஸ் என்று மாற்ற வேண்டுமா?
(மன்னிக்கவும்...உண்மை சுடத்தான் செய்யும்)

7. பல மொழிகள் கற்பது தவறே அல்ல. நீங்கள் அனைத்து அரசு பள்ளிகளிலும் விருப்பப் பாடங்களாக வையுங்கள். ஆனால்
கட்டாயப் பாடங்களாக்கி சித்திரவதை செய்ய நினைக்காதீர்கள். காரணம் ஹிந்தி #ஆசிரியர்கள்_யாரும்_மேலிருந்து குதிக்கப் போவதில்லை. தமிழிலேதான் ஹிந்தியும் பேசுவார்கள்... அப்புறம் குச் நகி ஆயகா....
(இங்கேயும் பெரும்பான்மையினரையேச் சொல்கின்றேன்.. சிலர் விதிவிலக்கு)

8. இறுதியாக ஒன்றே ஒன்றுதான்.
யாராக இருந்தாலும் #அந்தந்த_சூழல் தான் அவனை தயாராக்குகிறது. அவனுக்குத் தேவையெனில் அவனே படிப்பான். கட்டாயப் படுத்த வேண்டிய அவசியமில்லை.

எனவே தயவுகூர்ந்து அரசியல் பார்வைகளைத் தள்ளி வைத்து விட்டு இயல்பான பார்வையில் பார்க்க வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

உங்களில் ஒருவன்

செ. இராசமாணிக்கம்

No comments: