09/02/2023

 

 


செந்தமிழ் பாடிய சித்தர்கள் கூட்டத்தில்
வந்தவன் யாரென சொல்லு?- சிந்து
தந்தவன் யாரென சொல்லு?
பண்டைய பாவலர் யாருக்கோ பாடிட
பண்ணினான் பாரதி வந்து!- பண்ணில்
பிண்ணினான் காவடிச் சிந்து!

கற்றவர் மற்றவர் கட்டிடும் பாக்களில்
நற்றமிழ் செய்ததார் சொல்லு? - கற்று
கற்றிடத் தந்ததார் சொல்லு!
முற்றிலும் மாறிய முத்தமிழ் பாடலைப்
பற்றினான் மாகவி அன்று- பற்றி
முற்றிலும் மாற்றினான் நன்று!

✍️செ. இராசா

எண்ணையில் நீராடி

 


எண்ணையில் நீராடி
......என்னைநீ காணவந்தாய்..
அண்மையில் வந்தவுடன்
.....அங்கத்தை- சுண்டிவிட
வெப்பமிகு மூச்சால்
......விரல்களை சுட்டுவிட்டாய்..
அப்போதும் தள்ளலையா?!
......அஞ்சு!
 
✍️செ. இராசா

08/02/2023

நண்பன் விசயத்தில் இவனோ

நண்பன் விசயத்தில் இவனோ
காசப் பார்க்கல..‌
காசு விசயத்தில் அவனோ
நட்பப் பார்க்கல...
 
இரண்டு பேருமே பலநாள் பழகுறானுங்க...
இரக்கம் காட்டியே இவனும் உருகுறானுங்க...
நாட்கள் போகவே நட்பில் விரிசல்பாருங்க.
வேறு என்னங்க‌‌...காரணம் காசுதானுங்க...
 
உரசிப் பார்த்தா... தங்கம் தெரியும்
பழகிப் பார்த்தா... உறவு புரியும்......(2)
 
✍️செ. இராசா

07/02/2023

பாலும் தெளிநீரும்

 


பாலும் தெளிநீரும்
........பாத்திரத்தில் பொங்கிவர
காலும் அரையுமென
.........காஃபித்தூள் சர்க்கரையை
சேர்க்கும் முறையறிந்து
........சேர்க்கநீ கற்றிருந்தால்
பூக்கும் உனக்குள்ளும்
..........பூ!
✍️செ. இராசா

05/02/2023

சிலேடைப் பதிவிட்டால்

 

சிந்திக்க எண்ணி
........சிலேடைப் பதிவிட்டால்
சிந்திக்க வைத்துவிட்டார்
........தீவிரமாய்- வந்திங்கு
சொல்லவரும் உட்கருத்தை
........சூசகமாய்ச் சொல்லுகையில்
எல்லோர்க்கும் சேர்வதில்லை
.........என்று!

வான்புகழ் கொண்ட வள்ளுவனின் சிலை வைக்க


 

#அவசரப்பட்டு_ஒரு_முடிவுக்கு_வரவேண்டாம்
#பொறுமையாப்_படிங்க

வான்புகழ் கொண்ட
வள்ளுவனின் சிலை வைக்க
தேன்தமிழ் கையெழுத்தால்
தீர்வுதந்த பேனாவை
ஓரடி கூடுதலாய் (133+1=134)
ஒய்யார சிலையாக்கி
யாவரும் #வணங்கிடவே🙏
எழுப்புகின்றோம் இப்படி...

பகுத்தறிவீர் மானிடரே...!!

மையில் பொய்யூற்றி
பையை நிரப்பாமல்
மெய்யை மையாக்கி
கைதூக்கி விட்டவரின்
சரித்திரப் பேனாவை
சட்டைக்குள் வைக்காமல்
வையகம் பார்த்திடவே
வைக்கின்றோம் இப்படி...

பகுத்தறிவீர் மானிடரே...!

பீனிக்ஸ் பறவையென்றும்
பறக்கும் குதிரையென்றும்
வாய்க்கு வந்ததுபோல்
வடைசுட எண்ணாமல்
பேனாவை பேனாவென்றே
பேசுகின்ற நேர்மையினை
எதிரியும் பார்த்திடவே
எழுப்புகின்றோம் இப்படி...

பகுத்தறிவீர் மானிடரே...!!

ஆற்றில் சிலை வைத்தால்
அன்றைக்கு பேசாதோர்
கடலில் சிலை வைத்தால்
கத்துகிறார் பாருங்களேன்...
#இயற்கையைப்_பங்கிட
எங்களுக்கும் உரிமையுண்டு..
#அடித்துச் சொல்லிடவே
அமைக்கின்றோம் இப்படி...

பகுத்தறிவீர் மானிடரே...!!

#மீண்டும்_சொல்கிறேன்
#_அவசரப்பட்டு_ஒரு_முடிவுக்கு_வரவேண்டாம்

✍️செ. இராசா

04/02/2023

புத்தகம்

 #புத்தகம்

சிலருக்கு இரவில் மட்டும் தேவைப்படும்
தூக்க மாத்திரை..
சிலருக்கு எப்போதும் தேவைப்படும்
ஞான யாத்திரை...

இவள்...
எத்தனைபேர் தொட்டாலும்
எப்போதும் மாறா
புண்ணியவதி!
யாருமே தொடாவிட்டாலும்
யாருக்கோ காத்திருக்கும்
சத்தியவதி!

இவன்....
இருந்த இடத்திலேயே
கடந்தகாலம் செல்லும்
கால இயந்திரம்!
எழுத்தின் மூலமாகவே
மனத்திரையில் ஓடும்
ஞான இந்திரியம்!

உண்மையில்...
அமைதியாய் ஆர்ப்பரிக்கும்
பேராழி!
ஆர்ப்பரிப்பை தூண்டிவிடும்
போராளி!

நிமிர்ந்தவரை பணிய வைக்கும்
நிலைப்படி!
குனிந்தவரை நிமிர வைக்கும்
குணப்படி!

படி...
அதுவே உனக்கான படி....

02/02/2023

பேனா எதுக்குப் பேனா...? வீணா எதுவும் வேணாம்.

 


பேனா எதுக்குப் பேனா...?
வீணா எதுவும் வேணாம்....
பேனா எதுக்குப் பேனா...?
வீணா எதுவும் வேணாம்.....

யாரு சொன்ன யோசனையோ...
பேரு கெட்டு போறதுக்கு...
வேறு செய்யத் தோனலையோ
நாம நல்லா வாழ்வதுக்கு‌...
பேனா எதுக்குப் பேனா...?
வீணா எதுவும் வேணாம்....

வையுங்க வையுங்க சிலைய வையுங்க..
வையகம் அறிய வழியச் செய்யுங்க...
நம்மல யாருன்னு வையகம் அறிய
வையுங்க நம்மவர் சிலைய வையுங்க....

அதைவிட்டுப்புட்டு..

பேனா எதுக்குப் பேனா...?
வீணா எதுவும் வேணாம்.....

✍️செ. இராசா

உறவெனச் சொல்லிடும் உறவுகள் கூட

 

உறவெனச் சொல்லிடும் உறவுகள் கூட
உறவினை உதறலாம் உதவிகள் கேட்டால்...
உறவென எண்ணிடா உறவுகள் கூட
உறவென உதவலாம் உண்மையில் பார்த்தால்..
 
உயர்வென எண்ணிடும் உரியவர் கூட
உயிரினை எடுக்கலாம் உரிமையைக் கேட்டால்..
உயர்நிலை எட்டிடா உயிர்களும் கூட
உயிரினைக் கொடுக்கலாம் உடையவர் போனால்..
 
பதவியைத் தேடிடும் பதர்களும் கூட
பதவியில் அமரலாம் பணம்மிக இருந்தால்
பதவியால் கூடிடும் பணங்களும் கூட
பதரென அடையலாம் பணம்மதிப் பிழந்தால்...
 
✍️செ. இராசா

01/02/2023

மார்தட்டி சொல்கின்றார்

 


மார்தட்டி சொல்கின்றார்
.........மாவீரர் வம்சத்தார்!
நேர்நின்று வெல்கின்றார்!
.........நீதிநெறி- பார்க்கின்றார்!
யார்வந்து நின்றாலும்
........யாரென்று காட்டுகின்றார்!
பார்போற்றும் #காடுவெட்டி
.........பார்!