06/11/2017

நெஞ்சே எழு--களஞ்சியம் கவிதைப் போட்டி-78 (வெற்றிக் கவிதை)

78வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு.சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், மூன்றாம் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர் திரு. கோபிநாத் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து கைதூக்கிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.




நெஞ்சே எழு
*************
எத்தனை கொடுமைகள் நன்நெஞ்சே- நீ
எங்ஙனம் பொறுத்தாய் நன்நெஞ்சே?
பொறுத்தது போதும் நன்நெஞ்சே- நீ
பொங்கி எழுந்திடு நன்நெஞ்சே!

தண்ணீர் இன்றியே நன்னெஞ்சே-அன்று
கண்ணீர் வடித்து நின்றோமே!
தண்ணீர் இருந்தும் நன்னெஞ்சே-நம்
கண்ணீர் வடிவது குறையலையே!

கொடுங்கோல் அரசால் நன்னெஞ்சே-பல
கொடுமைகள் தினமும் நடக்கிறதே!
கொடுமை கொடுமை நன்னெஞ்சே-சிறு
கொசுவும் நம்மைக் கொல்கிறதே!

நோயால் பிணியால் நன்னெஞ்சே-பலர்
நோவதும் சாவதும் தொடர்கிறதே!
நோயாளி அரசால் நன்னெஞ்சே-புது
நோய்களும் நன்றாய் வளர்கிறதே!

புதுப்புது வரிகளால் நன்னெஞ்சே-இங்கு
புதியதோர் ஆட்சி நடக்கிறதே!
புண்பட்ட மனிதரால் நன்னெஞ்சே-தினம்
புவியில் புரட்சிகள் வெடிக்கிறதே!

அரசியல் பதர்களால் நன்னெஞ்சே-நமை
அகிலமே பார்த்து நகைக்கிறதே!
அறிவில்லா மூடரால் நன்னெஞ்சே-நாம்
அடைகிற வேதனை சுடுகிறதே!

காகிதப் புலிகளால் நன்னெஞ்சே- தினம்
காற்றினில் அறிக்கைகள் பறக்கிறதே!
காணொளி வடிவினில் நன்னெஞ்சே-அது
காட்சியாய் இணையத்தில் சிரிக்கிறதே!

போதும் போதும் நன்னெஞ்சே-நீ
பொறுத்தது போதும் நன்னெஞ்சே!
பொல்லா உலகம் நன்னெஞ்சே- நீ
பொங்கி எழுந்திடு நன்னெஞ்சே!

—�—�-செ. இராசா—�—

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1928186380833602/ 

No comments: