04/07/2018

சிறுவர் பாடல்- தமிழ் பாப்பா


பாப்பா பாப்பா தமிழ் பாப்பா
பாடம் படிக்கும் தமிழ் பாப்பா
பிறமொழி படிப்பது சரி பாப்பா
பிறந்தமொழி விடுவது சரியாப்பா?

ஆங்கிலம் என்பதோர் மொழி பாப்பா
அதைநாம் கற்றிடல் நலம் பாப்பா
ஆயினும் தாய்மொழி தமிழ்தான்பா
அதைநாம் விடுவது சரியாப்பா?

அறம்பற்றி சொல்வது குறள் பாப்பா
அறிந்தால் உயருமுன் குரல் பாப்பா
ஔதாரியம் நிறைந்தது தமிழ் பாப்பா
ஔவையை விடுவது சரியாப்பா?

தூக்கணாங் குருவிகளே..



சொந்தமானக் காதலிக்கு
சொந்தவீடு கட்டித்தந்து
தூளியிலே ஆடுகின்ற
தூக்கணாங் குருவிகளே...

புல்லாலும் இலையாலும்
மெல்லமெல்லக் கூடுகட்டி
அன்பானக் காதலிக்கு
அர்ப்பணிக்கும் காதலரே..

அலகில் பொருள் சுமந்து
அழகாய் நெசவு செய்து
குட்டிக்குட்டி வீடுகட்டும்
கட்டிடக் கலைஞர்களே...

காற்றிலும் மழையிலும்
வேற்றினப் பகைவரிலும்
இடர்தாங்கிக் குடிலமைக்கும்
இயற்கை ஆர்வலர்களே..

மின்மினிப் பிடித்து வந்து
மின்விளக்கு செய்து வைத்து
தன்குடில் இருள்நீக்கும்
மின்னியல் பொறியாளர்களே..

பதினெட்டு நாட்களுக்குள்
கச்சிதமாய்ப் பணி முடிக்க
திட்டமிட்டு வேலை செய்யும்
திட்டவியல் வல்லுனர்களே...

புல்லையும் ஆயுதமாய்
வல்லவர்கள் கொள்வதுபோல்
புல்லாலே கோட்டைகட்டும்
புள்ளினம் நீங்களன்றோ?!

02/07/2018

முகநூலும் முழுவாழ்க்கையும் ஒப்பீடு


முழு வாழ்க்கை மாயையினை
முகநூலில் கண்டிடலாம்..
அகவாழ்க்கை புறவாழ்க்கை
அனைத்தையுமே கற்றிடலாம்...

அனைவருக்கும் தனியான
அடையாளம் இங்குண்டு...
அசலுக்கும் நகலுக்கும்
அரங்கேற்ற இடமுண்டு

அடியெடுத்து வைத்தவுடன்
அறிந்தவரே பழகிடுவர்..
அடுத்தடுத்து மற்றவரும்
அறிய அறிய இணைந்திடுவர்

இவரென் நண்பரென்று
இறுமாப்பு கொண்டிருந்தால்
பத்தோடு பதினொன்றாய்
அத்தோடு நமை வைப்பர்

இவருமா நண்பரென்று
இதழோரம் புன்னகைத்தால்
அன்பாலே பலநேரம்
ஆச்சரியம் தந்திடுவர்...

பெண்ணியம் பேசிக்கொண்டே
கன்னியையும் வர்ணிப்பர்..
சமயத்தை சாடிக்கொண்டே
சமயம்பாத்து கழுத்தறுப்பர்...

அறிவுரையும் தத்துவமும்
அள்ளி அள்ளி வீசிடுவர்...
அறிவாளி பட்டமெல்லாம்
அவருக்கே சூட்டிடுவர்...

அரசியல் நிகழ்வுகளில்
அனைவரும் கொந்தளிப்பர்...
அடுத்தடுத்த நிகழ்வுகளில்
அனைத்தையும் மறந்திடுவர்...

ஒத்த கருத்துடையோர்
ஒன்றாக இணைந்திடுவர்..
வேற்று கருத்தென்றால்
வேறு குழு சென்றிடுவர்...

விருதுகள் விற்குமிடம்
விருப்போடு சென்றிடுவர்..
விற்பனை தீருமெனில்
வெறுப்போடு விலகிடுவர்..

மழையே பொழிந்தாலும்
மறைவாக சிலரிருப்பர்...
இடியே இடித்தாலும்
இமைமூடி சிரித்திடுவர்..

அடுத்தவர் வளர்ச்சியினை
அமைதியாகப் பார்த்திடுவர்..
சிறிதளவு தானுயர்ந்தால்
சுய புராணம் பாடிடுவர்..

பிறப்புக்கு வாழ்த்து சொல்லி
இறப்புக்கு இரங்கல் சொல்லி
இரண்டையும் கடந்து செல்லும்
இவ்வுலகம் மாயமன்றோ?

01/07/2018

நண்பா....(கற்பனையே)



நண்பா நண்பா என் நண்பா- நீ
நண்பனை வதைத்தது ஏன் நண்பா?

உடையதை விளம்பிடும் என்னிடமே- நீ
உண்மையை மறைத்தது ஏன் நண்பா!

உரிமையாய்ப் பழகிடும் என்னிடமே- நீ
உள்ளதை ஒளித்தது ஏன் நண்பா?

அப்படி இப்படி இருந்தாலும்- நீ
எப்படி ஒதுக்குவாய் சொல் நண்பா

தப்பும் தவறும் புரிந்தாலும்- உனை
எப்பவும் நினைப்பேன் போ......நண்பா

✍️செ. இராசா

30/06/2018

நிலா



சுட்டெரிக்கும் சூரியனின்
கட்டழகுக் காதலியே- உன்
வட்டமுகப் பார்வையிலே
வெட்க ஒளித் தெரியுதடி...

பகலெல்லாம் மோகத்தில்
பகலவனைக் காதலித்தும்- சில
இரவெல்லாம் மனமுருகி
உருவம் ஏன் தேயுதடி?!

பிரிவென்றால் என்னவென்று
பிறருக்குச் சொல்லிடவா- ஒரு
மாதத்தில் ஒரு நாளில்
மறைந்தே நீ வாழ்கின்றாய்?

வாழ்வென்றால் என்னவென்று
வையகத்தார் கற்றிடவா- நீ
தேய்பிறையாய் வளர்பிறையாய்
தேகத்தை மாற்றுகின்றாய்?!

✍️செ. இராசா

29/06/2018

எது உண்மை?


கண்ணில் காணும் காட்சியெல்லாம்
உண்மை என்றே நம்பாதே!- அஃதே
கண்ணில் காணாக் காட்சியெல்லாம்
கற்பனை என்றே கதைக்காதே!

விண்ணில் விண்மீன் இல்லையெனில்
விடுமுறை சென்றதாய் எண்ணாதே!- அஃதே
உன்னுள் உள்ளொளி இல்லையெனில்
உள்ளதைப் பொய்யென உரைக்காதே!

காதில் விழுகிற வார்த்தையெல்லாம்
ஓதிடும் வேதமாய் நம்பாதே!- அஃதே
காதில் விழுகா வார்த்தைகளும்
காற்றில் தவழ்வதை மறக்காதே!

இறைவனை மறுத்திடும் பெரியோர்களும்
இறைநிலை என்பதை அறிந்திடுவீர்!-அஃதே
இறைவனே இல்லை என்போரும்
இதைப்பற்றி கவலைகள் கொள்ளாதீர்!

100வது கவிச்சரம்--தமிழ்ப்பட்டறை



🙏தமிழ்த்தாய் வணக்கம்🙏
**********^**************
ஆதிமுதல் அகத்தியமாய்
ஆழம்நிறை தொல்காப்பியமாய்
அழகுத் திருக்குறளாய்
அற்புதத் திருவாசகமாய்
கம்ப ராமாயணமாய்
பாரதி கவிதைகளாய்
உலகாளும் தமிழ்த்தாயை
உள்ளத்தால் தொழுகின்றேன்!

🙏கவிச்சரத் தலைமை வணக்கம்🙏
********************************
பொறிஞராய்த் தேர்ச்சிபெற்று
அறிஞராய் பவனிவந்து
கவிஞராய் மிளிர்கின்ற
கவிச்சரத் தலைமையினை
மீனா திருப்பதி அவர்களை
மனமார வாழ்த்துகின்றேன்!

🙏அவை வணக்கம்🙏
**********************
வருங்காலக் கவியரசரும்
வருங்காலக் கவிக்கோவும்
உருவாகும் தளமாக
உருவாக்கும் தளமாக
இருக்கின்றப் பட்டறையை
இதயத்தில் வாழ்த்துகின்றேன்!

தமிழ்ப்பட்டறை
***************
தமிழ்ப்பட்டறை தளம்மூலம்
தமிழ்த்தொண்டு செய்கின்ற
எந்தமிழ்ச் சான்றோர்களை
என்னசொல்லி வாழ்த்திடுவேன்?!

எல்லோருக்கும் ஒரே மூச்சு!
எப்பொழுதும் தமிழ்ப் பேச்சு!
எல்லோருக்கும் ஒரே நோக்கம்!
என்றென்றும் தமிழ் தாகம்!
எல்லாமும் இருந்தாலும்
எங்கேயும் கர்வமில்லை!

எப்படி முடிந்ததென்று
என்னுள்ளே வியக்கின்றேன்!
எளிமையும் நேர்மையும்
எந்தமிழர் குணமன்றோ?!
எள்ளவும் ஐயமில்லை
எதுவும் இங்கே சாத்தியமே!

எம்மதமும் சம்மதமாய்
எல்லோரும் தமிழ்மதமாய்
எத்தளமும் கொள்ளாத
எழுச்சியுடன் சிறக்கின்ற
என்தமிழ்ப் பட்டறையே
எப்போதும் சிறப்பென்பேன்!

பதிப்பகம்
*********
விதை தூவி கரு பதித்து
விளைவது குழந்தையெனில்
கரு பதித்து வரி ஆகி
வருவது நூலாகும்!

தாயின் வலி சொல்லும்
பிரசவ வேதனையை
நூலின் வரி சொல்லும்
புத்தகம் தந்து விடும்!

தாய்க்கும் தாயாக
திகழ்கின்றப் பதிப்பகமே
சிறப்பான புத்தகத்தை
சுகமாக பிரசவிக்கும்!

என்னை வளர்க்கின்ற
என்னருமைப் பதிப்பகமே
“நான் எனும் மண்குடத்தை”
நான் உனக்குத் தந்துவிட்டேன்..

அவனைப் பெற்றெடுத்து
அவனியிலேத் தவழவிட
அருந்தமிழ்ப் பட்டறையை
அடியேனும் வேண்டுகிறேன்

நன்றி நவில்தல்
**************
அறிஞர்கள் அவையினிலே
கவிஞர்கள் சபையினிலே
எனக்கும் வாய்ப்பளித்த
எழில்மிகுப் பட்டறையே
இதயத்தால் வாழ்த்துகின்றேன்
இமயம்போல் நிலைத்திடுவாய்...
நன்றி! நன்றி!!நன்றி!!!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ.இராசா

குறுங்கவிதைகள்---3--வியர்வை



(1)
பாட்டாளி உடம்பில்
பாய்ந்தோடும் அருவி
வியர்வை

(2)
இயந்திர உலகில்
இறங்க மறுக்கிறது
வியர்வை

(3)
இல்லாதோர் வாழ்வில்
இலவசமாய் ஓடுகிறது
வியர்வை

28/06/2018

அஞ்சாமை


அஞ்சிஅஞ்சி வாழ்வதிலே
....................என்ன இருக்கு?
அஞ்சாமல் வீழ்ந்தாலே
....................அதுவே சிறப்பு

கெஞ்சிகெஞ்சி இரப்பதிலே
...................என்ன இருக்கு?
கெஞ்சாமல் இறந்தாலே
...................அதுவே சிறப்பு

கொஞ்சிப்பேசி நஞ்சைத்தரும்
.....................உலகை நினைத்து
வஞ்சினத்தை நெஞ்சுரத்தால்
......................தடுத்து நிறுத்து!

அஞ்சுபொறி அடக்கிநீயும்
....................உன்னைச் செதுக்கி
அஞ்சாமை குணத்தோடு
....................வாழ்வை நடத்து!

எஞ்சியுள்ளத் தொப்புள்கொடி
....................உறவை நினைத்து
வஞ்சகத்தால் வென்றவர்க்கு
....................பாடம் புகட்டு!

27/06/2018

குறுங்கவிதைகள்-9--சக்கரம்


(1)
சுழலுகின்ற சக்கரத்தில்
பிறக்கின்ற தோற்றம்
பிரபஞ்சம்

(2)
சக்கரத்தின் சுழற்சியில்
வேகமாய்க் கழிகிறது
காலம்

(3)
சக்கரத்தைச் சுற்றிவிட்டு
சகலமும் செய்கிறான்
இறைவன்

(4)
வடிவம் முடிந்தவுடன்
உருவமாய் வெளியில் வரும்
படைப்பு

(5)
தலையில் தட்டுவது
உருக்குலைக்க அல்ல
உருவாக்கவே...

(6)
முழுமை அடைந்தவுடன்
முற்றும் அறுபடும்
முழுமைப்பேறு

(7)
சுழற்சியின் மையத்தில்
சூத்திரக் கணக்கு
படைப்பு

(8)
மண்ணில் பிறந்து
மண்ணில் முடிகிறது
மனித வாழ்க்கை

(9)
நிலைத்து நிற்க
தீயால் சுட வேண்டும்
ஞானத்தீயால்..

✍️செ. இராசா

(பட உதவி திரு. Riaz Ahamed, Qatar)