09/04/2022

சொத்து

 


 #சொத்து

இருப்பின் அடையாளமாய்
இருப்பது மட்டுமல்ல;
இருந்ததன் அடையாளமாய்
இருப்பதும் நம் சொத்துக்கள்தான்!

பின்னோர் அனுபவிக்க
முன்னோர் தந்தது மட்டுமல்ல;
பின்னால் அனுபவிக்க
இன்நாள்நாம் சேர்ப்பதும் சொத்துக்கள்தான்!

இந்த சொத்துக்கள் தான் எத்தனை எத்தனை?!

அசையும் சொத்தென்பர்
அசையா சொத்தென்பர்.....
பரம்பரைச் சொத்தென்பர்‌..
பங்காளிச் சொத்தென்பர்..
உரிமைச் சொத்தென்பர்...
புறம்போக்குச் சொத்தென்பர்
தனியார் சொத்தென்பர்...
அரசாங்கச் சொத்தென்பர்..

ஆமாம்...
உணவுக்கே வழி இல்லார்க்கு
உரிமைகோர சொத்துண்டா என்ன??

உண்மைதான்...
இங்கே....
சொத்திருந்தால் செல்வர்
சொத்தில்லையேல் செல்வர்...
அது...நாடாயிருந்தாலும் சரி
தனி‌‌... ஆளாயிருந்தாலும் சரி
சொத்தை வைத்துதான் எல்லாம்....

உண்மையைச் சொல்லுங்கள்...
சொத்தென்றால் பொருளும் நிலமும்தானா?!
எனில் இலக்கியச்சொத்தை
எதில் சேர்ப்பது?
அது‌....
அகத்தில் எவரையும்
அசைக்கும் சொத்தல்லவா?
இகத்தில் பலரையும்
இசைக்கும் சொத்தல்லவா?!
மொழிவழி செல்லும்
இனத்தின் சொத்தல்லவா?!
இனவழி செல்லும்
சந்ததியின் சொத்தல்லவா??
ஆம்....

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்..
சொத்துக்கள் அனுபவிக்கத்தான்
யாரும் அழிக்க அல்ல...
சொத்துக்கள் பெருக்கத்தான்
யாரும் கழிக்க அல்ல....

எனில் என்னசெய்யலாம்?!

பண்பாட்டுச் சொத்தை பாதுகாக்கலாம்
செந்தமிழ்ச் சொத்தை சீர்படுத்தலாம்
இலக்கணச் சொத்தை வளமாக்கலாம்
இலக்கியச் சொத்தைப் பெரிதாக்கலாம்...

அதெல்லாம் கிடக்கட்டும்
முதலில்‌..
நம் சொத்து யாதென்று
நாம் அறிவோமா?!

அதானே...

அதை அறியுங்கள் முதலில்
பின்னர் பிறமொழிபற்றி விவாதிக்கலாம்...

✍️செ. இராசா

No comments: