03/01/2019

சிந்தையில் உதித்த கருவும்- விந்தை
சிந்தயில் உதித்த கருவும் விந்தையே...!!!

31/12/2018

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2019


அன்று முதல் இன்று வரை
அனைவருமே சொல்லுவது;
இன்று முதல் இனியென்றும்....
இப்படி அப்படி இருப்பதென்று

ஆனாலும்... அதையெல்லாம்
அப்படியே ஒதுக்கிவிட்டு..
அன்று சொன்ன வார்த்தைகளே
இன்று(ம்) மீண்டும் வருகிறது..

இன்று இங்கே உள்ள கணம்
இனியும் இங்கே வந்திடுமா?!
எண்ணம் இங்கே திண்ணமன்றி
எதுவும் இங்கே மாறிடுமா?!!

இன்று முதல் இனியென்றும்
இதையே மீண்டும் சொல்லாது
ஒன்றில் ஒன்றாய் ஒன்றுகின்ற
உயர்ந்த ஒன்றைப் பற்றிடுவோம்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
2018——>2019💐💐💐💐💐💐

என் மனைவியின் சக்களத்தியால்



இன்று
இரண்டாயிரத்து பதினெட்டின்
இறுதி நாள்...

இனிமேல் இல்லை...
இந்த வருடத்தில்
இன்னொரு நாள்..

என்னுள் இருந்த என்னை
எங்கும் காட்டிய 2018 ஐ
என்ன சொல்லி வாழ்த்திடுவேன்..

கசப்பும் இனிப்பும்
கலந்து இருப்பதுதான்
காலத்தின் சிறப்பு...
இதில் யார்தான் உண்டு விதிவிலக்கு...

என் கசப்பை நான் வைத்து
இனிப்பை மட்டும் தருகின்றேன்..
எடுத்துக் கொள்வீர்...

***************************

என் மனைவியின் சக்களத்தியால்
நான் பெற்றதுதான்
எத்தனை எத்தனை...

என்னது சக்களத்தியா?

ஆம்..
முகநூலுக்கு
என் மனைவி வைத்த பெயர்...
என் பார்வை அவள் மேல் அதிகம் என்பதால்

இதில் உண்மை இல்லாமலில்லை...
இருந்தும் அவள் இல்லையேல்
இவனும் இல்லவே இல்லை...

ஆம்..

"நான் எனும் மண் குடம்"
இது அவள் தந்த பொன் குடம்...

"தமிழ்ச்சோலை" நிர்வாகி
இது அவள் தந்த தமிழ் மகுடம்

இது மட்டுமா?

இலக்கணம் பயிற்றுவித்தாள்
தலைக்கனம் ஏதுமின்றி....

இலக்கியம் காட்டித் தந்தாள்
இலவசம் என்று சொல்லி...

பாடல் எழுத வைத்தாள்
காணொளி ஏற்ற வைத்தாள்
உறவைப் பெருக வைத்தாள்
உவகை அதிகம் தந்தாள்

எனில்... அவள் சக்களத்தி தானே...
அந்த சக்களத்திக்கு என் முதல் நன்றி

**************************************

அது மட்டுமா...இந்த 2018 தந்தது

புதிய பட்டயப் படிப்பு
புதிய புத்தகங்கள்....
புதிய மேடைகள்...
புதிய முயற்சிகள்..
புதிய பயணங்கள்..
புதிய உறவுகள்....
......
....
இன்னும் இன்னும்

அனைத்தையும் வழங்கிய வருடமே
உன்னைப் பிரிவதில் எனக்கு வருத்தமே...

சென்று வா....
உன்னை நினைவில் சந்திக்கிறேன்..

நன்றி நன்றி...2018

30/12/2018

கவிஞனாக ஆசைப்பட்ட தந்தை
தன் மகனுக்கு பெயர் வைத்தார்
 “கவிஞன்” என்று

29/12/2018

#அடுப்படியில்_அயிரைமீனு

#அடுப்படியில்_அயிரைமீனு
அடியே....அங்க கொதிக்கையில
அடிநாக்கில் எச்சில் ஊறி
அடிமனசு துள்ளுதடி....

பட்டணங்கள் போயிவந்து
பட்டிக்காடு வந்த மாமா
அடிமனசின் ஆசை தீர
பிடிச்சிடலாம் பொறுத்திடுங்க..

அத்தை மாமா காணலியே
அவுகெல்லாம் எங்க புள்ள...
அட்ரா சக்க.....பூங்குயிலே
ஒத்தையில விருந்தா புள்ள?!

வயக்காடு போனவுக
வரும் நேரம் ஆச்சு மச்சான்..
ஆகும்வரை பொறுத்த மச்சான்
ஆறும்வரை பொறுப்பீகளா..?

செ. இராசா..

https://youtu.be/5PJ0WO1dbDI

மருதம் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த கவிதை

https://www.facebook.com/photo.php?fbid=10155744129277116&set=gm.1994376720651702&type=3

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்-சந்தோச மணிகண்டர்





செர்பிய நிறுவனத்தின்
செந்தமிழ்த் தூணுக்கு
அகவை தின வாழ்த்தொன்று
அகம் மகிழ தொடுத்துள்ளேன்...
அனைத்தையும் படித்துவிட்டு
அவரை இன்று வாழ்த்திடுவீர்....

யாரிவர்?

மின்னியலில் மின்னுகின்ற
மின்னியல் பொறிஞரிவர்!
எண்ணிய எண்ணத்தை
பண்ணுகின்ற சிற்பியிவர்!

மேலாண்மை புரிவதிலே
பேராண்மை மேலாளர்!
மேலாளர் ஆனாலும்
மென்மையான நண்பரிவர்!

புன்னகையில் பூக்கின்ற
சந்தோச மனிதரிவர்...
தன்பெயரில் (Money) மணி கொண்ட
சந்தோச மணிகண்டர்...

அவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்....
வாழ்க வளமுடன்..

செ. இராசா

நவீன கவிதை



நவீன கவிதை பற்றிய புரிதலுக்காக என் அன்பு நண்பர் சத்யாவுடன் பேசிய சுவாரஸ்யமான உரையாடல்.....இதன் மூலம் அனைவருக்கும் நவீன கவிதை பற்றிய புரிதல் ஏற்படலாம் என்ற நோக்கத்திலேயே இந்தப் பதிவு)

இராசா:

நண்பரே வணக்கம்.
இந்தக் கவிதை பாருங்கள்

முயற்சி-1

அவளை நான் சுற்றுவது ஒன்றும்
கேவலமல்ல...
அது உலகை அடைவதற்கான
ஒத்திகையே
.................
இது எப்படி?
இது இப்போது தோன்றியது நண்பரே
😍1
கவிதை சரியா?
உலகை வெல்வதற்கான
சரியாக இருக்குமா
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்யா:

"கேவலம்" அதற்கு வேறு வார்த்தையை பயன்படுத்தலாம்
தோன்றும்போது எழுதி
அனுப்புங்கள்
உங்களை கண்டறிந்து கொள்ளுங்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இராசா:
முயற்சி-2

அவளின் பின்னால் சுற்றுவது ஒன்றும்
குற்றமல்ல
அது உலகை வெல்வதற்கான
ஒத்திகையே

இப்ப பாருங்க...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்யா:

நண்பரே
கவிதையை உருவாக்க முயலாதீர்
இந்த வரிகளுக்கு
சரியான வார்த்தை
உங்களுக்குள் தானாகவே உருவாகும்
😍1
பொறுமை
😍1
அசைபோட்டுக்கொண்டே இருங்கள்
அந்த வரிகளை
ஒரு மூன்று கவிதைகள் எழுதும் வரை
சிரமம் இருக்கும்
பிறகு இயல்பிலே மாற்றம் வந்துவிடும்
எனது அனுபவம் தான் இது.
கருப்பொருள் ஒன்று தான்
சொல்லும் விதத்தில் வித்தியாசம்
அதுதான் நவீனம்
😍1
நான் இப்படி தான் நினைக்கிறேன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இராசா:
முயற்சி-3

நான் அவளை சுற்றுகிறேனாம்
“அவர்களுக்குத் தெரியுமா?!!”
நான் உலகைச் சுற்றும் முயற்சியில் இருக்கிறேனென்று

இப்ப பாருங்க
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்யா:
ஏன் சிரமபடுறீங்க..........வெயிட்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்யா:

சிரமப்படல
நான் மாற்றி அனுப்புறேன்
உடனே எப்படி வரும்
யாருக்கும் வராது

இதோ பிறந்துவிட்டது நவீன கவிதை

"ஒத்திகையேதுமின்றி
அவளைச் சுற்றியே
வலையை
பின்னிக்கொண்டிருக்கிறது
என் ஆன்மா.
அதை
சிறையென்று
அவள் நினைக்கையில்
உறைந்து விடுவது
உயிர் மட்டுமல்ல.

....
?"

உயிர் மட்டும் அல்ல
அடுத்தது என்ன சொல்ல வருகிறார்
இந்த கவிஞர் என்று
கவிதையை
படிக்கும் வாசகரிடம் விட்டுவிடவேண்டும்
அவருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ
அந்த மாதிரி புரிந்து கொள்வார்
உயிரே உறைந்து போச்சு னு சொல்றாரு
அதைவிட வேற என்ன இருக்கிறது

விடை.

நம் உணர்வு
நாம் உருவாக்கி வைத்துள்ள காதலின் பிம்பம்
etc etc கேட்ச்

கவிதை களை
பலவாறு
எழுதலாம்
பயிற்சி பயிற்சி பயிற்சி
கொஞ்சம் முயற்சி
கற்றுக் கொள்ள யாரிடமும் தயக்கம் காட்ட தேவையில்லை
சொல்லும் விதம் மாறியுள்ளது
நான் அப்படி தான்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இராசா:

முயல்கிறேன் நண்பரே...நன்றி நன்றி...

(பொறுமையாய் சொல்லிக்கொடுத்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி)

படம் எடுத்த இடம்: பிரியா மெஸ், காரைக்குடி
— with Vasanthan.

28/12/2018

ஏகலைவன் - க(வி)தை

ஏகலைவன் - க(வி)தை
**********************
அகிலத்தில் சிறந்தவனாய்
அருச்சுனனை நிலை நிறுத்த
இருவரின் வாழ்க்கையிலே
குருதுரோணர் செய்தது
இதிகாசப் புராணத்தின்
இருண்ட பக்கங்கள்!

குலத்தின் பெயராலே
குருகுலம் இல்லையென
துரோணர் சொன்னாலும்
துவளாமல் போராடி
கோபுரம்போல் உயர்ந்தவனே
கொடையாளி கர்ணன்!

குலத்தின் பெயராலே
குருகுலம் இல்லையென
குருதுரோணர் மறுத்தாலும்
குருவினை மறவாது
குணத்தால் வென்றவனே
குறையில்லா ஏகலைவன்!

எத்தனை சமாதானம்
எவர் வந்து சொன்னாலும்
ஏற்கவே முடியாத
ஏகலைவன் தியாகத்தை
என்னவென்று சொல்லிடுவேன்
எழுதிடவே முயலுகின்றேன்..

துரோணரின் சந்திப்பு
********************
இளவரசர் அனைவரும்
கலைகற்கும் இடத்திற்கு
வேடுவர் குலம் பிறந்தோன்
வேண்டி வந்தான் துரோணரிடம்

அகத்தின் ஆர்வத்தை
முகத்திலே கண்டாலும்
அந்தண ஆசிரியர்
அவனுக்கு(ம்) மறுத்துவிட்டார்

ஏகலைவனின் வீரம்
********************
அன்புசெய் அன்பர்க்கே
அன்புசெய்யா அகிலத்தில்
அன்புசெய்யா ஆசிரியர்மேல்
அன்பு வைத்தான் ஏகலைவன்!

மனதினில் அவரையே
மானசீகக் குருவாக்கி
சிலையொன்று செய்து வைத்து
சிலை முன்னே கலை பயின்றான்!

சங்கொலி கிழிந்ததுபோல்
எங்கிருந்தோ சப்தம்வர
வந்ததிசை நோக்கி
அம்புகளால் அடக்கி விட்டான்!

வாயிலே தையலோடு
நாயொன்று துள்ளிவர
அருச்சுணனும் துரோணரும்
அதனையே பின்தொடர
ஏகலைவன் குகைக்குள்ளே
ஏறிவந்தார் இருவருமே...

குரு தட்சணை
**************
அங்கிருந்த சிலை கண்டு
ஆச்சரியம் அடைந்த குரு
அவன் செய்த கலை கண்டு
அப்படியே உறைந்து விட்டார்!

நேரடிச் சீடனுக்கே
நேர்த்தியுறா ஞானத்தை
இவன் கற்ற திறனறிந்து
இடிந்தே போய் விட்டார்!

இப்படியே இவன் சென்றால்
இவர் சபதம் தோற்குமென்று
தட்சணை கொடுக்கச்சொல்லி
கட்டைவிரல் வேண்டுமென்றார்!

சொல்லிய சொல்லொன்று
கொல்லுஞ் சொல்லானாலும்
வில்லம்பு வேகத்தில்
விரலினை வெட்டிவிட்டான்!

முடிவு
******
ஒருவனின் வளர்ச்சிக்கு
ஒருவனை அழிப்பதா?!
சாதியின் பெயராலே
சாத்திரத்தை மறுப்பதா?

என்ன கொடுமையென்று
ஏனென்று கேட்கவில்லை- சொல்
ஏகலைவா......நீ
என்ன கொடுமையென்று
ஏன் அன்று கேட்கவில்லை?

நீ மட்டும் அன்றைக்கே
நியாயத்தைக் கேட்டிருந்தால்
ஆதிப் பரம்பரையை
அடக்க நினைப்பார்களா?!

✍️செ. இராசா

https://youtu.be/L6W0q1ww8C8
https://youtu.be/L6W0q1ww8C8 

27/12/2018

முட்டிமுட்டி ஒர் மரபுக்கவிதை



முட்டிமுட்டி ஒர் மரபுக்கவிதை எழுதினேன்
முறைத்து முறைத்துப் பார்த்தாள்..

எளிய நடையில் ஓர் புதுக்கவிதை
எழுதினேன்
ஏனோ... மீண்டும் முறைத்தாள்..

மீண்டும் ஓர் ஹைக்கூ எழுதினேன்
இம்முறை “ம்கூம்” என்று முனங்கினாள்

என்னதான் உன் பிரச்சனை? என்றேன்
இதுதான் தமிழ் எழுத்துகளா?!! என்றாள்

😀😀
✍️செ. இராசா

(வருங்காலத் தலைமுறைகளிடம் தமிழைக் கொண்டுபோய் சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல.....அதை நாமே தொடங்க வேண்டும் உறவுகளே....)
மௌன விரதம் கடைபிடிக்கிறாள்
என்னோடு மட்டும்...