08/11/2018

பெண்களால் முடியும்



மண்ணில் பிறந்து மடிவதற்கா
பெண்ணாய் நாங்கள் பிறப்பெடுத்தோம்?!
விண்ணில் பறந்து திரிந்திடவே
பெண்ணாய் மண்ணில் பிறந்துவந்தோம்!

பெண்ணினம் மெல்லினம் என்றுசொல்லி
பெண்களைக் குறைவாய் எண்ணாதீர்!
மண்ணையும் விண்ணையும் ஆள்வதற்கும்
பெண்களால் முடியும் மறவாதீர்!

துளிப்பா


(1)
நான்கு கரங்களால்
இரண்டு இதயங்கள் எழுதுகிறது
கருவில் ஓர் கவிதை
(2)
ஆணில் உள்ள பெண்மையும்
பெண்ணில் உள்ள ஆண்மையும்
அர்த்த நாரீசமாகும் அற்புதம்
(3)
நீர் கோடி விதைத்தாலும்
ஒன்றிரண்டே பிழைக்கிறது
கருவுக்கள் சிசு

07/11/2018

எங்கு சென்றாய்?



எங்கு சென்றாய்?-நீ
எங்கு சென்றாய்?
ஏன் சென்றாய்?-நீ
ஏன் சென்றாய்?

அழைத்த பொழுதெல்லாம்
அடிக்கடி வருவாயே...இன்று
அழுது புலம்புகிறேன்
அலட்சியம் செய்கிறாயே...

என்ன தவறிழைத்தேன்?- சொல்
என்ன தவறிழைத்தேன்?
ஏன் விலகிவிட்டாய்- எனை
ஏன் விலக்கிவிட்டாய்?!

பணியின் சுமையாலே- உனைப்
பார்க்க மறந்துவிட்டேன்- இந்தப்
பாவிப் பிழை பொறுத்து- ஓரு
பார்வை பாராயோ?!

ஐயோ... நீயின்றி- நான்
அனாதை ஆகிவிட்டேன்
சீக்கிரம் வருவாயோ- என்
சிந்தையில் நிறைவாயோ?!!

வாடா என் கவியே- என்
வார்த்தை நீயல்லவா....
வாடா என் தமிழே- உன்
வரவே உயிரல்லவா...

உனக்காய் என்றும் நான்
உயிர்ப்போடு காத்திருப்பேன்...
தமிழின் யாசகன் நான்
தனியாகக் காத்திருப்பேன்...

#IEI_Qatar_Chapter_news_in_Gulftimes

05/11/2018

தீபாவளி வாழ்த்துகள்


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

அஞ்ஞான இருளகற்றி
மெய்ஞான ஒளியேற்றும்
தத்துவம் விளக்குகின்ற
அற்புதத் திருநாளில்
திரும்பும் திசையெல்லாம்
தீபங்களாய் ஏற்றிடுவோம்!

நமக்குள் இருக்கின்ற
நரகாசுரத் தீயவனை
நசுக்கியே அழிக்கின்ற
நன்நாளாய் ஆக்கிடவே
திரும்பும் திசையெல்லாம்
தீபங்களாய் ஏற்றிடுவோம்!

இராவண வதை முடித்து
இராமணன்று திரும்புகையில்
அயோத்தியில் ஏற்றிவைத்த
அகல் தீப விளக்குகளை
திரும்பும் திசையெல்லாம்
திரும்பவும் ஏற்றிடுவோம்!

சக்தியின் பேருருவை
சரிசமப் பாதியாக்கி
அரனின் பாதியோடு
அர்த்தநாரி ஆனநாளில்
திரும்பும் திசையெல்லாம்
தீபங்களாய் ஏற்றிடுவோம்!

சைவ வைணவர் முதல்
சமண சீக்கியர் வரை
சகல மனிதர்களும்
சமத்துவமாய்க் கொண்டாட
தீபங்கள் ஏற்றிவைத்து
தீபாவளி கொண்டாடுவோம்!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

(அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்)

இழப்புகள்

அன்பானோரின் இழப்புகள்
அடிக்கடி காதில் விழுவதும்,
அந்த நேரம் வருத்தப்பட்டு
அதைக் கடந்துபோவதும்
எதையோ உணர்த்துகிறது

03/11/2018

படகுகள்



(1)
கடல் மீன் கிடைக்காமல்
மிகவும் வருத்தப்படுகிறது
கரைதாண்டாப் படகுகள்

(2)
ஆடி அலைக்கழித்து
அமைதியாய் ஒதுங்கியது
கரையோரப் படகுகள்

(3)
ஆர்ப்பரிக்கும் காற்றிலும்
அசையாமல் இருக்கிறது
கரையில் படகுகள்

இருவரிக் கவிதைகள்


ஆசையென்னும் வலையில்
அகப்பட்டுக் கொண்டது உயிர்

இரை சிக்க வைக்கும்
இறை விடுவிக்கும்

தான் விரித்த வலையில்
தானே சிக்கும் உயிர் மனிதன்

01/11/2018

#வெட்டப்படும்_ஆடுகள்



உங்களைப்போல்தானே
நாங்களும் கருவுற்றோம்...

உங்களைப்போல்தானே
நாங்களும் பிறப்புற்றோம்....

எங்களைக் கண்டாலே
ஏன் எச்சில் வார்க்கின்றீர்...?!

அங்கங்கள் ஒவ்வொன்றாய்
ஏன் கண்ணில் அளக்கின்றீர்?

பின்னாலே மெல்ல வந்து
ஏன் எம்மைத் தொடுகின்றீர்!

என்ன தவறிழைத்தோம்
ஏன் எம்மைக் கொல்கின்றீர்?

#வெட்டப்படும்_ஆடுகள்

(தகவல்:

கிருபானந்த வாரியாரிடம் சைவம் அசைவம் பற்றி கேட்டதற்கு அவரின் பதில் என்ன தெரியுமா?

ஆட்டைப் பார்க்கும்போது கண்ணில் தண்ணீர் வந்தால் அது சைவம். நாக்கில் தண்ணீர் வந்தால் அது அசைவம்)

ஆண்டவர் கையிலே ஆயுதங்கள்


ஆன்மீக நாட்டிலே
..............ஆயிரம் தெய்வங்கள்
ஆண்டவர் கையிலே
...............அழிக்கும் ஆயுதங்கள்

அற்புதக் கடவுளுக்கு
...............ஆயுதம் எதற்கென்ற
அறிவின் கேள்விக்கு
................அளிக்கும் பதிலென்ன?!


பகுத்தறிவு நாட்டிலும்
................பலநூறு பேய்கள்
பேய்களின் கையிலும்
................பலநூறு ஆயுதங்கள்

அழிந்த உடலுக்கு
............... ஆயுதம் எதற்கென்ற
அறிவின் கேள்விக்கு
................ அளிக்கும் பதிலென்ன?!!

நல்லவை என்பது இறைநிலை வடிவம்!
அல்லவை என்பது சாத்தான் வடிவம்!
இவைகள் கைகளில் இருக்கிற ஆயுதம்
விளைவை விதைக்கும் அறிவின் வடிவம்!
*****************************************************************
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

(பேய்களின் விழாவிற்காக (Halloween) விற்பனைக்கு வைத்திருந்த இந்தத் திரிசூலத்தைக் கண்டேன். அதை அப்படியே வீட்டில் பூஜையறையில் சேர்த்துவிட்டேன். இந்த ஆயுதத்தைப்பற்றி சிந்தித்தபோது தோன்றிய படைப்பு இது)

#அறிவே_ஆயுதம்

வாழ்க வளமுடன்