வன்மம் நிறைந்தது வையகம் நோக..
இன்னல் மிகுந்தது..ஈந்தவர் மாற..
நேர்மை குறைந்தது நிம்மதி போக..
வாய்மை வளைந்தது வானமே நாண
தர்மம் நிறைந்துளத் தலைவரும் இல்லை!
கர்வம் குறைந்துளக் கவிஞரும் இல்லை!
தர்க்கம் எழும்பிடா சபைகளும் இல்லை!
வர்க்கம் புகுந்திடா அமைப்புகள் இல்லை!
காமம் குடிபுகா மாந்தரும் உண்டோ?
சாமம் முடிந்திடா நாட்களும் உண்டோ?
நாமம் கெடுத்திட நினைப்பவர் உண்டோ?
ஈமம் பிடித்திட இறப்பவர் உண்டோ?
அன்பு மிகுந்திட அகிலமும் தோன்ற
பண்பு நிறைந்திட பாடலும் பாட
நன்மை நிலைத்திட நல்லவர் ஓங்க
உண்மை ஜெயித்திட உழைப்பவர் வாழ்க!
செ.இராசா
21/03/2024
உழைப்பவர் வாழ்க
20/03/2024
சினிமாப் பத்து ...............குறள்வெண்பாக்கள்
#சினிமாப்_பத்து
#குறள்வெண்பாக்கள்
குடித்தபின் எல்லோரும் கும்மாளம் போட்டு
நடித்த படமாய்யா நன்று?
(1)
தடைபோட்ட வேலியைத் தாண்டியவர் சென்றால்
கிடைக்குமோ நல்விருது கேள்?!
(2)
மலையாளி செய்தால் மகிழ்கின்ற நம்மோர்
கலையுயர தேவை கதை!
(3)
கவிவேண்டும் என்றே கதைத்ததோர் காலம்
கவியரசர் காலமே காண்!
(4)
இசைவேண்டும் என்றே இயங்கியதோர் காலம்
இசைஞானி காலமே இங்கு!
(5)
நடிகரை நம்பி நகர்கின்ற காலம்
விடியுமா? சொல்வீர் விடை!
(6)
வர்த்தகத் தேவையென நம்பிக்கை கொள்ளாமல்
அர்த்தமுடன் செய்தால் அழகு!
(7)
இயலும் இசையும் இனிதே அமைய
இயல்பாய் நடிப்பிருந்தால் ஈர்ப்பு!
(8)
மனித உணர்வுகளை நன்றாகக் காட்டி
இனியேனும் செய்தால் இனிது!
(9)
மஞ்சுமேல் பாய்ஸைப்போல் நாம்செய்தால் கைகொடுக்க
நெஞ்சுரம் கொள்வீர் நினைந்து!
(10)
செ. இராசா
19/03/2024
13/03/2024
கொள்கையின் பேரினில்
கொள்கையின் பேரினில் கொள்ளை அடிப்பவர்
கொள்ளை அடிக்கவே கொள்கையைத் துறக்கிறார்....
நல்லவர் போலவே நம்மவர் என்பவர்
வல்லவர் வாழவே மையமாய் நகர்கிறார்....
சிறுத்தையைப் போலவே சீறிடும் வித்தகர்
இருப்பதைக் காக்கவே ஈவதை ஏற்கிறார்...
சமத்துவம் தேடிய சாதனை நாயகர்
சமுத்திரப் பாதையில் ஓடையை இணைக்கிறார்...
கூட்டணி அமைப்பதில் குழப்பம் நிறைந்தவர்
போட்டியில் வெற்றியை எதிரிக்குத் தருகிறார்....
செ. இராசா
12/03/2024
மெட்டு: மாங்குயிலே....காலமுள்ள காலம்வரை
*பல்லவி*
காலமுள்ள காலம்வரை மானத்துடன் வாழ
ஆளுகிற ஆட்சியினை நாம்தொடர வேணும் ....(2)
முத்து வேலர் கருணா நிதி
பெத்த பிள்ளை பாரம்மா...
காலமுள்ள காலம்வரை மானத்துடன் வாழ
ஆளுகிற ஆட்சியினை நாம்தொடர வேணும்..
*சரணம்_1*
எட்டி எட்டி மேல வந்த எங்க தல சிங்கம் அவர்...
எள்ளளவும் குறை களில்லா சுத்தமான தங்கம்...
தப்பு தண்டா செஞ்ச வர்க்கு எப்போதுமே நெருப்பு -ஐயா
நட்பப் போல கண்ண வச்சு
காப்பதவர் பொறுப்பு...
சாதி மதத்தால் பிரிக்க நினைச்சா
சட்டம் ஒழுங்க கெடுக்க நினைச்சா
ஹிந்தி மொழிய திணிக்க நினைச்சா
நம்ம மொழிய அழிக்க நினைச்சா
வால ஒட்ட நறுக்கு ஐயா
நம்மில் இல்லை வெறுப்பு
வாழ வந்தா சிறப்பு இல்லை
இங்கே இல்லை இருப்பு
நித்தமும் பொய்களைச் சொல்லிடும் பேர்களின்
அத்தனை வேசமும் சீக்கிரம் நீங்கிடும்
காலமுள்ள காலம்வரை மானத்துடன் வாழ
ஆளுகிற ஆட்சியினை நாம்தொடர வேணும்..
*சரணம்-2*
உண்மை நிலைச்சு நிக்க உயிர் கொடுக்கும் தலைவன் அம்மா
நன்மை கிடைக்கனும்னு தினம் நினைக்கும் தலைவன்
வள்ளுவரு சிலையை வச்ச கலைஞரோட புதல்வன் ஐயா
தெள்ளுதமிழ் நிலைக்க வச்ச
கழகத்தோட முதல்வன்
கூடியிழுப்போம் வெற்றிக் கனிய
சொல்லி அடிப்போம் டெல்லிப் பணிய
நாளை எண்ணித்தான் நாளும் உழைப்போம்
பார்வை ஒன்றில்தான் பாதை அமைப்போம்
நாற்பதிலும் நாமே யம்மா
வெல்லவேணும் தானே
மோதிடுவோர் வீணே யம்மா
வீழவேணும் தானே
மாலைய எடுத்துப் போடனும் உமக்கு
நம்மோட கணக்கு மொத்தமும் நமக்கு
11/03/2024
யாருடா நீங்கள்லாம்
வெளு வெளுன்னு வெளுக்கணும்
வெறிநாய்கள வெளுக்கணும்
மிதிமிதின்னு மிதிக்கணும்
வெறிநீங்கிட மிதிக்கணும்
அடி அடின்னு அடிக்கணும்
அடிதெறிக்க அடிக்கணும்
அறு அறுன்னு அறுக்கணும்
குறிபார்த்து அறுக்கணும்
#பல்லவி
யாருடா நீங்கள்லாம்
யாருடா நீங்கள்லாம்....
பாவன்டா பிஞ்செல்லாம்
பாவிடா நீங்கள்லாம்
பூமிக்கும் பாரமா
...சாமிக்கும் தூரமா
வாழ்க்கையே மோசமா
..வாழத்தான் வேணுமா?!
கழுமரத்துல எண்ணெயத் தடவி
சொறுக வேணுங்க...
இரும்புக்கம்பியப் பழுக்கக் காய்ச்சி
இழுக்க வேணுங்க...
கொடிமரத்துல இறுக்கிக் கட்டி
பொளக்க வேணுங்க...
வெடிமருந்தினை முழுக்கக் கொட்டி
எரிக்க வேணுங்க...
செ. இராசா
10/03/2024
பூஜாவோ சர்மாவோ
பூஜாவோ சர்மாவோ
......போங்கடி ஓரமா
பேஜாரு செஞ்சாக்க
......பிச்சிடுவேன்- ராஜாடீ
நோட்டம் விடுவதுமாய்
......நூல்விட்டுப் பார்ப்பதுமாய்
கூட்டம் திரியுது;கை
.......கோர்த்து!
செ. இராசா
08/03/2024
மங்கையராய்ப் பிறப்பதற்கே-
மங்கையராய்ப் பிறப்பதற்கே- நல்ல
மாதவம் செய்திட வேண்டுமாம்!
மன்னியுங்கள் கவிஞரே..
மனம் பதைபதைக்கிறது..
ஒரு மகளைப்பெற்ற தந்தையாக...
...
நீதி வேண்டுமென்று
நிற்காமல் ஒலிக்கும் குரல்கள்...
இன்னும் கேட்கிறதே...
இது எப்போது நிற்கிறதோ
அப்போது சொல்லுங்கள்..
...
மகளிர் தின நல்வாழ்த்துகள்!
.....
செ. இராசா




