28/03/2017

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா



வாழ்க்கைப் பயணத்திலே
தன்னலத்தை மறந்தவனே-நீ
வாழ்க்கை அனைத்தையுமே
அர்ப்பணிப்பில் கரைத்தவனே!

வாடியவர் முகம்பார்த்தால்
வதங்குமடா உம்மனமே-அவர்
வாசல்வரை ஓடிவந்து
உதவுமடா உம்கரமே!

சிவாவென்ற நாமத்தினை
சுற்றத்தினர் அழைத்தவுடன்
சிலநொடியில் மின்னலென
சீவனாக நிற்பவனே!

சிந்தையிலே தெய்வமில்லா
நாத்திகத்தை கொண்டாலும்- நீ
சிறப்பான குணத்தாலே
ஆத்திகனை வென்றவனே!

இடைவேளை இல்லாமல்
எக்கணமும் உழைப்பவனே-நீ
இளைப்பாறும் வேலையிலும்
பிறர்நலனை நினைப்பவனே!

இடிபோன்ற துயரங்களை
புன்னகையால் வெல்பவனே! நீ
இறுமாப்பு கொள்ளாத
இதயத்தால் சிரிப்பவனே!

கடுகளவும் சேர்க்காதும்
மலையளவு அளிப்பதாலே- நீ
கர்மயோகி வள்ளலாகி
கர்ணனையும் வென்றவனே!

வாழ்க நண்பா...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா

இரண்டு இதிகாசங்கள்



பாசமும் நேசமும் பற்றாய் மாறினால்
பாவமும் நாசமும் பூமியில் நிச்சயம்!
பாரதம் போற்றிய காவியம் இரண்டிலும்
பாதகப் பற்றினில் வீழ்ந்தவர் பாரீர்! 
 


தங்கையின் கண்கள் இருண்டிடக் கண்டதும்
தர்மத்தை கிள்ளி அழித்திட எண்ணியே!
தம்கரம் இரண்டிலும் பகடை உருட்டியே!
தம்சதி வீழ்ச்சியால் மாண்டவன் சகுனியே!

தங்கையின் முகத்தில் குருதியைக் கண்டதும்
தர்மத்தை மறந்து நாசத்தை எண்ணியே!
தசரதன் குலத்திடம் வீண்பகை
க் கொண்டதால்
தன்தலை பத்தும் இழந்தவன் இராவணன்!

சாத்திரம் கற்றவர் குலகுரு ஆனவர்!
கோத்திரப் பற்றினில் கர்ணனை தவிர்த்தவர்!
மித்திர துரோகத்தை ஐவரால் வென்றவர்!
புத்திரப் பற்றால் தோற்றவர் துரோணரே!

கலைமகள் அழகை வடிவமாய் கொண்டவள்
கருவில் வந்தவன் அரசாள வேண்டியே!
கள்நெஞ்சுக் கூனியின் வஞ்சகம் கேட்டவள்
கணவனைக் கொன்றவள் பாதகி கைகேயி!

பற்றினில் வீழ்ந்தவர் நால்வரைச் சொன்னேனே?!
பற்றினால் வென்றவர் யாரென்று சொல்வேனோ?!
பற்றினை விட்டவர் உத்தமர் ஆவார்!
பற்றினை கொண்டவர் பாழாய் போவார்!

ஒவ்வொரு கணங்களிலும் இன்பம்/ சுகமான நினைவுகள்


பிஞ்சுக் குழந்தையின் மெய்களிலே
கொஞ்சிப் பழகிடும் கணங்களிலே
நெஞ்சில் துளிர்த்திடும் இன்பங்களை
விஞ்சும் தருணங்கள் வேறுண்டோ?!

வெற்றிப் படிகளை மிதிக்கையிலே
தூற்றிய பலரது வாய்களிலே
போற்றிடும் வார்த்தைகள் வருங்கணமே
காற்றினில் வலிகள் பறக்காதோ?!

இசையை இரவில் கேட்கையிலே
இளமை பழமை நினைவினிலே
இதயம் கடந்து போகையிலே
இனிமை இதுவெனத் தோன்றாதோ?!

நண்பனை மீண்டும் பார்க்கையிலே
நட்பில் கலந்து லயிக்கையிலே
நதிநீர் வெள்ளம் போல்மனதும்
நளினம் ஆடியே ஓடாதோ?!

காதலி கரங்களில் விழுகையிலே
காதல் கடலில் குளிக்கையிலே
காலையும் மாலையும் தெரியாமல்
காட்சிகள் கண்களில் மறையாதோ?!


12/03/2017

பொருள் ஈட்டும் வழி:




பொருளை உலகில் தேடித்தான்
பொழுதும் நாளும் தேய்கிறது....

பணமும் காசும் சேர்த்திடவே
பயணம் தினமும் தொடர்கிறது....

களவும் பொய்யும் தவிர்த்தோர்க்கும்
கடனும் வறுமையும் வதைக்கிறது...

உயர்வின் உச்சியை அடைந்திடவே
உழைக்கா வர்க்கமும் துடிக்கிறது...

உண்மை நேர்மை கொண்டவர்க்கே
உலகில் சோதனை தொடர்கிறது...

உயர்வும் தாழ்வும் வந்தாலும்
உள்ளம் வளைந்திடக் கூடாது...

தேவைகள் நம்மில் குறையாமல்
தேடிடும் இன்பம் கிடைக்காது...

தேடிய யாவும் கிடைத்தாலும்
தெய்வம் மறந்தால் நிலைக்காது....

தர்மத்தின் வழியில் வாழ்ந்தேநாம்
தரணியில் பொருளை ஈட்டிடுவோம்....

28/02/2017



அம்மாச்சி என்றாலே! என்
அகக்காட்சி விரியுதம்மா!
அவர்காட்சி தெரியுதம்மா!
அன்புமாட்சி மலருதம்மா!

நீர்வீழ்ச்சி போல்அன்பை
நேர்பாய்ச்சி எம்நெஞ்சில்
அரசாட்சி புரிகின்றார்!
அதன்சாட்சி என்னெஞ்சே!

இருள்காட்சி வந்துவிட்டால்
இடர்வீழ்ச்சி ஆகவேண்டி
அம்மாச்சி குரல்கேட்பேன்
அகமகிழ்ச்சி ஆகிடுவேன்

மனத்தளர்ச்சி போகவச்ச
மதிகுளிர்ச்சி ஆகவச்ச
இறைஆச்சி இவர்தான்னு!
மனசாட்சி பேசுதம்மா!

27/02/2017

எண்ணுக்கும் இறைக்கும் எல்லையில்லை

மெய்வழி அறிதல் ஞானமாகும்
மெய்யாய் உணர்தல் பக்தியாகும்
மெய்யை சரியாய் உணராதோர்
மெய்யை பொய்யென உரைப்பாரே!

பாதை தெளிவாய்த் தெரிந்தாலும்
படித்தது நன்றாய் புரிந்தாலும்
பயணம் தன்னுள் தொடங்காமல்
பக்தியை உணர்ந்தவர் உள்ளனரோ?

ஆயிரம் விடயங்கள் அறிந்தாலும்
ஆயிரம் ஆலயம் சென்றாலும்
ஆண்டவன் அருளை அடையாமல்
ஆதியும் அந்தமும் விளங்கிடுமோ?

அறிவியல் அடிப்படை கணிதமாகும்
அவற்றின் அடிப்படை எண்களாகும்
இறுதிஎண் என்பதே இல்லாமல்
இறைவனும் எண்போல் முடிவிலியே!!


✍️செ. இராசமாணிக்கம்

23/02/2017

கள்ளும் சினமும்


கள்ளும் சினமும் குணத்தால் ஒன்றே!
சொல்லும் நாக்கும் பிரளும் நன்றே!
வெறியும் வேகமும் சங்கமம் கொண்டே!
ஏறிடும் இரண்டிலும் போதை ஒன்றே!

கண்ணும் நெஞ்சும் பார்வை மங்கும்!
கல்வியும் அறிவும் காற்றில் பறக்கும்!
காலும் கையும் நடனம் ஆடும்!
காதலும் தேனும் கசந்தே போகும்!

மூக்கும் முழியும் கோணல் ஆகும்!
மூளையும் செல்லும் முடிவை நோக்கும்!
குணமும் குலமும் குறைவால் மங்கும்!
குருதியில் நஞ்சும் குன்றாய்ச் சேரும்!

நாயும் பேயும் நாவினில் வாழும்!
நோயும் பிணியும் உறவாய் கூடும்!
நட்பும் தமரும் விலகிட நேரும்!
நாடியும் நரம்பும் தளர்ந்தே போகும்!

கள்ளும் சினமும் நீக்கிட வேண்டும்!
எள்ளும் உலகம் வென்றிட வேண்டும்!
அன்பும் அறமும் போற்றிட வேண்டும்!
அறிவும் தெளிவும் அடைந்திட வேண்டும்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!

21/02/2017

எனது ஆத்திசூடி



அறிவைப் பெருக்கு
ஆசையைக் குறை
இனியதைப் பேசு
ஈரநெஞ்சம் கொள்
உண்மை தவறேல்
ஊரை நேசி
எதிரியை வாழ்த்து
ஏளனம் பொறு
ஐம்பொறி அடக்கு
ஒற்றுமை போற்று
ஓர்குலம் ஆகு
ஔடதம் தவிர்
எஃகாய் உடல்கொள்

11/02/2017

நட்பால் இணைவோம்




அன்பை விதையாய்த் தூவித்தான்
நட்பை மரமாய் வளர்த்தோமே!

கற்பைப் போலே போற்றித்தான்
நட்பை நாமும் மதித்தோமே!

காயாய் புளித்த தேர்வுகள்!
கனியாய் இனிக்கும் நினைவுகள்!

எல்லாம் கடந்த காலங்கள்!
என்றும் ஜொலிக்கும் வைரங்கள்!

இலையுதிர் காலம் வந்தாலே
இலைதான் உதிரும் தன்னாலே!

உதிர்ந்த இலைபோல் பிரிந்தாலும்
உதிரம் உறவாய் ஒன்றானோம்!

புதிதாய் துளிர்த்த இலைபோலே
புதையல் நினைவுகள் வருகுதிங்கே!

வசந்த காலம் வருவதைப்போல்
வருடம் ஒருநாள் கூடிடுவோம்!

காலம் தூரம் மறைந்திடவே
நாமும் நட்பால் இணைந்திடுவோம்!

பகடி மோசடி



ஆடி பாடி சேர்த்தாங்களா?
ஓடி ஓடி சேர்த்தாங்களா?
கூடி கூடி சேர்ந்துதானே
கோடி கோடி அடிச்சாங்க.....!

தேடி தேடி அடிச்ச காசில்
திருடி திருடி சேர்த்த காசில்
மாடி மாடி கட்டிப்புட்டு
பகடி மோசடி செய்யுறாங்க!

மோடி நாடி சென்றிடவே
கேடி லேடி முயன்றிடவே
போடி போடி எனவிரட்ட
திருடி குருடி ஆகிட்டாங்க...!⁠⁠⁠⁠



SASIKALA

Fraudகார lady ஒன்னு
Prado carல பறக்குது!

MLAக்கள விலைக்கு வாங்க
Ministerகள அனுப்புது!
Case caseஆ சரக்க இறக்கி
Cash கோடி கொடுக்குது!
DA case தீர்ப்பு வரல
CM post கேக்குது!
OPS பேரக் கேட்டா
BP sugar எகிறுது!

(தமிNglishல எழுதியமைக்கு மன்னிக்கவும்.....)