11/08/2018

வேட்டி


தறியில் நெய்ததை வெட்டி
தமிழன் கட்டினான் வேட்டி

தனியாய்த் தரணியில் காட்டி
தமிழனை உயர்த்திடும் வேட்டி

கோடையில் குளிர்தரும் ஊட்டி
வாடையில் நலம்தரும் வேட்டி

எங்கும் எவருக்கும் போட்டி
ஏனில்லை அதிலே வேட்டி?!

அன்னியர் உடையினைக் காட்டி
அழியுதோ நம்மிடம் வேட்டி?

வேற்றின உடைகளை ஓட்டி
கட்டுவோம் தமிழராய் வேட்டி!

உள்ளத்தில் மாண்பினைக் கூட்டி
உடுத்துவோம் தமிழராய் வேட்டி!

✍️செ. இராசா
*******************

அன்பு நண்பர்களே,

வெளிநாட்டில் தமிழர்கள் கலந்துகொள்ளும் அனைத்து விழாக்களிலும் பெரும்பாலானோர் வேட்டி உடுத்துகின்றார்கள். ஆனால், இங்கு நம்மூரில் நடக்கும் விழாக்களில் வேட்டி உடுத்துபவர்களைக் காண்பது குறைந்து கொண்டே வருவது மிகவும் வறுத்தமளிக்கிறது.

வேட்டி கட்டிய இருவரை சென்னையில் ஒரு இடத்தில் அனுமதிக்கவில்லை என்று பொங்கிய தமிழின உணர்வாளர்கள், தாங்களே வேட்டி கட்டி கலந்து கொள்ளக்கூடிய நிகழ்வுகளில் அதைத் தவிர்ப்பது எவ்வகையில் நியாயம்?!!

அமெரிக்காவில் வேட்டி கட்டி விமானம் ஓட்டியத் தமிழன் உண்டு. கனடப்பிரதமர்கூட வேட்டியுடன் விழாவில் கலந்துகொண்டது உண்டு. வரலாற்றில் காமராஜர் முதல் காந்திவரை வேட்டியோடு வெளிநாடு சென்றதுண்டு. அவ்வளவு ஏன், இலங்கைப் போர் நடக்கும்போது வேட்டியுடன் குவைத்திலிருந்து இலங்கை வழியாக தைரியமாக தாயகம் திரும்பிய என் இரு பொறியாளர் நண்பர்கள் உண்டு. (அதில் ஒருவர் பெயர் தமிழ்ச்செல்வன்Tamilselvan Soundararajan & மற்றொருவர் Deivendran Thangarajan.....)

கால்சட்டை (பேண்ட்) போடுவது வசதியாக இருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும், விழாவில் மட்டுமாவது கட்டலாமல்லவா?!!!

தயவுசெய்து இப்பதிவை யாரும் அறிவுரையாக எண்ணாமல், உங்களில் ஒருவனின் ஆலோசனையாக எண்ணவேண்டுகிறேன் உறவுகளே...

இப்படிக்கு உரிமையோடு உங்கள் நண்பன்.

செ. இராசா

10/08/2018

அஃதே மரம்



அகிலத்தில் மூத்தவன்
ஆக்ஸிஜனின் மூலம்
இயற்கையின் இருப்பிடம்
ஈகையின் வடிவம்
உடை தரும் தந்தை
ஊண் தரும் தாய்
எதிரிக்கும் தோழன்
ஏழைக்கும் நண்பன்
ஐம்பூதத் தத்துவம்
ஒளி(லி)க்கும் ஆற்றல்
ஓதிடும் ஆசான்
ஔடத ஆதாரம்

அஃதே மரம்

கடவுளின் கவிதை
காற்றின் ரசிகன்
கிளைகளின் ஓவியம்
கீர்த்தன ராகம்
குயில்களின் கூடாரம்
கூடுகளின் குடியிருப்பு
கெடுதல்தரா உறவு
கேடு நீக்கும் மருந்து
கை கொடுக்கும் நட்பு
கொடையிலே கர்ணன்
கோடையிலே சொர்க்கம்
கௌதமரின் ஞானம்

மரம் நடுவோம்
மழை பெறுவோம்

வாழ்க வளமுடன்

08/08/2018

வள்ளுவன் பேசுகிறேன்


தொண்ணூற்று ஐந்திலே
விண்ணோக்கிச் சென்றிடவா
தொண்ணூற்று ஐந்தடியில்
என்னுருவைச் செய்தாய் நீ...

வங்கக் கடலோரம்
வந்து நீ இருந்திடவா
முக்கடல் சங்கமத்தில்
முழுஉருவைச் செய்தாய் நீ....

அண்ணாவின் பீடத்தில்
அமர்ந்தென்னைக் கண்டிடவா
அறத்துப்பால் பீடத்தில்
கற்சிலையை வைத்தாய் நீ...

முத்தமிழ் அறிஞனாய்
முழுநேரம் பேசிடவா
முப்பால் படைத்த என்னை
முழுச்சிலையாய் வடித்தாய் நீ...

தலைநகரில் நீ இருந்து
தமிழ்நாட்டைக் காத்திடவா
தமிழ்நாட்டின் மறு முனையில்
தனிச்சிலையாய் வைத்தாய் நீ....

மெரீனாப் புரட்சிகளை
மெருகேற்றி உசுப்பிடவா
கருணாநிதி நீயும்
கல்லறைக்குப் போனாய் நீ....

ம.கோ.ராவோடு
மறு நட்பு கொண்டிடவா
அனைவரின் படைசூழ
அமரனாய்ச் சென்றாய் நீ...

கவலை வேண்டாம்...

தன்மானத் தமிழர்களை
தலைநிமிர வைத்ததினால்
மறைதந்த என்னோடு
மறையாமல் நிலைப்பாய் நீ...

வா...மகனே...வா

கலைஞர்



கலைஞரின் வரலாற்றை
கவிதையாய் சுருக்குவது
கடல்கள் அனைத்தையுமே
கடுகுக்குள் அடக்குவதே....

அனைத்தையும் கவிபாட
ஆயிரம் நூல்கள் வேண்டும்...
ஆயினும் சிறியோன் நான்
அடிசுருக்க முயலுகின்றேன்
அடிகளிலே பிழை இருப்பின்
அடியேனைப் பொறுத்தருள்வீர்...

திருவாரூர் மாவட்டம்
திருக்குவளை கிராமத்தில்
முத்துவேலர் அஞ்சுகத்தின்
மூன்றாம் மகனாக
திராவிடச் சூரியானாய்
திருமகனார் அவதரித்தார்

உயர்நிலைப்பள்ளியிலே
இடமில்லை என்றதுமே
உளமெல்லாம் ரணத்தோடு
குளம்நோக்கிப் பாய்ந்தோட;
ஆசிரியர் பதறிவிட்டார்
அனுமதியும் தந்துவிட்டார்!

பிஞ்சு வயதிருந்தே
அஞ்சாத போர்குணத்தை
எஞ்சிய காலம்வரை
எரிமலையாய் வைத்திருந்தார்!

உயர்நிலையில் அவர்கொண்ட
உரிமைப் போராட்டத்தை
உயிர்போன பின்னாலும்
உடமையாய்க் கொண்டிருந்தார்!

தட்சணாமூர்த்தி என்ற
தன்னுடைய இயற்பெயரை
“கருணாநிதி” என்றவரே
தனக்காகச் சூடிக்கொண்டார்..

தமிழக மாநிலத்தில்
தமிழை நிலைநாட்ட
இந்தி எதிர்ப்பிற்கு
இளைஞரின் படை செய்தார்....

அண்ணாவின் தம்பியாய்
அந்நாளில் அவரிணைந்து
அனைவரின் தமையனாய்
பின்னாளில் அவரானார்...

மாணவராய் இருந்தபோது
“மாணவ நேசன்” தந்து
இளைஞராய் ஆனபின்னே
“முரசொலி” முழக்கமிட்டார்

எழுத்துச் சூரியனாய்
எங்கெங்கும் ஒளிவீசி
பேச்சுப் பேரொளி(லி)யால்
பெரியாரை மயக்கிவிட்டார்...

கருப்புக் கொடிமீது
கைவிரல் ரத்தம் சிந்தி
திராவிடர் கழகத்தின்
தூணாக மாறிநின்றார்....

எத்தனை போராட்டங்கள்?
எத்தனைப் பழிச்சொற்கள்?
எத்தனை துரோகங்கள்?
எத்தனை துன்பங்கள்?

அத்தனையும் அடுக்கடுக்காய்
அவர்மீது விழுந்தாலும்
அனைத்தையும் துடைத்தெறிந்து
அணையாத தீபமானார்....

இந்திய வரலாற்றில்
இவர்போன்ற தலைவரில்லை....
உலக வரலாற்றில்
இவர் போன்று யாருமில்லை

தோல்வியால் தன் கழகம்
தொடர்ந்து தோற்றாலும்
தோல்வியேத் தொடாத
தொடர்வெற்றி வீரரானார்!

வள்ளுவர் கோட்டம் தந்து
வள்ளுவர் சிலை நிறுவி
தெள்ளுதமிழ் புலவனுக்கு
கொள்ளுப்பேரன் என்றானார்!

குணம்நாடி குற்றம்நாடி
மனம்நாடி ஆராய்ந்தால்
கண்டிப்பாய் சொல்லிடலாம்
கலைஞரே உயர்வென்று!

செ. இராசா

04/08/2018

விக்டர்தாஸ்


அவர்பேசி நான் கேட்ட
அத்தனை நிமிடங்களும்
விலைபேசி கணக்கிட்டால்
அத்தனையும் வைரங்கள்...
அப்பப்பா என் சொல்வேன்
அத்தனையும் அற்புதங்கள்..

தொல்காப்பியத் தமிழ்தொட்டு
தொலைக்காட்சி தமிழ்வரைக்கும்
அத்தனையும் அண்ணனுக்கு
அத்துப்படி அத்துப்படி
அதனால்தான் ஆனேன் நான்
அவர்தமிழின் அடிபொடி

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
பதினென் கீழ்கணக்கும்
சித்தரின் பாடல்களும்
கர்த்தரின் காவியமும்
அத்தனையும் அண்ணனுக்கு
அத்துப்படி அத்துப்படி
அதனால்தான் ஆனேன் நான்
அவர்தமிழின் அடிபொடி....

கவியரசர் கவிதைகளும்
பாரதியார் பாடல்களும்
கலைஞரின் சிலேடையும்
மலைக்க வைக்கும் செந்தமிழும்
அத்தனையும் கவிஞருக்கு
அத்துப்படி அத்துப்படி
அதனால்தான் ஆனேன்நான்
அவர்தமிழின் அடிபொடி

அன்னைத் தமிழ் பெற்றெடுத்த
அற்புதத் தலைமகனை
அன்புடன் நான் வேண்டிடவே
அணிந்துரை எழுதித்தந்தார்...
அவ்வுரை அழகு கண்டு
அப்படியே உறைந்துபோனேன்
அகமெல்லாம் நிறைந்துபோனேன்

மனமார்ந்த நன்றி அண்ணா..

கரு ஊரில் பிறந்த நாம்.. (அண்ணா சொல்ல நான் எழுதியது )


கரு ஊரில் பிறந்த நாம்
கரூரில் ஒன்றானோம்.
கரூர் என்பதே
ஒரூர் என்றானோம்

சின்னக் கண்ணதாசன்
எங்கள்
அண்ணன் விக்டர்தாஸ்
ஒன்றானபோது
கரூரில் நன்றானோம்

குன்றிலமர்ந்து
எங்கள்
விக்டர்தாஸ்
அண்ணன் சொன்ன போது
குமரனாக அல்ல
இந்த இச்
சிவன்கள்
ஜீவன் நிறைந்தோம்

தான்தோன்றிமலை
அது
கரூரில் உளது
அது
தான் தோன்றிமலையா
அல்லது
அந்தோனி மலையா
என்றே வியந்து
கிறிஸ்துவமும்
இந்துவும்
இணைதல் கண்டோம்

மொத்தத்தில்
பூமி கண்டோம்
சாமி கண்டோம்
புலன்கள் வென்றோம்
புத்துயிர் கொண்டோம்

மதங்கள் பெரிதல்ல
மனங்கள் சிறிதல்ல
ஈதெல்லாம் கண்டோம்

இதெனினும் வேறெல்ல
அண்ணன் விக்டர்தாஸே சொன்னதுபோல்
கிருஷ்ணன் என்றாலும்
கிறிஸ்து என்றாலும்
சொன்ன தத்துவத்தின்
சுவை ஒன்றே
பொருள் ஒன்றே
இதனினும் வேறென்ன
மதநல்லினக்கம்

வாருங்கள்
நமக்குள்ளா உண்டு
பிற பிணக்கம்
வாருங்கள் நண்பர்களே

02/08/2018

யாதும் இனிமையே


ஓதும் வேதம் யாதுவாகினும்
பாடும் ராகம் ஏதுவாகினும்
யாதும் சொல்வது ஒன்று தானென
யாரும் அறிந்தால் இனிமை இனிமையே

தீதும் நன்றும் யாதுவருகினும்
மாதும் மதுவும் தேடிவருகினும்
யாதும் பற்றா வாழ்வு வாழ்ந்திட
யாரும் அறிந்தால் இனிமை இனிமையே

சூதும் வாதும் சூழ்ந்து வருகினும்
வீடும் உறவும் விட்டுவிலகினும்
யாதும் ஒருநாள் மாறும் என்பதை
யாரும் அறிந்தால் இனிமை இனிமையே

அழகே....!(குறளின் குரலில்)


கள்ளில் என்னடி போதை?- உன்
கண்ணில் தானடி போதை!
புகையில் என்னடி போதை?- உன்(புன்)
நகையில் தானடி போதை!

மலரில் என்னடி மதுரம்?- உன்
இதழில் தானடி அதிகம்!
இருளில் என்னடி சிறப்பு?- உன்
குழலில் என்னிற இருப்பு?!

முத்தில் என்னடி வெண்மை?- உன்
முகத்தில் தானடி உண்மை!
நிலவில் என்னடி களங்கம்?- உன்
நினைவில் என்னுள்ளம் கலங்கும்!

உலகில் ஏதடி அழகு?- உன்
உருவில் தானடி என்னுலகு!
கவிதை என்னடி கவிதை- உன்
கவர்ச்சி தானடி கவிதை!

01/08/2018

எத்தனை காலம்தான் முதுகில் குத்துவாய் மானிடா.



எத்தனை காலம்தான்
முதுகில் குத்துவாய் மானிடா.....நீ
எத்தனை காலம்தான்
முதுகில் குத்துவாய் சொல்லடா?

நாசம் செய்யவா
நேசம் செய்கிறாய் மானிடா....நீ
மோசம் செய்யவா
பாசம் வைக்கிறாய் சொல்லடா?

நட்பு என்பதும்
கற்பு தானடா மானிடா......நீ
தப்பு செய்யவா
நட்பு கொள்கிறாய் சொல்லடா?

புரூட்டஸ் துரோகத்தால்
சீசர் செத்தது தொடர்வதா.... இனி
நரிகள் சதியினை
பரிகள் அழிப்பதைக் காணடா...

எட்டப்ப நாய்களால்
கட்டப்ப பொம்மர்கள் வீழ்வதா....இனி
போட்டி உலகிலே
வெற்றி கொள்வதைப் பாரடா....

✍️செ. இராசா

குறிப்பு
*******
பொதுவாக ஊரில் நடக்கும் துரோகத்திற்கு சிறு மருந்தாகவே இந்த பாடல்...