#கயமை
அடுத்தவர் காசை அமுக்குகின்ற கூட்டம்
மிடுக்காகப் பேசும் நிலை
(1)
உருவும் வரைக்கும் உருக்கமாய்ப் பேசி
உருவத்தை மாற்றும் உலகு
(2)
பொய்யும் புரட்டுமாய்ப் போடுகின்ற வேசங்கள்
மெய்முன் கழன்று விழும்
(3)
அளந்து விடுவோரை அப்படியே நம்பி
இழந்தவர் ஏராளம் இங்கு
(4)
சுயவொழுக்கம் இல்லாத சொல்வன்மை கொண்டோர்
கயவரில் முன்நிற்பர் காண்
(5)
அறுக்கின்ற ஆளையே ஆடுகள் நம்பி
அறுபட்டு சாகும் அது
(6)
வஞ்சகமாய்ப் பேசியே வாழ்கின்ற பொய்யர்கள்
நஞ்சிலும் தீதாம் நழுவு
(7)
வெட்கமே இல்லாமல் வீரர்போல் பேசிடுவோர்
பட்டாலும் இப்படித்தான் பார்
(8)
அறமின்றி வாழ்வோர் அழிவது திண்ணம்
மறவாதே என்றும் மதி
(9)
இன்றைக்கு மேலேறி எப்படியும் போவோர்க்குப்
பின்நாளில் இல்லைப் பிழைப்பு
(10)
செ. இராசா
No comments:
Post a Comment