31/10/2018

வாலி நீ வாழி



கவியரசர் வரிகளால் கவரப்பட்டு
கவியரசர் எதிரிலே கடைவிரித்து
கவியரசர் ரசித்த கவிஞனே

நீ...

வானத்தில் மையெடுத்த வித்தனே!
வார்த்தை விளையாட்டில் சித்தனே!
வாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தனே!

திருவரங்கம் பெற்றெடுத்த
கவியரங்க ராஜனே; நீ
கவி ரங்கராஜனே....

ஆக நினைத்தாய்; அன்று ஓர் மாலி!
ஆகி நின்றாய்; அன்றே ஓர் வாலி!
ஆதி அடைந்தாய்; என்றும் புகழ் வாழி!

வாலி நீ வாழி!!!

உறவின் பலம் (குறளின் குரலாய்)


அகத்தில் அன்பினைக் கொண்டிருந்தால்
சகத்தில் அனைத்துமே உறவாகும்!
முகத்தில் சினத்தைக் கொண்டிருந்தால்
புறத்தில் அனைத்துமே வேறாகும்!

காகத்தின் குணத்தைக் கொண்டிருந்தால்
வேதனைத் துயரங்கள் வெகுதூரம்!
நாகத்தின் குணத்தைக் கொண்டிருந்தால்
வேதனைத் துயரங்கள் வெகுமானம்!

வாக்கினில் இன்சொல் கொண்டிருந்தால்
போற்றிடும் சுற்றமே சூழ்ந்திருக்கும்!
நாக்கினில் வன்சொல் கொண்டிருந்தால்
தூற்றிடும் சூழலில் வாழ்விருக்கும்!
தேசியத் தலைவரை
அனைவரும் வணங்குகிறார்கள்
சாதிய அடையாளத்தோடு

30/10/2018

அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்



நீ......
அப்பா... அப்பா.....என்றாலே- என்
அங்கமெல்லாம் சிலிர்க்குதடா- நீ
ஐயோ.... அப்பா... என்றாலே- என்
ஆவியெல்லாம் துடிக்குதடா!

நீ......
தப்பாய் தமிழைக் கதைத்தாலே- என்
தமிழும் உன்போல் நகைக்குதடா- நீ
தமையனை அடிக்க வருகையிலே- என்
தம்பியின் நினைவே வருகுதடா!

நீ...
தலையின் உச்சியில் அமரயிலே- என்
தமிழின் அமர்வாய்த் தோன்றுதடா- நீ
கழுத்தை சுற்றிக் கவ்வையிலே- என்
கடவுளின் கருணை தெரியுதடா!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்ல மகளே.....
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

28/10/2018

நடனம்


இசைக்கின்ற இசையின்
இசையிலே இசைந்து
அசைவது மட்டுமா நடனம்?- இல்லை
இசைக்கா நிலையிலும்
இசையினை இசைக்கிற
அசைவுள்ள ஆட்ட(மே)மும் நடனம்!

தாம்தூம் தாளத்தில்
தகதிமி ஜதியினில்
ஆடுதல் மட்டுமா நடனம்?- இல்லை
அடிக்கிற பறையினில்
இடிக்கிற இசையினில்
துடிக்கிற துள்ள(ளே)ளும் நடனம்!

நாயண மேளத்தில்
நாட்டிய சபையினில்
காட்டுதல் மட்டுமா நடனம்?- இல்லை
நாட்டினை விட்டவர்
காட்டினைத் தேடயில்
காட்டிடும் ஆட்ட(மே)மும் நடனம்!

26/10/2018

அட ஆம்....பெண்ணே
என் வீட்டுக் கண்ணாடியும்
உன் முகமே காட்டுகிறது

மின்னல்






(1)
கூடலின் சேதியை
வேகமாய்ச் சொல்கிறது
மின்னல்

(2)
இசைவோடு இடித்ததை
இசையோடு சொல்கிறது
மின்னல்

(3)
நீர்க்குடம் உடைந்ததை
ஊருக்கேச் சொல்கிறது
மின்னல்

(4)
இருளில் இடித்ததை
வெளிச்சத்தில் காட்டுகிறது
மின்னல்

(5)
தனியாக உரசியதை
தரணிக்கேச் சொல்கிறது
மின்னல்

25/10/2018

போற்றிப் பாடடி பெண்ணே



போற்றிப் பாடடி பெண்ணே- உனைத்
தூற்றுவர் வியப்புறக் கண்ணே!
மாற்றிப் பாடடி பெண்ணே- நல்ல
மாற்றத்தை விரும்புவோர் முன்னே!

கற்றுக் கொள்ளடி பெண்ணே- உனைப்
பற்றிடும் உலகமே கண்ணே!
கற்றதைச் சொல்லிடு பெண்ணே- நீ
கற்றதால் மகிழ்வோர் முன்னே!

உற்றுப் பாரடி பெண்ணே- இங்கு
சுற்றிலும் தீதோர் கண்ணே!
நெற்றியைச் சுருக்கிடு பெண்ணே- சில
கற்பில்லா அற்பர்கள் முன்னே!

சிற்பியாய் மாறிடு பெண்ணே- உனை
சிற்பமாய் செதுக்கிடு பெண்ணே!
வெற்றியைப் பெற்றிடு பெண்ணே-உனை
வெற்றென இகழ்வோர் முன்னே!

இன்னும் ஓட வாழ்த்துகின்றேன்



கடந்து போகும் வாழ்க்கையிலே
காட்சியாய் நிற்போர் சிலர்
கானலாய் மறைவோர் பலர்

அகநூலில் பதிந்தோரை
அப்படியே எழுதுவது
முகநூலில் எப்போதும்
முடியாத காரியமே...

ஆச்சரியப் பூச்சொரியும்
எத்தனையோ உறவுகளில்
பிலிப்பினோ சந்தோசும்
பிரியமான நண்பராவார்

அறுபத்து ஐந்திலும்
அடங்காத வேகத்தில்
ஓய்வே இல்லாது
ஓடுகின்ற மனிதரிவர்...

என் அப்பா ஓய்வெடுத்து
எத்தனையோ வருடமாச்சு
என்னப்பா வயதோடு- இவர்
என்னோடு ஓடுகின்றார்- அட
என்னமாய் ஓடுகின்றார்?!!!!!!!

இன்னும் ஓட வாழ்த்துகின்றேன்.

அஃது எங்கே சொல்வீரோ?!



அன்பே...அழகே...என்றாலோ
ஆகா.... அடடா...என்கின்றாள்

இனியவளே...என் இதயமே என்றாலோ
ஈ...ஈ...என சிரிக்கின்றாள்

உயிரே.... என் ஓவியமே...என்றாலோ
ஊடலைத் தவிர்க்கின்றாள்

எங்கேனும் சென்றால்தான்
ஏதேதோ கேட்கின்றாள்...

ஐயத்தின் பார்வையிலே;
ஒன்றுமில்லா சங்கதிக்கு
ஓ... வென்று அழுகின்றாள்

ஔடதம் தேடுகின்றேன்
அஃது எங்கே சொல்வீரோ?!