15/07/2023

ஏ-ஐயில் செஞ்சவளே.

  


ஏ-ஐயில் செஞ்சவளே...
‌.....என்னாம்மா கீறநீ
வைஃபைக்கு வந்தவளே
.....வார்த்ததுயார்- ஹைஃபையா
உன்னால பாருயிப்ப
.....ஊருல வேலைபோய்
என்னென்ன ஆகுமோ
..... இங்கு?

✍️செ. இராசா

14/07/2023

குறள் வெண்பாவில் உரையாடல்




அப்பா அமரப்பா அப்புறம் பேசலாம்
தப்புப்பா நிற்காதே தப்பு
(1)

அப்பா அமர்வதில்லை அப்படித்தான் நின்றிடுவார்
எப்போதும் இஃதே இயல்பு
(2)

உட்காரச் சொல்லி உரைத்தாயா என்றேனும்
கட்டாதே நன்றாய்க் கதை
(3)

மரபினை மாற்றுவது நல்லதில்லை தம்பி
கரம்கூப்பி மன்னிப்பு கேள்
(4)

இனியும் இதுபோல் எகத்தாளம் வேண்டாம்
கனிவுடன் பேசிடக் கல்
(5)

புரட்சி புடலங்காய் புண்ணாக்கு பேசாய்
சிரம்தூக்க ஏதேனும் செய்
(6)

எங்கய்யா விட்டீர்கள் எப்போதும் எங்களை
நொங்கவே பார்க்கின்றீர் நீர்
(7)

ரத்தத்தில் ஊறியது ராத்திரியில் மாறிடுமா?
புத்திக்குள் போகாது போ
(8)

இப்படியே பேசிநீர் இப்படியில் நில்லுங்கள்
அப்படியைத் தாண்டிவிட்டோம் யாம்!
(9)

தாண்டினால் பின்னேன் தலைகுனிந்து கேட்கின்றாய்
வேண்டாமல் காட்டிடுவாய் வென்று!
(10)

✍️செ. இராசா

13/07/2023

அத்தனை இரவல்களுக்கும் ஓர் கணக்குண்டு

 


இருவர் தந்த இரவலே
இந்த உடம்பு...

இறைவன் தந்த இரவலே
இந்த உயிர்...

உலகம் தந்த இரவலே
நம் உடைமை...

இங்கே‌‌...
அத்தனை இரவல்களுக்கும்
ஓர் கணக்குண்டு...
மறவாதீர்...
நீங்களாகத் தராவிட்டாலும்
அவை கட்டாயம் வசூலிக்கப்படும்

✍️செ. இராசா

11/07/2023

நட




நடக்க நடக்கத்தான்
இடம்பெயர்தல் நடக்கும்..
நடக்க நடக்கத்தான்
ஞாலம் புலப்படும்....
நடக்க நடக்கத்தான்
ஞானம் வசப்படும்...

அன்று
மனித சமுதாயம் மட்டும்
நடவாமல் நின்றிருந்தால்
இங்கே என்னதான் நடந்திருக்கும்?

எவரெஸ்டை எட்டிய
எட்மண்ட் ஹிலாரியும்
சந்திரனை எட்டிய
ஆம்ஸ்ட்ராங் ஆல்ட்ரினும்
நடந்து நடந்துதானே
இலக்கை எட்டினர்...

காந்தி நடந்த நடையைக்
கணக்கிட முடியுமா?
தண்டி யாத்திரையோ
தண்ட யாத்திரையோ...
அவை...
நடப்பவரின் எண்ணம் பொறுத்தே..

ராஜசேகர ரெட்டியோ
ராகுல்காந்தியோ?!
வை கோபால் சாமியோ
ஈ வே ராமசாமியோ
எல்லாம்....
நடப்பவரின் திண்ணம் பொறுத்தே...

இங்கே
எந்த உயிரினமும் நம்மைப்போல்
நடக்கத் தாமதிப்பதில்லை...
நாம் மட்டும்தான்
புரள சில மாதம்
தவழ சில மாதம்
அமர சில மாதம்
நிற்க சில மாதம்
நடக்க சில மாதமென்று
நாட்கள் பல எடுத்துக்கொள்கிறோம்

ஆரம்பத்தில் என்னவோ
நன்றாகத்தான் நடந்தோம்
பிறகு நடந்ததென்ன?

அங்கே போகாதே
இங்கே போகாதேயென்று
டிவி கொடுத்தோம்
டேப் கொடுத்தோம்
விளையாட்டை நிறுத்தி
வீடியோகேம் கொடுத்தோம்...
கூடவே...
குண்டான தேகம் கொடுத்தோம்

நாம் மட்டும் என்னவாம்?
அன்று அப்படி இப்படியென்று
நடந்த கதைகளையே பேசிப்பேசி
நடக்கும் தூரத்திற்குக்கூட
வண்டி தேடுகிறோம்...

முடிவு?
மருத்துவமனையில்
சர்க்கரை அளவை சரிபார்க்கிறோம்
அவரோ நடக்கச்சொல்கிறோர்
நாமோ நடக்கும் காரியமா என்றபடி
காரியம் நடக்காமல் இருக்க
உடனே நடக்க நினைக்கிறோம்..
பிறகு நடப்பதென்ன?!

வெயிலென்றும் மழையென்றும்
பனியென்றும் குளிரென்றும்
ஏதேதோ சொல்லிவிட்டு
நடக்க முடியவில்லையென்று
மீண்டும் நடக்கிறோம்
மருத்துவமனைக்கு...

எனில் என்னதான் செய்ய?
சரி....
வாங்க நடப்போம்!

✍️செ. இராசா

06/07/2023

என்னோடு நான் --------- குறள் அந்தாதி




இத்தனைநாள் ஆகிடுச்சே... என்னப்பா செஞ்சிருக்க
செத்தழிஞ்சு போகும்முன் செய்!
(1)

செய்செய் எனநானும் செய்துதான் பார்க்கின்றேன்
செய்வினைக்கு எங்கே சிறப்பு?!
(2)

சிறப்பை எதிர்பார்த்து செய்யாமல் நாளும்
பொறுப்புடன் செய்தால் புகழ்!
(3)

புகழுக்காய்த் தானா புனைகின்றேன் இல்லை
அகவுணர்ச்சி தானே அது
(4)

அதுதான் இலக்கென்றால் ஐயமென்ன உன்னுள்
புதுப்புது யுக்தியுடன் போ
(5)

போகின்ற பாதையில்தான் போகின்றேன் என்றாலும்
போகுமிடம் சேரவில்லைப் போய்
(6)

போய்விட்டு சொல்லாதே போனவழி தப்பென
ஆய்ந்தறிந்து போனால் அழகு
(7)

அழகாகக் காய்நகர்த்தி அத்தனையும் செய்தும்
விழலுக்கு இறைத்தநீர் வீண்!
(8)

வீணருடன் கூடி விரையங்கள் செய்யாமல்
ஆனவரை செய்வாய் அடுத்து
(9)

அடுத்தடுத்து மேலேறி அப்படியே போனால்
எடுத்தசெயல் போய்விடுமா இத்து?!
(10)

✍️செ. இராசா

05/07/2023

குறட்டை

 


உறக்கத்தில் பேசும்
உயிரொலி

தன்செவி கேளா
குரலொலி

பிறர்மட்டும் கேட்கும்
பேரிடி

காற்றிலே இயங்கும்
சைரன்

அ‌கிம்சையில் வதைக்கும்
இம்சை

விடாமல் தொடரும்
கர்ஜனை

ஊதினால் ஊதும்
சங்கொலி

#குறட்டை

✍️செ. இராசா


04/07/2023

சாதியத்தைத் தூண்டிவிட்டு

 


சாதியத்தைத் தூண்டிவிட்டுக்
.....காசுபார்க்க எண்ணுறான்!
நாதியற்ற பேர்களென்று
......நல்லவன்போல் காட்டுறான்!
ஊதிநன்கு பற்றவைத்து
.....ஞானியைப்போல் பேசுறான்
மீதியுள்ள நல்லபேரும்
.....மாறயெண்ணி செய்யுறான்!

✍️செ. இராசா

01/07/2023

தேடிக்கொண்டிருக்கிறேன்...

 

உச்சி வெயிலில்
உரத்தக் குரலில்
அந்தப் பேருந்து நிலையத்தில்
எப்போதும் பாடித்திரிந்த
அந்தப் பாடகனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்...
ஒருவேளை அவன் இறந்திருப்பானோ?!
இருக்காது....
அவன் குரல்தான் இன்னும் கேட்கிறதே...
 
✍️செ. இராசா

வடிகின்ற கண்ணீரைத்
துடைக்க முடியவில்லை
நேரலையில்...

  


சின்னப் பொடியன்போல்
......சீக்கிரமா மாறனும்னா
சின்னதா வச்சுச்
......சிரிச்சபடி - புன்னகைப்பேன்
ஆசையுடன் கூட்டி
.......அதன்பின் குறைக்கின்ற
மீசையால் மாறும் முகம்!

✍️செ. இராசா

(இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்னு எனக்கும் தெரியும்.... சும்மாதாங்க
😃😃😃😃)