09/04/2022

சொத்து

 


 #சொத்து

இருப்பின் அடையாளமாய்
இருப்பது மட்டுமல்ல;
இருந்ததன் அடையாளமாய்
இருப்பதும் நம் சொத்துக்கள்தான்!

பின்னோர் அனுபவிக்க
முன்னோர் தந்தது மட்டுமல்ல;
பின்னால் அனுபவிக்க
இன்நாள்நாம் சேர்ப்பதும் சொத்துக்கள்தான்!

இந்த சொத்துக்கள் தான் எத்தனை எத்தனை?!

அசையும் சொத்தென்பர்
அசையா சொத்தென்பர்.....
பரம்பரைச் சொத்தென்பர்‌..
பங்காளிச் சொத்தென்பர்..
உரிமைச் சொத்தென்பர்...
புறம்போக்குச் சொத்தென்பர்
தனியார் சொத்தென்பர்...
அரசாங்கச் சொத்தென்பர்..

ஆமாம்...
உணவுக்கே வழி இல்லார்க்கு
உரிமைகோர சொத்துண்டா என்ன??

உண்மைதான்...
இங்கே....
சொத்திருந்தால் செல்வர்
சொத்தில்லையேல் செல்வர்...
அது...நாடாயிருந்தாலும் சரி
தனி‌‌... ஆளாயிருந்தாலும் சரி
சொத்தை வைத்துதான் எல்லாம்....

உண்மையைச் சொல்லுங்கள்...
சொத்தென்றால் பொருளும் நிலமும்தானா?!
எனில் இலக்கியச்சொத்தை
எதில் சேர்ப்பது?
அது‌....
அகத்தில் எவரையும்
அசைக்கும் சொத்தல்லவா?
இகத்தில் பலரையும்
இசைக்கும் சொத்தல்லவா?!
மொழிவழி செல்லும்
இனத்தின் சொத்தல்லவா?!
இனவழி செல்லும்
சந்ததியின் சொத்தல்லவா??
ஆம்....

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்..
சொத்துக்கள் அனுபவிக்கத்தான்
யாரும் அழிக்க அல்ல...
சொத்துக்கள் பெருக்கத்தான்
யாரும் கழிக்க அல்ல....

எனில் என்னசெய்யலாம்?!

பண்பாட்டுச் சொத்தை பாதுகாக்கலாம்
செந்தமிழ்ச் சொத்தை சீர்படுத்தலாம்
இலக்கணச் சொத்தை வளமாக்கலாம்
இலக்கியச் சொத்தைப் பெரிதாக்கலாம்...

அதெல்லாம் கிடக்கட்டும்
முதலில்‌..
நம் சொத்து யாதென்று
நாம் அறிவோமா?!

அதானே...

அதை அறியுங்கள் முதலில்
பின்னர் பிறமொழிபற்றி விவாதிக்கலாம்...

✍️செ. இராசா

07/04/2022

குழந்தையின் அழுகுரல்

 


#குழந்தையின்_அழுகுரல்

அம்மாநீ எங்கம்மா..
........அப்பாவும் காணோம்மா
டம்டம்னு சப்தம்மா...
........காதெல்லாம்- கம்முதும்மா
பொம்மையும் கத்துதும்மா
.......போயிடலாம் வந்திடும்மா
யம்மாநீ வாயேன்மா இங்கு?

வீட்டையும் காணோம்மா
.......வேளியையும் காணோம்மா
கூட்டையும் காணோம்மா
.......கொண்டுவந்து- காட்டேன்மா
கூட்டத்தப் பாரம்மா
.......கூட்டிட்டுப் போயேன்மா
வாட்டத்தைப் போக்கம்மா வந்து!

#மூன்று_கேள்விகள்

உக்ரைனோ? ரஷ்யாவோ? உண்மையில் இப்போரில்
திக்கற்று நிற்பதுயார் சொல்?
(1)

உசுப்பிவிட்ட நாடுகளால் ஓயாத போரில்
நசுங்கியது யாரோ நவில்?
(2)

வெற்றியோ தோல்வியோ வீழ்ந்தவுயிர் வந்திடுமா?!
விற்பனரே தாரும் விடை?

✍️செ. இராசா

 


யாருக்கும் தெரியாமல்
என்னதான் திணித்தாலும்
கால்ச்சட்டை மேலேறி
காட்டிக்கொடுக்கிறது...
அந்த பொத்தான் பிய்ந்த சட்டைப்பகுதி..
 
-செ. இராசா

06/04/2022

காமத்துப்பால் ---- குறுஞ்சொற்பா ---- இருசீர் வெண்பா வாய்ப்பாட்டில்

  


#காமத்துப்பால்_குறுஞ்சொற்பா
#இருசீர்_வெண்பா_வாய்ப்பாட்டில்

(மற்ற இருண்டு பால்கள்போல் இதை எழுதமுடியவில்லை. காரணம் அவை இரண்டும் இதைச்செய் இதைச்செய்யாதே என்று அறிவுரை கூறுவதுபோல் இருக்கும்‌. ஆனால் காமத்துப்பால் அப்படியல்லதானே....ஆக...இதை முழு அதிகாரத்தின் சுருக்கத் தலைப்பாக மட்டும் பார்க்க வேண்டுகிறேன்.

நீ யார் முன்னோரின் தலைப்பை மாற்ற என்றெல்லாம் கோபப்பட வேண்டியதில்லை. இது யாம் அதிகாரத்தை உள்வாங்கி எழுதிய குறுஞ்சொற்பா தலைப்புகள் அவ்வளவே...)

#களவியல்
109. பெண்ணே அழகு!
110. விழிமொழியும் அன்பு
111. இணக்கம் இனிது
112. அழகென்றால் நீ
113. காதலர் பாடு
114. காமமோர் ஆறு
115. கிசுகிசு தாண்டு

#கற்பியல்
116. பிரிவு சுடும்
117. காமக்கடல் நீந்து
118. காரணம்யார் கண்
119. பசலைநோய் பார்
120. தனிமை அனல்
121. புலம்பும் மனம்
122. கனவில் களிப்பு
123. மாலை எமன்
124. புலன்களின் போர்
125. நஞ்சாகும் நெஞ்சு
126. வெட்கமில்லா வேட்பு
127. கண்ணோடு கண்
128. மொழியில்லாப் பேச்சு
129. இயலா தவிப்பு
130. நெஞ்சோடு போர்
131. ஊடல் பிணக்கு
132. உரிமைப் பிணக்கு
133. ஊடல் முடிவு

✍️செ. இராசா

பொருட்பால் ---- குறுஞ்சொற்பா ----இருசீர் வெண்பா வாய்ப்பாட்டில்

  


#பொருட்பால்_குறுஞ்சொற்பா
#இருசீர்_வெண்பா_வாய்ப்பாட்டில்

#அரசியல்
39. நல்லரசன் ஆகு
40. கல்விதான் கண்
41. கல்லார் தரிசு
42. செவிகொடுத்துக் கேள்
43. அறிவைப் பெருக்கு
44. தன்குற்றம் போக்கு
45. பெரியோர்சொல் கேள்
46. சிற்றினத்தார் கேடு
47. ஆராய்ந்து செய்
48. வலிமை உணர்
49. காலத்தே செய்
50. தெளிவுடன் செய்
51. இடமறிந்து செய்
52. தனித்துவம் ஆகு
53. சுற்றம்சூழ் வாழ்வு
54. மறதியை வெல்
55. நீதிவழி கோன்
56. கொடுங்கோல் அழிவு
57. கொடியகோன் கேடு
58. கருணைக்கண் காண்
59. ஒற்றறிந்(து) ஆற்று
60. ஊக்கம் உயர்வு
61. சோம்பல் விடு
62. முயன்றால் எளிது
63. துன்பம் கட

#அமைச்சியல்
64. நல்லமைச்சால் நாடு
65. வெல்லுஞ்சொல் சொல்
66. நல்லதைச் செய்
67. உறுதியோடு செய்
68. செயலறிந்து செய்
69. தூதுரை ஆய்
70. அரசறிந்து பேசு
71. குறிப்பறிந்து செய்
72. அவையறிந்து பேசு
73. அஞ்சாமல் பேசு

#அரணியல்
74. வளர்வதே நாடு
75. அரணே பலம்

#கூழியல்
76. பொருளைச் சேர்

#படையியல்
77. படைபலம் கூட்டு
78. படைச்செருக்கு கொள்

#நட்பியல்
79. நட்பே நலம்
80. நன்நட்பைப் பற்று
81. உரிமையில் நட்பு
82. தீநட்பை வெட்டு
83. பொருந்தாரை நீக்கு
84. பேதைமை போக்கு
85. புல்லறிவு தீங்கு
86. வேறுபாடு வீம்பு
87. பகையறிந்து கொள்(ல்)
88. பகையைப் பொசுக்கு
89. உட்பகையே தீது
90. பெரியோரைப் பேண்
91. பெண்சொல் விலக்கு
92. விலைப்பெண் விலகு
93. கள்ளை விடு
94. சூதாட்டம் தீது
95. உணவே மருந்து

#குடியியல்
96. உயர்குடியாய் மாற்று
97. மானம் பெரிது
98. பெருமையுடன் வாழ்
99. சான்றோராய் மாறு
100. பண்புடன் வாழ்
101. வரும்பொருளில் செய்
102. நாணுவதற்கு நாண்
103. குடிப்பெருமை போற்று
104. உழவே தலை
105. வறுமை ஓழி
106. இரந்தால் கொடு
107. இரவாமை நன்று
108. கயவர்யார் காண்

✍️செ. இராசா

....அடுத்து காமத்துப்பால் நோக்கி

05/04/2022

டாவடிக்கப் போனானோ?

 


டாவடிக்கப் போனானோ?
.......டாஸ்மாக்கு போனானோ?
சாவடிதான் இன்னைக்குச்
‌.......சாய்ங்காலம்- ஆவதைப்பார்...
கட்டுனவள் இங்கிருக்க
........கண்டயிடம் மேய்பவனைக்
கட்டிவச்சு வாலறுப்பேன் காண்!
 
✍️செ. இராசா

அரசியல் பதிவல்ல ------- பகுத்தறிவுப் பதிவே

 


தமிழ்நாடு அரசு பள்ளிப் பாட நூல்களில் நாம் ஏற்கெனவே அறிந்த பல தலைவர்களின் பெயர்களில் இருந்த சாதியப் பெயர்களை நீக்குவதாக அறிவித்து அதைத் தற்போதைய அரசு உடனடியாக செயல்படுத்துவது வரவேற்கத்தக்கதே. ஆனால் அவற்றில் சில சந்தேகங்கள் எழுவதால் அதைத் தெளிவுபடுத்தும் பொறுப்பும் அரசுக்கே உள்ளது. (இதைப் படிக்கும் பெரிய ஆளுமைகள் மேலிடம் கொண்டு செல்வார்களேயானால் இப்பதிவின் நோக்கம் நிறைவேறலாம்) அதாவது, தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை இப்போது சுந்தரனார் ஆகியுள்ளார் சரி, ஆனால் நாட்டுப்பண் எழுதிய இரவீந்திரநாத் தாகூரில் ஏன் இன்னும் #தாகூர் ஒட்டிக்கொண்டுள்ளது?!. தாகூர் சாதியப்பெயர் இல்லையா?! இதேபோல் படேல் மற்றும் காந்தி போன்ற பெயர்களெல்லாம் என்ன? இதேபோல் சிங், ஜெயின், ரெட்டி, நாயுடு, மேனன்.... போன்ற இன மத அடையாளப் பெயர்களையெல்லாம் என்ன செய்யலாம்?!
 
அதைவிடப் பெருத்த சந்தேகமொன்று இருக்கிறது. நம்ம ஊரில் #பெரியார் என்று அவர் பெயரில் பேர்வைத்த படக்குழுவினர், அதையே தெலுங்கில் மொழிமாற்றம் செய்யும்போது #பெரியார்_ராமசாமி_நாயக்கர் என்று வைத்தார்களே அது ஏன்? சாதியம் வேண்டாம் என்று சொன்ன தலைவர் படத்தை சாதியப்பெயரில் விட்டால்தான் படம் ஓடுமென்று சொல்லும் உருட்டுக்கள் எல்லாம் சரியா? எனில் உண்மையில் சாதியம் யாருக்குத் தேவைப்படுகிறது?
 
அடுத்து MLA, MP சீட்டுக்கான விண்ணப்ப படிவங்களில் ஏன் இன்னும் எந்த சாதியென்றும் சாதிய ஓட்டுக்கள் எத்தனையுள்ளது என்றும் கேட்கும் விதமாக கட்சியினர் இடம் வைத்துள்ளார்கள்?! தேர்தலின் போது இந்த சாதியைச் சேர்ந்தவர்தான் நிற்கின்றார்கள் என்பதை அறிவிக்கும் ஊடகங்களை, வேட்பாளரை அல்லது கட்சிகளை தண்டிக்கும்படி ஏதேனும் மாற்றம் கொண்டவர இயலுமா? பள்ளிகளிலேயே இன்னும் சாதியச் சான்றிதழ் தேவைப்படுகிறதே...அதை என்ன செய்யவுள்ளீர்கள்?! இதையெல்லாம் செய்யாமல் ஏதோ சிலவற்றை பேருக்கு மாற்றுவது கண்துடைப்பு வேலையில்லையா?!..
 
தயவுகூர்ந்து உண்மையில் நடவடிக்கைகள் எடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். இல்லையேல்.....இந்த நாடும் நாட்டுமக்களும் இப்படியே போகவேண்டியதுதான்.
 
என்ன நான் கேட்பது சரிதானே?!!
 
✍️செ. இராசா

04/04/2022

கவிதைகள்

 

கவிதைகள் பரிசுத்தமானது
எத்தனைபேர் ருசித்தாலும்...
 
கவிதைகள் இலகுவானது!
எத்தனை பொருள் வைத்தாலும்...
 
கவிதைகள் கனமானது!
பொருளில்லா வறுமையிலும்...
 
கவிதைகள் உயர்வானது‌!
பள்ளத்தைக் காட்டினாலும்....
 
கவிதைகள் கோபுரமானது!
குப்பைகளைச் சொன்னாலும்‌.‌...
 
கவிதைகள் நிலையானது!
கவிஞனே மரித்தாலும்‌...
 
✍️செ. இராசா

03/04/2022

 


நீர் வற்றியபின்னே
நிறம் மாறிவிடுகிறது
சருகு

02/04/2022

உன்னை யார் அடித்தாலும்

 

அம்மாவோ..
அம்மணியோ..
உன்னை யார் அடித்தாலும்
உன் கண்ணீரை ஏந்துபவன் நான்தான்....

இல்லமோ..
ஆலயமோ..
நீ எங்கே உடைந்தாலும்
உன்னைக் கரமேந்தித் தாங்குபவன் நான்தான்....

உள்ளேயோ..
வெளியேயோ..
நீ எங்கே இருந்தாலும்
உன்னை அப்படியே கடிப்பவன் நான்தான்...

பாலாகவோ
பண்டமாகவோ
நீ எப்படி மாறினாலும்
உன்னை அப்போதும் ருசிப்பவன் நான்தான்...

ஆம்‌...நானேதான் தேங்காயே...