14/03/2019

ஆமாம் கார் பாழாயிடும்

தங்கையைப் பார்த்து “பாலை எடுத்து காரில் ஏறாதே கார் பாலாயிடும்” என்றான் மகன்....நானும் “ஆமாம் கார் பாழாயிடும்” என்றேன்!
//சிலேடை//

கட்டிடப் பொறிஞர் கவிதை

சிக்கிடும் கருவினை யெடுத்து
சிக்கனச் சொற்களில் செதுக்கி
கற்பனைக் கலவையில் இணைத்து
கட்டிடும் கோட்டையே கவிதை

 ✍️கட்டிடப் பொறிஞர்😊😊😊

13/03/2019

பாப்பா பாப்பா வா பாப்பா




பாப்பா பாப்பா வா பாப்பா-இப்
பாட்டின் சங்கதி நீதான்பா!

காற்றில் பறக்க வா பாப்பா- இந்தக்
காணொளி எல்லாம் விடு பாப்பா!

நட்பில் கவனம் கொள் பாப்பா- சிலர்
தப்பாய்த் தெரிந்தால் சொல் பாப்பா!

அறிவியல் ஹார்மோன் படி பாப்பா- அதை
அறிந்து தெளிந்து நட பாப்பா!

பொய்யும் மெய்யும் மிகை பாப்பா!- அதில்
பொய்யைக் காலால் மிதி பாப்பா

#கற்றது_கையளவு_3


முகநூலில் எழுதுகின்ற நிறையபேர் சொல்வார்கள். நான் என் மன திருப்திக்காகத்தான் எழுதுகின்றேன், எனக்கு likes, comments எல்லாம் முக்கியமில்லை என்று. எனக்கென்னவோ இந்தக் கூற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், யாருமே நம் பதிவை பார்க்க அவசியம் இல்லையெனில் நாம் வீட்டில் ஏதாவது ஒரு காகிதத்தில் அல்லவா எழுதி வைத்திருக்க வேண்டும். மேலும், like என்பது விருப்பக்குறியீடாக மட்டும் பார்க்கத் தேவையில்லை, நம் பதிவை இத்தனை பேர் பார்த்திருக்கிறார்களே என்ற ஒரு வருகை பதிவேட்டு கணக்காகவும் எடுத்துக் கொள்ளலாம்.


இங்கே தங்கள் பதிவுகள் அனைவரையும் சென்றடைகிறதா இல்லையா எனத் தெரியாமலே பலரும் விரக்தி அடைவதைக் காண்கின்றோம். சிலபல எரிச்சல் ஊட்டும் பதிவுகளையும் காண்கிறோம். முகநூலில் பயணிக்கும் நாம் முகநூல் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்கிறோமா என்றால் இல்லையென்றே நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்த சில விடயங்களைப் சுருக்கமாகப் பகிர நினைக்கின்றேன். உங்களுக்கு உதவுமெனில் எனக்கும் மகிழ்ச்சியே.

1. நல்ல பதிவுகளை வாழ்த்த நினைக்கிறோம். ஆனால் வாழ்த்தியபிறகு மற்றவர்கள் போடும் comments ஆல் நமக்கு ஒரே notifications தொந்தரவாக இருப்பதால் பலரும் பின்னூட்டம் கொடுக்கவே யோசிப்பது உண்டு. நல்ல பதிவை வாழ்த்தவும் வேண்டும் அதே சமயத்தில் தொந்தரவும் கூடாது, என்ன செய்வது? இதோ தீர்வு: அந்தப் பதிவின் மூலையில் வைத்து click செய்தால் “Turn off notifications for this post” என்று வரும். அதைத் தொட்டால் போதும். பிறகு தொந்தரவு இல்லை.

2. ஒரு சிலரின் பதிவுகள் மிகவும் எரிச்சலடைய வைக்கிறது. ஆனால் அவர் நட்பில் வேண்டும் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள் அவ்வளவு தானே?! இதோ தீர்வு: அவருடைய ஏதாவது ஒரு பதிவில், அப்பதிவு வந்த இடத்தின் மூலையில் “Snooze” என்பதை எவ்வளவு காலம் வேண்டுமோ அந்த அடிப்படையில் click செய்யுங்கள். Follow off ம் செய்யலாம்.

3. அதிகத் தொந்தரவு எனில் “unfriend” செய்யுங்கள். அந்த நபர் உங்கள் பதிவைத் திருடுபவரா “Block” செய்துவிடுங்கள். வேறு வழியே இல்லை.

4. அடிக்கடி பலரும் தங்கள் படத்தைப்போட்டு எழுதுவார்கள். ஏன் தெரியுமா?! தங்கள் படங்களை முகநூல் நன்றாக அறியும் (முகப்பில் இருந்து எடுத்துக்கொள்ளும்) அதிக நபர்களுக்கு அப்பதிவுகள் போய்ச்சேரும். அதற்காக அடிக்கடி போட்டாலும் எரிச்சலே அடைய வைக்கும்.😊😊😊(நீங்க மட்டும் என்னவாம்...?!! சரி சரி ...விடுங்க)

5. Share பதிவுகள் அதிகமாகப் போகாது.

6. மற்ற யூடியூப் (இதை ஆங்கிலத்தில் எழுதாதற்கும் காரணம் உண்டு) share களும் அதிகமாகப் போகாது. ஆனால், முகநூல் காணொளிகள் போகும்.

7. Status மாதிரி இரண்டு மூன்று வரிகளில் எழுதுவது பார்வைக்கு போகும்.

8. மேலும், நீங்கள் யாரை அடிக்கடி பார்க்கின்றீர்களோ, like செய்கிறீர்களோ, அவர்களுக்கேப் பதிவுகள் அதிகமாகப் பார்வையில்படும். (இனிமேல் ச்சும்மா திட்டாதீங்கப்பா)

9. உங்களை யாராவது tag செய்தால் ஒன்று நீக்கலாம் இல்லையேல் தங்கள் Time lineல் அந்தப் பதிவை Hide செய்யலாம்.

இது சில தகவல்கள் மட்டுமே... அனைத்துமே இப்போது வியாபார நோக்கில் செயல்படுகிறது உறவுகளே. அதை அடுத்த பதிவில் தருகின்றேன்.

ஆகவே, அன்பார்ந்த மக்களே.. முகநூல் என்கிற மாயையின் பிம்பத்தைப் புரிந்து அதைப் பயனுள்ள முறையில் கையால்வோம் என்று நன்றி கூறி விடைபெறுகின்றேன் நன்றி.

(முகநூலும் தன் முகத்தை மாற்றிக்கொண்டேதான் இருக்கிறான். நாமும் மாறத்தான் வேண்டும். இல்லையேல் மாரத்தானில் காணாமல் போவோம்.

மாற்றம் ஒன்றே மாறாதது)

✍️செ. இராசா
நாம் புரட்டினால்
நம்மை புரட்டுகிறது
நல்ல புத்தகம்

12/03/2019

செ. இராவின் குறள்கள் & இருவிகற்ப வெண்பா_3



செ. இராவின் குறள்கள்
***********************
வாழ்த்தும் வழக்கம் வருமெனில் இன்புற
வாழ்ந்திட வைப்பான் இறை!

#செரா_குறள்_6

வாழ்க வளமுடன் வாழ்த்தில் மனிதனின்
வாழ்வில் வருமே நிறை!

#செரா_குறள்_5

கண்டதைச் சொல்லும் கவிஞனே மெய்யெனக்
கண்டதை மட்டுமே சொல்!

#மீள்4

உண்ணா விரதம் சிறப்பெனினும் எண்ணமே
எண்ணா விரதம் சிறப்பு!

#மீள்3

நிறைய எழுதுவது நன்றல்ல உன்னில்
நிறைய எழுதுவதே நன்று!

#மீள்2

எப்போதும் எல்லாமும் எல்லோர்க்கும் கிட்டாது
தப்பாமல் தப்பின்றித் தாக்கு!

#மீள்1

இருவிகற்ப வெண்பா
*********************
எதிர்மறை எண்ணம் இருந்தாலோ இங்கே
எதுவும் தவறாய்த் தெரியும்- இதயத்தில்
நேர்மறை எண்ணம் இருந்தாலோ உண்மையில்
நேர்வதை ஏற்கும் மனது!

✍️செ. இராசா

என்னை மரபு எழுத ஊக்கப்படுத்திய
அண்ணன் விக்டர்தாஸ் கவிதைகள்அவர்களுக்கும், வழிகாட்டிய நண்பர் அகரம் அமுதன் ஐயா மற்றும் தம்பி Anandh Umesh அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பாத்திரம் - பா-த்திறம்



பாத்திரம் அறிந்து தானம் கொடு!
பா-த்திறம் புரிந்து கானம் கொடு!

கோத்திரம் துறந்து தீர்ப்பு கொடு!
கோ-த்திறம் தெரிந்து வாக்கு கொடு!

நேத்திரம் திறக்க கல்வி கொடு!
நா-த்திறம் சிறக்க பயிற்சி கொடு!

ஆத்திரம் சுருக்க அறிவு கொடு!
ஆ-த்திறம் பெருக்க தீனி கொடு!

சேத்திரம் ஒன்றென விட்டுக்கொடு!
சே-த்திறம் யாதெனக் கற்றுக்கொடு!

✍️இராசா

#கொடு

பா-பாடல் வகை
கோ-அரசன்/தலைவன்
நா-நாக்கு
ஆ-பசு
சே-சேகுவேரா
நேத்திரம்-கண்
சேத்திரம்-புனித தளம்
கட்டிடக் காட்டிற்குள்
கட்டுண்ட கள்ளியின்
கற்பனைச் சிறகிற்கு
கடிவாளச் சிறையேது?!

11/03/2019

#கற்றது_கையளவு_2






வணக்கம் உறவுகளே,

சமீப காலமாக நான் முகநூலில் அதிகமாக எழுதுவது உண்மையே. அதற்காக நான் வேலை வெட்டி எதுவும் செய்வதே இல்லையா என்று பலபேர் ஐயப்பட்டு என்னிடமே கேட்கின்றார்கள். அவர்களுக்கு முதலில் ஒரு விளக்கம் சொல்லிவிட்டு பின்னர் கட்டுரையைத் துவங்குகிறேன்.

கவிதை மற்றும் நான் போடும் பதிவுகள் என்பது பெரும்பாலும் அதற்காக பிரத்யேய நேரம் ஒதுக்காமல், இறைவன் அருளால் உதயமாவதை உடனே பதிவதை மட்டுமே நான் செய்கின்றேன். இதற்காகத் தனியாக மெனக்கெடுவது இல்லை. மேலும், நான் எப்படி வேலை செய்கிறேன் என்பதை எனக்கு மேல் உள்ள மேலாளர்கள் மற்றும் சக பணியாளர்கள் நன்றாக அறிவார்கள். ஆகவே நான் வேலை செய்கிறேனா இல்லையா என்ற சந்தேகம் இருந்தால் என்னை நேரடியாக அழையுங்கள்.

மேலும், முகநூலில் மட்டுமல்ல வேறு பல இடங்களிலும் இயங்குகின்ற உறுப்பினராக தன்னார்வலாராக உள்ளேன். ஒரே நேரத்தில் எப்படி பல வேலைகள் செய்ய முடியும் என்றால், அதற்குக் காரணம் வேதாந்த மகரிஷி வழங்கிய சிறப்பு தவங்களே என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். அதுபற்றிய தகவல் வேண்டுமெனில் அதையும் கட்டுரையாக வழங்கக் கடமைப்பட்டுள்ளேன் நன்றி. இப்போது கட்டுரைக்கு வருவோம்.

இன்று கத்தாரில் வழக்கமாகச் செல்லும் பல்பொருள் அங்காடியின் வெளியே ஒரு பூக்கடையில் நின்று ஒவ்வொரு பூக்களாக பார்த்தபோது அதன் விலைகளைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஒரு வேளை தவறோ என்று நினைத்து அங்கே பணிபுரியும் ஒரு ஈழத் தமிழரிடம் கேட்டேன். அவர் அந்த விலை சரியே என்று உறுதிப்படுத்தினார்.

அதாவது நம் ஊர் காசுக்கு 48,525 ரூபாய். என்ன இப்படி சொல்றீங்க என்றால், அடுத்து ஒரு பூக்குடுவையைக் காண்பித்தார். அதன் விலை இன்னும் தலை சுற்றியது. நம்ம ஊர் காசுக்கு 1,16,269 ரூபாய். இது எல்லாம் வாங்குவார்களா என்று அப்பாவித்தனமாகத்தான் கேட்டேன். அடிக்கடி இங்கே அரபிகள் வாங்குவார்களாம். இது ஹாலந்தில் இருந்து வருகிறதாம். ஒரு வருடம் இந்த பூக்கள் வாடாதாம். அதுலாம் சரி இந்த விலைக்கு தோட்டமே வாங்கலாமே என்று அப்படியே நகர்ந்துவிட்டேன்.....

ஆத்தாடி ஆத்தா....

செ. இராசா

(அடுத்த பதிவு முகநூலில் சில தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்)

மகிழ்ச்சி கிடைக்கிறது

வருவதைத் தருவதில்
மகிழ்ச்சி கிடைக்கிறது
படைப்பாளிக்கு