01/04/2019

கரு- தேநீர்_தியானம்_6



"கரு"

“காணும் இடமெல்லாம்
கொட்டிக்கிடக்கிறது கரு”
இது ஒரு கவிஞனின் கூற்று
இது சரியா?!

கரு இல்லாமல் கதையுண்டா?
கரு இல்லாமல் கவிதையுண்டா?
கரு இல்லாமல் மரமுண்டா?
கரு இல்லாமல் மனிதனுண்டா?!

ஆம்..
கருவை மையமாக வைத்தே
சிருஷ்டியின் படைப்புகள்
பிரசவமாகிறது..

கருவை மையமாக வைத்தே
கவிஞனின் படைப்புகள்
கவிதையாகிறது..

இங்கே..
உயிரோடு உலாவி
உருவம் பெறுவதற்கு
கருவே ஆதாரம்

இங்கே
எத்தனையோ பரிணாமங்களில்
அத்தனையும் கடப்பதற்கு
கருவே மையம்

என்னது மையமா?

மையமோ அல்லது மய்யமோ
கரு என்பது அதைப் பொருத்ததே..

ஆம்....
46 குரோமோசோம்கள் இருந்தால்தான்
மனிதன் என்கிறது விஞ்ஞானம்

ஆனால்
இந்த மனித மையத்தில் மட்டும்
23 குரோமோசோம்களாக உள்ளது
ஏன் தெரியுமா?!

எதிர்பால் மையத்தில் உள்ள
23 குரோமோசோம்களோடு சேர்ந்து
46 என்ற மனிதக்கரு உருவாகவே...

எதற்கு இந்தக் கணக்கு?!!

அறிவியலின் கணக்கில்
குரோமோசோம்கள் 46 தான்
ஆனால், மனிதர்கள் எத்தனை?!!

புரியவில்லையா?!

இசையின் கணக்கில்
வெறும் 7 ஸ்வரங்கள் தான்
ஆனால், கானங்கள் எத்தனை?!

இயற்கையின் கணக்கில்
வெறும் 5 பூதங்கள் தான்
ஆனால், உருவங்கள் எத்தனை?!

அதுபோல்
கண்களின் கணக்கில்
காட்சி ஒன்று தான்
ஆனால், கவிதைகள் எத்தனை?!

வெறும் கண்களில்
அது வெறும் காட்சிதான்...

ஆனால் ரசிக்கும் கண்களில்
அது வெறும் காட்சியல்ல...
அது “கரு”
கவிதையை விதைக்கும் கரு..

ரசியுங்கள்.
ருசியுங்கள்

இங்கே
கவிதைகள்
கொட்டிக் கிடக்கின்றன...

#தேநீர்_தியானம்_6

No comments: