05/01/2022

குரு அளித்த பரிசுக்கிழி

 


இது இந்திய ரூபாய் நூறு...

ஆனால்;
சித்தனின் பார்வையில்
இது காகிதம்...

பித்தனின் பார்வையில்
இது ஏதோ ஒன்று...

குழந்தையின் பார்வையில்
நிறைய சாக்லேட்கள்..

குடிமகனின் பார்வையில்
ஒரே ஒரு கட்டிங்..

பாட்டாளியின் பார்வையில்
இது வியர்வைத்துளி..

இந்தப் பாட்டாள்வோன் பார்வையிலோ
இது பெரும் பரிசுக்கிழி...

ஆம்...
எம் குரு விக்டர்தாஸ் கவிதைகள் அண்ணா
எமக்கெல்லாம் அளித்த பரிசுக்கிழி...

நன்றி அண்ணா

முள்ளில் பனித்துளி


 

திரைப்படப் பின்புலமில்லா ஒருவர்
திரைப்படம் இயக்கினால்; அதுத்
திரைப்படத் தரத்தில் இருக்குமா?; இல்லைத்
திரைப்படம் "போல" இருக்குமா?
இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்த படம்தான்
இந்த "முள்ளில் பனித்துளி"

கொரோனா காலகட்டத்தில்
திரையில் வருமா வராதா என்றெல்லாம்
தெளிவில்லாத் தருணத்தில்
திரையேறி வென்ற திரைப்படம்தான்
இந்த "முள்ளில் பனித்துளி"

என்னது வென்ற திரைப்படமா?
எங்கே வென்றது? எப்போது வென்றது?
பொறுங்கள்.....சொல்கின்றேன்
ஊடக ஆதரவின்றி
உயர்ந்த நட்சத்திரமின்றி
எந்த மசாலாவுமின்றி
எண்ணத்திற்கு வடிவம் தந்து
என்று அரங்கேற்றம் ஆனதோ
அன்றே அப்படம் வென்றதென்பேன்...
ஆயினும்...
வர்த்தக ரீதியாக வென்றதா என்றால்?
அதை யாமறியேன்...

எப்படம் வந்தாலும் ரசிக்கும் எமக்கு
இப்படம் காண வழியின்றிருக்க
இணைப்பை அனுப்பி வைத்தார்
இணையவழி ஊடாய் அண்ணா
இதோ..
எம் இதயவழி மொழிகிறது என் நா...

இங்கே...
ஆஹா ஓஹோவென அள்ளி விட மாட்டேன்
ஆனது எதுவோ அதையும் விட மாட்டேன்

பெரிய இவனோ என எண்ணமும் வேண்டாம்
தெரிந்ததைச் சொல்கிறேன் எள்ளவும் வேண்டாம்!

சரி #கதைக்கு_வாங்க...

உறவு சூழ் உலகு
உதறுகின்ற போது;
தன்மானப் பெண்ணொருத்தித்
தடைதாண்டி நிமிர்ந்த கதை!

கதையின் நாயகியாய்
கலி காலக் கண்ணகியாய்
வலியைத் தாங்கி இங்கே
வாய்பேசும் பெண் சிலையாய்
அற்புதமாய் நடித்துள்ளார்
அப்பட #நாயகி!

கறுப்பு ஓவியமாய்
கந்தகப் பாத்திரமாய்
மிகையில்லா நடிப்போடு
மிடுக்காய் நடித்துள்ளார்
கதையின் #நாயகன்!

#அப்பா...அப்பப்பா
அருமைப்பா...
அட நிறைய வாய்ப்பு கொடுங்கப்பா..

தாடி #நண்பர்
குறும்பு....

#தங்கைகள்
பலம்

#அண்ணா
ஏன்...ணா?

#இசை
பாடலில் பிரமாதம்...
பின்னணியில்
மன்னிக்கவும்..

#வரிகள்..
உண்மையில் அபாரம்...

#ஒளிப்பதிவு
அருமை...

#எடிட்டிங்...
மெனக்கெட்டிருக்கலாம்..

#நகைச்சுவை..
குறைவாய் நிறை

#கதை
அருமை

#திரைக்கதை & #இயக்கம்
இன்னும் செதுக்கி இருக்கலாம்

#அண்ணனின்_நடிப்பு:
மிகவும் அருமை

#டப்பிங்:
இன்னும் கவனித்திருக்கலாம்

#மொத்தத்தில்
படம் ஒரு பாடம்...
பார்ப்பவர்களுக்கும்
படைப்பவர்களுக்கும்
...........
அதில் நானும் உண்டு

இப்படிக்கு
செ. இராசா.

(உரிமையுடன் உண்மையில் எனக்குத் தோன்றியதை எழுதியுள்ளேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. இருப்பினும் அப்படி இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏)

தவிக்கின்ற பசியை

 



அடிக்கின்ற குளிரை
அணைக்கவரும் குளம்பிபோல்
தவிக்கின்ற பசியைத்
தணிக்கவா செந்தமிழே......
 
✍️செ. இராசா
 
(தற்சமயம் கத்தாரில் நல்ல குளிர் 13 டிகிரி செல்சியஸ்)

04/01/2022

கொட்டைவடிநீர்

 


கொட்டைவடி நீர்க்குவளைக் கொட்டியதைக் கண்டவுடன்
கொட்டிய(து) உள்ளோர் குற(ர)ள்😀😀


✍️செ. இராசா

கொட்டைவடிநீர்
- குளம்பி அல்லது Coffee

பின்னூட்ட முனிமா

 

வாமுனிமா வாவென்று
.......வாட்சாப்பில் தூதுவிடும்
மாமுவின் நோவுக்கு
.......மாமருந்தாய்- வாமுனிமா
ஈஸியார் ரோட்டோரம்
.......இஸ்துகினு போகசொல்ல
ஓஸியா கட்டிடலாம் ஊடு
 
✍️செ.‌இராசா

கொரோனாவாய்ப் பிறந்து

 


கொரோனாவாய்ப் பிறந்து
டெல்டாவாய் உருமாறி
காமாவாய் நிறம்மாறி
ஒமைக்ரானாய் ஆனநீ
இன்புளுயன்சாவுடன் சேரலாமா?!
இப்போதுபார்...
புளோரானாவை ஈன்றுள்ளாய்....
ஆமாம்...உன் டாக்டர்யார்?!
குடும்பக்கட்டுப்பாடு செய்யவேண்டும்!

✍️செ. இராசா

ஆசீர்வதிக்கும் யானை

 

 


ஆசீர்வதிக்கும் யானைக்கும்
அதைத் தயார்படுத்திய பாகனுக்கும்
அந்த ஆசீர்வாதம் மட்டும்
கிடைக்கவில்லைபோலும்
பாவம்....இன்னும் தெருத்தெருவாய்...

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

காசு கொடுத்தவுடன்
......கைதூக்கி வாழ்த்துகிற
மாசு மருவுள்ள
.......மாந்தரிடம்- பேசுவதால்
பிச்சை எடுக்கின்ற
.......பேதையென ஆனாயோ
எச்சைக் குணம்விட்(டு) எழு

✍️செ. இராசா

03/01/2022

கோவிட் மூன்றாம் அலை ---- ஓடுங்க ஓடுங்க

 




மிகவும் கட்டுப்பாடு மிகுந்த குட்டி நாடான கத்தாரில் இருந்து, போன டிசம்பர் மாதம் இந்தியா வந்தபோதுகூட இவ்வளவு கொரோனா இருக்கவில்லை. ஆனால், தற்சமயம் மிகமிகக் கூடுதலாக உள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.

இந்தியா போவதற்கு முன்பாக நானும், என் மனைவியும் பூஸ்டர் ஊசியோடு சேர்த்து மூன்று ஊசிகள் போட்டிருந்தோம். என் பையன் இருண்டு ஊசிகள் போட்டிருந்தான். 72 மணி நேரத்திற்குள்ளான PCR test வேறு எடுத்தோம். இதுபோக ஏர்சுவேதா என்ற மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துதான் இந்தியா போய்வந்தோம். இவ்வளவு கெடுபிடிகளோடு போனாலும், இந்தியாவில் யாருமே கொரோனாவை மதித்ததாகவே தெரியவில்லை. கடைகள், பேருந்துகள், கோவில்கள், உணவகங்கள்.....என எங்கெங்கு காணினும் கூட்டம் கூட்டமே... கண்டிப்பாக கொரோனோவே அக்கூட்டத்தில் சிக்கியிருந்தாலும் மூச்சுத்திணறி செத்திருக்கும் என்பதை அங்குள்ளோர் அனைவரும் அறிவரே...

அதையெல்லாம் தாண்டி விடுமுறை முடிந்து மீண்டும் கத்தார் வரலாமென்றால் 72 நேரத்திற்குள்ளான PCR test மீண்டும் எடுக்க வேண்டும். திருப்பத்தூரில் எடுத்து சிவகங்கை மருத்துவக்கல்லூரி பெயரிட்ட சான்றிதழ் தொகுப்பு சுமார் 800 பேருக்கு வந்ததிலிருந்து, நம் சான்றிதழைப் பிரித்தெடுக்க நம்ம கோயம்புத்தூர் தம்பி சுரேந்தரக்குமார் உதவியும், அதை நகலெடுக்க திருச்சியில் என் அத்தாச்சி உதவியும் தேவைப்பட்டது. அப்புறம் ஒரு வழியா அதையெல்லாம் எடுத்துக்கிட்டு திருச்சி விமானநிலையம் போனால் அங்க ஒரு மனுஷன் ஒவ்வொரு எழுத்தா எழுத்துக்கூட்டி பேரில் பிழை இருக்கிறதா என்று பார்க்கிறான். (நல்லவேளை கொரோனாப் படிவத்தை நான்தான் கடவுச்சீட்டு எண்ணோடு ஆங்கிலத்திலேயே எழுதிக்கொடுத்தேன்)

அதை முடித்து கத்தார் போனால், மிகப்பெரிய வரிசையில் நின்றோம். முதலில் ஊசிபோட்ட சான்றிதழ் கேட்டார்கள், பின்னர் PCR test சான்றிதழ், அதன்பின் இரண்டு நாட்கள் ஹோட்டலில் தங்கும் அறைக்கான முன்பதிவு பத்திரமென அனைத்தையும் சரிபார்த்து, அந்த வரிசை கத்தார் சுங்கச்சோதனை சென்றது... அப்படியே அந்த வரிசை மீண்டும் எந்த வாகனம் கூட்டிச் செல்லும் என்பதற்கான ஒரு படிவம் தரும் வரிசை சென்றது....... மீண்டும் நீண்டு சென்ற வரிசை வாகனம் நிற்குமிடம் வரை சென்று, அங்கே ஒரு வாகன ஓட்டியிடம் விட்டது. அவர் அப்படியே எங்களை ஹோட்டலில் கொண்டுபோய்விட அங்கிருந்து தங்கும் அறைக்கேக் கொண்டுபோய் அடைத்துவிட்டார்கள். இதில் என்ன கொடுமைனா நான்கு பேருக்குக் கட்டாயம் இரண்டு அறை எடுக்க வேண்டுமென்பது விதி. (நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தங்கலாம். அதுவேறு)

இரண்டு நாட்களும் வெளியே எல்லாம் செல்லமுடியாது. மறுநாள் 12 மணி அளவில் மீண்டும் PCR test எடுத்தார்கள். இரண்டாம் நாள் காலை அல்லது மதியம் வரவேண்டிய முடிவு மாலை 6:30க்குத்தான் வந்தது. (தற்சமயம் கொரோனா எண்ணிக்கைக் கூடியதால் முடிவு தாமதமாகிறதாம்) அதுவும் எனக்கு மட்டுமே முடிவு வந்தது. மற்ற மூவருக்கும் வரவில்லை என்பதால் Rapid Antigen test எடுப்பதாகவும் அதில் உடனேயே முடிவு வந்துவிடும் என்றும் கூறினார்கள். (அடப்பாவிகளா அந்தக் கருமத்தை முதலிலேயே எடுத்தால் எதுக்குடா இரண்டு நாட்கள் அறைக்கு பணம் அழுகனும்). எல்லாக் கரும test களையும் எடுத்து இரவு 10 மணிக்கு விட்டார்கள். (இதில் இரண்டாம்நாள் மதியம் இரவு சாப்பாடு தரமாட்டார்களாம். காரணம் நமக்கான காலி செய்யும் நேரம் முடிந்துவிட்டதாம். test result தாமதமானதால் கட்டணமின்றி கூடுதலாகத் தங்குவதற்கு மட்டும் சலுகையாம்.‌ அடிங்கடா...அடிங்கடா..எம்பூட்டு)

என்னதான் கொரோனா இல்லையென்று முடிவு வந்தாலும் கைப்பேசியில் உள்ள ஒரு விஷேச செயலியில் நிறம் மாறினால்தான் வெளியே எங்கும் செல்லமுடியும். எனக்கோ நிறம் உடனடியாக மாறவில்லை. ஒரு 12 மணி நேரத்திற்குப்பின்னர் ஒருவழியாக பச்சை நிறமாக மாறிவிட்டது. அப்பதான் பெருமூச்சே வந்தது.

அதெல்லாம் சரின்னு அலுவலகம் போனால், அங்கே கொரோனாக் கெடுபிடிகள் தாறுமாறாக உள்ளது. அதாவது மூன்றாம் அலை வீசத்தொடங்கிவிட்டதாம். இன்னும் பயம் போகவில்லை. ஊசி போட்டவர்களுக்குக் கொரோனா வருகிறதாம். அடக்கருமத்த... அப்புறம் என்ன இதுக்குடா ஊசிபோட்டோம்னு கோபம் வருதுதான்....என்ன செய்ய...கோபப்பட்டா நம்மல ஒதுக்கிட்டு ஓடிருவாங்களே....ஓடுங்க..ஓடுங்க...மூன்றாவது அலை வந்திருச்சாம்...இன்னும் எத்தனை பூஸ்டர் ஊசிபோடனுமோத் தெரியலையே....ஓடுங்க ஓடுங்க...

✍️செ. இராசா

மறவாமை ----- வள்ளுவர் திங்கள் - 192

 
வரச்சொல்லி பின்னே மறந்ததாய்ச் சொல்வோர்
வரமாட்டார் என்றும் விடு
(1)

மதிக்க மறந்தாரை வைக்குமிடம் வைத்து
மதிப்பு குறையாமல் வாழ்
(2)

மறதிபோல் மாமருந்து வையகத்தில் இல்லை
மறப்பதை மட்டும் மற
(3)

அறத்தை மறந்தால் அழிவுதான் கிட்டும்
மறவாமை வேண்டும் மதி
(4)

புகழும் பணமும் பொசுக்கென்று போ(க்)கும்
அகந்தை நிறைந்த அகம்
(5)

உண்மை உறவை உதறிடும் மாந்தர்கள்
பண்பை மறந்தப் பதர்
(6)

செய்த உதவியைச் சிந்தையில் வைக்காதோர்
உய்ய வழியெங்கே உண்டு?!
(7)

கானலை நீரென்றுக் காண்கின்ற வையகத்தில்
கோணலும் நேரென்பர் கூற்று
(8.)

அரசியல் வாதிபோல் அள்ளிவிடும் மாந்தர்
உரைப்பவை எல்லாம் உதார்
(9)

ஏமாற்றி ஏமாற்றி ஏறிமேல்ச் செல்பவர்கள்
ஏமாற்றம் ஆதல் இயைபு
(10)

✍️செ. இராசா

01/01/2022

பூட்டிய அறைக்குள்
புதிய உலகம் திறக்கிறது
புத்தகங்கள்