31/01/2024

அங்குமிங்கும் ஓடிய பிள்ளையை

 


அங்குமிங்கும் ஓடிய பிள்ளையை
அடக்கி அமர வைத்தார்கள்!

தனியே அறை கொடுத்து
ஒதுக்கி வைத்தார்கள்!

இதைச் செய்யாதே
அதைச் செய்யாதேயென
கட்டளை விதித்தார்கள்!

ஆனால் அவள் அதையெல்லாம்
கண்டுகொள்ளவே இல்லை...
காரணம்...
அவளுக்கும்
அத்தனிமை பிடித்திருந்தது...

அவள் அண்ணன்
அவளைத் தொந்தரவு செய்யவில்லை
அவள் அம்மா
அவளைக் கண்டு(டி)க்கவே இல்லை
ஆம்...
அவள் கைப்பேசியோடு
விளையாடிக் கொண்டே இருந்தாள்

பாவம்....
இவர்கள்தான் சொல்கிறார்கள்
அவள் பெரிய மனுஷி ஆனாளென்று..

✍️செ. இராசா

உயிரின் மொழியே உன்னதக் கவியே

உயிரின் மொழியே
உன்னதக் கவியே
நடையில் நதியே
நனைந்த மதியே...(2)

விழியில் விழுந்தத் தருணம் முதலே
விதியின் வழியை திருப்பும் விசையே
நெருங்கி நெருங்கி அருகில் வரவே
நெருப்பின் தகிப்பை எழுப்பும் இசையே!

இருக்கையில் கூட இல்லையெனும்
உணர்வைத் தந்தாய்...
இறைநிலை என்றால் என்னவெனும்
அறிவைத் தந்தாய்..

இரண்டே இல்லை ஒன்றென்றால் அத்வைதம் என்பார்
இதிலென்ன விந்தை ஒன்றென்பார்
நம்மையும் கண்டால்...

இருந்தும் அன்பே வலிக்கிறதே..
பிரிவெனச் சொன்னால்..
வலிதரும் சொல்லும் இருந்திடுமோ
நம்மையும் கண்டால்...

வா..வா...அன்பே...அன்பே...

28/01/2024

உப்புக்குச் சப்பாணி

அதென்ன உப்புக்குச் சப்பாணி?!
உண்மையில் அது
உப்புக்குச் சப்பாணியே அல்ல
ஒப்புக்குச் சப்பாணியே...

குழுவில் ஆள் குறைந்தால்
சும்மா இருக்கட்டுமே என
ஒப்புக்காய் சேர்க்கும் கணக்கீடே...

அது சரி?
அதில் ஏன் சப்பாணி?
அதுதான் சமூக அவலம்
அநாகரிகத்தின் அடையாளம்!
மாற்றுத் திறனாளிகளை
ஆற்றல் குறைந்தோரென
பழமொழியால் வதைக்கும்
உளவியல் அசிங்கம்!

கண்தெரியாப் புலவர்மேல்
காலில்லாப் புலவரேறி
இரட்டைப் புலவர்களாய்
எங்கும் வலம்வந்த கதை
சங்க இலக்கியத்தில்
சான்றாக இல்லையா?!

கையும் இல்லாமல்
காலும் இல்லாமல்
தலையணை உருவத்தில்
தரணியையே கலக்குகின்ற
நிக்கி என்கின்ற நிக்கோலஸ்பற்றி
விக்கியில் படிக்கவில்லையா?!

ஹெல்லன் கெல்லர் முதல்
இசைமேதை பீதோவன்வரை
இங்கே யாரும் உங்கள்
நையாண்டி கண்டெல்லாம்
நசுங்கி விடவில்லை..

அது சரி...
நாங்களாவது ஒப்புக்குச் சப்பாணி!
நீங்க...?!

27/01/2024

என் நா மட்டுமல்ல

 


உன் பொன்னழகை
என் கண்களே அறியும்
உன் மென்சூட்டை
என் இதழ்களே அறியும்
உன் நன்ருசியை
என் நா மட்டுமல்ல
என் உயிரும் உணரும்..

✍️செ. இராசா

அம்மா ஜனனி பவதாரிணி நீ

 


அம்மா ஜனனி பவதாரிணி நீ
அம்மா ஜனனி பவதாரிணி நீ
என் ஆத்மார்த்த உயிரான ஓர் வரம் நீ
அம்மா ஜனனி பவதாரிணி நீ
என் ஆத்மார்த்த உயிரான ஓர் வரம் நீ

கணம் கணம் நீயே என் புது ஸ்வரங்கள்
ஆ... ஆ அ அ ஆ அ அ ஆ அ ஆ ஆ அ அ ஆ...
கணம் கணம் நீயே என் புது ஸ்வரங்கள்
ஸ்வரமின்றி உண்டோஇன் னிசைரகங்கள்
கணம் கணம் நீயே என் புது ஸ்வரங்கள்
ஸ்வரமின்றி உண்டோஇன் னிசைரகங்கள்

உலகமே போற்றுகின்ற உன்னத மகள்நீ
உலகமே போற்றுகின்ற உன்னத மகள்நீ
காருண்ய நாமமே
காருண்ய நாமமே பவதாரிணி
அம்மா ஜனனி பவதாரிணி நீ
அம்மா ஜனனி பவதாரிணி நீ

✍️செ. இராசா

24/01/2024

ராமர் பாடல்




மீண்டு(ம்)வந்த நாயகனே ஸ்ரீ ராமா
நீண்டகால சரித்திரமே வா ராமா
கோசலத்து பாலகனே ஸ்ரீ ராமா
கோ..தண்டம் உயர்ந்திடவே வா ராமா

எத்தனை எத்தனை
சோதனை வாழ்வினில்
எப்படி வந்தாலும்
சத்திய ராமனாய்
உத்தம ராமனாய்
எப்படி வென்றாயோ?

எத்தனை எத்தனை
வேதனை தந்தனர்
எப்படி ஆனாலும்
ஷத்ரிய ராமனாய்
சத்குரு ராமனாய்
எப்படி நின்றாயோ?

நன்றேதர நலமேமிக
.....நரனாயுரு வடிவே
சென்றேதிரு வுருவேயிறை
....யெனவேவரு வோனே!
அன்பேவுரு அறமேவழி
....அறிவேநடை எனவே
இன்றேவர இனிதேமிக
....இறையேவரு வாயோ?!

ராமா...ராமா....ராமா ராமா
ராமா...ராமா...ஜெய்‌ஸ்ரீ ராமா...
ராமா...ராமா....ராமா ராமா
ராமா...ராமா...ஜெய்‌ஸ்ரீ ராமா...

கோசல ராமா...ராமா ராமா
தசரத ராமா...ராமா ராமா
சீதா ராமா...ராமா ராமா
கோதண்ட..ராமா..ராமா

அன்பே ராமா...ராமா..ராமா
அறமே ராமா..ராமா..ராமா
அருளே ராமா..ராமா..ராமா
அறிவே ராமா..ராமா..ராமா

அங்கே ராமா..ராமா..ராமா
இங்கே ராமா...ராமா..ராமா
வாவா ராமா... ராமா..ராமா
வாவா ராமா...ராமா...ராமா

ராமா....ராமா.....

✍️செ. இராசா

23/01/2024

நேர்மை நெறிப்படி நடந்தால்

 

நேர்மை நெறிப்படி நடந்தால் - மனம்
நிறைந்த அமைதி கூடும்!
வாய்மை உரைத்திட வாழ்ந்தால்-நம்
மாண்பின் உயரம் கூடும்!

இருப்பதை கொடுப்போம்
....இறைவழி நடப்போம்
..........இருளும் வெளிச்சமாகும்!
வருவதை சகிப்போம்
...வரைமுறை வகுப்போம்
...........வருத்தம் விலகிப்போகும்!

✍️செ.‌இராசா

(மெட்டு: தோல்வி நிலையென நினைத்தால்)

22/01/2024

கம்பனுக்கு(ம்) கோவிலக் கட்டு

 

#மெட்டு: #நண்பனுக்கு_கோவிலக்கட்டு)

வா ....
கம்பனுக்கு(ம்) கோவிலக் கட்டு- அவர்
பேரச்சொல்லி கைகளத் தட்டு
சந்தத்துல தந்தாரு பாட்டு- அவர
சொந்தமெனக் கொண்டாடிக் காட்டு

வாமச்சி செய்யலாம் கம்பன்போல நூறு..
நாமலும் செஞ்சாதான் நிலைக்குமிங்கே பேரு
மொழிய சிதைக்க நெனச்சா
மொகரயில விடுவோம்
மொழிய வளர்க்க நினைச்சா
வழிய உயிரக் கொடுப்போம்

கம்பனுக்கு....

✍️செ. இராசா

தோசை

 


பாசிப் பயிறோடு பச்சரிசி சேர்த்தரைச்ச
தோசை ருசியிருக்கே....தூள்

✍️செ. இராசா

17/01/2024

துரியாதீதம்

ஆக்கினையில் தன்னுயிரை
......ஆழ்ந்துணரும் ஞானத்தை
ஆய்ந்தறியத் தேவை இல்லையோ?!
 
தூக்கிசிர உச்சியினில்
.....சுத்தமனம் ஒன்றுவதை
தோய்ந்துணர ஆசை இல்லையோ?!
 
நீர்க்குமிழி போலெழும்பி
....நிற்காமல் அண்டமதை
நீபார்க்க எண்ண வில்லையோ?
 
யார்க்குமுயிர் வந்தவழி
....ஆதிவெளி சுத்தவெளி
ஈர்க்குமதைத் தேட வில்லையோ?!
 
✍️செ. இராசா