14/12/2017

யார் இவர்?



பச்சைவர்ண உடுப்பணிந்து
புரட்சிவெறி கண்களோடு
பார்க்கும் மனிதர் யாரிவர்?

உள்ளூர் வெளியூர் பதாகைகளில்
உடுத்தும் இளைஞர் ஆடைகளில்
உறையும் மனிதர் யாரிவர்?

யாரிவர் என்றா கேட்கின்றீர்?
"சே. குவேரா" என்பது விடையாகும்!
"சே" புரட்சியின் விதையாகும்!

"சே" என்றால் எதிரியெல்லாம்
"தீ" என்றே பயத்துடனே
"ஓ" என்றே அலறினராம்!

"சே" என்றால் நண்பரெல்லாம்
"ஆ" என்றே வாய்திறந்து
"வா" என்றே அழைத்தனராம்!

ஆம்.
ஆதிக்க சக்திகளின்
பொதுவான எதிரியவர்: "சே"

அடக்குமுறை புரட்சியெனில்
பொதுவான தோழரவர்: "சே"

-----செ. இராசா-----

‘நான்’ சாக எழுதுகின்றேன்



நான் எழுதுகின்றேன்- சரி
நானா எழுதுகின்றேன்?!-ஆம்
நானே எழுதுகின்றேன்- அட
நானும் எழுதுகின்றேன்-ஆமாம்
நானேன் எழுதுகின்றேன்?!- என்
‘நான்’ சாக எழுதுகின்றேன்- இதையும்
நானாக எழுதுகின்றேன்!


-------0000000-------------

12/12/2017

72 வது கவிச்சரம்- மகாகவி பாரதியார்




தமிழ்த்தாய் வணக்கம்
*************************************
தான்பெற்ற தவப்புதல்வன்
தரணியையே வென்றபோது
தாய்கொண்ட மகிழ்ச்சியைப்போல் - பெருங்
களிப்போடு தமிழ்த்தாய்க்கு
கவிச்சரங்கள் தொடுக்கின்றேன்! - இரு
கரமுயர்த்தி வணங்குகின்றேன்!

தலைமை வணக்கம்
*******************************
மாகவியைப் பாடுகின்ற
மாமன்ற கவியரங்கை
சிறப்பிக்கும் தலைவரையும்
சேக்கிழார் ஐயாவையும்
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்!

அவை வணக்கம்
**************************
எத்தனையோ அவைகள் கண்டோம்
இத்தனை சிறப்பு இல்லை!
எத்தனையோ தளங்கள் கண்டோம்
இத்தளம்போல் எங்கும் இல்லை!

உயர்புகழ் கவிஞர் பலர்
உறுப்பினர் ஆன சபை- நல்
உயிர்ப்புடன் உள்ள சபை
அச்சபையை அடியேனும்
அன்புடனே வணங்குகின்றேன்!

மகாகவி பாரதியார் வாழ்த்து
************************************
அடிமைத்தனம் உடைத்தெறிய
அரும்பாடு பட்டவன் நீ!

ஆசைவேர் அறுத்தெறிய!
ஆத்மஞானம் படைத்தவன் நீ!

இறுமாப்பு கொள்ளாத
இருதயத்தைக் கொண்டவன் நீ!

ஈதல் அறம் எடுத்துச்சொன்ன
ஈடில்லா சான்றோன் நீ!

உரிமைக்குரல் என்னவென்று
உண்மைகளை உடைத்தவன் நீ!

ஊமைகளாய் வாழ்ந்தவர்க்கு
ஊக்கவினை தந்தவன் நீ!

எழுத்தினிலே புதுமை செய்து
எல்லோர்மனம் வென்றவன் நீ!

ஏதிலார் பொய்யுரையை
ஏதுமில்லா(து) செய்தவன் நீ!

ஐயர்குலப் பிறப்பெனினும்
ஐயமில்லா தமிழன் நீ!

ஒற்றுமைக்கு வழிசொன்ன
ஒப்பற்ற தலைவன் நீ!

ஓர் மறையாம் குறள்போலே
ஓர் கவிஞன் ஆனவன் நீ!

ஔவியம் கொண்டவர்க்கும்- பின்பு
ஔவைபோலே தெரிந்தவன் நீ!

அஃறிணை ஆனாலும்
அஃது(ம்) இறைவன் என்றவன் நீ!

பாரதியாரின் கண்ணன் பக்தி
*****************************************
கண்ணனையே நண்பனாக்கி- தினம்
கலந்துரையாடல் செய்தாய்!

கண்ணனெனும் தாய்தேடி- பசிக்
கன்றெனத் துள்ளி நின்றாய்!

கண்ணனெனும் தந்தையிடம்- உன்
கடமையினைச் செய்து நின்றாய்!

கண்ணனையே சேவகனாக்கி- அன்புக்
கட்டளையால் பணிய வைத்தாய்!

கண்ணனெனும் அரசனிடம்- சபைக்
கவிபாடும் புலவனானாய்!

கண்ணனையே சீடனாக்கி- உயர்
குருபோல கருணை கொண்டாய்!

குரு கண்ணனிடம் சரண்புகுந்து- உன்
கர்மவினைநீக்கி நின்றாய்!

கண்ணனெனும் குழந்தைக்கு- நீ
கவிபாடி கொஞ்சி நின்றாய்!

காதலனாய் காதலியாய்- என்றும்
காதெலெனில் கண்ணனென்றாய்!

கண்ணனிலே குடிபுகுந்து - உயர்
கீதைபோலே கவிகள் தந்தாய்!

நன்றியுரை:
*****************
வாய்ப்பளித்த அனைவருக்கும்
வார்த்தைகளால் மட்டுமன்றி 
மனத்தாலும் நன்றி சொல்லி
மகிழ்வோடு வணங்குகின்றேன்.

----------------செ. இராசா------------

எத்தனை எத்தனை உறவுகள்?



வெள்ளை வேட்டி வெளுத்துத்தந்து
வெடுக்குன்னு காசவாங்கி
வெவரமாக வச்சிக்கிட்டு
வெள்ளந்தியா சிரிச்சுகிட்டே....
பழைய சோறு கேட்கும் அந்த
பாசக்கார அக்கா எங்கே?

அப்பா வரலையான்னு
அன்போட பேசிக்கிட்டே
அரைகிலோ கறியோட
கால்கிலோ எழும்புவச்ச
கறிக்கடை பாய் மாமா
காணாமல் போனதெங்கே?

கவுத்திவச்ச சட்டியொன்னு
கழுத்து மேல வைச்சதுபோல்
சிரிச்சுக்குட்டே முடிவெட்டி
சிரத்தை சேதம் செஞ்சாலும்
ஐயா ஐயான்னு பேசும் அந்த
ஐயா இப்ப போனதெங்கே?

காசும் எதுவும் வாங்காம
கணக்கு எதுவும் வைக்காம
கடலைமிட்டாய் சேர்த்துத்தரும்- அந்த
கடைக்கார மாமாதான்
காணாமல் போனதெங்கே?

செவ்வாய் வெள்ளி பூஜை செய்ய
செவ்வந்தி மாலை கட்டி
கசங்காம இருக்கணும்னு
காகிதத்த மேல சுத்தி
வாசமாய் மணம் இருக்க
பாசமாய் மனசு வச்ச
பூக்கார அம்மாதான்
புதிர்போல போனதெங்கே?

----------------------
-----------------------
எத்தனை எத்தனை உறவுகள்?
எல்லாம்தான் போனதெங்கே?

----செ. இராசா-----

நேர்மையின் வழி/வலி



நேர்மையைப் போதிக்கும் ஆன்றோரே....
நேர்மையின் பெருமையைக் கூறுகையில்
நேர்ந்திடும் விளைவையும் கூறிடுங்கள்!

நேரம் காலம் பார்க்காமல்
நேர்மையாய் உழைக்கின்ற பலருக்கும்
நேர்கின்ற அவலங்கள் கூறிடுங்கள்!

நேராய் இருக்கின்ற மரங்களுக்கும்
நேர்மையாய் நடக்கின்ற மனிதருக்கும்
நேர்வதை நேர்மையாய்க் கூறிடுங்கள்!

நேர்மையைப் பேசுதல் சுலபமென்றும்
நேர்மையைப் பேணுதல் கடினமென்றும்
நேர்மையின் வழி/வலி கூறிடுங்கள்!

—-செ. இராசா——

ஆசை கொள்(ல்)வோம்



உள்ளத்தில் தோன்றிடும் எண்ணமெல்லாம்
உள்ளே உறங்கிடும் விதைகளாகும்!
ஆசையாய் மாறிடும் எண்ணமெல்லாம்
ஆயிரம் கிளைகொண்ட விருட்சமாகும்!

துன்பத்தின் மூலத்தை ஆராய்ந்து
துளிர்விடும் ஆசையை வெட்டிடுவோம்!
இன்பத்தில் நாளும் நிலைப்பதற்கு
இதயத்தில் ஆசையை வேரறுப்போம்!

அளவுக்கு மீறிய ஆசைகளால்
அல்லள்கள் வருவதை உணர்ந்திடுவோம்!
அளவுடன் ஆசையைச் சீரமைத்து
அகிலத்தில் சிறப்புற உயர்ந்திடுவோம்!

அகத்தில் ஞானம் அடைவதற்கு- இனி
அரச மரத்தடி அமரவேண்டாம்!
அகத்தில் அமைதி நிலைப்பதற்கு- தீ
ஆசையைத் துரத்திட ஆசைகொள்வோம்!

----செ. இராசா-----

விண்ணில் பறக்கும் இதயம்



விண்ணில் பறக்கும் இதயம்
விடியலை வெறுக்கும் இமைகள்
இருட்டினை ரசிக்கும் விழிகள்
இன்பத்தில் நகைக்கும் இதழ்கள்
விழுதெனத் தழுவும் கரங்கள்

விருந்தென எண்ணிடும் வேளையில்
விழுந்தேன் கட்டிலின் கீழே...
விழித்தேன் கனவு கலைந்தே....

—-செ. இராசா——

சுயமி (செல்ஃபி)


 
சுயமிக்கு (செல்ஃபிக்கு) முகம் காட்டி
சுற்றத்திற்கு புறம் காட்டி
சுட்டுத்தள்ளும் கைப்பேசியே....

உமக்குத் தெரியுமா?!

கவலையின் முகங்கள்
சுயமிக்குள் சிக்குவதில்லை

—செ. இராசா—-

05/12/2017

மரணம்

மரணம் உணர்த்திடும் சேதிகளை- இந்த 
மனிதர்கள் யாவரும் அறிந்துவிட்டால்
மண்ணில் தீமைகள் நடந்திடுமா?-இல்லை
மனிதம்தான் மரணத்தைத் தழுவிடுமா?

29/11/2017

அம்மாவின் உலகம்


ஆயிரம்மைல் கடந்து
அயல் தேசம் வாழ்கின்ற
அன்பான தன் மகனை
அதிகாலை வேளையிலே
அம்மா அழைத்தாள்...

அழைப்பினை தடுத்துவிட்டு
அன்புமகன் அழைத்தான்...
அழைத்ததன் காரணத்தை
அம்மாவிடம் கேட்டான்.

"ஒன்றும் இல்லை ஐயா...
உன்குரலே இன்பம் ஐயா....
அழைப்புவரா  நாட்களிலே
அகிலமே இருளுதையா...
அதனாலே அழைத்தேன் ஐயா...."
..........................................
.........................................
நாலு வார்த்தை சொல்லும்போதே
நாக்கெல்லாம் பிறழ்கிறது...

அவள் அழுகைக் குரல் கேட்டு
இவன் நெஞ்சும் நனைகிறது..........


-----------செ. இராசா------