29/08/2021

அதே நாளில் அப்படியே

 #ஆச்சரியம்_ஆனால்_உண்மை

முந்தைய வருடங்களில் எழுந்த அதே சிந்தனைகள் அதே நாளில் அப்படியே எழுவதை நான் அடிக்கடி உணர்ந்துள்ளேன். பலமுறை அதை எதேச்சையான ஒரு ஒப்புமை (coincidence) உணர்வார்கவே எண்ணி கடந்து சென்றுள்ளேன். ஆனால் இம்முறை அப்படி கடந்து போகாமல் அதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஆம்.... இரண்டு வருடங்களுக்கு முன்பாக நான் எழுதிய கவிதையும் இன்று நான் எழுதிய ஒரு கவிதையும் (நாளைய வள்ளுவர் திங்களுக்காக எழுதியது) ஒரே எதுகையில் (டை) வந்துள்ளது எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை ஒப்புமை என்று என்னால் கடந்து போக முடியவில்லை. காரணம் வார்த்தைகளும் ஏறக்குறைய ஒத்துப் போகிறது. வடிவம் மட்டுமே வேறு.

போன வருடம் எழுதிய கவிதை இதோ;

#தமிழே_வா
*************
இடையூறு செய்யாத எழுத்தை
தடையேதும் இல்லாமல் தா- தமிழே
உடைகட்டி உரையாடும் எழுத்தை
தடைபோட்டு தடுத்தாள வா!

நடைமாற்றி நடிக்கின்ற உறவை
விடையின்றி வெளியேற்ற வா- தமிழே
எடைபோட்டு பார்க்கின்ற உறவை
மடைபோட்டு மறித்தாட வா!

கடையேழு வள்ளல்கள் மனத்தைக்
கொடையாகக் கொடுத்தாள வா!-தமிழே
குடைபோல காக்கின்ற குணத்தை
அடைகின்ற ஞானத்தைத் தா!

✍️செ. இராசா

27/08/2021

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு மெட்டு

(என்னமோ தெரியலைங்க... இன்று காலை திடீரென்று இந்தப்பாடலின் மெட்டு மனதிற்குள் எழுந்து அதுவே வரிகளாக உதயமானது.... இதுபற்றி சத்தியமா எனக்கெதுவும் தெரியாதுங்க)

குற்றம் கொண்ட நெஞ்சம் நம்மைக் கொல்லும் நண்பா- நீ
கோபப்பட வேண்டாம் கொஞ்சம் கேளு நண்பா
உப்பை தின்றால் தண்ணீர் என்றும் தேவை நண்பா- நீ
தப்பைச் செய்தால் தண்டனைகள் கிட்டும் நண்பா

✍️செ. இராசா

25/08/2021

ரொட்டியையும் கோழி வறுவலையும்

 


கோதுமை ரொட்டியையும் கோழி வறுவலையும்
போதுமெனச் சொல்வேனா?! போடு

✍️😊செ. இராசா

23/08/2021

உயிர்க்கொலை தீது ---- வள்ளுவர் திங்கள் 173



கொலைசெய்து கோவாகி கோலோச்சு வோரை
கொலைசெய்தே கொன்றிடுவான் கூற்று
(1)

இறைவன் பெயரால் எவரையும் கொல்வோர்
இறைபொருள் காணா இடர்
(2)

உயிரைப் பறிக்கும் உரிமை எடுத்தால்
உயிரைப் பறித்துவிடும் ஊழ்
(3)

சாதி மதமென்று சங்கை அறுப்போர்க்கு
நாதி எதுவுமில்லை நம்பு
(4)

குத்திய கத்தியது கொல்லாமல் விட்டாலும்
குத்தியதால் அஃதும் கொலை
(5)

கொள்கை புரியாரைக் கொல்வதுதான் தீர்வென்றால்
உள்ளவர் யாரோ உரை
(6)

அடுத்தவர் கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால்
எடுப்பாரா ஆயுதம் இங்கு
(7)

கண்முன் இருப்பதைக் காவிடும் புல்லர்கள்
கண்ணோட்டம் இல்லாத கல்
(8.)

உயிர்வதை செய்வதை ஊக்குவிப்போர் எல்லாம்
உயிர்க்கொலை செய்வோர்க்கே ஒப்பு
(9)

மதங்கள் கடந்து மனிதத்தைக் காண்போர்
அதர்மம் விளையார் அறி
(10)

---செ. இராசமாணிக்கம்--

#வள்ளுவர்_திங்கள்_173

22/08/2021

மரியாதை

 மரியாதை

மதியாதார் தலைவாசல் 

மிதிக்க வேண்டாம்"


இந்த ஔவையின் கூற்று
அறிவுறுத்துவதென்ன?
மரியாதை தராதவர்களை
மதிக்க வேண்டாம் என்பதுதானே...

ஆம்... ஆனால்
கேட்டுப்பெறுவதல்ல மரியாதை
கேட்காமல் கிடைப்பதே மரியாதை
இருந்தும்...
இந்த மரியாதை...
இப்போது எங்கே போனது??

புலியைப் பார்த்து
பூனைகள் சூடுபோட்டால் பரவாயில்லை!
பூனைகளைப் பார்த்து
புலிகள் சூடுபோடலாமா?!

நம்மைப் பார்த்து
அந்நியர் மாறாவிட்டாலும் பரவாயில்லை!
அந்நியரைப் பார்த்து
நம்மவர் மாறலாமா?

பன்னாட்டு நிறுவனங்களில்
பணி புரிந்தால்
பணிவென்பது பறந்துவிடுமா?!

பேர் சொல்லத்தானே
பேர் என்று சொல்வோர்கள்
பெற்றார் பெயரையும்
பேர் சொல்லிதான் அழைப்பரா??

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்...
நம் தமிழ் மொழியில் மட்டும்தான்
நவில்கின்ற சொற்களில்
நயம் மிகுந்த பொருள் அதிகம்!

#வா என்ற சொல்லை
வா..வாடா...வாங்க..என்று
வயதுக்கேற்றார்போல்
வரிசைப்படுத்துதல் என்பது
வெறும் வார்த்தைகள் அல்ல..அவை
மரியாதையின் படிநிலைகள்!

ஆனால்...
ஆவ்...ஆயியே...என்கிற
இருநிலைகள் மட்டும்தான்
இந்திக்கு உண்டு!

கம்...என்று கதைக்கிற
ஒற்றை நிலைதான்ஆங்கிலத்திற்குண்டு!

இங்கே....
மொழி வெறும் மொழியல்ல
அது பண்பாட்டின் அடையாளம்...

இனியாவது மொழியுங்கள்
மரியாதையுடன்..
இல்லையேல்...
...
....
மரியாதை
கெட்டுப் போய்விடும்!

✍️செ. இராசா

21/08/2021

மதுக் கோலமிது பார்

 


ஓணம் எனச்சொல்லி உட்கார்ந்து போட்டுள்ள
பானமதுக் கோலமிது பார்

✍️செ. இராசா

தமிழே இல்லாமல் தமிழ் பேசுறான்

 

தமிழே இல்லாமல் தமிழ் பேசுறான்
தமிழன் தமிழன்னு பீத்திக் கொள்கிறான்
ஹிந்தி எதுக்குன்னு கேள்வி கேட்கிறான்
இங்கிலீஷ் இல்லாமல் எங்கே பேசுறான்?

தமிழ் கேரளர் சால்பு

 


வருடம் தவறாமல் வந்திடுவார் என்றே
வருக வருகவென வாழ்த்தும்- திருநாள்
மகாபலி சேரனின் மாண்பினைச் சொல்லும்
சகோ-தமிழ் கேரளர் சால்பு

✍️செ. இராசா

#இனிய_ஓணம்_திருநாள்_வாழ்த்துகள்
#HAPPY_ONAM

20/08/2021

நெருப்பு

 

உறங்கும் நெருப்பை ஒளிர்ந்திட வைக்கும்
சிறந்த கலையே தவம்
 
✍️செ. இராசா

சமையல் ருசி - அல்சர்க்கா (#ALZARKA)

 



இது நான் என்றோ எழுதிய குறுங்கவிதை..
ஆம்... பெரும்பாலும் அனைவருமே செய்வதுதான். உணவைப் பாராட்டிவிட்டு உபசரிப்பவருக்கு நம்மால் முடிந்த சிறு அன்பளிப்பைத் தருவோம். யாரும் சமையல் செய்பவருக்கு அதே அன்பளிப்பு கொடுத்துள்ளோமோ என்றால் சற்றே யோசிக்கத்தான் வேண்டும். 
 
நான் கத்தார் வந்த காலத்தில் இருந்து வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமை காலை அல்சர்க்கா (#ALZARKA) என்கிற உணவகத்தில்தான் சாப்பிடுவேன்‌. இப்போது வரையும் அப்பழக்கத்தை விடவில்லை. அதற்குக் காரணம் அந்த உணவகத்தின் அதிக சுவை மற்றும் மிகக்குறைந்த விலை மட்டுமல்ல....அதையும் தாண்டிய ஏதோ ஒரு அன்னியோன்யமே...
 
இது மலையாளி உணவகமாக இருந்தாலும் அனைத்து நாட்டினரும் வந்துபோகும் உணவகம். இரண்டு குடும்பங்கள் சாப்பிட்டால்கூட 50 ரியால் (1000/-ரூ) தான் வரும். இந்த உணவகத்தின் முதலாளிதான் முதன்முதலாக கத்தாருக்கு வந்த மலையாளியாம். அதுவும் எப்படி?!! கேரளா-பம்பாய்-பாகிஸ்தான்-ஈரான் வழியாக கடல்வழி, தரைவழி...என்றும் விமானம், படகு, நடந்தேயென....பல வழிகளிலும் வந்து சேர்ந்துள்ளார். (இத்தகவல்கள் உள்ள நாளிதழை அங்கே படமாக்கி வைத்துள்ளார்கள்) இதன் காரணமாகவே இந்த உணவகத்தில் கத்தாரிகளும் அதிகமாக வந்து போகின்றனர். நானும் தொடர்ந்து வருவதால் எனக்கும் எப்போதும் இங்கே மரியாதை உண்டு.
 
அப்படித்தான் இன்றும் சாப்பிடப்போனேன். ஆலு புரோட்டா, பூரி......எல்லாம் வர வழைத்தோம். அதில் ஆலு புரோட்டாவின் சுவை மிகவும் தூக்கலாக வழக்கத்தைவிட அற்புதமாக இருந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் சர்வரை அழைத்து, அந்த ஆலு புரோட்டா செய்துவருக்குத் தனியாக என்னால் முடிந்த சிறு அன்பளிப்பைக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். உண்மையில் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
 
ஆமாங்க...நாம் கொடுக்கும் சின்னச்சின்ன அங்கீகாரங்கள்தான் நம் வாழ்வை இனிதாக்குகிறது என்றால், அதை அனைவருக்கும் பகிர்ந்தளித்தால் எப்படி இருக்கும்?! நீங்களே சொல்லுங்கள்...
 
✍️ செ. இராசா