07/01/2019

#நெஞ்சே_நெஞ்சே (பாடலாக)--(குறளின் குரலில்)







நெஞ்சே...நெஞ்சே...
எந்தன் நெஞ்சே..
நஞ்சினை நீயும் தந்தாய்
ஏன்தான் நெஞ்சே...?!

நெஞ்சே நெஞ்சே....
எந்தன் நெஞ்சே
கொஞ்சமும் கருணையின்றிக்
கொன்றாய் நெஞ்சே!

அன்பிலார் வாசம் சென்று
அவரையே நேசம் கொண்டு
என்னையும் ஏதோ செய்தாய்
ஏன்தான்....சொல்லு நெஞ்சே...

கண்ணிலே காணும் போது
தன்னிலை மறக்கச் செய்து
என்னையும் தவிக்க விட்டாய்
ஏன்தான்.....சொல்லு நெஞ்சே..

✍️செ. இராசா

*************
குறள் 1291:
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

விளக்கம்:
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் (நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?.

********

06/01/2019

#பகுத்தறிவே_மெய்யறிவு




எழுநூற்று எழுபது கோடியிலே
எவருக்கும் தனியொரு அடையாளம்!
எத்தனை கோடிகள் மிகுந்தாலும்
எவரையும் சுமந்திடும் பூகோளம்!

ஒன்றாய் நமக்குத் தெரிந்தாலும்
ஒவ்வொரு கையிலும் தனிரேகை!
கோடாய் நமக்குத் தெரிந்தாலும்
கோளத்தின் மேல்தான் வாழ்க்கை!

புவியின் மேற்புறம் இருப்பவரோ
வெளியை மேற்புறம் காட்டுகையில்
புவியின் கீழ்ப்புறம் உள்ளவரும்
வெளியை மேற்புறம் காட்டுகின்றார்!

எங்கும் உள்ள பெருவெளியை
எப்படி மாயை மாற்றியது?!!
அறிவுடன் பகுத்து ஆராய்ந்தால்
அறிவது இங்கே சாத்தியமே...!!!

#பகுத்தறிவே_மெய்யறிவு
#அறிவே_தெய்வம்

அப்பப்பா என்கிற ரகமே..
















தருபவர் இங்கேக் குறைவு...
தரப்படும் கவிதைகள் அனைத்தும்
தரத்துடன் இருப்பதும் அரிது...7
தலைக்கனம் இல்லாக் கவிதை

அதிலே அப்பா கவிதை
அப்பப்பா என்கிற ரகமே...
அதனை தினமும் படித்தால்
அகத்தில் வருவது சுகமே...

வேட்டி


தறியில் நெய்ததை வெட்டி
தமிழன் கட்டினான் வேட்டி

தனியாய்த் தரணியில் காட்டி
தமிழனை உயர்த்திடும் வேட்டி

கோடையில் குளிர்தரும் ஊட்டி
வாடையில் நலந்தரும் வேட்டி

எங்கும் எவருக்கும் போட்டி
ஏனில்லை அதிலே வேட்டி?!

அன்னியர் உடையினைக் காட்டி
அழியுதோ நம்மிடம் வேட்டி?

வேற்றின உடைகளை ஓட்டி
கட்டுவோம் தமிழராய் வேட்டி!

உள்ளத்தில் மாண்பினைக் கூட்டி
உடுத்துவோம் தமிழராய் வேட்டி!

✍️செ. இராசா

#பொய்முகங்கள்


மையிருட்டில் பிறந்த மழலைக்கு
வைக்கின்ற பெயர் சிகப்பியாம்
வீட்டில் பொய்முகம்

சலுகைகள் நிறைய வருமென்றால்
சாதியின் பெயரை மாற்றுவானாம்
பள்ளியில் பொய்முகம்

பரீட்சைக்குத் தயாராய் வந்தாலும்
படிக்கவே இல்லை என்பானாம்
கல்லூரியில் பொய்முகம்

அனுபவம் இல்லை என்றாலும்
அனுபவ மிகுதிபோல் காட்டுவானாம்
அலுவலகத்தில் பொய்முகம்

எல்லா பழக்கமும் இருந்தாலும்
எந்த பழக்கமும் தெரியாதாம்
திருமணத்தில் பொய்முகம்

காசிற்கு ஓட்டை விற்றுவிட்டு
கையூட்டு அரசியல் என்பானாம்
வாக்காளரின் பொய்முகம்

சிந்தையில் பொய்யாய் வாழ்ந்துவிட்டு
சிவலோகப் பதவி அடைந்தானாம்
மரணத்தில் பொய்முகம்

#பொய்முகங்கள்

05/01/2019

இவனுக்கு வேலையே இல்லையா?
(இதை இப்படியும் கேட்கலாமே) 

இவன் எப்படி நேரம் ஒதுக்குகிறான்?

04/01/2019

ஓர் அழகிய பயணமே....


கோப்பைக்குள் மூழ்கியோ அல்லது
கோவிலுக்குள் இறங்கியோ
இடையில் கிறங்கியோ அல்லது
இசையில் மயங்கியோ
சுயத்தை மறக்கவோ அல்லது
சுயத்தைத் தேடியோ
..........
.........
ஏதோ ஒன்றிற்காய்
ஏங்குமிந்த வாழ்க்கை
ஓர் அழகிய பயணமே....

03/01/2019

தேடிச்சோறு நிதம் தின்று



தேடிச்சோறு நிதம் தின்று
ஓடியாடி மண்ணில் வீழ்ந்து
உயிரைத் துறந்திடவா வாழ்க்கை?- சொல்
உயிரைத் துறந்திடவா வாழ்க்கை?

தன்னைப் பெரிதென்று நினைத்து
எங்கும் குறையென்று கதைத்து
காலம் கடத்துவதா வாழ்க்கை- சொல்
காலம் கடத்துவதா வாழ்க்கை?!

கள்ளைத் தினந்தேடிச் சுவைத்து
கட்டில்சுகம் பெரிதாய் நினைத்து
காட்டை நெருங்குவதா வாழ்க்கை- சொல்
காட்டை நெருங்குவதா வாழ்க்கை?

--செ. இராசா
சிந்தையில் உதித்த கருவும்- விந்தை
சிந்தயில் உதித்த கருவும் விந்தையே...!!!

31/12/2018

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2019


அன்று முதல் இன்று வரை
அனைவருமே சொல்லுவது;
இன்று முதல் இனியென்றும்....
இப்படி அப்படி இருப்பதென்று

ஆனாலும்... அதையெல்லாம்
அப்படியே ஒதுக்கிவிட்டு..
அன்று சொன்ன வார்த்தைகளே
இன்று(ம்) மீண்டும் வருகிறது..

இன்று இங்கே உள்ள கணம்
இனியும் இங்கே வந்திடுமா?!
எண்ணம் இங்கே திண்ணமன்றி
எதுவும் இங்கே மாறிடுமா?!!

இன்று முதல் இனியென்றும்
இதையே மீண்டும் சொல்லாது
ஒன்றில் ஒன்றாய் ஒன்றுகின்ற
உயர்ந்த ஒன்றைப் பற்றிடுவோம்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
2018——>2019💐💐💐💐💐💐