28/09/2018

#அறிவியலும்_தமிழும்_3



***********************
மிகப்பெரிய அண்டத்தையும், அதற்கு ஆதாரமான மிகச்சிறிய அணுவையும்பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்தப்பதிவில் நம் பிண்டத்தை அதாவது உடல்வளத்தை நன்றாக வைக்க உதவும் மருத்துவத்துறையில் தமிழின் பங்குபற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

மூன்று முக்கிய ஓட்டங்கள்
*************************^^
நாம் மருத்துவரிடம் போனதும் என்ன செய்கிறார்கள்?! ஸ்டெதஸ்கோப் வைத்து மூச்சுக்காற்றின் வேகத்தையும் இதயத்துடிப்பையும் கவனிப்பார்கள். பிறகு தெர்மாமீட்டர் வைத்து உடலின் வெப்பநிலை அளவைக் கவனிப்பார்கள். பின் சளி, இருமல் என்று நீர்கோர்த்து உள்ளதா என்று கவனிப்பார்கள். இது ஆங்கில மருத்துவத்திற்கு மட்டுமல்ல எல்லா மருத்துவத்திற்கும் இதுவே அடிப்படை என்று அறிவோம்.

ஆம் உறவுகளே....உடலில் ஓடும் மூன்று முக்கிய ஓட்டங்களை வைத்து நோயைக் கண்டுபிடிக்கலாம். அது என்ன அந்த மூன்று ஓட்டங்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. அவையாவன...

1. காற்றோட்டம்
2. வெப்ப ஓட்டம்
3. நீரோட்டம்

இதை வாதம் (காற்று), பித்தம்
(நெருப்பு) மற்றும் சிலேத்துமம் (நீர்)
என்று சொல்வார்கள். இதை 2000 வருடங்களுக்கு முன்பே நம் தமிழ்ச்சான்றோன் வள்ளுவனாரின் கீழ்வரும் குறள் மூலம் காணலாம்.

குறள் 941
*********
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

விளக்கம்
********
மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.

மருத்துவத்துறையெனில் யார் யார் அங்கத்தினராக இருப்பார்கள்?
******************************
முதலில் நோயாளி, பின்னர் மருத்துவர் அப்புறம் மருந்து அவ்வளவுதானே.. ஆனால் செவிலியும் (உதவியாளர்) தேவையென்று நவீன மருத்துவ உலகம் சொல்கிறதே......ஆம் ஆனால் இதை
எப்போது அறிந்துகொண்டது என்றால் 19ஆம் நூற்றாண்டில் நைட்டிங்கேலின் வருகைக்குப் பின்னரே.

ஆனால் ஆச்சரியம் பாருங்கள்.....நம்ம தமிழ்பாட்டன் அதையும் தன் குறளில் சொல்லியுள்ளார்.

குறள் 950:
***********
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

விளக்கம்:
********
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

மேலும், நம் தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவம்பற்றி நாம் அனைவரும் அறிவோம். சித்த மருத்துவம் என்பது பின்விளைவு இல்லாத ஒரு மருத்துவமுறையாகும். ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் நோயின் அளவைப்பொருத்து இன்றும் மருந்து தரப்படுகிறது.

மேலும் ஒரு சுவாரஸ்யமான் தகவல்;

இலங்கை ஜெயராஜ் ஐயா சொல்வார்.
இலங்கையில் ஓரு சித்தமருத்துவர் உள்ளாராம். அவரைக்கொண்டுபோய் உலகின் எந்த மூலையில்விட்டாலும் அந்த ஊர் காய்கறிகள் முளைக்கும் தன்மையைப் பார்த்தே அது எக்குணம் என்று சொல்லும் ஆற்றல் உள்ளவராம். உதாரணமாக....

புடலங்காய் பாம்புபோல் கீழ்நோக்கி வளரும், எனவே அது நீர் குணம் என்பாராம். வெண்டைக்காய் மேல்நோக்கி வளரும், அதாவது தீபஒளி மேல்நோக்கித்தானே எரியும்...ஆக அது நெருப்பின் குணமாம்.பரங்கிக்காய் பரந்து வளரும், அது காற்றின் குணமாம்.
இப்படி பார்த்து பார்த்தே சொல்லிவிடுவாராம் அவர் ஊர் வைத்தியர். இது எதற்கு என்றால், நாம் பார்க்காத பல காய்கறிகள் உள்ளன அல்லவா?!! அவர்களுக்கு ஒருவேளை சித்த மருத்துவம் தேவையெனில் இப்படிப்பார்த்தே சொல்லிவிடுவாராம் அந்த இலங்கை வைத்தியர்.

அட போங்க சார்.... நமக்கு காய்ச்சல் வந்தால் பனடால் போதும் என்பவர்களுக்கு நாம் சொல்வது புரியவாபோகிறது.?!!

சரி நண்பர்களே.... மீண்டும் சந்திப்போம்

நன்றி

No comments: