06/11/2017

நெஞ்சே எழு--களஞ்சியம் கவிதைப் போட்டி-78 (வெற்றிக் கவிதை)

78வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு.சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், மூன்றாம் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர் திரு. கோபிநாத் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து கைதூக்கிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.




நெஞ்சே எழு
*************
எத்தனை கொடுமைகள் நன்நெஞ்சே- நீ
எங்ஙனம் பொறுத்தாய் நன்நெஞ்சே?
பொறுத்தது போதும் நன்நெஞ்சே- நீ
பொங்கி எழுந்திடு நன்நெஞ்சே!

தண்ணீர் இன்றியே நன்னெஞ்சே-அன்று
கண்ணீர் வடித்து நின்றோமே!
தண்ணீர் இருந்தும் நன்னெஞ்சே-நம்
கண்ணீர் வடிவது குறையலையே!

கொடுங்கோல் அரசால் நன்னெஞ்சே-பல
கொடுமைகள் தினமும் நடக்கிறதே!
கொடுமை கொடுமை நன்னெஞ்சே-சிறு
கொசுவும் நம்மைக் கொல்கிறதே!

நோயால் பிணியால் நன்னெஞ்சே-பலர்
நோவதும் சாவதும் தொடர்கிறதே!
நோயாளி அரசால் நன்னெஞ்சே-புது
நோய்களும் நன்றாய் வளர்கிறதே!

புதுப்புது வரிகளால் நன்னெஞ்சே-இங்கு
புதியதோர் ஆட்சி நடக்கிறதே!
புண்பட்ட மனிதரால் நன்னெஞ்சே-தினம்
புவியில் புரட்சிகள் வெடிக்கிறதே!

அரசியல் பதர்களால் நன்னெஞ்சே-நமை
அகிலமே பார்த்து நகைக்கிறதே!
அறிவில்லா மூடரால் நன்னெஞ்சே-நாம்
அடைகிற வேதனை சுடுகிறதே!

காகிதப் புலிகளால் நன்னெஞ்சே- தினம்
காற்றினில் அறிக்கைகள் பறக்கிறதே!
காணொளி வடிவினில் நன்னெஞ்சே-அது
காட்சியாய் இணையத்தில் சிரிக்கிறதே!

போதும் போதும் நன்னெஞ்சே-நீ
பொறுத்தது போதும் நன்னெஞ்சே!
பொல்லா உலகம் நன்னெஞ்சே- நீ
பொங்கி எழுந்திடு நன்னெஞ்சே!

—�—�-செ. இராசா—�—

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1928186380833602/ 

30 அக்டோபர் 2017


இன்றைய நாள்
எங்களுக்கு ஓர் முக்கியமான நாள்...

இருஜோடி மலர்களை
இருவேறு இடங்களில்
இணைக்கின்ற இந்நாள்!
இனியதிருமண நன்நாள்!

இளவல் வினோத்தும்
இளநங்கை இந்திராவும்
இதயத்தை ஒன்றாக்கி
இன்பத்தை இரண்டாக்கும் நாள்!

மைத்துனர் இரஞ்சித்தும்
சகோதரி சங்கீதாவும்
மனங்களை ஒன்றாக்கி
மகிழ்ச்சியை இரண்டாக்கும் நாள்!

அது மட்டுமல்ல....

எங்கள் செல்லக்குட்டி
“அணுஶ்ரீ”யின் பிறந்த நாளும் இந்நாளே!

அனைவரும் நீடூழி வாழ
மனமார வாழ்த்துகிறேன்....

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

29/10/2017

கைப்பேசிக் காதல்


அவனும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கைப்பேசியை....

அவனும் சிரித்தான்
அவளும் சிரித்தாள்
சுயமிக்காக (செல்ஃபிக்காக)...

அவனும் பேசினான்
அவளும் பேசினாள்
சூடானது கைப்பேசி......

அவனும் துண்டித்தான்
அவளும் துண்டித்தாள்
அடுத்த இணைப்பிற்காக......

பணம்


அபாயகரமானது-ஆனால்
அத்தியாவசியமானது-பணம்
நெருப்பைப்போல....

பயங்கரமானது-ஆனால்
பயன்பாட்டிற்குரியது-பணம்
கத்தியைப்போல......

அதிகமானால் கவிழ்க்கும்
குறைவானால் கடிக்கும்- பணம்
செருப்பைப்போல.....

இருப்பின் அலட்சியம்
இல்லாமை உணர்த்தும்- பணம்
மரணத்தைப்போல....

சேர்ந்தால் மகிழ்ச்சி
போனால் அதிர்ச்சி -பணம்
முன்னால் காதலியைப்போல...

கற்றது எங்கே?!


தேனெடுக்கும் ரகசியத்தைத்
தேனீக்கள் கற்றதெங்கே?!

கூடுகட்டும் வித்தையதைக்
குருவிகள் கற்றதெங்கே?!

எடுப்பதை சேகரிக்க
எறும்புகள் கற்றதெங்கே?!

சிக்கவைக்கும் வலைபின்ன
சிலந்திகள் கற்றதெங்கே?!

கூடிஒன்றாய் உணவருந்த
காகங்கள் கற்றதெங்கே?!

ஊர்ந்துமோதி கருசேர
உயிரணுக்கள் கற்றதெங்கே?

பிறந்ததும் பாலுறிஞ்ச
பிஞ்சுகள்தான் கற்றதெங்கே?!

புரிதல் / அணுவை அறிவோம்


விருட்சங்களின் அம்சமெல்லாம்
விதைகளுக்குள் ஒளிந்திருக்கும்!
உயிர்களின் அம்சமெல்லாம்
உயிரணுக்குள் பொதிந்திருக்கும்!
விதை உயிர் ஆவதெல்லாம்
கருமையம் சார்ந்திருக்கும்!

பானை சோற்றின் பதம்பார்க்க
பருக்கை சோறு ஒன்றுபோதும்!
அக்னியை வளர்ப்பதற்கு
அக்னியின் பொறிபோதும்!
நீர்நிலையின் குணமறிய
நீர்த்துளிகள் சிலபோதும்!

சிறுதுளிகள் கூட்டுசேர்ந்து
பெருவெள்ளம் ஆவதுபோல்
சிறுஅணுக்கள் கூட்டுசேர்ந்து
பெருஅண்டம் ஆவதாலே
அணுக்களைப் புரிந்துகொண்டால்
ஆனதெல்லாம் விளங்கிவிடும்!

கொசு


இவனெல்லாம் கொசுவென்று
இனியென்றும் சொல்லாதீர்!
ஏளனத்தின் பொருளென்று
ஏமாந்து போகாதீர்!

கொலையாளி என்பதற்கும்
பகையாளி என்பதற்கும்
கொசுவென்று சொன்னாலே போதும்!

கொடுங்கோலன் செயல்களுக்கும்
கொசுசெய்யும் செயல்களுக்கும்
கொலையென்ற ஒருசொல்லே போதும்!

உதிரத்தை எடுப்பதிலும்
உயிர்வதைகள் செய்வதிலும்
அரசோடு கொசுவந்து மோதும்!

கொலை செய்யாக் கொசுவாலும்
கொசு செய்யும் கொலையாலும்
அரசுக்கே அவமானம் சேரும்!

பட்டிமன்றம்-2017

17 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது என் கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அடியேன் மேடையேறிப் பேசிய அனுபவம் என்றும் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இதோ காணொளிக் காட்சி உங்களுக்காக....(என் பகுதி மட்டும்)
நிகழ்வு: பட்டிமன்றம்
தலைப்பு: மன அழுத்தத்தை அதிகம் தூண்டுவது குடும்பமா? சமுதாயமா?




20/10/2017

தூரம் இல்லை ----களஞ்சியம் கவிதைப் போட்டியில் (76) பங்குபெற்ற கவிதை (முடிவு வரவில்லை



களஞ்சியம் கவிதையில் இடம்பெற்று தீர்ப்பு வராத என் கவிதைகள் 

(20.10.2017)

கண்களில் காண்கின்ற காட்சிகளால்
கருணையால் கண்ணீர் வடிகின்றதா?!
கடவுளும் நமக்கினித் தூரமில்லை!
கருணையால் கடவுளும் வெளிப்படுமே!

வாட்டிடும் வறுமையில் தவிக்கையிலும்
வாய்ப்பினை சரியாய்க் கணித்தோமா?!
வானமும் நமக்கினித் தூரமில்லை!
வாய்ப்பினால் வானமும் வசப்படுமே!

படுத்திடும் துன்பம் வருகையிலும்
பணியினில் நேர்மையாய் இருந்தோமா?!
பதவியும் நமக்கினித் தூரமில்லை!
பணிவினால் பதவிகள் கிடைத்திடுமே!

இன்னல்கள் எங்ஙனம் வந்தாலும்
எதிலும் நன்மையே கண்டோமா?
இன்பங்கள் நமக்கினித் தூரமில்லை!
எதிர்ப்பிலும் இன்பங்கள் தெரிந்திடுமே!

போட்டியில் கவிதைகள் தோற்றாலும்
படைப்பும் கவிதையும் தோற்றிடுமா?!
வெற்றிகள் நமக்கினித் தூரமில்லை!
வென்றிடும் முயற்சிகள் தொடரட்டுமே!

கவியின் அரசர்கள் படைத்ததுபோல்
கவிதையில் காவியம் மலர்ந்திடுமா?!
காவியம் நமக்கினித் தூரமில்லை!
களஞ்சியக் கவிஞர்களால் சாத்தியமே!

தமிழர்கள் செழிப்புடன் வாழ்வதற்கு
தமிழ்மொழி ஊக்கம் தந்திடுமா?
தமிழாளுமை நமக்கினித் தூரமில்லை!
தமிழ்நூல்கள் படித்தால் சாத்தியமே!

கற்கால மொழியின் நூல்களெல்லாம்
கணினியில் சரளமாய்க் கிடைத்திடுமா?!
தமிழ்நூலகம் நமக்கினித் தூரமில்லை!
தமிழ்ப்பட்டறைக் குழுவால் சாத்தியமே!



15/10/2017

சென்றுவா நண்பா

(நண்பர் பூபதி ஊருக்குப் பயணமாகும் போது எழுதியது)

சென்றுவா நண்பா- சீக்கிரம்
சென்றுவா நண்பா!
வென்றுவா நண்பா- அழுத்தத்தை
வென்றுவா நண்பா!

அன்பினை அள்ளிவா- நண்பா
ஆசையோடு பேசிவா- நண்பா
இன்பமாய்க் களித்துவா- நண்பா
ஈர(நெஞ்ச)த்தைக் காட்டிவா- நண்பா
உரிமையாய்ப் பழகிவா- நண்பா
ஊடலை விலக்கிடு- நண்பா
எப்போதும் மகிழ்ந்திரு- நண்பா
ஏவல்கள் தவிர்த்திடு- நண்பா
ஐங்கரனைத் தொழுதிடு- நண்பா
ஒருமையாய் இருக்காதே- நண்பா
ஓடோடி வந்திடு- நண்பா
ஓளடதமே நீதானே- நண்பா
அஃதுமக்குப் புரியுமா நண்பா?!