08/12/2018

ஆத்தோரத் தோப்புக்குள்ள


தன்னானே தானே நன்னே
தன்னானே நானே நன்னே
தன்னானே தானே நன்னே
தானா...னே நானே நன்னே

ஆத்தோரத் தோப்புக்குள்ள
காத்திருக்கும் பூங்குயிலே....
அத்தானின் நெஞ்சுக்குள்ள
சத்தியமா குத்தமில்ல...

என்னோட நெஞ்சுக்குள்ள
என்னைக்கோ வந்த மச்சான்
உன்னை நான் குத்தமுன்னு
என்னைக்குமே சொன்னதில்லை...

ஓக்கூரூ சந்தையில
கத்திரிக்கா வாங்கையில
ஆத்தாடி உன்னால நான்
காத்தாடிப் போனேன் புள்ள...

மின்சாரக் கண்ண வைச்சு
என்னோடு பேசும் மச்சான்
கண்ணாலம் கட்டிடுங்க
எந்நாளும் கேட்டிடலாம்...

ஆத்தோரம் கொஞ்சுகின்ற
அத்தை பெத்த சின்ன புள்ள
ஆவணி வந்த பின்னே
தாவணியே தேவை இல்லை

ஐயோ...ம்கூம்...போங்க மச்சான்
ஆசை வச்ச மீசை மச்சான்
சீக்கிரம் வாங்க மச்சான்
சின்ன புள்ள பாவம் மச்சான்....

இங்க பார்ரா...சின்ன புள்ளையாமுள்ள...
போங்க...மச்சான்

✍️செ. இராசா

காணொளிக்கு இங்கே....

https://www.facebook.com/100000445910230/posts/2257314940960014/

07/12/2018

நன்றி பாராட்டுதல்


ஒடி ஓடி தினம் உழைத்து- உடல்
வாடிப்போகும் கடை நாளில்- வெறும்
கட்டில் உறக்கமதை விரும்பி- பெரும்
பற்றில் உழலுவோரின் முன்னே- பல
கோடி நன்மை தரும் SKYயை- பலர்
தேடி இங்கு வரச்செய்த- நம்
இறையின் கருணையினை எண்ணி

இன்றைய தினம் நடைபெற்ற
முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு
முழு நிகழ்வு வரை ஒத்துழைப்பு வழங்கிய
அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும்
அகமார்ந்த நன்றியும்! பேரன்பும்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

(தொண்டாற்ற வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்)
SKY- Simplified Kundalini Yoga
முப்பெரும் விழா- Wife appreciation day, SKY family day & Vision Diploma Course Convocation day

06/12/2018

அகம் கொண்ட வலியதனை
முகநூலில் ஏற்றினால்...
அங்கேயும் வந்துவிட்டாள்
அழகான ராட்சசி..😀

#தேநீர்




கண்களுனைக் கண்டபோது
என் மூளையிலே ஒரு மின்னல்...

கையால் உனைத் தொட்டபோது
என் உடம்பெல்லாம் புல்லரிப்பு...

இதழில் உன்னைத் தீண்டுகையில்
இதயமெல்லாம் படபடப்பு.....

அணு அணுவாய் சுவைக்கையிலே
அப்பப்பா.... என் சொல்வேன்..?!!

நா நீரில் சங்கமித்த தேநீரே..,
“நான்” தொலைந்து போனேனே உன்னாலே.....

#தேநீர்

05/12/2018

ஆழக்குழி தோண்டி..............



"ஆழக்குழி தோண்டி
அதிலே ஒரு முட்டையிட்டு
அண்ணார்ந்து பார்த்தால்
தொண்ணூறு முட்டை"

இல்லை.....இல்லை

"சின்னக் குழி தோண்டி
சின்னதொரு முட்டையிட்டு
மண்மேலே பார்த்தால்
எண்ணூறு முட்டை"

விடுகதைகள் இரண்டுக்கும்
விடை மட்டும் ஒன்றே...
விடை அறிந்த உங்களிடம்
வினா ஒன்று கேட்கின்றேன்?

மண் நீரைத் தானுறிஞ்சி
விண்ணோக்கி வளருகின்ற
தென்னையின் இளநீரில்
எத்தனையோ பலனிருக்க
அத்தனையும் விட்டுவிட்டு,

மண்ணை விட்டு எழும்பாத
மண்ணிலே உறங்குகின்ற
தென்னை நகல் இளநீரில்
என்ன பலன் உள்ளதென்று
ஏன் இதை வைக்கின்றீர்?

மரபணு மாற்றுவதில்
தெரியாத நோயோடு
மரணமும் வருமென்று
நம்மாழ்வார் சொன்னதெல்லாம்
நமக்காகத் தானன்றோ?!!

செ.இராசா

(ஆம் மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் இயற்கைக்கு விரோதமானது. அண்ணாந்து பார்க்கும் அளவு உயர்ந்து அதில் நீரோட்டம் நடந்து வளரும் தென்னையே மிக நல்லது..

எல்லாம் வியாபாரநோக்கில் சந்தைப்படுத்தி நாட்டை அழிக்கின்றார்கள் உறவுகளே.....தயவுசெய்து தவிருங்கள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்--கதாதாசன்


தமிழ்ச்சோலைத் தடாகத்தில்
தமிழ்த்தாகம் தீர்க்கின்ற
எத்தனையோ உறவுகளில்
முத்தைப்போல் ஒளிவீசும்
கண்ணதாசன் அடியேனே...
கதாதாசன் ஆனோனே...

நான் எனும் மண்குடத்தை-அன்று
நீ வந்து கண்டபோது
நானொன்று புரிந்து கொண்டேன்...
அன்பிற்கு ஈடு இணை
அன்பென்றே அறிந்து கொண்டேன்

வெளியூரில் இருந்த நானும்
வேரூரில் இருந்த நீயும்
கரூரில் கண்டபோது
வேறொன்றும் தெரிந்து கொண்டேன்
அன்பின் எல்லை விரியுமெனில்
அகிலமே சொந்தமென்று...

அகநூலில் அன்றைக்கே
அழுத்தமாய் ஏற்றி விட்டேன்.....
முகநூலில் நான் கண்ட
முத்து எந்தன் சொத்து என்று....

வாழ்க வளமுடன் தம்பி

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

04/12/2018

கவிச்சரம்-123வது வாரம்-குற்றங்கள் & தண்டனை


💥💥💥💥💥💥💥💥💥💥
தமிழ்த்தாய் வணக்கம்
**********************
ஆதிமுதல் அகத்தியமாய்
ஆழம்நிறை தொல்காப்பியமாய்
அழகுத் திருக்குறளாய்
அற்புதத் திருவாசகமாய்
கம்ப ராமாயணமாய்
பாரதி கவிதையாய்
உலகாளும் தமிழ்த்தாயை
உள்ளத்தால் தொழுகின்றேன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கவிச்சரத்தலைமை வணக்கம்
*****************************
அழகுத் தமிழாலே
அற்புதக் கவி படைக்கும்
ஆற்றல் கவிதாயினி
பரிமளா தேவி அம்மாவை
பாசத்தோடு வணங்குகின்றேன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்ப்பட்டறை அவை வணக்கம்
********************************
வருங்காலக் கவியரசரும்
வருங்காலக் கவிக்கோவும்
உருவாகும் தளமாக
உருவாக்கும் தளமாக
இருக்கின்றப் பட்டறையை
இதயத்தில் வாழ்த்துகின்றேன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

குற்றங்கள்
**********
குற்றங்கள் நாட்டில் பெருகுது என்றால்
சட்டங்கள் நாட்டில் தூங்குது என்பர்!
குற்றத்தின் காரணம் யாதெனக் கண்டே
சட்டத்தால் குற்றத்தை களைவது நன்றே!

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

தண்டனை
***********
தீதும் நன்றும் பிறர்தர வாரா
யாதும் இங்கே வருவது நம்மால்
என்றே உணர்ந்து நன்றே செய்ய
துன்பம் நீங்கி இன்பம் கூடும்!

இதனை உணராச் சிலரின் செய்கை
இடரைத் தந்து வலியைத் தந்தால்
குற்றப் பிரிவின் தன்மைக் கேற்ப
சட்டப் பிடியில் கடுமை வேண்டும்!

காலம் தாழ்த்தும் நீதியின் செயலும்
கடுமை இல்லாத் தண்டனை முறையும்
குற்றம் வருவதைத் தடுக்கா விடுத்து
குற்றம் பெருகிட வழிவகை செய்யும்!

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

நன்றி நவில்தல்
**************
அறிஞர்கள் அவையிலே
கவிஞர்கள் சபையிலே
எனக்கும் வாய்ப்பளித்த
எழில்மிகுப் பட்டறையை
மனமாலே மொழியாலே
மகிழ்வோடு வணங்குகின்றேன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கவரிமான் போல்


வஞ்சினப் பகையோடு
நஞ்சினைத் தந்ததும்
கெஞ்சிடும் கூட்டமா நாங்கள்- நீ
குண்டுகள் போட்டாலும்
கொன்றிட வந்தாலும்
அஞ்சிடா கூட்டமே நாங்கள்!

உயிரோடு உயிராக
உறவாடிக் கெடுக்கின்ற
உயர்திணை மிருகமா நாங்கள்?- தலை
மயிரொன்று விழுந்தாலே
உயிரினைத் துறக்கின்ற
கவரிமான் இனமடா நாங்கள்!

#மானம்_பெரிது
#குறளின்_குரலில்

03/12/2018

பணமும் மனமும்


பணம் பாதாளம் வரை
மனம் பிரபஞ்சம் வரை

பணம் பணம் செய்யும்
மனம் மணம் செய்யும்

பணம் உழைப்பின் ஊதியம்
மனம் ஊழின் ஊதியம்

பணம் மனிதன் சம்பாதிப்பது
மனம் மனிதனை சம்பாதிப்பது

பணம் பொருளை உருவாக்கும்
மனம் அருளை உருவாக்கும்

பணம் உண்மையை மறைக்கும்
மனம் உண்மையை உரைக்கும்

பணம் பயன்பாட்டில் நிற்கிறது
மனம் பண்பாட்டில் நிற்கிறது

பணம் ஆலயங்கள்தான் கட்டும்
மனம் ஆண்டவனையே காட்டும்

01/12/2018

பழம் தரும் பாலா



பழம் தரும் பாலா- வெறும்
பழம் தரும் ஆளா?!-இல்லை
பழம் நிறைய தந்தே- எங்கள்
பலம் சேர்க்கும் தோழா!

பழச்சாறு கேட்டால்- இவர்
பக்குவமாய்த் தருவார்- தினம்
மலைக்காது நின்றே- இவர்
சளைக்காமல் உழைப்பார்!

இனிப்பேதும் தந்தே- எங்கள்
இதயத்தில் நிற்பார்- இது
தமிழீழ மண்ணின்- நல்ல
தமிழறம் என்பார்...............!!!

வாழ்க வளமுடன்.....பாலா அண்ணா
Jeya Balan

(எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் பழம் தருவார்கள் மற்றைய நாட்களில் எலுமிச்சை பழச்சாறு தருவார்கள். அவர்களுக்கு என் பழமார்ந்த நன்றி.....)