30/06/2019

#நந்தினையை_விடுதலை_செய்



குடிகுடின்னு குடிக்க வச்சு
குடிநெடுகக் கடைய வச்சு
குடியுரிமை தருகுதிங்க அரசு- இது
குடிமகன்கள் விரும்புங் குடியரசு!

கள்ளுக் கடைய மூடிப்புட்டு
எல்லாக் கடையும் திறந்துவச்சு
கெட்ட சரக்கக் குடுக்குதுங்க அரசு- இது
கேட்ட சரக்க மறுக்குங் குடியரசு!

போதைப் பொருள வித்துக்கிட்டு
பாதை தவறிப் போயிக்கிட்டு
டாஸ்மாக்கில் நடக்குதுங்க அரசு- இது
கேஸ்போட்டு தள்ளுங் குடியரசு!

✍️செ. இராசா

#ReleaseNandhini
#நந்தினையை_விடுதலை_செய்

29/06/2019

புத்தக வெளியீட்டிற்கு வள்ளுவர் வந்திருந்தால்.



(ஒரு வேளை என் புத்தக வெளியீட்டிற்கு வள்ளுவர் வந்திருந்தால்.....அந்த நேரத்தில் வரும் வரிகள் எப்படி இருந்திருக்கும்....ஒரு சின்ன கற்பனை)
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

அறத்தோடு பொருளீட்டி
மறத்தோடு இன்பமுற
எழுசீரின் குறளாலே
எழுந்தநின் குரலாலே
ஈரடியால் உலகளந்த
ஈடில்லா நாயகனே...
அணுவிலும் சிறியோன் நான்
அண்டமளவு வணங்குகிறேன்!

இல்வாழ்க்கை இல்லையெனில்
நல்வாழ்க்கை இல்லையென்றும்
துறவுமனம் இல்லையெனில்
பிறவிப்பயன் இல்லையென்றும்
இல்லறத்தைத் துறவறத்தை
இரண்டையும் படைத்தவனே..

நான் எனும் மண்குடத்தை
வான் வரைத் தெரியவைக்க
தாம் இன்று வந்ததெல்லாம்
யாம் செய்த பாக்கியமே...
ஊழ்வினையை என் சொல்வேன்?!
உத்தமனே....வணங்குகின்றேன்!

வெண்பா அறியாதோன்
அன்பால் அழைத்தவுடன்
பண்பாய் வந்தெம்மை
தன்பால் ஈர்த்தவனே...
நன்பா நான் படைக்க
நண்பா நீ உதவு..
என்பா பார் புகழ
உன்பால் சரணடைந்தேன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா

#ச்சும்மா_சென்னை_பாஷையில

சாரு சாரு என்று சொல்லி
சாரு போட்டு ஓப்புட்டாக்க
வேறு மாறி நினைச்சிட்டியா பாடு- நான்
தாறு மாறு ஆக்கிடுவேன் ஓடு!


ச்சும்மா ச்சும்மா சலாம் போட்டு
ச்சும்மா னாச்சும் போயிக்கின்னா
டம்மி பீஸா நினைச்சிட்டியா பாடு- நான்
கும்மாங் குத்து குத்திடுவேன் ஓடு!

✍️செ. இராசா

28/06/2019

#தேநீர்_கவிதை



பற்றிடாது பார்த்து நிக்க
துறவியல்ல நான்- உனைப்
பற்றினாலும் விட்டு விடாப்
பழையவனே நான்!

தொட்டிடாது விட்டு விலக
தோசியல்ல நான்- உனைத்
தொட்டபின்னும் தொடருகின்ற
தூயவனே நான்!

#தேநீர்_கவிதை

✍️செ. இராசா

27/06/2019

என்னோடும் வாழ்கின்றாய் நீ!

நீர்நிலம் காற்றோடும் நீலநிற வானோடும்  
ஓர்நிகர் சூரியனாய் ஊடாடும் என்னிறைவா
இங்கின்றி அங்கின்றி எங்கெங்கும் நிற்பவனே
என்னோடும் வாழ்கின்றாய் நீ!

26/06/2019

#தேநீர்_கவிதை...உன்னோடு உறவாடும்



உன்னோடு உறவாடும்
ஒவ்வொரு துளிகளிலும்
மின்சாரக் கிளர்ச்சிகள்
மின்னலாய் வருகிறது!

இதழோடு விளையாடும்
எல்லாப் பொழுதிலும்
கவலைக் குப்பைகள்
காணாமல் போகிறது!

கண்ணோடு கவிபாடும்
கணங்கள் முழுவதிலும்
நிர்வாண அமைதியில்
நெஞ்சம் மகிழ்கிறது!

ஆசையில் கைப்பற்றும்
அனைத்து நொடிகளிலும்
இனிப்போடு கசப்பாகி
இன்னும் தொடர்கிறது!

#தேநீர்_கவிதை

✍️செ. இராசா

வாட்சப்பில்...முகநூலில்




வருவது எல்லாம்
உடனே தரப்படுகிறது
வாட்சப்பில்..

கம்பனே எழுதினாலும்
கௌரவம் கிடைக்காது
முகநூலில்..

#நீரின்று_அமையாது_உலகு


#நீரின்று_அமையாது_உலகு
💧💧💧💧💧💧💧💧💧💧


கரிகாலன் கட்டி வச்சக்
கல்லணையும் கண்டோம்- சோழ
ராஜன் வெட்டி வச்ச
வீராணமும் கண்டோம்!

ஏரி குளம் கண்மாய் என்று
மாரி நீரைக் கண்டோம்- அன்று
ஆறு ஓடும் பாதையெல்லாம்
ஊறு இன்றி வாழ்ந்தோம்!

வெள்ளைக்காரன் ஆட்சியிலும்
வெள்ளநீரைத் தடுத்தே- அன்று
பென்னிகுவிக் கொடையாலே
பெரியாரணையும் கண்டோம்!

பட்டணத்து ஏரியெல்லாம்
கட்டிடமாய் செய்தே- இன்று
பட்டிக்காட்டு கண்மாய்களும்
பட்டாபோட்டு விற்றோம்!

மழைநீரை சேகரிக்க
மறந்து போனதால- இன்று
சிறுநீரும் வத்திப்போயி
சீரழிஞ்சு நிக்கோம்!

படிக்காத மேதை தந்தார்
பல்நோக்குத் திட்டம்- இன்று
யோகத்து முதல்வர் தந்தார்
யாகநோக்குத் திட்டம்!

இப்படியே போனாக்க
இன்னும் என்ன ஆகும்?!- வாழ்வு
கேள்விக்குறிப் போலவளைஞ்சு
கேவலமாப் போகும்!

#நீரின்று_அமையாது_உலகு

✍️செ. இராசா

24/06/2019

#பாயின்_வேதனை


உறங்கையில் உடனிருந்தேன்
உறவுக்குக் கை கொடுத்தேன்!

பந்தியிலே முந்தி நின்றேன்!
பந்தங்களைத் தாங்கி நின்றேன்!

சூட்டிலே இதம் தந்தேன்!
குளிரிலே சுகம் தந்தேன்!

பிரசவத்திலும் விரிப்பானேன்!
பிறர் சவத்திலும் விரிப்பானேன்!

எப்போதும் துணை வந்தேன்!
இப்போது ஒதுக்கி விட்டீர்!

#பாயின்_வேதனை

23/06/2019

யாகநோக்குத் திட்டம்!

படிக்காத மேதை தந்தார்
பல்நோக்குத் திட்டம்!
யோகத்து முதல்வர் தந்தார்
யாகநோக்குத் திட்டம்!