31/12/2018

என் மனைவியின் சக்களத்தியால்



இன்று
இரண்டாயிரத்து பதினெட்டின்
இறுதி நாள்...

இனிமேல் இல்லை...
இந்த வருடத்தில்
இன்னொரு நாள்..

என்னுள் இருந்த என்னை
எங்கும் காட்டிய 2018 ஐ
என்ன சொல்லி வாழ்த்திடுவேன்..

கசப்பும் இனிப்பும்
கலந்து இருப்பதுதான்
காலத்தின் சிறப்பு...
இதில் யார்தான் உண்டு விதிவிலக்கு...

என் கசப்பை நான் வைத்து
இனிப்பை மட்டும் தருகின்றேன்..
எடுத்துக் கொள்வீர்...

***************************

என் மனைவியின் சக்களத்தியால்
நான் பெற்றதுதான்
எத்தனை எத்தனை...

என்னது சக்களத்தியா?

ஆம்..
முகநூலுக்கு
என் மனைவி வைத்த பெயர்...
என் பார்வை அவள் மேல் அதிகம் என்பதால்

இதில் உண்மை இல்லாமலில்லை...
இருந்தும் அவள் இல்லையேல்
இவனும் இல்லவே இல்லை...

ஆம்..

"நான் எனும் மண் குடம்"
இது அவள் தந்த பொன் குடம்...

"தமிழ்ச்சோலை" நிர்வாகி
இது அவள் தந்த தமிழ் மகுடம்

இது மட்டுமா?

இலக்கணம் பயிற்றுவித்தாள்
தலைக்கனம் ஏதுமின்றி....

இலக்கியம் காட்டித் தந்தாள்
இலவசம் என்று சொல்லி...

பாடல் எழுத வைத்தாள்
காணொளி ஏற்ற வைத்தாள்
உறவைப் பெருக வைத்தாள்
உவகை அதிகம் தந்தாள்

எனில்... அவள் சக்களத்தி தானே...
அந்த சக்களத்திக்கு என் முதல் நன்றி

**************************************

அது மட்டுமா...இந்த 2018 தந்தது

புதிய பட்டயப் படிப்பு
புதிய புத்தகங்கள்....
புதிய மேடைகள்...
புதிய முயற்சிகள்..
புதிய பயணங்கள்..
புதிய உறவுகள்....
......
....
இன்னும் இன்னும்

அனைத்தையும் வழங்கிய வருடமே
உன்னைப் பிரிவதில் எனக்கு வருத்தமே...

சென்று வா....
உன்னை நினைவில் சந்திக்கிறேன்..

நன்றி நன்றி...2018

No comments: