31/12/2020

புது வருசத்தில் மலர்கிறநம்பிக்கையால்

 

புது வருசத்தில் மலர்கிறநம்பிக்கையால்
இனி ஒரு புதுயுகம் பிறக்கட்டுமே
விடியலைப் போற்றிப் பாடிப்பாடி
புது வருசத்தை வரவேற்போம்
மண்ணில் யாவரும் ஒன்றாய்க்கூடி
புதுவருசத்தில் வென்றிடுவோம்
✍️செ.இராசா

30/12/2020

தென்னைப்பத்து............. குறள் வெண்பாக்கள்

 



#தென்னைப்பத்து
#குறள்_வெண்பாக்கள்

காயென்றும் ஓர்நாள் கனியாகும் ஆகாதே
மாயக்காய் தேங்காய் அது
(1)

உப்புக் கடல்நீரை உள்வாங்கிக் கொண்டாலும்
உப்பில்லை அந்நீரில் பார்
(2)

பல்லடுக்குப் பாதுகாப்பில் பத்திரமாய் நீர்வைத்த
வல்லமையை என்சொல்வேன் நான்
(3)

மின்சாரம் இல்லாமல் நீரேற்றி மாற்றுகின்ற
நன்னீர்செய் ஞானம் நவில்
(4)

ஓரிடம் காலூண்றி ஓங்கி வளர்வதை
யாரிடம் கற்றாயோ நீ
(5)

ஆழக்குழி தோண்டி அடியிலே நீர்விட்டால்
வாழவழி காட்டுவாய் நீ
(6)

நேராய் நிமிர்ந்தோர்க்கு நேர்கின்ற தீங்கைப்போல்
பாரேன் தடுக்கிறார் 'கள்'
(7)

தென்னங்கள் என்றவுடன் தீங்கெனச் சொல்வோரின்
எண்ணங்கள் சாராயங் கள்
(8)

இளநீரின் இன்சுவைபோல் ஈடேதும் உண்டோ?
உளமாற வந்திங்(கு) உரை
(9)

நீர்விட்டால் நீர்செய்யும் நேர்த்தியைக் கண்டதினால்
வார்த்தேனே வெண்பாவில் வாழ்த்து
(10)

✍️செ.இராசா

சைனா கொரோனோ

 


 

#சைனா_கொரோனா‌ அடடா
சைனா கொரோனோ- அட
சைனா மேடு போனபின்னே
லண்டன் கொரோனா அடஇது
லண்டன் கொரோனா

அடிச்சத் துவைச்சுக் கிழிச்சிடுச்சு அப்பப்பா
இதுக்கு மேலே என்ன இருக்கு சொல்லப்பா
புடிச்சு நசுக்கிப் போட்டிடுச்சு அப்பப்பா
பொழைக்க என்ன வழி இருக்கு சொல்லப்பா

கொரானான்னு சொல்லி சொல்லி
குறைச்சுப்புட்டான் சம்பளத்தை (2)
சூமுரூமு (zoom room) பிலிமு காட்டி
அள்ளிப்புட்டான் ஸ்கூலு ஃபீசை (2)
சானிட்டைசர் போட வச்சு
சாச்சுப்புட்டான் சைனாக் காரன் (2)
கார்ப்பரேட்டு கணக்குப் போட்டு
ஏவிப்புட்டான் வெள்ளைக் காரன்(2)

ஒன்னும் புரியல - எங்களுக்கு
ஒன்னும் புரியல
இன்னும் எங்கே போகுமுன்னு
எதுவும் தெரியல- எங்களுக்கு
எதுவும் தெரியல

✍️செ.இராசா

(இந்தப் படத்தைப் பார்த்தவுடன் உருவான பாடல் இது)

29/12/2020

வள்ளுவர் திங்கள்_142 கொடை

 


கொடு! கொடு!
இருப்பதைக் கொடு
இருப்பதில் கொடு

நீ சிந்தும் ஓர் சிறு பருக்கை
ஒரு எறும்புக்கூட்டத்தின் பசி போக்கும்!
நீ செய்யும் ஓர் சிறு தானம்
பல எளியோர் வாழ்வில் ஒளி ஏற்றும்!
கொடு! கொடு!

இங்கே....
இருக்கும்போது கொடுப்பதல்ல கொடை
இல்லாதபோதும் கொடுப்பதே கொடை
இதில் சிறிதென்ன பெரிதென்ன
கொடு! கொடு!

இன்னும்.......
கொடை என்றால் கர்ணனும் பாரியும் தானா?
கொடுப்போர் அனைவரும் கொடையாளியே..
கொடுத்தால் அனைவரும் கொடை ஆழியே....

கொடு! கொடு!
இருப்பதைக் கொடு
இருப்பதில் கொடு

--செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_142
#கொடை

27/12/2020

தமிழ்ப்பத்து.............குறள் வெண்பாவில்.......பாரதியாரின் கண்ணன் பாடல் தலைப்பில்

 #தமிழ்ப்பத்து
#குறள்_வெண்பாவில்
#பாரதியாரின்_கண்ணன்_பாடல்_தலைப்பில்

#தமிழென்_தாய்
பாரா திருந்தால் பதராவேன் என்றெண்ணி
நேராமல் செய்தாயே நீ

#தமிழென்_தந்தை
சிந்தைக்குள் வந்தென்னுள் சீராய் அணிசெய்ய
எந்தைபோல் வந்தாயே நீ

#தமிழென்_குரு
இருளை விலக்கும் எரிதீபம் போன்ற
குருவென நின்றாயே நீ

#தமிழென்_தெய்வம்
வேண்டிடும் போதெல்லாம் வேகமாய் வந்திடும்
ஆண்டவன் ஆனாயே நீ

#தமிழென்_தோழன்
துயர்வரும் காலமும் தோழனாய் நிற்கும்
உயர்வுற வானாயே நீ

#தமிழென்_அரசன்
வரியில்லா போதும் வரிதர வேண்டி
அரசன்போல் கேட்பாயே நீ

#தமிழென்_சேவகன்
ஏவிய வேகத்தில் ஈட்டிபோல் பாய்ந்துவரும்
சேவகனாய் மாறாயோ நீ

#தமிழன்_சீடன்
பாடலின் ராகத்தைப் பற்றியதும் பாடுகிற
சீடனாய் வாராயோ நீ

#தமிழென்_குழந்தை
பழகிய ஒன்றையேப் பற்றென பற்றா
மழலையாய்ப் பேசாயோ நீ

#தமிழென்_காதலி
மோதலால் ஊடியே முட்டியே நில்லாமல்
காதலால் கூடாயோ நீ

✍️செ.இராசா

முட்டிமுட்டி ஒர் மரபுக்கவிதை

முட்டிமுட்டி ஒர் மரபுக்கவிதை எழுதினேன்
முறைத்து முறைத்துப் பார்த்தாள்..

எளிய நடையில் ஓர் புதுக்கவிதை
எழுதினேன்
ஏனோ... மீண்டும் முறைத்தாள்..

மீண்டும் ஓர் ஹைக்கூ எழுதினேன்
இம்முறை “ம்கூம்” என்று முனங்கினாள்

என்னதான் உன் பிரச்சனை? என்றேன்
இதுதான் தமிழா?!! என்றாள்

😀😀
✍️செ. இராசா

(வருங்காலத் தலைமுறைகளிடம் தமிழைக் கொண்டுபோய் சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல.....அதை நாமே தொடங்கவேண்டும்)

23/12/2020

கவிதை



இறுதிக் கவிதைக்கும்
அடுத்த கவிதைக்குமான
இடைவெளி இருக்கிறதே...
அது ஊடலைப்போல..
மிகுந்தால் வருகின்ற வேதனை

குறையும்வரை குறையாது!

கவிதை பிறக்கின்ற
அந்தத் தருணம் இருக்கிறதே
அது கூடலைப்போல...
வார்த்தைகள் கை கோர்த்து
அடி அடியாய் நீண்டு
எப்போது முடியுமென
எப்போதும் தெரியாது...

கவிதை பிறந்தபின்
எழுகின்ற ஆனந்தம் இருக்கிறதே
அது பிரசவித்த தாயின்
பெருமூச்சுபோல...
சொன்னால் புரியாது
சொல்லவும் முடியாது....

கவிதை
அது சுகப்பிரசவமானால்
அளப்பரிய இன்பம்!

கவிதை
அது கருக்கலைப்பானால்
அளவில்லாத் துன்பம்..

கவிதை
எப்போது பிறக்கும்?!
எவருக்கும் தெரியாது!

எப்போதும் பிறக்கலாம்
இப்போதும் பிறக்கலாம்!

இதோ....
பிறந்துவிட்டது!

ஆமாம் எது கவிதை?!

எதுகையும் மோனையும்
இணையர்போல் இருக்க
சீர் சீராய் சொல்லடுக்கி
அடி அடியாய் சீர்படுத்தி
தளை தட்டாக் களையெடுத்து
மலை கட்டும் மரபுதான் கவிதையா?!

உணர்ச்சியின் உச்சத்தில்
ஊற்றெனப் பெருக்கெடுக்க
எண்ணத்தின் அலைகூடி
எழும்புகின்ற வேகத்தில்
புதுவிதமாய் விதைக்கின்ற
புதுவிதைதான் கவிதையா?

சுறுக்கெனத் தைப்பதுபோல்
நறுக்கெனச் சொல்லி
மூன்றாவது அடியிலே
முக்தியைத் தருகின்ற
வாமனரின் வடிவு தான்
வருங்காலக் கவிதையா?

உண்மையில் எது கவிதை?!

ஒருவரியில் கவி செய்த
ஔவையின் படைப்பும்;
பத்தாயிரம் கவி செய்த
கம்பனின் படைப்பும்;
பதினான்கே வரி செய்த
பூங்குன்றனார் படைப்பும்;
தமிழ்கூறும் நல்லுலகில்
தலைநிமிர்ந்த கவிதைகளே..

ஆம்..‌

வடிவத்தால் அளக்கப்படுவதல்ல கவிதை!
படிமத்தால் செதுக்கப்படுவதே கவிதை!

✍️செ.இராசா

பாடலும் கவியும்
வெறும் பொழுதுபோக்கல்ல
அது கலை

என் பெயர் ஆனந்தன்---------இது விமர்சனமல்ல

  


 #இது_விமர்சனமல்ல

தமிழரும் தமிழ்ப்படங்களும்
தாயும் சேயும்போல்
ஒன்றுக்குள் ஒன்றாய்
ஒன்றிப்போன விடயங்கள்..
யார் மறுதலித்தாலும்
இது மறுக்கமுடியாத உண்மை...

தெருக்கூத்தில் தொடங்கி
நாடகத்தில் வளர்ந்து
திரைப்படமாய் விரிந்த சினிமா
தலைநிமிர்ந்து நிற்கிறதா இல்லை
தலைகுனிந்து போகிறதா?
'#என்_பெயர்_ஆனந்தன்" பாருங்கள்!

கதை
கதைக்குள் கதை
கதைக்கின்ற கதையென.....
இப்படம் வெறும் படமல்ல
இனி படம் எடுப்பவருக்கான பாடம்..

யார் சொன்னார்கள்?!
வர்த்தகப் படம் வேறு
கலைப்படம் வேறென்று?!

யார் சொன்னார்கள்?!
பிரம்மாண்டமே படைப்பென்று?

யார் சொன்னார்கள்?!
எதார்த்தப் படங்கள் ஒடாதென்று?

நாலு பாட்டு
நாலு சண்டை
நெகிழ்ச்சி வசனம்
கவர்ச்சி நடனம்
இவ்வளவு தானா படம்?!!
கொடுமை!!!

ஒன்றைச் சொல்லுங்கள்?!
படம் பொழுதுபோக்கா? கலையா?!
பார்ப்பவர்க்கு எப்படியோ...
படைப்பவர்க்கு எப்படி?!

நல்ல கவிதையைப் போல்
நல்ல கட்டுரையைப்போல்
நல்ல ஓவியத்தைப்போல்
படம் பார்ப்போரைத் தூண்ட வேண்டும்
இல்லையேல்....
படம் படைக்காமல் விட வேண்டும்

'என் பெயர் ஆனந்தன்" பாருங்கள்
நம்மை நாமே பரிசோதிக்க முடியும்!!

✍️செ.இராசா

(இப்படத்தில் உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் இனிய மனமார்ந்த வாழ்த்துகள்)

21/12/2020

குறள் வெண்பாவில்........கோபாலர்அதிகாரம்


 
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துகள்_ஐயா


#குறள்_வெண்பாவில்
#கோபாலர்_அதிகாரம்

இனிய குறள்போலே எந்நாளும் வாழ
வணங்கி வழங்குகிறேன் வாழ்த்து
(1)

இராம கிருஷ்ணரை எப்போதும் போற்றும்
இராமசாமி கோபாலர் நீர்
(2)

மருத்துவச் சேவையை மார்க்கமாய் எண்ணும்
அருள்மிகு சேவகர் நீர்
(3)

வள்ளுவம் சொல்வதை வாழ்க்கையில் செய்திடும்
வள்ளுவ வாரிசும் நீர்
(4)

தன்கா குறுங்கவி தந்திடும் போதிலும்
வெண்பா படைப்பவர் நீர்
(5)

எத்தனை வேலை இருக்கிற போதிலும்
வித்தக நிர்வாகி நீர்
(6)

திரைப்படம் பார்த்ததைத் தித்திக்கும் பாங்கில்
உரைக்கும் விமர்சகர் நீர்
(7)

படித்தது போலவே பண்பாய் நடக்கும்
பிடித்த மனிதரும் நீர்
(8)

வடித்த கவியின் வரிகளைப் போற்றும்
பிடித்த இரசிகரும் நீர்
(9)

இதயம் முழுதும் இனிதே நிறைந்த
அதிசய நண்பரே நீர்
(10)

✍️செ.இராசா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா