12/12/2017

72 வது கவிச்சரம்- மகாகவி பாரதியார்




தமிழ்த்தாய் வணக்கம்
*************************************
தான்பெற்ற தவப்புதல்வன்
தரணியையே வென்றபோது
தாய்கொண்ட மகிழ்ச்சியைப்போல் - பெருங்
களிப்போடு தமிழ்த்தாய்க்கு
கவிச்சரங்கள் தொடுக்கின்றேன்! - இரு
கரமுயர்த்தி வணங்குகின்றேன்!

தலைமை வணக்கம்
*******************************
மாகவியைப் பாடுகின்ற
மாமன்ற கவியரங்கை
சிறப்பிக்கும் தலைவரையும்
சேக்கிழார் ஐயாவையும்
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்!

அவை வணக்கம்
**************************
எத்தனையோ அவைகள் கண்டோம்
இத்தனை சிறப்பு இல்லை!
எத்தனையோ தளங்கள் கண்டோம்
இத்தளம்போல் எங்கும் இல்லை!

உயர்புகழ் கவிஞர் பலர்
உறுப்பினர் ஆன சபை- நல்
உயிர்ப்புடன் உள்ள சபை
அச்சபையை அடியேனும்
அன்புடனே வணங்குகின்றேன்!

மகாகவி பாரதியார் வாழ்த்து
************************************
அடிமைத்தனம் உடைத்தெறிய
அரும்பாடு பட்டவன் நீ!

ஆசைவேர் அறுத்தெறிய!
ஆத்மஞானம் படைத்தவன் நீ!

இறுமாப்பு கொள்ளாத
இருதயத்தைக் கொண்டவன் நீ!

ஈதல் அறம் எடுத்துச்சொன்ன
ஈடில்லா சான்றோன் நீ!

உரிமைக்குரல் என்னவென்று
உண்மைகளை உடைத்தவன் நீ!

ஊமைகளாய் வாழ்ந்தவர்க்கு
ஊக்கவினை தந்தவன் நீ!

எழுத்தினிலே புதுமை செய்து
எல்லோர்மனம் வென்றவன் நீ!

ஏதிலார் பொய்யுரையை
ஏதுமில்லா(து) செய்தவன் நீ!

ஐயர்குலப் பிறப்பெனினும்
ஐயமில்லா தமிழன் நீ!

ஒற்றுமைக்கு வழிசொன்ன
ஒப்பற்ற தலைவன் நீ!

ஓர் மறையாம் குறள்போலே
ஓர் கவிஞன் ஆனவன் நீ!

ஔவியம் கொண்டவர்க்கும்- பின்பு
ஔவைபோலே தெரிந்தவன் நீ!

அஃறிணை ஆனாலும்
அஃது(ம்) இறைவன் என்றவன் நீ!

பாரதியாரின் கண்ணன் பக்தி
*****************************************
கண்ணனையே நண்பனாக்கி- தினம்
கலந்துரையாடல் செய்தாய்!

கண்ணனெனும் தாய்தேடி- பசிக்
கன்றெனத் துள்ளி நின்றாய்!

கண்ணனெனும் தந்தையிடம்- உன்
கடமையினைச் செய்து நின்றாய்!

கண்ணனையே சேவகனாக்கி- அன்புக்
கட்டளையால் பணிய வைத்தாய்!

கண்ணனெனும் அரசனிடம்- சபைக்
கவிபாடும் புலவனானாய்!

கண்ணனையே சீடனாக்கி- உயர்
குருபோல கருணை கொண்டாய்!

குரு கண்ணனிடம் சரண்புகுந்து- உன்
கர்மவினைநீக்கி நின்றாய்!

கண்ணனெனும் குழந்தைக்கு- நீ
கவிபாடி கொஞ்சி நின்றாய்!

காதலனாய் காதலியாய்- என்றும்
காதெலெனில் கண்ணனென்றாய்!

கண்ணனிலே குடிபுகுந்து - உயர்
கீதைபோலே கவிகள் தந்தாய்!

நன்றியுரை:
*****************
வாய்ப்பளித்த அனைவருக்கும்
வார்த்தைகளால் மட்டுமன்றி 
மனத்தாலும் நன்றி சொல்லி
மகிழ்வோடு வணங்குகின்றேன்.

----------------செ. இராசா------------

No comments: