07/05/2022

இலக்கியம் ஆய்வோம் - 1 (பெரிய புராணம்)


இலக்கியங்களையோ மதத்தையோ இழிவுபடுத்தும் நோக்கில் இப்பதிவு எழுதப்படவில்லை. நம் இலக்கியங்களில் உள்ள நல்ல பகுதியையும் குற்றமான சற்றே ஏற்றுக்கொள்ளத் தயங்கும் பகுதியையும் சுட்டிக்காட்டுவது மட்டுமே எம் நோக்கம். இதைப்படித்த பிறகு அந்தக் குற்றமான பகுதிகள் தேவையா என்பதை மறுசீரமைப்பு செய்யவேண்டியது சான்றோரின் பொறுப்பு. இதில் உள்ள நிறைகளை அப்படியே பற்ற வேண்டியது அடியேன் விருப்பு.

எனக்கு சிறுவயதில் இருந்தே மிகவும் பிடித்தமான எண் யாதென்றால் உடனே 63 என்பேன். காரணம் நான் எங்கே போனாலும் அந்த எண் இருப்பதைக் கவனித்தேன். அதாவது பள்ளியில் வரிசை எண், கல்லூரியில் அறை எண், இவ்வளவு ஏன் சிவகங்கை மாவட்ட வாகனங்களின் அடையாள எண்.........இப்படி வந்த 63ஐ கவனித்தேன். மேலும் கவனித்தபோது, எனக்கு மிகவும் பிடித்த சுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு 1863, அவரின் குருநாதர் பிறந்த ஆண்டு 1836, நபிகள் வாழ்ந்த வருடங்கள் 63....இப்படி இன்னும் நீண்டது. அதேபோல் கோவிலில் கவனித்த இந்த 63 நாயன்மார்களின் மீதும் இயல்பாகவே ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.


நானும் பலமுறை இந்தப் பெரிய புராணத்தைக் கதையாக வாசித்துள்ளேன். ஆனால், அது ஏதோ இடியாப்பச் சிக்கல்போல், என்னால் யார் யார் என்னென்ன சிறப்பு என்பதை எளிதாக வரிசைப்படுத்த முடியாமல் இருந்தது. பின்னர் ஒவ்வொருவரைப் பற்றியும் தெளிவாக எழுத ஆரம்பித்தபோது, நான் இப்படி கீழேயுள்ளதுபோல் வரிசைப்படுத்த முடிந்தது.


1. சிவார்ப்பண நாயன்மார்கள் (18)
2. சிவத்தொண்டு நாயன்மார்கள் (10)
3. சாகத் துணிந்த நாயன்மார்கள் (4)
4. சிறப்பு மிகுந்த நாயன்மார்கள் (7)
5. கோப நாயன்மார்கள் (9)
6. சிறப்பு குறைந்த நாயன்மார்கள் (6)
7. மற்ற நாயன்மார்கள் (9)


இந்த வரிசையமைப்பில் காணும்போது யார் யார் உண்மையில் வழிபடத்தக்கவர்கள். யார் யார் அப்படி இல்லாதவர்கள் என்பதைத் தெளிவாகக் காணலாம். அதற்கு முன்பாக பெரியபுராணம் பற்றிய சிறு குறிப்போடு ஒவ்வொரு நாயன்மார்களையும் யாம் அடுக்கிய வரிசையில் பார்ப்போம்.

 


நேற்றைய தினம் வெளியே சென்றிருந்தபோது வண்டியின் பின்பக்க டயர் வெடித்துவிட்டது. வண்டியை ஓரம் கட்டி முதலில் சாலையில் அபாயக்குறிக்கான அடையாளத்தை வைக்கலாமென்றால், அது சரியாக நிற்காமல் கீழேகீழே விழுந்தது. உடனே என் பையன் அதிலிருந்த குறையைச் சரிசெய்து "இப்போது பாருங்கள்" என்று சாலையில் வைத்தான். 
 
பிறகு, ஜாக்கியை எடுத்து மாற்று டயர் மாற்றும் வேலையில் இறங்கியபோது, லீவரை எடுத்து எடுத்துப்போட்டு சுற்றினேன். பிறகு அதே வேலையைப் பையனிடம் கொடுத்துவிட்டு, புதிய டயரை எடுக்க டிக்கியைத் திறக்கப்போனேன். அப்போது என் பையன் எப்படி அந்த லிவரைக் கையாள்கிறான் என்று பார்த்தால், வெகு சுலபமாக ஒரு நேர்த்தியான மெக்கானிக்போல் லீவரை வெளியே எடுக்காமல் கீழே மேலேயென்று மாற்றி மாற்றி வேலையை முடித்தான். எப்படி இதெல்லாம் தெரிந்துகொண்டான் என்று தெரியவில்லை (என் இரண்டாவது தம்பி இரமேஷ் மிகப்பெரிய மெக்கானிக். எவ்வளவு பெரிய பேருந்தையும் குறைந்த நேரத்தில் சரிசெய்யும் அசாத்திய வேலைக்காரன். ஆனால் நான் வாகனம்பற்றி ஒன்றுமே அறியாதவன். எனக்கு அவனே என் மகனாகத் தோன்றினான்) 
 
அதேபோல் மாலைநேரத்தில், இதுவரையிலும் இயங்காத அல்லது இயக்கத்தெரியாத கிம்பெல் என்னும் வீடியோ எடுக்கும் கருவியை, யூடிபைப் பார்த்தே காலிபிரேசன் செய்து இயங்க வைத்தான். மக்களே....இதெல்லாம் அவன் என் மகன் என்பதால் இங்கே சுயதம்பட்டம் அடிக்கவில்லை. இக்காலப் பிள்ளைகளை நாம்தான் வளர்ப்பதாய் நினைத்து நாமாக ஒரு மதிப்பீடு வைக்கின்றோம் அல்லவா?! அதுவல்ல அவர்களின் தோற்றம் என்பதை உணர்த்தவே முயல்கின்றேன். மேலும், இங்கே பிள்ளை வளர்ப்பில் எதுவும் தனியாக செய்ய வேண்டாமென்றும் அதற்கானச் சூழலை அமைத்துக் கொடுத்தாலே போதுமென்றும் எண்ணுகிறேன். சரிதானே உறவுகளே?!
 
✍️செ. இராசா

சிவப்பரிசி இட்லி


 
வெண்ணிறம்தான் இட்லியென வேகமாய்ப் பேசாமல்
செந்நிறமும் இட்லியெனச் செப்பு
 
✍️செ. இராசா
 

06/05/2022

வெக்காளியம்மன் பாடல்

இட்டவழி காட்டிடவே எம்காளி அம்மா
வெட்டவெளி வீற்றிருப்பாள் வெக்காளி அம்மா
உற்றவழி காட்டிடவே ஓம்காரி அம்மா
பெற்றவலி போக்கிடுவாள் வெக்காளி அம்மா
 
அம்மா அம்மா அம்மா அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா 
 
உறையூரை ஆளுகின்ற காளி வெக்காளி
உறவனவே வந்திடுவாள் காளி வெக்காளி
குறை-யூறை நீக்குகின்ற காளி வெக்காளி
குலங்காக்க வந்திடுவாள் காளி வெக்காளி
 
சீட்டெழுதும் பக்தருக்கு காளி வெக்காளி
சீக்கிரமே அருள்தருவாள் காளி வெக்காளி
பாட்டெழுதும் ராசனுக்கு காளி வெக்காளி
பைந்தமிழின் ஒளிதருவாள் காளி வெக்காளி
 
கேட்டவரம் தருபவளே காளி வெக்காளி
கேட்குமுன்னே ஓடிவர்றா காளி வெக்காளி
தேடிவரும் பிள்ளைகளைக் காளி வெக்காளி
தேற்றுகின்ற தாயவளே காளி வெக்காளி
 
சோழர்களின் தெய்வமவள் காளி வெக்காளி
சூழும்வினை வெட்டிடுவாள் காளி வெக்காளி
செந்தமிழின் கொற்றவையே காளி வெக்காளி
முந்தைக்கும் முந்தையவள் காளி வெக்காளி
 
✍️செ. இராசா


05/05/2022

பல்லக்கு

 


பல்லக்கின் மேலிருந்து
......பட்டணத்தைப் பார்ப்பானும்
பல்லக்கு தூக்குவதைப்
......பாக்கியமாய்ச்- சொல்வோனும்
என்றென்றும் நல்லறத்தை
......ஏற்றிடார் என்றுசொன்ன
அன்றைய வாக்குபோல் ஆச்சு!
 
✍️செ. இராசா
 
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
 
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃதென்று கூற வேண்டாம்.

குடிக்கும் தருவான் கொடை!

குடிக்கக் குடிக்கக் குடியைப் பெருக்கக்
குடிக்கடை தந்த குடிக்கோ- குடிகள்
குடித்துக் குடித்தே குடியழியும் காசில்
குடிக்கும் தருவான் கொடை!

கனவிலும் நனவிலும் ......உலவிடும் உருவாய்

 

(ஒரு மலையாள பக்தி மெட்டுக்கு எழுதிய காதல் பாடல்)

ஏ மொஹபத்..
ஏ மொஹபத்..
என் மொஹபத்
 
கனவிலும் நனவிலும்
......உலவிடும் உருவாய்
கவியிலும் மொழியிலும்
.....உறைந்திடும் பொருளாய்
அணுவிலும் உயிரிலும்
.....அசைந்திடும் துகளாய்
ஒலியிலும் இசையிலும்
.....தவழ்ந்திடும் அலையாய்
அகிலம் முழுதும்
........அனைத்திலும் அடி நீதானே...
 
உன்னைத் தொலைத்தால்
.....அனைத்தும் தொலைத்தவன் ஆவேனே...
உன்..
விழியில்நான் விழுந்ததால்
வீறுகொண்ட விருட்சமானேனே
வேகம்கொண்ட விருட்சமானேனே...
 
எந்தன் மொஹபத்
எங்கும் மொஹபத்
என்னுள் மொஹபத்
என்றும் மொஹபத்
 
✍️செ. இராசா

04/05/2022

வாடாத ராசாவே நான்!

 


 

நாடாளும் ராசாவாய்
......நானாகா விட்டாலும்
ஏடாளும் ராசாவாய்
.....எப்போதும்- ஊடாடிப்
பாடாத பாட்டெல்லாம்
......பாடுபொருள் ஆக்குவதால்
வாடாத ராசாவே நான்!

✍️செ. இராசா

ஈ வெண்பா

 


ஈயென எண்ணி
......இழிவாகப் பேசியவர்
ஈயெனப் பல்காட்டி
......என்றேனும்- ஈயென்றால்
ஈயெனக் கேட்டவரை
......ஈயென எண்ணாமல்
ஈய முடிந்ததை ஈ!

 

02/05/2022

கயமை

  


#கயமை

அடுத்தவர் காசை அமுக்குகின்ற கூட்டம்
மிடுக்காகப் பேசும் நிலை
(1)

உருவும் வரைக்கும் உருக்கமாய்ப் பேசி
உருவத்தை மாற்றும் உலகு
(2)

பொய்யும் புரட்டுமாய்ப் போடுகின்ற வேசங்கள்
மெய்முன் கழன்று விழும்
(3)

அளந்து விடுவோரை அப்படியே நம்பி
இழந்தவர் ஏராளம் இங்கு
(4)

சுயவொழுக்கம் இல்லாத சொல்வன்மை கொண்டோர்
கயவரில் முன்நிற்பர் காண்
(5)

அறுக்கின்ற ஆளையே ஆடுகள் நம்பி
அறுபட்டு சாகும் அது
(6)

வஞ்சகமாய்ப் பேசியே வாழ்கின்ற பொய்யர்கள்
நஞ்சிலும் தீதாம் நழுவு
(7)

வெட்கமே இல்லாமல் வீரர்போல் பேசிடுவோர்
பட்டாலும் இப்படித்தான் பார்
(8)

அறமின்றி வாழ்வோர் அழிவது திண்ணம்
மறவாதே என்றும் மதி
(9)

இன்றைக்கு மேலேறி எப்படியும் போவோர்க்குப்
பின்நாளில் இல்லைப் பிழைப்பு
(10)

✍️செ. இராசா