30/09/2018

கப்பல்


ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையுமே
ஒவ்வொரு கப்பல் பயணமன்றோ?!!
ஒவ்வொரு பயணமும் முடியும்வரை
ஒவ்வொரு கப்பலும் வேண்டுமன்றோ?!

கப்பலில் ஓட்டை விழுமென்றால்
எப்படி பயணம் சிறப்பாகும்?!!
கப்பலில் மாலுமி தூங்கிவிட்டால்
எப்படி பயணம் முடிவடையும்?!

போக்கிடம் எதுவெனத் தெரியாமல்
போகின்ற பயணம் சரிதானா?!
கலங்கரை விளக்கது தெரியாமல்
கப்பலை ஓட்டுதல் முறைதானா?!

என்னத்த சொல்லுறது?

என்னத்த சொல்லுறது- இங்கே
என்னத்த சொல்லுறது?
எங்கே போகிறது- தேசம்
எங்கே போகிறது?

சீதைகள் ஒத்துழைத்தால்- இனி
பாதையை மாற்றிடலாம்!
மாதவி மறுதலித்தால்- வேறு
மார்க்கத்தைத் தேடிடலாம்

திருட்டு கற்பழிப்பு- இனி
முரட்டு குற்றமில்லை!
குருட்டு மன்றத்திலே- கடும்
இருட்டுக்கு பஞ்சமில்லை!

எங்கே மல்லையா- அவர்
இங்கே இல்லையா
கடனில் கந்தையா- அவரை
உடனே பிடியுமய்யா....

காவிரி மேலாண்மை- அட
தீர்ப்ப பின்னர் சொல்லு...
காவேரிமேல் ஆண்மை- அட
தீர்ப்ப உடனே சொல்லு...

28/09/2018

சிற்றின்பம் பேரின்பம்


துன்பவலி நீக்கம் சிற்றின்பம்
இன்பவழி பெருக்கம் பேரின்பம்

உயிர்கள் விரும்புவது சிற்றின்பம்
உயர்வோர் விரும்புவது பேரின்பம்

பொய்யில் மயங்குவது சிற்றின்பம்
மெய்யில் மகிழ்வது பேரின்பம்

இன்பத்தின்பால் விளைவது சிற்றின்பம்
இறைவனின்பால் சேர்ப்பது பேரின்பம்

கானலாய் மறைவது சிற்றின்பம்
கவிதையாய் மலர்வது பேரின்பம்

கவர்ச்சியில் வருவது சிற்றின்பம்
எழுச்சியில் உணர்வது பேரின்பம்

ஈருடல் சேர்மை சிற்றின்பம்
ஈகின்ற தாய்மை பேரின்பம்

சிலை


சிற்பியின் சிந்தைக்குள் புகுந்து
கற்பனைக் கவிதையாய் நுழைந்து
அற்புதக் கரங்களில் பிறப்பது சிலை..

ஓவியக்கலையில் உடலாகி
சிற்பக்கலையில் உயிராகி
சித்திரக்கலையாய் உருவாவது சிலை...

இங்கே...

கடவுளுக்கும் சிலை
கற்பனைக்கும் சிலை

இருப்பவருக்கும் சிலை
இல்லாதவருக்கும் சிலை

தலைவனுக்கும் சிலை
தண்டங்களுக்கும் சிலை

கண்ணகிக்கும் சிலை
கண்டவனுக்கும் சிலை

தமிழ்த்தாய்க்கும் சிலை
தருதலைகளுக்கும் சிலை

அரசியல் நடிகர்கருக்கும் சிலை
நடிக அரசியலார்க்கும் சிலை

இவ்வளவு ஏன்?

சிலையை எதிர்த்த
புத்தருக்கும் சிலை
பெரியாருக்கும் சிலை

தேவையா சிலை என்றால்
தேவை தான் என்பேன்

இல்லையெனில்....
சித்தரில் சித்தனாம்
சிந்தனை சிற்பியாம்
வள்ளுவனின் சிலை இல்லாது
வங்கக்கடல் வாடி இருக்குமே....

தேவையா சிலை என்றால்
தேவையில்லையென்றும் சொல்வேன்

ஏனெனில்...
சரித்திரத் தலைவர்களை எல்லாம்
சாதியத் தலைவர்களாய் மாற்றி
கம்பியிட்டு காவல்காக்கும்
கொடுமையையும் காண்கிறோமே...

யார் கேட்டார்கள்?!
மூலைக்கு மூலை சிலை

யார் கேட்டார்கள்?!
மூளைக்குள் போகாதோர் சிலை

வையுங்கள் சிலை
எப்படி வாழ வேண்டுமென்பதற்காக

வைக்காதீர் சிலை
எப்படி வாழ வேண்டாமென்பதற்காக

இந்துக்களின் சிலை
தத்துவத்தின் அடையாளம்

இயேசுவின் சிலை
அன்பின் அடையாளம்

புத்தரின் சிலை
கருணையின் அடையாளம்

ஆனால்...
திருவள்ளவரின் சிலை
தமிழர்களின் மொத்த அடையாளம்

வையுங்கள் சிலை
..............வள்ளுவனுக்கு மட்டும்

✍️செ. இராசா

கானல்நீரை(யும்) குடிப்போம்



அந்தரத்தில் தொங்குகின்ற
எங்கவாழ்க்கை பாரு- ஆனால்
சொந்தபந்தம் சொல்லுதுங்க
எங்கவாழ்க்கை வேறு!

அக்கரைய விட்டுப்புட்டு
இக்கரைக்கு வந்தோம்- ஆனால்
எக்கரையும் பச்சையின்றி
திக்கிமுக்கிப் போனோம்!

அங்கஇங்க கடனவாங்கி
அயல்நாடு வந்தோம்- ஆனால்
எங்க கடன் தீருமுன்னே
வயக்காட்டக் காணோம்!

என்னடா வாழ்க்கையென்று
நொந்துபோயி நிப்போம்- ஆனால்
காசுபணம் வேணுமேன்னு
கானல்நீரை(யும்) குடிப்போம்!

#அயல்நாட்டுப்_பாட்டாளிகளின்_குரலாய்

#அறிவியலும்_தமிழும்_3



***********************
மிகப்பெரிய அண்டத்தையும், அதற்கு ஆதாரமான மிகச்சிறிய அணுவையும்பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்தப்பதிவில் நம் பிண்டத்தை அதாவது உடல்வளத்தை நன்றாக வைக்க உதவும் மருத்துவத்துறையில் தமிழின் பங்குபற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

மூன்று முக்கிய ஓட்டங்கள்
*************************^^
நாம் மருத்துவரிடம் போனதும் என்ன செய்கிறார்கள்?! ஸ்டெதஸ்கோப் வைத்து மூச்சுக்காற்றின் வேகத்தையும் இதயத்துடிப்பையும் கவனிப்பார்கள். பிறகு தெர்மாமீட்டர் வைத்து உடலின் வெப்பநிலை அளவைக் கவனிப்பார்கள். பின் சளி, இருமல் என்று நீர்கோர்த்து உள்ளதா என்று கவனிப்பார்கள். இது ஆங்கில மருத்துவத்திற்கு மட்டுமல்ல எல்லா மருத்துவத்திற்கும் இதுவே அடிப்படை என்று அறிவோம்.

ஆம் உறவுகளே....உடலில் ஓடும் மூன்று முக்கிய ஓட்டங்களை வைத்து நோயைக் கண்டுபிடிக்கலாம். அது என்ன அந்த மூன்று ஓட்டங்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. அவையாவன...

1. காற்றோட்டம்
2. வெப்ப ஓட்டம்
3. நீரோட்டம்

இதை வாதம் (காற்று), பித்தம்
(நெருப்பு) மற்றும் சிலேத்துமம் (நீர்)
என்று சொல்வார்கள். இதை 2000 வருடங்களுக்கு முன்பே நம் தமிழ்ச்சான்றோன் வள்ளுவனாரின் கீழ்வரும் குறள் மூலம் காணலாம்.

குறள் 941
*********
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

விளக்கம்
********
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.

மருத்துவத்துறையெனில் யார் யார் அங்கத்தினராக இருப்பார்கள்?
******************************
முதலில் நோயாளி, பின்னர் மருத்துவர் அப்புறம் மருந்து அவ்வளவுதானே.. ஆனால் செவிலியும் (உதவியாளர்) தேவையென்று நவீன மருத்துவ உலகம் சொல்கிறதே......ஆம் ஆனால் இதை
எப்போது அறிந்துகொண்டது என்றால் 19ஆம் நூற்றாண்டில் நைட்டிங்கேலின் வருகைக்குப் பின்னரே.

ஆனால் ஆச்சரியம் பாருங்கள்.....நம்ம தமிழ்பாட்டன் அதையும் தன் குறளில் சொல்லியுள்ளார்.

குறள் 950:
***********
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

விளக்கம்:
********
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

மேலும், நம் தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவம்பற்றி நாம் அனைவரும் அறிவோம். சித்த மருத்துவம் என்பது பின்விளைவு இல்லாத ஒரு மருத்துவமுறையாகும். ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் நோயின் அளவைப்பொருத்து இன்றும் மருந்து தரப்படுகிறது.

மேலும் ஒரு சுவாரஸ்யமான் தகவல்;

இலங்கை ஜெயராஜ் ஐயா சொல்வார்.
இலங்கையில் ஓரு சித்தமருத்துவர் உள்ளாராம். அவரைக்கொண்டுபோய் உலகின் எந்த மூலையில்விட்டாலும் அந்த ஊர் காய்கறிகள் முளைக்கும் தன்மையைப் பார்த்தே அது எக்குணம் என்று சொல்லும் ஆற்றல் உள்ளவராம். உதாரணமாக....

புடலங்காய் பாம்புபோல் கீழ்நோக்கி வளரும், எனவே அது நீர் குணம் என்பாராம். வெண்டைக்காய் மேல்நோக்கி வளரும், அதாவது தீபஒளி மேல்நோக்கித்தானே எரியும்...ஆக அது நெருப்பின் குணமாம்.பரங்கிக்காய் பரந்து வளரும், அது காற்றின் குணமாம்.
இப்படி பார்த்து பார்த்தே சொல்லிவிடுவாராம் அவர் ஊர் வைத்தியர். இது எதற்கு என்றால், நாம் பார்க்காத பல காய்கறிகள் உள்ளன அல்லவா?!! அவர்களுக்கு ஒருவேளை சித்த மருத்துவம் தேவையெனில் இப்படிப்பார்த்தே சொல்லிவிடுவாராம் அந்த இலங்கை வைத்தியர்.

அட போங்க சார்.... நமக்கு காய்ச்சல் வந்தால் பனடால் போதும் என்பவர்களுக்கு நாம் சொல்வது புரியவாபோகிறது.?!!

சரி நண்பர்களே.... மீண்டும் சந்திப்போம்

நன்றி

27/09/2018

#அறிவியலும்_தமிழும்_2


இந்த பேரண்டத்தில் நாம் காணும் அனைத்துமே அணுக்களின் கூட்டு என்பதை நாம் அறிவியல் பூர்வமாக அறிகின்றோம். இதை வெகு எளிதாகச் சொல்வதென்றால், சிறு வயதில் களிமண்ணால் விளையாடும்போது வண்டி, பொம்மை என்று பற்பல உருவங்கள் செய்து விளையோடுவோமல்லவா??! மேலும் இப்படி நாம் என்னதான் பல உருவங்கள் செய்தாலும் இவை அனைத்தும் உருவானது களிமண் என்று அறிவோம்தானே?!. அதைப்போலவே, நாம் காணும் அனைத்துப் பொருட்களும் (நீர், நிலம், நெருப்பு, கோள்கள்......அண்டம், பிண்டம்) என அனைத்துமே அணுக்களால் ஆனதே.

அறிவியல் பூர்வமாகச் சொல்வது என்றால் ஒரு பொருளை எடுத்து உடைத்துக் கொண்டே (பகுத்தல்) போகும்போது அதற்குமேல் உடைக்கமுடியாத ஒன்றே அணுவாகும். அணுக்களின் அமைப்பையும் அதன் சேர்க்கையையும் பொருத்து தனிமங்கள், வாயுக்கள், நீர்மங்கள்.... என்று அழைக்கின்றோம்.

இந்த அணுவை வேகமாக ஒரு சக்தியைக் கொண்டு தாக்கினால் அதில் அளப்பறிய ஆற்றல் வருகிறது என்று நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது. அதன் விளைவே அணுகுண்டு மற்றும் அணுஉலைகள்.

அணுவின் அளப்பறிய ஆற்றலை அறிந்த ஔவையார், திருக்குறளின் பெருமையை அணுவை உவமையாக வைத்துச் சொல்வதை இங்கே கவனியுங்கள்;

“அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகட்டிக் குறுகத்தரித்த குறள்”

-திருவள்ளுவமாலை
(11ஆம் நூற்றாண்டு )

அதாவது அணுவைத் துளைத்து ஏழு கடலையும் புகட்டியதுபோல மிகவும் சிறிய அளவிலான குறளில் அளப்பரிய கருத்துகள் உள்ளதாம். இங்கே ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஆம், இங்கே நாம் குறளின் பெருமையை அறிவதோடு
அணுவின் ஆற்றலையையும் அறிகின்றோம்.

மேலும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூலர் இயற்றிய திருமந்திரத்தைக் கவனியுங்கள்

உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.

100 x 1000 x 100 000=100 000 00 000

அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”
-திருமந்திரம்

மேலும் ஒரு சித்தர் பாடல் மூலமாக
அறிய வருவது யாதென்றால்;

“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கிலச்சாணிரண்டு முழமாம்.”

அதாவது, அணுவின் அளவைப்பற்றிச் சொல்வதற்காக எழுதப்பட்ட பாடல்.

அணு, தேர்த்துகள், பஞ்சிழை, மயிர், மணல், கடுகு, நெல், விரல், சாண், முழம்
....... இப்படி போகிறது.

அணுவையும் பகுத்து நவீன அறிவியல் 2012ல் “God Particles” என்று கண்டுபிடித்ததாகச் சொன்னாலும் அதற்கு முன்பாக 1985லேயே தன் கட்டுரையில் “இறைத்துகள்கள்” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(பெயரும் ஒத்துப்போனது மிகப்பெரும் ஆச்சரியமே)

நண்பர்களே, என் நோக்கம் இன்றைய அறிவியல் வளர்ச்சியை தாழ்த்தி தமிழை உயர்த்துவதாக எண்ண வேண்டாம். நம் தமிழில் நிறையவிடயங்கள் முன்கூட்டியே இருந்துள்ளது என்பதைத் தெரியப்படுத்துவதே ஆகும்.

(தொடரும்)

26/09/2018

#அறிவியலும்_தமிழும்_1



#அறிவியலும்_தமிழும்_1
********************
அனைத்து அறிவியல் சார்ந்த கருத்துகளும் ஆங்கிலேயர்கள் சொன்னதாகவே நினைத்துக்கொண்டிருக்கும் உறவுகளுக்காகவும், தமிழில் உள்ள அறிவியல் விடயங்களை அறிந்து கொள்ள நினைக்கும் ஆர்வலர்களுக்காகவும் எனக்குத் தெரிந்த சில விடயங்களைப் பதிவிடலாமே என்று எண்ணியதன் விளைவாகவே இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். பிழை இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டலாம்.

நாம் சில சமய இலக்கியங்களை மத ரீதியாக மட்டுமே அணுகாமல் அறிவியல் ரீதியாகவும் அணுகினால், கண்டிப்பாக பல விடயங்களை நம்மால் வெளியில்கொண்டு வர முடியும் என்பது என் திண்ணம்.

அண்டத்தின் தோற்றம்
**********************
அணுவைப்பற்றியும், கோள்களைப்பற்றியுமான தெளிவு ஆங்கிலேயர்களுக்கு வருவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் தமிழர்களுக்கு வந்துவிட்டது நண்பர்களே. கடந்த நூற்றாண்டில்தான் பெருவெடிப்புக் கொள்கையே (Bigbang theory) வருகிறது. ஆனால், நம் தமிழ்ப்பாடல்கள் அதற்கு முன்பாகவே அனைத்தையும் பதிவு செய்து வைத்துள்ளன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா?!!

நாம் வாழும் பூமி ஒரு சூரிய குடும்பத்தில் உள்ளது, ஒரு சூரிய குடும்பம் என்பது ஒரு சூரியனை மையமாகச் சுற்றிவரும் பல கோள்களையும் பல துணைக்கோள்களையும் கொண்ட ஒரு குடும்பம். இப்படி எத்தனையோ சூரிய குடும்பங்கள் சேர்ந்த ஒரு அமைப்பே பால்வீதி (கேலக்ஸி) எனப்படும். இப்படி எத்தனையோ பால்வீதிகள் சுற்றிவரும் அமைப்பே அண்டம் எனப்படும். இப்படி எத்தனையோ கோள்கள் சுற்றிவரும் அமைப்பே நம் பேரண்டம் என்று, தற்போதுதான் (போன நூற்றாண்டில்தான்) அறிக்கை வெளியிடுகிறார்கள்.

ஆனால், 9ஆம் நூற்றாண்டில் வந்த மாணிக்கவாசகர் எழுதிய கீழ்வரும் திருவாசகப் பாடலைப் பாருங்களேன்.
நீங்களே அறிந்து கொள்வீர்கள் தமிழனின் விஞ்ஞானம் பற்றிய மெய்ஞானத்தை.

இதோ பாடல்
**************
அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துண்ணனுப் புரைய..

விளக்கம்:
**********
அண்டத்தில் அடங்கியுள்ள அழகான மிகப்பெருங் காட்சியின் ஒவ்வொன்றாக அதன் அழகு பற்றிச் சொல்வதானால் 101 கோடிக்கும் மேலாக விரியும். எப்படியென்றால், மேற்கூரையில் இருக்கும் சிறிய துளையின் வழியாக வீட்டுக்குள் புகும் சூரியக்கதிரில் காணப்படும் நெருங்கிய துகள்களைப்போல் இருக்கும்.

இதைவிட எப்படிச் சொல்ல முடியும் உறவுகளே?!?

அடுத்து அண்டத்தின் ஆதாரமான அணுவைப்பற்றி பார்ப்போம்.

(தொடரும்)

24/09/2018

என்ன ஆளய்யா இவன்?

என்ன ஆளய்யா இவன்?
**********************
ஓன்றாய் நாமிருந்தோம்
ஒருசேர தூக்கிவந்தான்
ஓரிரு நாட்கள் மட்டும்
ஒன்றோடு உறவாண்டான்...

எடுத்த ஒன்றை விட்டுவிட்டு
அடுத்த ஒன்றைத் தொடுகின்றான்

மீண்டும் ஒன்றைத் தொலைத்துவிட்டு
மீண்டும் ஒன்றைத் தேடுகின்றான்

என்ன இவனென்று
என்னிடம் கேட்கின்றன
இன்னும் தொலையாத
மிஞ்சியுள்ள பேனாக்கள்...

✍️செ. இராசா

#நான்_தொலைக்கும்_பேனாக்கள்

#மலைச்சாரல்_காற்றே_வா



#மலைச்சாரல்_காற்றே_வா
மழைத்தூரல் தூவிட வா
தமிழ்ச்சாரல் காற்றே வா
கவித்தூரல் தூவிட வா

கடலை நுகர்ந்து
கருமை(வை) சுமந்து
வளியில் உலவிடும் மேகம்- நீ
குளுமை மிகுந்து
துளியாய்க் கசிந்து
தூவிடும் சாரலே கானம்

(மலைச்சாரல் காற்றே வா...)

வார்த்தை எடுத்து
வரியாய்த் தொடுத்து
வார்க்கிற கவியின் மூலம்- தமிழ்
மறையைப் படித்து
மனத்தில் ருசித்து
கோர்க்கிற கவியே பேசும்!

(மலைச்சாரல் காற்றே வா...)

✍️செ. இராசா