23/12/2020
கவிதை
இறுதிக் கவிதைக்கும்
அடுத்த கவிதைக்குமான
இடைவெளி இருக்கிறதே...
அது ஊடலைப்போல..
மிகுந்தால் வருகின்ற வேதனை
குறையும்வரை குறையாது!
கவிதை பிறக்கின்ற
அந்தத் தருணம் இருக்கிறதே
அது கூடலைப்போல...
வார்த்தைகள் கை கோர்த்து
அடி அடியாய் நீண்டு
எப்போது முடியுமென
எப்போதும் தெரியாது...
கவிதை பிறந்தபின்
எழுகின்ற ஆனந்தம் இருக்கிறதே
அது பிரசவித்த தாயின்
பெருமூச்சுபோல...
சொன்னால் புரியாது
சொல்லவும் முடியாது....
கவிதை
அது சுகப்பிரசவமானால்
அளப்பரிய இன்பம்!
கவிதை
அது கருக்கலைப்பானால்
அளவில்லாத் துன்பம்..
கவிதை
எப்போது பிறக்கும்?!
எவருக்கும் தெரியாது!
எப்போதும் பிறக்கலாம்
இப்போதும் பிறக்கலாம்!
இதோ....
பிறந்துவிட்டது!
ஆமாம் எது கவிதை?!
எதுகையும் மோனையும்
இணையர்போல் இருக்க
சீர் சீராய் சொல்லடுக்கி
அடி அடியாய் சீர்படுத்தி
தளை தட்டாக் களையெடுத்து
மலை கட்டும் மரபுதான் கவிதையா?!
உணர்ச்சியின் உச்சத்தில்
ஊற்றெனப் பெருக்கெடுக்க
எண்ணத்தின் அலைகூடி
எழும்புகின்ற வேகத்தில்
புதுவிதமாய் விதைக்கின்ற
புதுவிதைதான் கவிதையா?
சுறுக்கெனத் தைப்பதுபோல்
நறுக்கெனச் சொல்லி
மூன்றாவது அடியிலே
முக்தியைத் தருகின்ற
வாமனரின் வடிவு தான்
வருங்காலக் கவிதையா?
உண்மையில் எது கவிதை?!
ஒருவரியில் கவி செய்த
ஔவையின் படைப்பும்;
பத்தாயிரம் கவி செய்த
கம்பனின் படைப்பும்;
பதினான்கே வரி செய்த
பூங்குன்றனார் படைப்பும்;
தமிழ்கூறும் நல்லுலகில்
தலைநிமிர்ந்த கவிதைகளே..
ஆம்..
வடிவத்தால் அளக்கப்படுவதல்ல கவிதை!
படிமத்தால் செதுக்கப்படுவதே கவிதை!
செ.இராசா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment