29/11/2019

உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா?!

உனக்கு என்னை
அவ்வளவு பிடிக்குமா?!
........
வருகிறாய்..
வந்த வேகத்தில் கழுத்தைக் கவ்வுகிறாய்
பின் என்னை விடவே விடாமல்...
ச்சை...
நீ செய்யும் சேட்டை இருக்கிறதே..
அப்பப்பா...முடியலை...
போய்விடு இருமலே போய்விடு
....

✍️😊😊😊

28/11/2019

சிறுவயதில் ஜீவ காருண்யம்!
சிரமேந்திப் பேணுகிறாள்
செல்ல மகள்!

எண்ணச் சமரடக்கி

எண்ணச் சமரடக்கி எப்போதும் ஆள்பவன்முன்
மண்ணாலும் வேந்தனும் மண்!

✍️(எண்ணத்தரசன்...தலைப்பு தம்பி Manikandan KR​)

எண்ணச் சமரடக்கி எப்போதும் ஆள்பவன்முன்
மண்ணாலும் வேந்தனும் மண்ணென்றே- எண்ணியதால்
எண்ணத் தரசனென என்னைநீ சொன்னாயோ?!
எண்ணி வியக்கின்றேன் இன்று!

27/11/2019

வெண்பாவில் வாழ்த்து!-- #முனைவர்_இளஞ்செழியர்



என்னுரை
💐💐💐💐
தூரிகையில் மைத்தொட்டுத்
...........தோற்றுவித்த ஓவியத்தைக்
காரிகையின் கைத்தொட்டே
...........காமுற்றக் காதலன்போல்
பார்த்தகண் மூடாமல்
...........பார்த்தபடி நின்றவனாய்
வார்க்கின்றேன் வெண்பாவில் வாழ்த்து!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

#முனைவர்_இளஞ்செழியர்
.............முற்போக்கில் மூத்தோர்
வினையின் விளைந்திட்ட
............வித்தைகள் காத்தோர்
துணையின் விளைவாலே
............தொண்டுகள் செய்யும்
அணையா விளக்கென்றால் ஆம்!

#கவிஞர்_இளஞ்செழியர்
..........கற்பனைத் தேரில்
கவிதைக் குதிரையின்
.........கட்டவிழ்த்து விட்டாற்போல்
காட்டாற்று வெள்ளமாய்க்
........கண்டபடி ஓடியெம்மை
ஆட்டுவிக்கும் பாவலனா? ஆம்!!

#ஓவியரி_ளஞ்செழியர்
...........ஓவியமாய்த் தீட்டுகின்ற
ஓவியத்தின் உட்பொருளில்
...........ஒன்றிப்போய் நிற்கின்ற
காவியத்தில் கம்பனைப்போல்
.........காட்சிகளைக் காட்டுகின்ற
ஓவியத்தின் நாயகனா? ஓம்!

மூன்றே முகங்கள்தான்
........முத்தாய்ப்பாய்ச் சொன்னாலும்
சான்று பலவுண்டு
.........சான்றோனை யாம்போற்ற;
ஆண்டு பலவாழ்ந்திங்(கு)
.........ஆற்றிடுவீர் நற்தொண்டு!
வேண்டிப் பணிகின்றேன் வீழ்ந்து!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா

கானம் ஒலிக்கிறது கருவிகள் எங்கே?!

கருவிகள் இசைந்தது
கானம் பிறந்தது!
கானம் ஒலிக்கிறது
கருவிகள் எங்கே?!

26/11/2019

இயற்கை விதி!




இதைஇதைச் செய்தால்
இதுவே நடக்கும்
என்பதே இயற்கை விதி!

இங்கேத் தொடங்கினால்
இங்கே முடியும்
இதுவும் இயற்கை விதி!

இயற்கை அமைத்த விதிகளினை
இயற்கை விதிக்கு ஊறின்றி
மதியால் முயன்று வெல்வதையே
விதியை வென்றதாய்ச் சொல்கின்றார்!!!

✍️செ. இராசா

25/11/2019

அத்தனையும் தூசியெனில்; ஆம்!




சுத்தவெளிக் காட்டுக்குள்
..........சூரியனே தூசியெனில்
சுத்துகின்ற கோள்களும்
...........தூசியடி- சத்தியமாய்ச்
சுத்திவரும் பூமியின்மேல்
...........தொத்திவரும் எல்லோரும்
அத்தனையும் தூசியெனில்; ஆம்!
✍️

24/11/2019

வெகுமானம் கிடைக்கிறது சர்வருக்கு

சமையல் ருசிக்கு
வெகுமானம் கிடைக்கிறது
சர்வருக்கு
(1)

ஒவ்வொரு வருடமும்
ஒன்றரை மாதம் விடுமுறையாம்
குடிமகன்களுக்கு..
(2)

கொடுத்த சுதந்திரம்
கொடிகட்டிப் பறக்கிறது
கவர்னர் மாளிகையில்..
(3)

23/11/2019

துப்புரவுத் தெய்வங்கள்- பாடல்



துப்புரவுத் தெய்வங்கள்- பாடல்
💐💐💐💐💐💐💐💐💐💐💐

துப்புரவு செய்பவர்கள்
துப்புரவு செய்யலைன்னா
எப்படித்தான் போகும்நம்ம நாடு? - சொல்
எப்படித்தான் போகும்நம்ம நாடு?!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

குப்பைமேல குப்பைகொட்டி
குப்பையாகச் சேர்ந்ததுன்னா
கப்பாலே நாறும்நம்ம நாடு- ஆமாம்
கப்பாலே நாறும்நம்ம நாடு!

பாதாளச் சாக்கடைகள்
பாழாகிப் போச்சுதுன்னா
நோயாகிப் போகும் நம்ம நாடு- ஆமாம்
நோயாகிப் போகும் நம்ம நாடு!

நெகிழியெல்லாம் கூடியிங்கே
நிலமெல்லாம் கெட்டுச்சுன்னா
நீரின்றி வாடும் நம்ம நாடு- ஆமாம்
நீரின்றி வாடும் நம்ம நாடு!

ஆனால் பாருங்க....

துப்புரவு செய்பவர்கள்
துப்புரவா வேலை செய்ய
கையுறையும் காலுறையும் இல்லை-பாவம்
கையுறையும் காலுறையும் இல்லை!

சரிதான்னு சம்மதிச்சு
சாக்கடைய அள்ளப்போனால்
உயிருக்கும் உத்திரவாதம் இல்லை-அது
வயிறுக்கும் புரியிறது இல்லை!

சந்திரனில் தண்ணிதேட
சந்திராயன் விட்டபோதும்
சந்தில்மட்டும் எந்திரமேன் இல்லை- ஆமாம்
சந்தில்மட்டும் எந்திரமேன் இல்லை!

சரி விடுங்க...
இனிமேலாவது....

துப்பரவுத் தோழர்களை
எப்போதுமே ஆதரிச்சு
சிங்கப்பூரா மாற்றிடுங்க ஐயா- ஆமாம்
சீக்கிரமா மாற்றிடுங்க ஐயா!!

மக்கா..நமக்குந்தான்

சுத்தம்செய்யும் சாமிகளை
பத்திரமாப் பாதுகாத்து
எப்போதுமே ஆதரிப்போம் மக்கா- நாமும்
எப்போதுமே ஆதரிப்போம் மக்கா!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

செ. இராசா

இப்பாடல் பள்ளிக் குழந்தைகளுக்காக பாசமிகு தம்பி பெனடிக் அருள் அவர்களின் வேண்டுகளோளுக்கிணங்க படைக்கப்பட்டது.

மனமார்ந்த நன்றி தம்பி💐💐💐🙏🙏🙏🙏💐💐💐

அனுபவம்_2


புசிக்காத பழமொன்றின்
ருசிபற்றிக் கேட்டால்
இதுபோல்...அதுபோலெனப்
பொதுவாய்ச் சொல்லிடலாம்!
எதுபோல் எனக் கேட்டால்
எப்படி நாம் சொல்லுவது?!

ஒரு மரத்தின் கனிகளே
ஒரு சுவை தராதபோது
ஒவ்வொரு கனியையும்
உரைப்பது எப்படி?!

அனுபவித்து உணர்ந்ததாய்
அனுபவஸ்தர் சொல்வது
அனுபவித்த அவர்களின்
அனுபவங்களை மட்டுமே!
இங்கே
அனுபவ உரைகொண்டு
அனுமானிக்க முடியும்!
ஆனால்
அனுபவ உண்மையினை
அனுபவமே தரும்!

💐💐💐💐💐💐💐💐💐

ஆம்..
அனுபவங்கள் அத்தனையும்
அகத்திலேப் பதிவாகி
பதிவான அத்தனையும்
புதுப்புது எண்ணங்களாகி
...........எண்ணங்களின் கூட்டணியில்
...........எழுச்சிமிகு சொற்களாகி
...........சொற்களின் கூட்டணியில்
...........சொற்பொருள் செயலாகி
அனைத்துச் செயல்விளைவும்
அழுத்தமாய்ப் பதியுமெனில்
அனுபவங்கள் அத்தனையும்
ஆசானாய் ஆகுமன்றோ?!

✍️செ. இராசா

#அனுபவம்_2