11/02/2018

காதலெனும் தேர்வெழுதி-களஞ்சியம் கவிதைப் போட்டியில் (92) பங்குபெற்ற கவிதை




காதலெனும் தேர்வெழுதி
************************
காலையிலே கதிரவனாய்
மாலையிலே வெண்ணிலவாய்
எனக்காக வலம்வந்த
என்னழகுப் பெண்ணிலவே...

கச்சிதமாய்ச் சொல்லெடுத்து
கவிதைகளை வார்த்தெடுக்கும்
கவிஞராக மாற்றிவிட்ட
கட்டழகுக் காரிகையே....

கண்ணழகில் எனை இழுத்து
கற்பனையில் சிக்க வைத்து
காதலெனும் தேர்வெழுதி
காக்கவைத்த காதலியே...

விடையெதுவும் தெரியாமல்
விழிபிதுங்கி நானிருக்க...
அன்பான புன்னகையால்
அழைப்பிதழைத் தந்தாயே!

10/02/2018

நன்றி நவிலல்



அறம் வழி பொருள் ஈட்டி
அதன் வழி இன்பம் கூட்டி
இறைநிலை அடையும் வழி
இதுவென எடுத்துக்கூறி
அறிவின் பேரொளியை
அகிலத்தில் பாய்ச்சுகின்ற
அற்புத சேவை செய்யும்
ஆசான்கள் அனைவரையும்
மனம் மொழி மெய்களாலே
மகிழ்வோடு வணங்குகின்றேன்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

07/02/2018

அடிக்கடி வரும்......



அடிக்கடி அன்பில் வரும்
அழையா விருந்தாளியே...
இம்முறை வந்த நீ- ஏன்
இன்னும் செல்லவில்லை?

அவ்வளவு பிடிக்குமா என்னை?

வந்தாய்...
இருந்தாய்.....
கட்டிப்பிடித்தாய்....
தலைவலி தந்தாய்
தும்ம வைத்தாய்- ச்சீயென
துப்ப வைத்தாய்....

இருந்தும்
போகாமல் உயிரை வாங்குகிறாய்...

போய்விடு....:
சளியே போய்விடு

முடியல....

——செ. இராசா—-

05/02/2018

கருணை/ மழைநீரின் கருணைபோலே



 கண்ணு மண்ணு தெரியாம
கண்டபடி குடிச்சிகிட்டு
தன்னைக்கூடத் தெரியாம
தள்ளாடி நடந்துகிட்டு

வீடு வாசல் போகாம
வீதியில விழுந்தவன் மேல்
பாவம் பாவம் என்று சொல்லி
பாசம் காட்டும் அம்மாக்களே....

உப்புக்கடல் மேல் பொழியும்
மழைநீரின் கருணைபோலே
உங்கமகன் மேல் பொழியும்
மனக்கருணை உள்ளதன்றோ?!

--செ. இராசா---

வீணையடி நீ எனக்கு


 
 
வீணையடி நீ எனக்கு- என்
விரல்கள்தொடத் தடை எதற்கு?

மூங்கில் குழல் நீ எனக்கு- நான்
முத்தமிடத் தடை எதற்கு?

உடுக்கையடி நீ எனக்கு- உன்
இடுப்பைத்தொட தடை எதற்கு?

மேளமடி நீ எனக்கு- உனைத்
தாளமிடத் தடை எதற்கு?

இசைக்கருவி நீ எனக்கு- உனை
இசைக்கத் தடை எதற்கு?

——செ. இராசா——

என்ன விலை உடலே?!!!

ஒவ்வொரு மனிதர்களின்
ஒவ்வொரு உறுப்புக்கும்
ஒவ்வொரு விலை வைத்தால்
ஒவ்வொரு மனிதருமே
ஒவ்வொரு கோடீஸ்வரர்!


இருதயமும் கல்லீரலும்
இரண்டில் ஒரு சிறுநீரகமும்
ஒரு லட்சம் டாலர் முதல்
இரண்டு லட்சம் டாலர்களாம்.....
 
ஓடுகின்ற இரத்தமும்
ஊறுகின்ற விந்துவும்
பெண்ணின் கரு முட்டையும்
கண்ணின் இரு கார்னியாவும்
ஒவ்வொரு உறுப்புக்கும்
ஒவ்வொரு விலைவைத்தால்
முழு உடலின் மொத்தவிலை
மூன்று கோடி ரூபாய் முதல்
நான்கு கோடி ரூபாய்களாம்....

இத்தனை மதிப்புள்ள
உடலென்னும் பொக்கிஷத்தை
இனியும் கெடுக்காமல்
உடல்நலனைக் காத்திடுவோம்!

-----செ. இராசா-----

சில துளிகள்

 *******************************
சிந்தையிலே சில கணங்கள்
சிதறாமல் இருந்திருந்தால்
சிறப்பாக இருந்திருக்கும்

********************************

கோட்டை கட்டி வாழ்ந்த இனம்
கோப்பை தட்டி வாழ்கின்றது
தமிழ்க் குடிமகன்களாய்
********************************
அதீத பாசமும்
அதீத கண்டிப்பும்
ஆபத்தில் முடியும்
********************************************
சிக்கனம் வார்த்தையில் இல்லையெனில்
சிக்கல்கள் வரலாம் சாக்கிரதை!
*******************************************

02/02/2018

இந்த உலகப்பூ



“காதல் ஜோடி தற்கொலை”

தினத்தந்தி நாளிதழில்
திகைப்பூட்டும் செய்தி கண்டேன்.

அறிந்தும் அறியாத
அரும்பு மீசை பருவத்திலே
அன்று கண்ட செய்தியினை
அடிஅடியாய் வாசித்தேன்...
...........
குற்றால அருவியிலே
குதூகலம் நடத்திவிட்டு,
மண்ணுலகுக் காதலை
விண்ணுலகில் தொடர்வதற்காய்,
காதல் பறவைகள்
காலனிடம் சென்ற சேதி
புரிந்தும் புரியாமல்
வரிவரியாய் வாசித்தேன்...
........

இறந்தோர் அறையினிலே
இருந்த காகிதத்தில்
காதலன் எழுதி வைத்த
கவிதை வரிகளையும்
காலை நாளிதழில்
வரி வரியாய் வாசித்தேன்....

அடிமனதின் பதிவுகளாய்
ஆழமாய் பதித்துவைத்த
மன நூலின் வரிகளைநான்
முக நூலில் எழுதுகின்றேன்....

இதோ;

“இந்த உலகப்பூ
ஒரு நாள் வெடித்துச் சிதறத்தான் போகிறது....
சிதறிய பூக்களில்
சிவந்த பூ ஒன்று
உன் காலடியில் விழுமேயானால்
அது என் இதயப்பூவாய்தான் இருக்கும்”

என்னை உறையவைத்து
எனக்குள் எழுச்சி தந்த
இறந்த காதலரின்
இறக்காத கவிதையினை
இங்கே உங்களுக்கு
இயன்றவரை எழுதிவிட்டேன்.

நன்றி

இனியொரு விதி செய்வோம்--களஞ்சியம் கவிதைப்போட்டி (91)- வெற்றிக்கவிதை


(தமிழ்ப்பட்டறை குழுமம் நடத்திய போட்டியில் மூன்றாமிடம் பிடித்த கவிதை.
நடுவர் திரைப்படப் பாடலாசிரியர், திரு. நிகரன் ஐயாஅவர்களுக்கும், தமிழ்ப்பட்டறைத் தலைவர். திரு. சேக்கிழார் அப்பாசாமி ஐயா அவர்களுக்கும் மற்றும் என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்)

எப்படி இத்தனை காலங்களாய்-நமை
இப்படி இழிவாய் எண்ணுகின்றார்?!
ஆண்ட இனமென வாழ்ந்தோரை-ஏன்
மாண்ட இனமாய் எண்ணுகின்றார்?!

எங்கே தவறென ஆராய்ந்தால்-அது
இங்கே நம்மிடம் நகைக்கிறதே!
இங்கே தவறுகள் குவிந்திருக்க-நாம்
எங்கோ தேடுதல் முறையன்றோ?!

தாழ்வாய்ப் பார்க்கின்ற கயவர்களை-நம்
தலைவராய் மதித்தது யார்தவறு?
நடிப்பால் மயக்கிய நடிகரின்பால்-நம்
நாட்டைக் கொடுத்தது யார்தவறு?

மாற்றங்கள் இங்கே வருவதற்கு-நாம்
மாற்றத்தை நமக்குள் புகுத்திடுவோம்!
இழந்ததை மீண்டும் அடைவதற்கு-நாம்
இனியொரு விதியை செய்திடுவோம்!

அடக்கிடும் மரபைத் தகர்த்துவிட்டு-நாம்
ஆளுமை பயின்றிட முன்வருவோம்!
நடித்திடும் எவரையும் புறக்கணித்து-இனி
நாமே நாட்டை ஆண்டிடுவோம்!

தனித்தனி சாதியாய்ப் பிரிவுசெய்தால்-இனி
தமிழெனும் சாட்டையைச் சுழற்றிடுவோம்!
தமிழனை மதத்தால் பிளவுசெய்தால்-இனி
தமிழையே மதமாய் மாற்றிடுவோம்!

——செ. இராசா—-


https://www.facebook.com/photo.php?fbid=1961400917511092&set=gm.1978390415813198&type=3&theater&ifg=1

01/02/2018

சிறுவர் பாடல்கள்-----தமிழே.....வா.....வா

அழகுத்தமிழே வா.... வா....வா
ஆதித் தமிழே வா.... வா....வா

இசைத் தமிழே வா.... வா....வா
ஈடில்லாத் தமிழே வா.... வா....வா

உயர்வுத் தமிழே வா.... வா....வா
ஊக்கத் தமிழே வா.... வா....வா

எழில்மிகு தமிழே வா.... வா....வா
ஏறு தமிழே வா.... வா....வா

ஐயமில்லா தமிழே என்னுடன் வா
ஐயமில்லா அறிவை எனக்கும் தா

ஒப்பற்ற தமிழே வா.... வா....வா
ஓங்குநல் தமிழே வா.... வா....வா

ஔவைத் தமிழே என்னுடன் வா
ஔவைபோல் அறிவை எனக்கும் தா