05/12/2021

அயோக்கியத்தனம் நூடுல்ஸ்

 



நூடுல்ஸ் சாப்பிடுவது தவறென்றாலும் சிறுவயதில் இருந்தே இதன் மேல் ஒரு ஈர்ப்பு எப்படியோ வந்துவிட்டது, என்ன செய்ய?!. தற்சமயம் ஐயப்பனுக்கு விரதமாக இருப்பதால் இந்த வெஜிடபிள் நூடுல்ஸை வாங்கி வந்தோம். பொதுவாகவே என் பையன் அனைத்து உள்ளடக்கத்தையும் கவனிப்பான். அப்படித்தான் இதையும் கவனித்தான். அதில் மீன் (FISH) ஒருவேளை இருக்கலாம் என்று போட்டுள்ளதுகண்டு அதிர்ச்சி அடைந்தோம். அடப்பாவிகளா?.... பொதுவாகவே சாக்லேட் ஐஸ்கிரீம் போன்ற அனைத்தையுமே விரத நாட்களில் தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்பது எம் திண்ணம். காரணம் மிகக் குறைந்த அளவில் சில வேண்டாத பொருட்களும் கலந்திருக்கும் என்பதால்....
✍️செ. இராசா

 

உன் சமையல் கவிதைக்கு
நாவரசன் தந்த பாராட்டில்
வயிறு நிறைகிறது
😀😀😀

தமிழென்னும் போதைத் தலையேறி விட்டால்
அமிர்தமாய்ப் பொங்குதடி ஆறு

04/12/2021

 உதித்த கரு
அடங்க மறுக்கிறது
கவிதையாக

02/12/2021

பிழை என்ன குறையா?!

 


மீனுக்கு நீர் என்ன தடையா?- மழை
நீருக்கு வானென்ன பகையா?

நெல்லுக்கு உமி என்ன சிறையா?- நம்
சொல்லுக்குள் பிழை என்ன குறையா?!

✍️செ.இராசா

கிளப்பி விட்டவன் அங்கே நல்லா இருக்கிறான்

 


கிளப்பி விட்டவன் அங்கே நல்லா இருக்கிறான்
வழுக்கி விழுந்தவன் இங்கே வலியில் கத்துறான்
ஐநா யாருங்க எல்லாம் பெரிய நாடுங்க
ஐயோ நாமுங்க வெறும் ஏழை நாடுங்க
தலைக்கு மேலதான் அட வெள்ளம் பாருங்க
இதுக்கு மேலினி அட என்ன வேணுங்க

ஓமிக்றான் ஓழிக்கிறான் என்றே சொல்வான்
ஊசி.....போடச் சொல்லி வருவான்

செ. இராசா

பழையன கழியும்முன்
புதியன புகுந்துவிடுகிறது
.....
ஒமிக்ரானைப்போல்

01/12/2021

இருக்க சொல்ல இல்லைங்குறான்

 

 


சும்மா இல்லீங்கோ- வாழ்க்கை
சும்மா இல்லீங்கோ..
என்னா செய்வீங்கோ- நீங்கோ
இன்னா செய்வீங்கோ?!

இருக்க சொல்ல இல்லைங்குறான்
இழந்த பின்னே போச்சுங்குறான்
காசு தந்தா கர்ணங்கிறான்
கேட்டு நின்னா கயிதைங்கிறான்
தாடான்னாக்க தோடா...ங்கிறான்
வாடான்னாக்க போடாங்கிறான்
உன்னை விட்டா யாருங்குறான்
ஓங்கி விட்டால் (Beep) த்தாங்குறான்

என்னா செய்வீங்கோ- நீங்கோ
இன்னா செய்வீங்கோ?!
சும்மா இல்லீங்கோ- வாழ்க்கை
சும்மா இல்லீங்கோ..

✍️செ. இராசா

29/11/2021

சொல்லறம்---வள்ளுவர் திங்கள் 187

 #சொல்லறம்
#வள்ளுவர்_திங்கள்_187

சொல்லறம் இல்லாமல் சூழ்கின்ற சுற்றத்தைச்
சொல்லாமல் நீங்(க்)கச் சுகம்
(1)

சொல்லிய சொல்லைத் துறக்கின்ற பேருக்குச்
சொல்லிப் பயனென்ன சொல்
(2)

சொல்சுத்தம் இல்லாமல் சொல்வோரின் சொல்கேட்டு
செல்லாமை என்றும் சிறப்பு
(3)

உறவின் பெயரால் உறவாடி பின்னே
மறப்பதா நல்லோரின் மாண்பு
(4)

இழந்தபணம் வந்துவிடும் என்றைக்கும் யார்க்கும்
விழுந்தசொல் வந்திடுமா மீண்டு?
(5)

வாங்கும் வரைக்கும்தான் வாக்குறுதி எல்லாமும்
வாங்கியபின் மாறும் மனம்
(6)

நேரத்தை காலத்தை நிந்தனை செய்வோரை
ஓரத்தில் வைத்தால் உயர்வு
(7)

இதோவெனச் சொல்லி இழுத்தடிப்பு செய்தால்
அதோடு தொடர்பை அறு
(8.)

கடிகார ஓட்டங்கள் காக்குமா யார்க்கும்?!
முடிந்தவரை செய்து முடி
(9)

சேர்த்தால் பணமென்பர் செத்தால் பிணமென்பர்
பீத்தாமல் யோசித்துப் பேசு
(10)

✍️செ. இராசா

28/11/2021

 


நீ இருக்கிறாயா இல்லையா
என்கின்ற பட்டிமன்றம்
இன்றும் நடக்கிறது...

நீ இல்லை என்போரின் வாதங்கள்
எப்போதும் போலவே
உரக்க ஒலிக்கிறது....

நீ இருக்கிறாய் என்போரின் வாதங்கள்
இன்னும் அடித்துக் கொள்(ல்)வதால்
இரைச்சலாய் இருக்கிறது....

நீ இருக்கிறோயோ இல்லையோ
இருவரின் வியாபாரமும்
உன்னால்தான் நடக்கிறது..

ஆமாம்...நீ யார்?

✍️செ. இராசா