07/09/2019

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகனே...




முத்து விளைவிச்ச
கத்தாரு தேசத்தில
முத்தாய்ப் நீ பூத்த
முத்தான தருணத்த
இப்ப நினைச்சாலும்
அப்பப்பப புல்லரிக்கும்!


சொடக்கிடும் வேகத்தில்
படக்கென்று வந்ததுபோல்
பத்து வருசங்களும்
பறந்தோடிப் போயிடுச்சு!

அப்பா அப்பான்னு
அப்பாவ சுத்தி வந்த
அப்பாவ நீ சுத்தி
அப்பான்னு சொல்லயில
அப்பா அப்பப்பா....
எப்போதும் மின்னலப்பா...!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகனே...

06/09/2019

மலரின் வண்டாய்-





மலரின் இதழில் மதுவினைத் தேடி
வலம்வரும் அற்புத வண்டாய்- அழகே
உனையே நினைந்திங்(கு) உலவிடும் என்னை
அனுமதி தந்தே அணை!

கரைந்தும் கரையா கணபதி போலே



கரைந்தும் கரையா கணபதி போலே-நான்
கரைந்து உருகிக் கரைகிறேன் மானே!
புரிந்தும் புரியா புதுக்கவி போலே-நீ
புரியாப் புதிராய் இருப்பது வீணே!

✍️செ. இராசா

#RANU_MARIA_MANDAL #ராணு_மரியா_மண்டல்


In English, the word “#Potential” is always saying something to me.

Yes, the man who is having any special potential with him, he should always concentrate and increase his potential at any cost or any time, even if he doesn’t get any opportunity/success in the beginning/middle of his life. But this potential will explode one day heavily. Until that wait...wait...wait...but increase your potential. Sure it will blast like Ranu Maria Mondel.

நேற்றுவரை வெறும் ரயில்ப்பாடகி!
யாரோ சிலர் போடுகின்ற
சில்லறைக்காசுகள்தான்
இவரின் பாடலுக்கான அங்கீகாரம்!
ஆம்...
அன்று அவரின் வயிற்றை மட்டுமே அடைத்தது அந்தக் காந்தக் குரல்
ஆனால்...இன்று
அகிலத்தின் காதுகளில் எல்லாம்
ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கிறது!
🎼🎼🎼🎼🎼🎼

இதை
விதி என்று சொன்னாலும்
விதியின் விதை யார் போட்டது?!
விதை மட்டும் வீரியமாய் இருந்தால்
அது வெடித்துத் துளிர்த்தே தீரும்...
கண்டிப்பாக வெடிக்கும்!!
காத்திருங்கள்!!
இந்த இசை மங்கையைப்போல்....

✍️செ. இராசா

05/09/2019

கண்ணீர்

வெற்றிக் களிப்பில்
வேகமாய்ப் பிறக்கிறது
கண்ணீர்
(1)

அன்பின் உச்சம்
அழுத்தமாய்ப் பதிகிறது
கண்ணீர்த் துளிகளில்
(2)

நவீன இந்தியாவில்
நாளுக்குநாள் கூடுகிறது
#கண்ணீர்...
(3)

04/09/2019

இருப்பு குறைந்திட

இருப்பு குறைந்திட இன்பம் குறையும்
இருப்பு நிறைந்திட இன்பம் நிறையும்
இருப்பதை எண்ணியே இன்புறல் நீக்கி
இருப்பதை இன்புற ஈ!

03/09/2019

இரைதேடும் பறவைக்கு ....




இரைதேடும் பறவைக்கு
இரைவைக்கும் ஒருவன்
இரைவைத்த பின்னால்தான்
இரையுண்ணப் போவான்!!!

இரைபோடும் பழக்கத்தில்
இரைவதைக் கண்டால்
இரைதரும் இவனே
இறைவனாய்த் தோன்றும்!!

இரைபோடும் அந்நாளில்
இரையிடும் போதே
இரையுண்ணும் பறவைகள்
இரையாவதும் கண்டான்!!

இரையுண்டு கொழுவெடுத்த
இரக்கமிலாப் பூனை
இரையென்று தின்றதனால்
இரைந்தானொரு கல்லை!

இரையாகும் சங்கிலியை
இறைசெய்த போது
இறை எதை ஆய்ந்தானோ
இறைவனிடமே கேட்போம்!!

✍️செ. இராசா

#திருமாவளவ_கரிகாலற்_சோழன்_கதை


முன்னுரை
**********
அக நானூற்றிலும்
புற நானூற்றிலும்
சிலப்பதிகாரத்திலும்
சிற்சில இலக்கியத்திலும்
கரிகாலற் சோழன் பற்றி
கண்டபல பதிவுகளை
சகமறிய செய்துதந்த
சகந்நாதர்* அடி தொட்டு
அடியேனும் இக்கதையை
அடிசுருக்க முயலுகின்றேன்!
அடிகளிலே பிழை இருப்பின்
அன்னைபோல் பொறுத்தருள்வீர்!

சோழ முன்னோர்கள்
********************
எச்சோழன் முதற்சோழன்
அச்சோழன் நாமறியோம்!
முற்சோழன் வழி வந்த
நற்சோழன் கதையிதுவே!!

#இளஞ்சேட்சென்னி என்னும்
இளஞ்சோழன் ஒருவனுக்கு
#அழுந்தூரான்_மகளொருத்தி
அரசியாய் வந்திருந்தார்!

சோறுடைத்த சோழநாட்டில்
சோழனுக்கு வாரிசில்லை!
சோகத்திலே மூழ்கியவன்
சோர்வுடன் இருக்கையிலே
அனைவரும் மகிழுமாறு
அரசியார் கருவுற்றார்!

ஆயினும் அம்மகிழ்ச்சி
அதிகநாள் தொடராது
ஏதோ நோய்வந்து
இளஞ்சோழன் மாண்டுவிட
சோழநாட்டு மண்மீது
சோகமேகம் கவ்வியது!!!

திருமா வளவன் பிறப்பு
**^****^************
கருவுற்ற சேதியினை
ஒருவருக்கும் சொல்லாமல்
இராணியை இடம் மாற்றி
இரகசியம் காத்து வந்தார்;
#இரும்பிடர்_தலையாரெனும்
அருங்குணத் தமையனார்!

சாதகக் கணக்கொன்று
சாதகமாய் வருமானால்
தங்கையின் வாரிசு
தரணியையே ஆளுமென
மூன்று நாழிகைகள்
மூச்சடக்க வேண்டினார்!

தலையானார் சொல்படியே
தலைகீழாய்த் தாய்தொங்கி
#திருமாவளவன் எனும்
திருமகனை பெற்றெடுத்து
வரலாற்றின் பக்கத்தில்
வீரத்தாய் இடம்பிடித்தார்!

கொலை முயற்சி
****************
மகன் பிறந்த சேதியினை
மாயமாய் வைத்திருந்தும்
அவன் வளரும் சேதியோ
அனல் காற்றாய்ப் பரவிவிட
கயவர்கள் கூட்டமொன்று
கவ்வியது வளவனை!

தங்கையின் மனவலியைத்
தாங்காத தமையனும்
வளவனைக் காணாமல்
வருவதில்லை எனச்சொல்லி
உறுதிபூண்டவராய்
ஊரூராய்த் தேடினார்!

கரிகாலன்
**********
எங்கே எங்கேயென
எல்லைவரைச் சென்றபோது
எரியும் குடிசையொன்றில்
வளவன் குரல் கேட்டார்!

கதவை உடைத்தெறிந்து
காளையைக் கண்டபோது
எரிந்த காலோடு
இளவரசு ஓடி வந்தான்!

திருமாவளவன் எனும்
திருநாம இளவரசன்
கருகிய காலாலே
#கரிகாலன் என்றானான்!

யாருக்கும் தெரியாமல்
ஊருக்கும் திரும்பாமல்
கருவூரின் ஒரு ஓரம்
கரிகாலன் வளர்ந்து வந்தான்!

அரசியல் குழப்பமும் தீர்வும்
***************************
இளவேந்தன் இருந்திருந்தால்
என்றைக்கோ வந்திருப்பான்
இல்லாத ஒருவனுக்கு
இதற்குமேல் பொறுக்க வேண்டாம்!

அரசனாய் ஆள்பவனை
அரன் வந்து சொல்லட்டும்!
கோவில் யானையிடம்
கொடுத்திடுவோம் மாலையினை;
கழுத்தில் விழும் மாலை
காட்டட்டும் மன்னவனை!

அனைவரும் முடிவுசெய்து
அவிழ்த்துவிட்ட யானையோ
ஓடியது ஓடியது
எல்லை வரை ஓடியது
ஓடிக்களைத்த யானை
ஒதுங்கியது கருவூரில்

என்ன ஆச்சிரியம்?!
எதிர் பட்டான் “கரிகாலன்”
கழுத்தில் மாலை விழ
இளவரசே மன்னனான்!

வெண்ணிப்போர்
****************
சின்னப் பையனுக்கு
என்ன தெரியுமென
சின்னக் கணக்கிட்டார்
சிறுநில மன்னரெல்லாம்!

#பதினோரு_மன்னரோடு
#பாண்டிய_மன்னனும்;
#பெருஞ்சேர_லாதனெனும்
#பெருஞ்சேர_மன்னனும்;
சுருங்கிய மனத்தோடு
பெரும்படை திரட்டிவந்தார்!

இளங்கன்று ஆனாலும்
பயமின்றிப் பாய்ந்துவந்த
கரிகாலன் வீரம் கண்டு
கலங்கிவிட்டார் அனைவருமே!

பலமில்லா வேளிர் படை
குலமழிந்து ஓடியது..!
பாண்டிய மன்னர் படை
மண்டியிட்டு கதறியது...!!
பெருஞ்சேர மன்னர் படை
குருதியாற்றில் குளித்தது..!!!

இளஞ்சோழன் விட்ட அம்பு
பெருஞ்சேரன் நெஞ்சில் பட;
பொசுக்கென்று குருதியோடு
புகந்த அம்பு முதுகில்வர;
கன்னிப்போர் கண்டவனால்
காயம்பட்ட காரணத்தால்;
பலபோர் கண்ட சேரன்
பரிதவித்து உயிர் நீத்தான்!

வெண்ணி ஊரில்
கண்ட போரில்
வெற்றி பெற்ற கரிகாலன்;
மக்கள் அனைவராலும்
மதிப்பு மிக்க மன்னனானான்!

சோழத் தமிழ் நாடு
********************
அடிக்காமல் விட்ட பாம்பு
அடிக்கடி வருவதுபோல்;
மீண்டும் ஒரு கூட்டம்
மாண்டிட ஆசையுற்று;
வாகை எனும் ஊரில்
வாங்கிக்கட்ட வந்தார்கள்!

#எயினர்_நாகர்_ஒளியரென
எண்ணிக்கையில் ஒன்பதென
வந்த கூட்டம் அத்தனையும்
நொந்த கூட்டம் ஆகிநின்றார்!

இப்படியே விட்டுவிட்டால்
இனியும் வருவாரென
தமிழ்நாடு அத்தனையும்
தன்நாடாய் மாற்றிவிட்டான்!

சோழ இந்திய நாடு
*******************
பெரும் படை சேர்த்தபின்னே
பெருந் தேசம் வேண்டாமா?!
எல்லை விரிவடைய
இமயம் வரை போர் தொடுத்தான்!

சோழமலை சோழன்ஏரி
சோழன் பெயர் சொல்வதனை
சிக்கிம் பற்றி தேடிடுங்கள்
விக்கிகூட** சொல்லிடுவான்!

இமயம் வரை சென்ற வேந்தன்
ஏற்றி வைத்த புலிக்கொடியால்
வடநாட்டில் சிலமன்னர்
வரும்வழியில் போர்தொடுத்து
வலியெடுக்க வாங்கிக்கொண்டார்!
வரவேற்று(ம்) உபசரித்தார்!

காவிரிபூம்பட்டிணம்
********************
கண்ட வெற்றி அத்தனையும்
காண வைக்கும் சாட்சியாக
#அவந்தி_நாட்டு_மன்னன் வந்து
அழகுத்தோரண வாயில் செய்தான்!
#மகத_நாட்டு_மன்னன் வந்து
மண்டபத்தை கட்டி வைத்தான்!
#வச்சிர_நாட்டு_மன்னன் வந்து
முத்துப்பந்தல் செய்து தந்தான்!

இன்னும் இன்னும் எத்தனையோ
மின்னும் மின்னும் மண்டபங்கள்
நகரைச் சுற்றி கட்டி வைத்தான்
நாட்டை ஆண்ட கரிகாலன்!

கல்லணை
**********
பொங்கி வரும் காவிரியை
பொறுமையோடு அணையிட்டால்
நீர் வளத்தைப் பெருக்கிடலாம்!
நில வளத்தை உயர்த்திடலாம்!
எண்ணிய எண்ணம்போலே
எழுப்பிவிட்டான் கல்லணையை!

அழிவில் செய்த பட்டணமோ
ஆழியிலே மூழ்கியது!
ஆக்க செய்த கல்லணையோ
அவன் பெயரைச் சொல்கிறது!

உறையூர்
*********
இரண்டாம் தலைநகரம்
இப்போது பேசுகிறார்!
அன்றைக்கே அமைத்திருந்தான்
அன்றைய தமிழ் மன்னன்!

கல்லணையை பார்வையிட்டு
கரிகாலன் வரும்போது
பறந்து வந்த கோழி ஒன்று
பருந்துபோல கொத்தியதில்
துடிதுடித்த யானை கண்டு
துடிப்போடு யோசித்தான்!

அற்புத மண்ணில்தான்
அதிசயம் உறையுமென
உறையூர் மண்ணையே
உறைவிடமாய் மாற்றிவிட்டான்!
இரண்டாம் தலைநகரம்
இதுவென்றே கொக்கரித்தான்!

முடிவுரை
********
வீரனாய் வாழ்ந்த வேந்தன்
வள்ளலாய் வாழ்ந்த வேந்தன்
கல்லணையின் திறம்போலே
காலமெல்லாம் நிற்கின்றான்!- இன்று
ஞாலமெல்லாம் தெரிகின்றான்!

வாழ்க வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் மன்னவனை!
வாழ்க தமிழ் மன்னா!
வாழ்க நின் புகழ்!

#திருமாவளவ_கரிகாலற்_சோழன்_வாழ்க

02/09/2019

பேரியக்க மண்டலமே பிள்ளையார்



பிள்ளையார் யாரென்று பிள்ளைகள் கேட்கையில்
பிள்ளையார் தெய்வமென பிள்ளைக்கு சொல்லுமுன்
பேரியக்க மண்டலமே பிள்ளையார் என்கின்ற
பேருண்மை சொல்வாய் இனி!

✍️செ. இராசா

அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்😊😊😊

01/09/2019

இனிய திருமண வாழ்த்துகள்--#சேதுபதி_காவியாவை

இனிய திருமண வாழ்த்துகள்
***************************
#சேதுபதி_காவியாவை
சேருகின்ற நன்னாளில்
யாதுசொல்லி வாழ்த்திடுவேன்
யாசிக்கின்றேன் தமிழ்த்தாயை
யோசிக்காமல் வந்தென்னுள்
வாசிப்பாயே இக்கவியை..!!!


நகரம்பட்டி ஊரினிலே
சிகரம்போல் உயர்ந்தவரை
#சேதுபதி ஐயாவின்
#சுந்தரப் புதல்வரை
என்ன சொல்லி போற்றிடுவேன்?!
என்றைக்கும் வணங்கிடுவேன்!

#அப்பாவின் நண்பர்பற்றி
அப்பப்பா என் சொல்வேன்?!!
அப்போதும் நண்பரிவர்!
எப்போதும் நண்பரிவர்!

கட்டிடக் கலை பயின்றே
கட்டினாரே சித்தியை
சித்தியின் பெயர்போலே
கிட்டியதும் சித்தியே..!

ஆம்...

#விஜயா எனும் பெயர்போலே
விஜயமானாள் #சேதுராணி!
துடிப்பிலே சுட்டியாய்
படிப்பிலே கெட்டியாய்
பொறிஞர் முடித்ததுமே
பொதுப்பணித்துறை சேர்ந்து
பொறியாளர் ஆகி நின்றாள்!
பொறுப்பான தந்தையைப்போல்..

அடுத்த விஜயமாய்
அன்போடு வந்தவனே
அமைதியின் உருவமான
நம் தம்பி #சேதுபதி!!

இவனும் பொறியாளன்
இப்படி நான் நினைத்தாலோ
இவனே பொறியாளன்
என்று எண்ண வைக்கின்றான்?!

இவன் எழுதும் ஆங்கிலத்தை
இன்றைக்கும் படிக்கின்றேன்!!
இவன் எடுக்கும் புகைப்படத்தை
என்னவென்று வியக்கின்றேன்?!

இதற்குமேல் நான் சொன்னால்
அவனே அலறிடுவான்!!

😃😃😃😃😃

இதெல்லாம் சொல்லுவதில்
என்னப்பா இருக்கிறது?!!
நீங்கள் நினைப்பதெல்லாம்
நான் நினைக்க மாட்டேனா?!

பொறுமை..பொறுமை

பாரிலுயர் தமிழர்பலர்
பாரதியைப் படிக்கின்றார்!
பாவேந்தர் வரிகளினை
பாராயணம் செய்கின்றார்!

கற்ற வரிகளுக்கு
கைதட்டல் வாங்கிவிட்டு
காரியம் முடிந்தவுடன்
கைகழுவி விடுகின்றார்!

விதியில் பொய்யிருந்தால்
விதிவிலக்கும் உண்டன்றோ?!
மதியில் மெய்யிருந்தால்
மதிமயக்கம் இல்லையன்றோ?!

உயிர்மெய்யாய் பழகுவதில்
உயிர்மையாய் உருகுவதில்
தடைசெய்ய சாதி வந்தால்
உடைத்தெறிவார் நல்லோர்கள்!

அப்படி உடைத்தறிந்து
கற்றதுபோல் நிற்போரை
கவிதையில் வாழ்த்துவதும்
கற்றோரின் கடமையன்றோ!!!

தம்பிக்கு வெண்பா
*******************
கற்றதைக் கற்றபின் கற்றதுபோல் நிற்பவர்கள்
சொற்பமாய் மாறிவரும் சூழ்நிலையில்- அற்புதமாய்க்
கற்றதைக் காப்பாற்றி கன்னியைக் கைப்பற்றி
நிற்கின்றாய் இன்றைக்கு நீ!

வாழ்க வளமுடன் செல்வன் சேதுபதி!
வாழ்க வளமுடன் செல்வி காவியா!
வாழ்க வளமுடன் சுந்தரமூர்த்தி சித்தப்பா
வாழ்க வளமுடன் விஜயா சித்தி!
வாழ்க வளமுடன் சேதுராணி & மாப்சு!!

For Youtube:
https://youtu.be/9_ro9l1L8k0

இவண்,

இராசமாணிக்கம்

முக்கிய குறிப்பு:
***************
இன்றைக்கு எங்களுக்கும் 11வது திருமணநாள் என்பதை மிகுந்த மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.