07/04/2019

நீ உண்மையில் நல்ல அத்தரே.


உனைத் தீண்டும்
ஒவ்வொரு முறையும்- என்
சுவாசக் காற்றை
சுவீகாரம் செய்கிறாய்..

உனைத் தீண்டும்
ஒவ்வொரு முறையும்- நீ
மணக்கும் வித்தையால்
மயக்கி விடுகிறாய்...

உனைத் தீண்டும்
ஒவ்வொரு முறையும்-நம்
உறவின் உரசலை
ஊருக்கேச் சொல்கிறாய்..

நீ உண்மையில் நல்ல அத்தரே..

✍️செ. இராசா

06/04/2019

செந்தில் அண்ணா- பிறந்தநாள்



பத்மாவின் அன்பிற்குப் பாத்திரம் ஆனவரே
அத்தாச்சி அன்பிற்கே அத்தாச்சி ஆனவரே
சத்திய அன்பாலே சாதியை வென்றநீ
உத்தம வாழ்வாங்கு வாழ்!

செ. இராசா

05/04/2019

நான் மட்டும் ஆட்சிக்கு வந்தால்



கடல்நீரின் உப்பை எல்லாம்
காணாமல் செய்திடுவேன்...

சித்திரை வெயில் குறைக்க
ஸ்டேடஸ் போட்டிடுவேன்....

செவ்வாய்க்கு போவோர்க்கு
சிறப்பு நிதி வழங்கிடுவேன்...

டாஸ்மாக்கை குறைப்பதற்கு
ட்ரம்புக்கு மணு அளிப்பேன்...

முகநூலில் எழுதுவோர்க்கு
முன்னுரிமை அளித்திடுவேன்

(அனைத்தையும் சொன்னால் எதிர்க்கட்சிகள் திருடிவிடும் என்பதால் மற்றவை ஆட்சிக்கு வந்த பின்னர்.....)

✍️செ. இராசா

கல்லுக்கள் ஒளிந்த....



கல்லுக்கள் ஒளிந்த உருவமும்
சொல்லுக்குள் ஒளிந்த கவிதையும்
எல்லோருக்கும் தெரிவதில்லை

கல்லின் கசுடு நீங்கினால்
சொல்லின் சுவை கூடினால்
கல்லும் சொல்லும் உயிர்ப்பிக்கிறது

உயிர் பெற்றதால்தான் என்னவோ
இரண்டும் வருந்தியே நிற்கிறது...
படைத்தவனை எண்ணி....

#அப்பாவின்_குறட்டை

இரவுக் காட்டிற்குள்
இடைவிடாத இம்சை நீ..
இயந்திரப் பேரிகைபோல்
இடிக்கின்ற இரைச்சல் நீ..
உறங்கவே விடாமல்
உறுமுகின்ற சிறுத்தை நீ..
ஆயிரம் இருந்தாலும்
அப்பாவின் சுவாசம் நீ...
#அப்பாவின்_குறட்டை
✍️
(“எங்கே அப்பாவக் காணோம்... குறட்டைச் சத்தம் கேட்கவே இல்லை” என்றுகூறியவாறே மகள் என்னை அதிகாலையில் தேடியபோது தோன்றிய வரிகள்)

03/04/2019

சக்கரம் கட்டியே ஓடுதடி!



சக்கரம் முன்னே போகையிலே- மனச்
சக்கரம் பின்னே போகுதடி!
சக்கர வேகம் கூடயிலே- மனம்
சக்கரைக் கட்டியாய் மாறுதடி!
சக்கர வண்டியை ஓட்டிடவே-மனம்
சக்கரம் கட்டியே ஓடுதடி!

✍️செ. இராசா

கற்களில் ஈசனைக் காண்!-(வெண்பா_9), புதுக்கவிதை & ஹைக்கூ



மரபுக்கவிதை- வெண்பா
************************
கட்டிடம் ஒன்றினைக் கட்டிடும் முன்னரே
கட்டிடச் சிற்பத்தைக் கட்டுவர்- கட்டியே
கற்பனை வீட்டினைக் காட்டுதல் போலவே
கற்களில் #ஈசனைக்_காண்!


புதுக்கவிதை,
*************
உன் புன்னகை ஓவியம்
உண்மை இல்லையாம்....
எப்படி உன் இருப்பை
எங்கும் உணர்த்துகிறாய்
என்னைத்தவிற...

ஹைக்கூ
*********
உண்மையை நிரூபிக்க
ஆதார் அட்டை கேட்கிறது
நாத்திக மனம்

02/04/2019

ஆசை (குறளின் குரலில்)


தூண்டும் ஆசையை அனுமதித்தால்- நீ
தூண்டில் மீனாய் ஆகிடுவாய்!
மீண்டும் மீண்டும் வேண்டிநின்றால்- நீ
மாண்டும் நிம்மதி வேண்டிடுவாய்!

முழுதும் ஆசையை நீக்கிவிட்டால்- நீ
முழுமுதல் யாதென அறிந்திடுவாய்!
முற்றும் முயற்சியை விட்டுவிட்டால்- நீ
முட்டுச் சந்தில் முடங்கிடுவாய்!

அகத்தில் ஆசையை அறுத்துவிட்டால்- நீ
சகமே உனதென உணர்ந்திடுவாய்!
சகத்தின் அளவில் ஆசையுற்றால்- நீ
யுகங்கள் தோறும் பிறந்திடுவாய்!

நஞ்சை நஞ்சால் முறிப்பதுபோல்- நீ
நெஞ்சின் நஞ்சை நீக்கிவிடு!
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்- நீ
முயற்சியில் ஆசையை முறித்துவிடு!

01/04/2019

நீ நல்ல ஆட்டுக்கால் பாயாவே...



அதிகாலை நேரம்..
அவசர வேகம்..
குதித்துத் தாவிக்
குளித்து வந்தால்

மல்லிகைப் பூவை
மய்யமாய் வைத்து- நீ
மணக்கும் குமரியாய்
மயக்கி விட்டாய்

கொதிக்கும் மனதிலே
கொஞ்ச வைத்து- நீ
நாக்கில் நீரினைக்
கூட்டி விட்டாய்...

காலில் சக்கரம்
கட்டியவனை- உன்
காலைப் பிடித்திடச்
செய்துவிட்டாய்..

உண்மையில்
நீ நல்ல ஆட்டுக்கால் பாயாவே...

கரு- தேநீர்_தியானம்_6



"கரு"

“காணும் இடமெல்லாம்
கொட்டிக்கிடக்கிறது கரு”
இது ஒரு கவிஞனின் கூற்று
இது சரியா?!

கரு இல்லாமல் கதையுண்டா?
கரு இல்லாமல் கவிதையுண்டா?
கரு இல்லாமல் மரமுண்டா?
கரு இல்லாமல் மனிதனுண்டா?!

ஆம்..
கருவை மையமாக வைத்தே
சிருஷ்டியின் படைப்புகள்
பிரசவமாகிறது..

கருவை மையமாக வைத்தே
கவிஞனின் படைப்புகள்
கவிதையாகிறது..

இங்கே..
உயிரோடு உலாவி
உருவம் பெறுவதற்கு
கருவே ஆதாரம்

இங்கே
எத்தனையோ பரிணாமங்களில்
அத்தனையும் கடப்பதற்கு
கருவே மையம்

என்னது மையமா?

மையமோ அல்லது மய்யமோ
கரு என்பது அதைப் பொருத்ததே..

ஆம்....
46 குரோமோசோம்கள் இருந்தால்தான்
மனிதன் என்கிறது விஞ்ஞானம்

ஆனால்
இந்த மனித மையத்தில் மட்டும்
23 குரோமோசோம்களாக உள்ளது
ஏன் தெரியுமா?!

எதிர்பால் மையத்தில் உள்ள
23 குரோமோசோம்களோடு சேர்ந்து
46 என்ற மனிதக்கரு உருவாகவே...

எதற்கு இந்தக் கணக்கு?!!

அறிவியலின் கணக்கில்
குரோமோசோம்கள் 46 தான்
ஆனால், மனிதர்கள் எத்தனை?!!

புரியவில்லையா?!

இசையின் கணக்கில்
வெறும் 7 ஸ்வரங்கள் தான்
ஆனால், கானங்கள் எத்தனை?!

இயற்கையின் கணக்கில்
வெறும் 5 பூதங்கள் தான்
ஆனால், உருவங்கள் எத்தனை?!

அதுபோல்
கண்களின் கணக்கில்
காட்சி ஒன்று தான்
ஆனால், கவிதைகள் எத்தனை?!

வெறும் கண்களில்
அது வெறும் காட்சிதான்...

ஆனால் ரசிக்கும் கண்களில்
அது வெறும் காட்சியல்ல...
அது “கரு”
கவிதையை விதைக்கும் கரு..

ரசியுங்கள்.
ருசியுங்கள்

இங்கே
கவிதைகள்
கொட்டிக் கிடக்கின்றன...

#தேநீர்_தியானம்_6