07/05/2020

பொன்னியின் செல்வன்



செப்பேடும் கல்வெட்டும்
செப்பிய வரலாற்றை
கற்பனைத் தேருக்குள்
சொற்பதக் குதிரை பூட்டி
#அமரர்_கல்கி செய்த
அற்புதப் புதினத்தை
அடிஅடியாய் உள்வாங்கி
அடியேன் பயணித்தேன்!


அப்படியே மெய் மறந்து
எப்படியோ உயிர் பெற்றேன்!

"#பொன்னியின்_செல்வன்" என்று
பொன்னான தலைப்பிட்டு
நாயகன் யாரென்றால்
நாயகன் அவரல்ல...
உடன் வரும் பாத்திரமாய்
உலா வரும் நாயகனாய்
வருவோர் யாரென்றால்
வாணர்குல #வந்தியத்தேவன்...

ஏரிக்கரை தொடங்கி
எரிக்கரை முடியும்
அந்த வந்தியத்தேவனின்
அத்தனைக் குதிரைகளும்
எப்போதோ அடங்கினாலும்
அதன் காலடி ஓசைமட்டும்
இன்னும் கேட்கிறது!
டொக் டொக் டொக்......
--இராசா-

(சில பல குறிப்புகளை வைத்துக்கொண்டு இராஜராஜச் சோழன் காலத்திற்கே அழைத்துச் சென்ற கதையமைப்பு. மிகவும் பிரம்மிப்பானது. நிறையமுறைக் கேள்விப்பட்டாலும் புதினம் படிக்கும் பழக்கம் இல்லாத காரணத்தினால் "பொன்னியின் செல்வன்" படிக்காமல் இருந்தேன். இப்போதுதான் முடித்தேன். தமிழக வரலாற்றில் ஏன் இந்நாவல் அதிகம் பேசப்பட்டது என்பதற்கான காரணத்தையும் அறிந்தேன்.
கூறியது கூறல் குற்றம் என்ற ரீதியில் பார்த்தால், பல இடங்களில் அந்தக் குற்றம் இல்லாமல் இல்லை. இருப்பினும் ஐந்து வருடங்கள் தொடர்கதையாக வந்த புதினம் என்பதால், அது தேவைப்பட்டது போலும். மற்றபடி "பொன்னியின் செல்வன்" போன்ற நாவல்கள் காலத்தின் கட்டாயமே,,,,,,,,,,,,,,,,,,ஆம், கட்டாயம் அனைவரும் பயணிக்க வேண்டிய புத்தகமே)

04/05/2020

#மது_அந்தாதி



#குடிமகனின் வேதனைகள் கூடிடும் போதில்
குடியாட்சி என்செய்யும் #கூறு
(1)

#கூறியசொல் கேட்காமல் கூற்றுவன் வேண்டுவோர்
மாறிட மாட்டார் #மனம்
(2)

#மனம்போல் நடக்கிற மக்களின் வேந்தன்
மனிதனே இல்லை; #மகான்
(3)

#மகான்கள் நிறைந்த வளமான நாட்டில்
மிகாமல் கிடைக்குமாம் #நீர்
(4)

#நீர்நாடி மன்றாடி நிற்போரை எண்ணியே
பார்போற்றச் செய்திட்டார் #பார்
(5)

#பார்க்கின்ற பார்வைக்கு பால்கூட கள்ளென்றால்
பார்வையினை என்னென்'பீர்' #கள்'
(6)

#கள்ளத் தனமாகக் கைமாறும் என்றெண்ணி
அள்ளிக் கொடுத்தாரோ #ஐ!
(7)

#ஐயகோ என்றோரே அய்யய்யோ என்றோரே
பையத் திறந்திட்டார் #பார்!
(8)

#பாருங்கள் சீக்கி'ரம்' பா'ரதம் வென்றிடும்
யாருக்கும் முன்னராய் #இங்கு
(9)

#இங்குள்ள வேந்தனை எப்படிப் போற்றலாம்?!
கொஞ்சி மகிழும் #குடி
(10)

✍️செ. இராசா

03/05/2020

#பேர்_ஆசை




தந்தையும் தாயும்
தருவித்த பெயரை
தானாய் மாற்றுதல் சரியா?

பெரியோர் பெயரைப்
பெயரிட்டு அழைத்தல்
தமிழர் மரபில்
தவறென நினைந்தே
அடைமொழி இட்டே
அழைத்தார் அன்று!
அதுவே பெயராய்
ஆனதும் உண்டு!

ஆதியில் இன்றிப்
பாதியில் புகுந்த
சாதியின் பெயரால்
சூடிய பெயரை
பழைய மரபின்
பழக்கம் என்றே
இன்றைக்கும் கூட
இழுப்போர் உண்டு!

அறிவின் முதிர்ச்சியில்
அன்பின் நெகிழ்ச்சியில்
பற்றிய ஒன்றில்
தொற்றிட வேண்டி
இயற்பெயர் மாற்றி
புதுப்பெயர் சூடி
இசைந்தோர் புவியில்
எங்கிலும் உண்டு!

படைப்பின் மூலம்
படைப்புகள் தெரிய
படைத்தோன் மறைந்து
படைப்பைக் காட்ட
புனைப் பெயர் வைத்தும்
புனைந்து கொடுத்தோர்
புவியில் இங்கே
பலபேர் உண்டு!

பட்டப் பெயர்போல்
போட்டுக் கொண்டும்
சுவரொட்டி முழுதும்
சிரித்துக் கொண்டும்
தலதள பெயருடன்
தன்னைச் சேர்க்கும்
படித்த இளைஞர்ப்
படைகளும் உண்டு!

புனைந்த பெயரோ
புகழ்ந்த பெயரோ
சுட்ட பெயரோ
சுட்டுப் பெயரோ
வந்த பெயரோ
வைத்த பெயரோ
பிறந்து மறையும்
பிண்டம் தெரிய
பேர்-ஆசைத் தவறா என்றால்
பேராசைத் தவறே என்பேன்!

✍️செ. இராசா

(யாரையும் குறிப்பிட்டு அல்ல. மனதில் பலநாளாய் எனக்குள் கேட்ட கேள்விகளுக்கான விடையாகவே இவ்வரிகள்)

02/05/2020

ஊதும் குழலுக்குள்


ஊதும் குழலுக்குள் ஊடுறுவும் காற்றாவேன்
ஓதும் கவிதைக்குள் உள்ளுறையும் மெய்யாவேன்
மீட்டும் நரம்புக்குள் மீண்டுவரும் பண்ணாவேன்
காட்டிடுவாய் நின்கருணைக் கண்!

✍️செ.இராசா
கவிஞன் பிறக்கும்வரை
விமர்சகன் அமைதி கொள்ளட்டும்
✍️

காலையில் எழுந்திருக்க அலாரம்




காலையில் எழுந்திருக்க அலாரம் வைத்துப் படுப்போர்கள் எப்படி நடக்கின்றார்கள் என்பதைக் கொண்டு நான்காக வகுக்கின்றார் கௌர் கோபால்தாஸ் சாமிகள்.

1. அலாரம் அடிக்கும் போது அடிப்பதுகூடத் தெரியாமல் தூங்குபவர்கள் #SLEEPERS என்கிறார்.

2. மறுபடியும் SNOOZ போட்டு இரண்டு மூன்று முறை தள்ளிப் போட்டுப் பின்னர் எழுபவர்கள் #SNOOZERS என்கின்றார்.

3. அலாரம் அடித்தவுடன் எழும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் தூங்குபவர்கள் #FALLERS என்கின்றார்.

4. அலாரம் அடித்த வேகத்தில் எழும்பித் தன் கடமையாற்றப் போகின்றவர்கள் #WAKERS என்கின்றார்.

இந்த நான்கில் எந்த வகையில் இருக்கின்றோம் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அந்த அலாரம் என்பது காலம் நமக்கு உணர்த்தும் நல்லது கெட்டது என்று வரும் அனைத்து சமிக்ஞைகளையும் அடக்கியதாகும். அதை நாம் எப்படி உள்வாங்கி நடக்கின்றோம் என்பதில்தான் வாழ்க்கையின் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பதை நன்றாக உணர்வோமாக

வாழ்க வளமுடன்!!

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

காலம் கடந்துதினம் காரியங்கள் செய்பவரைக்
காலம் கழுவிவிடும் கை

✍️செ. இராசா

பணியாரம்



பனித்துளிகள் ஒன்றாகிப்
பணியாரம் ஆகிடுச்சோ?!
மணித்துளிகள் சூடேறி
மன்றத்தில் ஏறிடுச்சோ?

பள்ளத்தைக் கண்டதினால்
பசிபோக்க வந்திடுச்சோ?
வெல்லத்தைக் கொண்டதினால்
உள்ளத்தைத் தொட்டிடுச்சோ?!

அதி-காரம் போட்டதினால்
அதிகாரம் கூடிடுச்சோ?!
பணியாரம் என்பதினால்
பணிவோடு ஆறிடுச்சோ?!

✍️செ.இராசா

tagTag Photopin

01/05/2020

புலி பசித்தாலும் சோறு திங்காது
-புதுமொழி-
கால ஓட்டத்தில்
குறையத் தொடங்கியது
சம்பளம்
✍️

கவிராகம் தொடங்கி 1 வருடம் ஆகியது - மே தின நல்வாழ்த்துகள்


பாடுவோமே நண்பா பாடுவோமே
பாட்டாளி தினமின்று பாடுவோமே
கூடுவோமே நண்பா கூடுவோமே
கூட்டாளி நலங்காக்க கூடுவோமே


வாய்ப்பூட்டை எந்நாளும் உடைப்போமே
வாய்வள்ளல் யாரெல்லாம் உரைப்போமே
வேர்விட்டோர் யாவர்க்கும் சொல்வோமே
வேரறுக்கும் நல்லோராய் வாழ்வோமே

காலத்தை சரியாகக் கணிப்போமே
கானங்கள் வழியாக கதைப்போமே
நக்கீரர் போலென்றும் இருப்போமே
நடுநிலை எப்போதும் காப்போமே

✍️செ. இராசா

இன்றோடு கவிராகம் தொடங்கித் தங்களின் பொன்னான ஆதரவில் 1 வருடம் ஆகியது உறவுகளே....