09/08/2019

வரியாகத் தந்திட வா!!

புரியாத சொல்லைப் புகுத்துதல் இன்றித்
தெரியாத சொல்லைத் திணித்திடல் இன்றிச்
சரியான சொல்லைச் சரியாகப் போட்டு
வரியாகத் தந்திட வா!!

#நேர்_கொண்ட_பார்வையில்



#நேர்_கொண்ட_பார்வையில்
நீ செல்லும் போது
யார் எங்கு சென்றாலும்
நீ செல்ல வேண்டாம்!

ஊர் போகும் பாதையில்
ஊறுள்ள போது
யார் எங்கு போனாலும்
நீ போக வேண்டாம்!

பார் பேசும் வார்த்தையில்
பழுதுள்ள போது
யார் என்ன சொன்னாலும்
நீ கேட்க வேண்டாம்!

வா என்று சபலங்கள்
வரவேற்கும் போதும்
நோ என்று வெட்டிவிட
நீ தயங்க வேண்டாம்!

✍️செ. இராசா

(அப்புறம் படம் நல்லா இருக்கு...உண்மையிலேயே அஜீத் நல்லா நடிச்சிருக்காப்ல. இவரு மாதிரி ஒரு பெரிய கதாநாயகர் இந்த மாதிரி கருத்துள்ள படத்தில் நடிப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று.👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽)

#மாயோனே



#மின்னஞ்சலாய் வந்தோனே
என்னெஞ்சிலே நின்றோனே
நேராய் நீயும் வாடா மாயோனே

மாயோனே...
நீயே எந்தன் #ஆண்டிராய்டல்லவா ஆனாயல்லவா!
நானே உந்தன் #ஆப்பிள்அல்லவா
அள்ளிக்கொள்ளவா!
#கூகுள் வேகத்தில் வாசம்செய்தாயே
மாயோனே....

#பேஸ்புக்கில் பேசும்பொருள் நீதானே
#ஹேஸ்டாக்கில் #டிரண்டாகி நீயே வந்தாயே

தேடும் ராகம் நீயேஅல்லவா
நேரில்அள்ளவா
பாடும்-கானம் நானேஅல்லவா பாடிக்கொள்(ல்)ளவா?!

லப்டப் ஓசைக்குள் #டிக்டாக் ஆனாயே

காலம் போக்கும் மாயமல்லவா
மாயையல்லவா
ஜாலம் காட்டும் வித்தையல்லவா
வெட்டிப்போடவா
சின்னப் பொட்டிக்குள் சிக்கிக் கொள்ளாதே

✍️செ. இராசா

(ச்சும்மா ஒரு பாடல்....புகைப்படம் வேறு கிடைக்கவில்லை...அதான் நாங்களே...😊😊😊😀😀)

08/08/2019

மாணிக்கம் பிள்ளை- #இன்னிசை_வெண்பா




மாணிக்கம் பிள்ளையின் மைந்தனின் பிள்ளையாம்
மாணிக்கம் பேர்கொண்ட மைந்தனின் பிள்ளையை
மாணிக்கம் போலவே வண்டியில் ஏற்றினார்
மாணிக்கம் பிள்ளை மகன்!

✍️செ. இராசா

#குறிப்பு

#இன்னிசை_வெண்பா

இவ்வெண்பா புரிவதற்கு என் ஐயாவின் பெயரும் என் பெயரும் தெரிவது அவசியம் என்பதால் கீழே உள்ள விபரம்;

ஐயா (அப்பாவின் தந்தை) பெயர்: மாணிக்கம் பிள்ளை
என் பெயர்: இராச மாணிக்கம்

(மேலும் இப்படத்தில் உள்ள இருவரின் பெயரும் வெண்பாவில் இல்லை😊😊😊)

07/08/2019

எலிக்கு வைக்கப்படும் உணவு
எலியின் மீது பரிதாபப்பட்டு அல்ல

06/08/2019

கடிகாரத்தை சரி செய்யும் ஒவ்வொரு முறையும்



முன்னோக்கியோ அல்லது
பின்னோக்கியோ...
கடிகாரத்தை சரி செய்யும்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு அனுபவமே...

அடிக்கடி மாற்றுவோருக்குத்தான்
அது அனிச்சை செயலாக..
எப்போதோ மாற்றுவோருக்கு
அது என்றும் வியப்பாகவே...

எது எப்படியோ....
எல்லோருடைய கடிகாரங்களும்
ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன...

✍️செ. இராசா

03/08/2019

எப்பப்பா ஏற்றினாய்





எப்பப்பா ஏற்றினாய் எப்பநீ சொல்லப்பா
அப்பப்பா அப்பப்பா அப்பாநீ- தப்பப்பா
முள்ளுப்பா முள்ளுப்பா முட்டுதே பாரப்பா
தள்ளுப்பா வேணாம்பா தப்பு!

✍️செ. இராசா

அட்றா அட்றா அட்றா!



அட்றா அட்றா அட்றா!
அட்றா தம்பி அட்றா!
தொட்றா தொட்றா தொட்றா!
தொட்றா தம்பி தொட்றா!

போற்றும் உலகம் போற்றட்டும்!
தூற்றும் உலகம் தூற்றட்டும்!
பற்றிக் கொண்டுத் திரியாதே!
தொற்றிக் கொண்டுத் துவளாதே!
(அட்றா....)

ஆதித் தமிழன் வாழட்டும்!
சாதித் தமிழன் மாறட்டும்!
ஏங்கி ஒதுங்க நினையாதே!
ஓங்கி அடிக்க மறவாதே!
(அட்றா...)

அத்தி வரதரைத் தேடட்டும்!
பக்தியில் பணத்தை வீசட்டும்!
எதையும் உடனே ஏற்காதே!
கதையை எல்லாம் நம்பாதே!
(அட்றா...)

தமிழைத் தமிழாய்ப் பேசட்டும்!
தங்கிலீஸ் வாயை மூடட்டும்!
மம்மி டாடி சொல்லாதே!
அம்மா அப்பா விட்றாதே!
(அட்றா...)

✍️செ.இராசா

01/08/2019

நிரம்பி வழியும் கோப்பையிலே-நீர்
நிரப்பிட மேலும் முடியாது!
தன்னை வியக்கும் உள்ளத்திலே-நீ
உண்மையைப் போதிக்க முடியாது!...✍️

1994-1995, பத்தாம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி




1994-1995
பத்தாம் வகுப்பு
அரசு உயர்நிலைப் பள்ளி (த-மேல்நிலை)
மருதுபாண்டியர் நகர்
சிவகங்கை

செ. இராசமாணிக்கமாகிய நான்...
அன்றைய நினைவுகளை
இன்று(ம்) அசைபோட்டேன்...
ஒவ்வொரு வகுப்பறையிலும்
ஒவ்வொரு காட்சிகள்...

இக்கால நிஜத்தோடு
அக்கால நினைவுகள்
இரண்டும் மோதியதை
எப்படிச் சொல்லிடுவேன்?!
உடம்பெல்லாம் புல்லரிப்பு!
உயிரெல்லாம் மெய்சிலிர்ப்பு!

நானூறே எட்டாத பள்ளியில்
நான் தாண்டிய நானூறு
இன்றும் தொடர்வது
இரட்டை மகிழ்ச்சியே!!!

மனைவியோடும் மக்களோடும்
படித்த பள்ளியைப்
படிப்படியாய்க் காட்டியே
நெகிழ்ந்த நிமிடங்களை
நெஞ்சில் சுமக்கின்றேன்....

✍️செ. இராசா