அதென்ன உப்புக்குச் சப்பாணி?!
உண்மையில் அது
உப்புக்குச் சப்பாணியே அல்ல
ஒப்புக்குச் சப்பாணியே...
குழுவில் ஆள் குறைந்தால்
சும்மா இருக்கட்டுமே என
ஒப்புக்காய் சேர்க்கும் கணக்கீடே...
அது சரி?
அதில் ஏன் சப்பாணி?
அதுதான் சமூக அவலம்
அநாகரிகத்தின் அடையாளம்!
மாற்றுத் திறனாளிகளை
ஆற்றல் குறைந்தோரென
பழமொழியால் வதைக்கும்
உளவியல் அசிங்கம்!
கண்தெரியாப் புலவர்மேல்
காலில்லாப் புலவரேறி
இரட்டைப் புலவர்களாய்
எங்கும் வலம்வந்த கதை
சங்க இலக்கியத்தில்
சான்றாக இல்லையா?!
கையும் இல்லாமல்
காலும் இல்லாமல்
தலையணை உருவத்தில்
தரணியையே கலக்குகின்ற
நிக்கி என்கின்ற நிக்கோலஸ்பற்றி
விக்கியில் படிக்கவில்லையா?!
ஹெல்லன் கெல்லர் முதல்
இசைமேதை பீதோவன்வரை
இங்கே யாரும் உங்கள்
நையாண்டி கண்டெல்லாம்
நசுங்கி விடவில்லை..
அது சரி...
நாங்களாவது ஒப்புக்குச் சப்பாணி!
நீங்க...?!
28/01/2024
உப்புக்குச் சப்பாணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment