11/08/2018

வேட்டி


தறியில் நெய்ததை வெட்டி
தமிழன் கட்டினான் வேட்டி

தனியாய்த் தரணியில் காட்டி
தமிழனை உயர்த்திடும் வேட்டி

கோடையில் குளிர்தரும் ஊட்டி
வாடையில் நலம்தரும் வேட்டி

எங்கும் எவருக்கும் போட்டி
ஏனில்லை அதிலே வேட்டி?!

அன்னியர் உடையினைக் காட்டி
அழியுதோ நம்மிடம் வேட்டி?

வேற்றின உடைகளை ஓட்டி
கட்டுவோம் தமிழராய் வேட்டி!

உள்ளத்தில் மாண்பினைக் கூட்டி
உடுத்துவோம் தமிழராய் வேட்டி!

✍️செ. இராசா
*******************

அன்பு நண்பர்களே,

வெளிநாட்டில் தமிழர்கள் கலந்துகொள்ளும் அனைத்து விழாக்களிலும் பெரும்பாலானோர் வேட்டி உடுத்துகின்றார்கள். ஆனால், இங்கு நம்மூரில் நடக்கும் விழாக்களில் வேட்டி உடுத்துபவர்களைக் காண்பது குறைந்து கொண்டே வருவது மிகவும் வறுத்தமளிக்கிறது.

வேட்டி கட்டிய இருவரை சென்னையில் ஒரு இடத்தில் அனுமதிக்கவில்லை என்று பொங்கிய தமிழின உணர்வாளர்கள், தாங்களே வேட்டி கட்டி கலந்து கொள்ளக்கூடிய நிகழ்வுகளில் அதைத் தவிர்ப்பது எவ்வகையில் நியாயம்?!!

அமெரிக்காவில் வேட்டி கட்டி விமானம் ஓட்டியத் தமிழன் உண்டு. கனடப்பிரதமர்கூட வேட்டியுடன் விழாவில் கலந்துகொண்டது உண்டு. வரலாற்றில் காமராஜர் முதல் காந்திவரை வேட்டியோடு வெளிநாடு சென்றதுண்டு. அவ்வளவு ஏன், இலங்கைப் போர் நடக்கும்போது வேட்டியுடன் குவைத்திலிருந்து இலங்கை வழியாக தைரியமாக தாயகம் திரும்பிய என் இரு பொறியாளர் நண்பர்கள் உண்டு. (அதில் ஒருவர் பெயர் தமிழ்ச்செல்வன்Tamilselvan Soundararajan & மற்றொருவர் Deivendran Thangarajan.....)

கால்சட்டை (பேண்ட்) போடுவது வசதியாக இருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும், விழாவில் மட்டுமாவது கட்டலாமல்லவா?!!!

தயவுசெய்து இப்பதிவை யாரும் அறிவுரையாக எண்ணாமல், உங்களில் ஒருவனின் ஆலோசனையாக எண்ணவேண்டுகிறேன் உறவுகளே...

இப்படிக்கு உரிமையோடு உங்கள் நண்பன்.

செ. இராசா

No comments: