08/02/2019

நினைக்கும்முன் மறப்பேனா?!


மனமெல்லாம் நீதானே-நான்
மனம்நோகச் செய்வேனா?!
மதியெல்லாம் நீதானே-நான்
மதிக்காமல் இருப்பேனா?!

மணமெல்லாம் நீதானே- நான்
மலர்தேடிப் போவேனா?!
கவி(😊)யெல்லாம் நீதானே- நான்
கவிபாடிக் கொள்(ல்)வேனா?!

தமிழெல்லாம் நீதானே-நான்
தனிமையிலே நிற்பேனா?!
குறளெல்லாம் நீதானே- நான்
குரல்மாற்றிக் கதைப்பேனா?!

இசையெல்லாம் நீதானே-நான்
இசைக்காமல் இருப்பேனா?!
நினைவெல்லாம் நீதானே-நான்
நினைக்கும்முன் மறப்பேனா?!

கண்ணே பாருடா



கண்ணே பாருடா- என்
கண்ணே பாருடா
உன்னைப் பெத்தவர
என்னான்னு கேளுடா?

மாசம் முடியுமுன்னே
மாசமாக்கிப் போனவர
பாசம் இருந்தாக்க
பார்க்க வரச்சொல்லுடா..

பாப்பா வருமுன்னே
பாஃரினுக்குப் போனவர
வாப்பா நீ தான்னா
வாப்பான்னு சொல்லுடா

வருசம் முழுவதுமே
வாட்சப்பில் வந்தவர
எப்போ வருவேன்னு
இப்போதே கேளுடா..

✍️செ. இராசா

07/02/2019

வேகமாய் முடிப்பவனுக்கே
விரைவாய்க் கிடைக்கிறது
அதிக வேலை...
😀😀😀

வாழும் மகாத்மாவை




வாழும் மகாத்மாவை
இன்றும் சுடுகிறார்கள்
இருப்பை உணர்ந்த கோட்சேக்கள்....

அரபி நபர்.... ஆச்சரியப் பூச்சொறியும் அற்புத மனிதர்..



அதிகாரக் குவியல்
அதி காரமாய்த்தான் இருக்கும்..
அந்த இடமும்
அப்படித்தான் இருந்தது
அன்று வரை...
அந்த நபர் வரும் வரை...

ஆனால் இப்போது
அதிகாரம் இருந்த இடத்தில்
அகங்காரம் இல்லை..
அறைவாசல் வாசகங்களில்
அனுமதி மறுப்பு இல்லை..

அவரின் முன்னே
அனைவரும் அமர முடிகிறது...

அனைவருக்கும் குழம்பி வருகிறது..
அதுவும் அவர் கையால்..

ஆச்சரியமாய் இருக்கிறது
அது அந்த பழைய இடம்தானா?!!

ஆம்..
அனைவரும் இப்படி
அசத்தி விடுவதில்லை...
அனைவரும் இப்படி
ஆச்சரியம் தருவதில்லை..

அடித்துச் சொல்வேன்
அவரைப்போல் இங்கே
அவர் மட்டுமே...

அணு அணுவாய் ரசித்த
அந்த அரபி நபர்....
ஆச்சரியப் பூச்சொறியும்
அற்புத மனிதர்..

அறிவின் மிகுதியிலும்
அதிகார மிகுதியிலும்
ஆடுவோர் பலரிருக்க,
அனைத்தும் இருந்தாலும்
அகத்தில் ஏற்றாத
அவர் மட்டுமல்ல...
அனைத்து நபர்களும்
ஆண்டவனின் பிள்ளைகளே....

🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா

06/02/2019

நானும் ஓர் கவிதை எழுதிவிட மாட்டேனா?
வெந்த பூரியில்
சப்தம் வராது...

05/02/2019

முடியாதது எதுவுமில்லை



உயரத்தை அடைகிற ஆவலிலே
உலகத்தில் பலபேர் முயன்றாலும்
உள்ளத்தில் வலுவுள்ள வல்லவரே
உயரத்தை எளிதில் அடைகின்றார்!

ஒன்றை நன்றாய்க் கற்றறிந்து
ஒன்றின் வழியே சென்றாலும்
என்றும் புதிதாய்க் கற்பவரே
என்றும் வெற்றியில் நிற்கின்றார்!

தந்திர வழியினில் செல்லாமல்
தன்திற வழியினில் செல்பவரே
தன்தரம் யாதெனச் சொல்கின்றார்!
தன்னறம் அதுவென வாழ்கின்றார்!

முயற்சியில் அயர்ச்சி கொள்ளாது
முயலை ஆமை வென்றதுபோல்
முயலும் நபரே வெல்கின்றார்!
முன்னே நோக்கிப் பாய்கின்றார்!

#முயன்றால்_முடியாதது_எதுவுமில்லை

✍️செ. இராசா

01/02/2019

மௌனமே ஆனந்தம்------141வது கவிதைப்போட்டியில்-வெற்றிக் கவிதை

141வது கவிதைப்போட்டியில்
இரண்டாமிடம் பிடித்த கவிதை இது.




மௌனமே ஆனந்தம்
*******************
உதடுகள் பேசா மௌனத்தில்
உள்ளம் பேசுதல் ஆனந்தம்!
உள்ளமும் பேசா மௌனத்தில்
உள்ளது உண்மையில் ஆனந்தம்!

இதழ்கள் பேசிடும் நேரத்தில்
இதயத்தின் வார்த்தை கேட்பதில்லை
இரைச்சல் இருக்கும் இதயத்தில்
இறைவனின் வார்த்தை கேட்பதில்லை

ஒன்றில் ஒன்றாய் ஒன்றுகின்ற
ஒன்றை நன்றாய்க் கற்றிடுவோம்!
உலகில் தன்னை இணைக்கின்ற
உன்னத மௌனம் பழகிடுவோம்!

சூனிய ரகசியம் அறிகின்ற
சூட்சுமம் யாதென அறிந்திடுவோம்!
சுழலும் உலகை வெல்கின்ற
சூத்திரம் அதுவெனத் தெரிந்திடுவோம்!

எச்சில் படாத மொழிகொண்டு
எண்ண மொழியில் பேசிடுவோம்!
எங்கும் நிறைந்த இறைமொழியை
ஏகாந்த நிலையில் கேட்டிடுவோம்!

என்ன மொழியாய் இருந்தாலும்
எண்ண மொழியே உயர்வாகும்!
ஆதி மொழியாய் இருந்தாலும்
அமைதி மொழியே சிறப்பாகும்!

#மௌனம்_பழகு

✍️செ. இராசா

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2237821849870052/