28/03/2017

இரண்டு இதிகாசங்கள்



பாசமும் நேசமும் பற்றாய் மாறினால்
பாவமும் நாசமும் பூமியில் நிச்சயம்!
பாரதம் போற்றிய காவியம் இரண்டிலும்
பாதகப் பற்றினில் வீழ்ந்தவர் பாரீர்! 
 


தங்கையின் கண்கள் இருண்டிடக் கண்டதும்
தர்மத்தை கிள்ளி அழித்திட எண்ணியே!
தம்கரம் இரண்டிலும் பகடை உருட்டியே!
தம்சதி வீழ்ச்சியால் மாண்டவன் சகுனியே!

தங்கையின் முகத்தில் குருதியைக் கண்டதும்
தர்மத்தை மறந்து நாசத்தை எண்ணியே!
தசரதன் குலத்திடம் வீண்பகை
க் கொண்டதால்
தன்தலை பத்தும் இழந்தவன் இராவணன்!

சாத்திரம் கற்றவர் குலகுரு ஆனவர்!
கோத்திரப் பற்றினில் கர்ணனை தவிர்த்தவர்!
மித்திர துரோகத்தை ஐவரால் வென்றவர்!
புத்திரப் பற்றால் தோற்றவர் துரோணரே!

கலைமகள் அழகை வடிவமாய் கொண்டவள்
கருவில் வந்தவன் அரசாள வேண்டியே!
கள்நெஞ்சுக் கூனியின் வஞ்சகம் கேட்டவள்
கணவனைக் கொன்றவள் பாதகி கைகேயி!

பற்றினில் வீழ்ந்தவர் நால்வரைச் சொன்னேனே?!
பற்றினால் வென்றவர் யாரென்று சொல்வேனோ?!
பற்றினை விட்டவர் உத்தமர் ஆவார்!
பற்றினை கொண்டவர் பாழாய் போவார்!

No comments: