11/07/2017

விழியால் கதை எழுது--களஞ்சியம் கவிதைப் போட்டியில் (61) பங்குபெற்ற கவிதை


என்னவளின் கண்ணழகை
என்னவென்று சொல்லிடுவேன்?!
எழுத்துக்களால் அவ்வழகை
எப்படிநான் எழுதிடுவேன்?

விழியால் கதை எழுதும்
விந்தையினைச் சொல்லவா?- அவள்
விழிபேசும் கவிதையினால்
வியந்த கதை சொல்லவா?

விழிக்கின்ற நேத்திரங்கள்
விடிவெள்ளி அல்லவா?-அவள்
சொக்குகின்ற பார்வைகளோ
சொர்க்கங்கள் அல்லவா?

கண்களிலே பேசும்மொழி
காவியங்கள் அல்லவா?!-அவள்
காதல்மொழி பேசுகின்ற
காரிகையவள் அல்லவா?!

வில்புருவ விழியழகி
என்னவளே அல்லவா?-அவள்
விழிஇரண்டைப் போற்றுவதும்
என்கடமை அல்லவா?!

------செ. இராசா------

திருதராஷ்டிரன்


பாரதக் கதையினில் ஒரு பாத்திரம்!
பிறந்தது புகழ்பெற்ற குரு கோத்திரம்!

பெற்றது பார்வையற்ற இரு நேத்திரம்!
பெற்றதும் பாசமற்ற நூறு தரித்திரம்!

கற்றது பீஷ்மர்வழி பல சாத்திரம்!
கற்காதது தர்மம் அறம் மாத்திரம்!

பாண்டவர்மேல் கொண்டது பல ஆத்திரம்!
பாழ்சகுனியால் கண்டது பல சூத்திரம்!

புறக்கண்கள் மறைந்ததில் இல்லை விசித்திரம்!
அகக்கண்களும் மறைந்ததுதான் அவர் சரித்திரம்!

எனக்குத் தெரிஞ்சதெல்லாம்-----களஞ்சியம் கவிதைப் போட்டி-60 (வெற்றிக் கவிதை)


60வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் முதலிடம் பிடித்த கவிதை
வாய்ப்பளித்த சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும் கவிதையை தெரிவு செய்த நடுவர்Kavignar Vaalidhasan
அவர்களுக்கும் ஊக்கம் தந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

(மூன்று கவிதைகள் எழுதினேன். தேர்வானது எதுவெனத் தெரியவில்லை. மூன்றையும் பதிவிடுகிறேன்)

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1890145117971062/

 



(தலைப்பு-1, கவிதை-3)
தலைப்பு: "எனக்குத் தெரிஞ்சதெல்லாம்"
************************************
கவிதை-1:

எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
எழுதிடவே எண்ணமுற்று
எடுத்தேன் நான் கைப்பேசி.
என்னவென்று சொல்லிடுவேன்
என்னவளின் முகமதிலே
ஏளனமாய் நகைக்கிறதே!

என்ன இவன் எழுதிடுவான்?
எதைப்பற்றி விளக்கிடுவான்?
என்றெண்ணி தன்னுள்ளே
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எழுத்துலகின் ஜாம்பவான்கள்
எழுதுகின்ற தளமதிலே
எளியோனும் எழுதுவதால்
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எம்பாட்டன் வள்ளுவரும்
எழுதாத எழுத்தினையா
எம்புருசன் எழுதிடுவான்
என்றெண்ணி அதனாலே
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எம்பாட்டி ஔவையாரும்
எழுதிவைத்த பாடல்போல
எள்ளவும் என்றேனும்
எழுதாத திறனறிந்து
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எழுத்துலகின் கவியரசர்
எழில்மிகுந்த கண்ணதாசர்
எழுதிவைத்த பாடல்போல
எழுதிடாத தரமறிந்து
ஏளனமாய் நகைக்கிறதோ?!

எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
என்தமிழில் எழுதிடுவேன்
என்னவளே நகைக்காதே!
----------------------------
கவிதை-2
-----------------------------
எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
எள்ளளவு தானென்று
எவ்வுள்ளம் அறிகிறதோ
அவ்வறிவே அறிவாகும்!

அவ்வறிவில் உரமிட்டு
நுண்ணறிவாய் மாற்றிடவே
இறையறிவாம் பேரறிவு
எளிதினிலே புலனாகும்!

மழைநீரின் நிறம்மாறி
மண்நிறத்தைப் பெறுவதுபோல்
பேரறிவும் நிஜம்மாறி
சிற்றறிவாய் தோன்றிடுமே!

கரைபடிந்த சிற்றிவால்
கலங்கியுள்ள இறையறிவு
முறையான பயிற்சியினால்
முயன்றாலே தெளிவாகும்!

எனக்குத் தெரிஞ்சது எல்லாமே
எறும்பின் அளவே என்றறிந்தோர்
அறிவின் எல்லையை விரித்திடவே
அடைவது இறைவனின் நிலையாகும்!

அறிவைக் கூட்டி அன்பைப் பெருக்கி
அகிலம் முழுவதும் இறையைக் கண்டு
அமைதிக் கடலாய் மனத்தை மாற்றி
அறிவே தெய்வம் என்றுணர்வோம்!
----------------------------------
கவிதை-3
----------------------------------
எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
எளிமையும் நேர்மையுமாய்
வாழ்கின்ற வாழ்வினிலே
வசந்தங்கள் கோடி என்பேன்!

இவ்விரண்டு குணங்களையும்
தன்னிரண்டு கண்களாக்கி
இந்தியாவை சிறக்க வைத்த
எத்தனையோ தலைவர்களில்
இதயத்தில் வாழுகின்ற
இருபெரும் தலைவர்களை
இங்கே நானும் எழுதுகின்றேன்!

முதலாமவர் யாரென்றால்?

மேலாடை துறந்தவராய்
ஓராடை தரித்தவராய்
எளிமை நேர்மை வடிவான
சத்தியத்தை பாதுகாத்த
உத்தமரில் உயர்ந்தவராம்
மஹா ஆத்மா காந்தியாவார்!

இரண்டாமவர் யாரென்றால்?

சொந்தவீடு இல்லாதவராய்
சொத்து எதுவும் சேர்க்காதவராய்
எளிமை நேர்மை வடிவான
படிக்காத மேதையான
கர்மவீரர் காமராசர்
கருப்பு நிற காந்தியாவார்!

இரண்டு பேரும் கடைபிடித்த
இரண்டு கொள்கை நமக்கிருந்தால்
இறவா புகழும் அடைந்திடலாம்!
எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
எளிமையும் நேர்மையுமே....
எழுதிவிட்டேன் இத்தளத்தில்
எளிமையோடும்! நேர்மையோடும்!
----------------------------------
செ. இராசா

https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1890145117971062/ 

ரயில் பயணத்தில் வாழ்க்கைப் பயணம்


பணத்தின் அளவைப் பொறுத்தேதான்
பயணிக்கும் வகுப்பு முடிவாகும்!
பணத்தின் இருப்பு கனத்திருந்தால்
பயணிக்கும் வகுப்பு முதலாகும்!

முன்வினை அளவினைப் பொறுத்தேதான்
நன்மையும் தீமையும் நடந்தேறும்!
முன்வினை நல்வினை செய்திருந்தால்
நன்மையும் நமக்காய்க் காத்திருக்கும்!

பயணம் செய்கின்ற அனைவருமே
பயணத்தை நாளும் தொடர்கின்றார்!
பயணத்தின் அலுப்பைப் போக்கிடவே
பாடியும் ஆடியும் மகிழ்கின்றார்!

பாடலை ரசித்திடும் அனைவருமே
பாடலில் காலத்தை மறக்கின்றார்!
பாடலின் ராகம் முடியுமுன்னே
பாதியில் சிலரோ செல்கின்றார்!

பயணத்தின் தூரம் முடியுமுன்னே
பிறருக்கு தர்மம் செய்திடுவோம்!
பண்பும் அன்பும் குறையாமல்
பயணத்தை இனிதாய் கழித்திடுவோம்!

செ. இராசா

02/07/2017

நியாயம்- அநியாயம்


அன்பிற்காக சுகத்தினைத் துறத்தல் நியாயம்!
சுகத்திற்காக உறவினைத் துறத்தல் அநியாயம்!
உறவிற்காக தன்னலம் துறத்தல் நியாயம்!
தன்னலத்திற்காக உண்மையைத் துறத்தல் அநியாயம்!
உண்மைக்காக செல்வத்தைத் துறத்தல் நியாயம்!
செல்வத்திற்காக நட்பைத் துறத்தல் அநியாயம்!
நட்பிற்காக உயிரைத் துறத்தல் நியாயம்!
உயிருக்காக மானத்தைத் துறத்தல் அநியாயம்!
மானத்திற்காக பதவியைத் துறத்தல் நியாயம்!
பதவிக்காக கருணையைத் துறத்தல் அநியாயம்!
கருணைக்காக எதையும் துறத்தல் நியாயம்!
எதற்காகவும் அன்பைத் துறத்தல் அநியாயம்!

இரண்டு கோடுகள்


வாழ்க்கை வாழும் முறைமையினை
வரைந்திடும் இரண்டு கோடுகளால்
திரைப்படம் ஒன்றின் வழியாக
பழைய தலைமுறை அறிந்ததுபோல்
புதிய தலைமுறை அறிந்திடவே
உங்களில் ஒருவன் முயல்கின்றேன்!

கோடு ஒன்றை வரைந்துவிட்டு
கோட்டின் அருகில் மறுபடியும்
மற்றொரு கோட்டை வரைந்திடவே
இரண்டாம் கோட்டின் உயரத்தால்
முதலாம் கோட்டின் உயரமும்
சிரிதாய் தெரிந்திடும் அக்கணமே!

ஒப்பீட்டு முறையைக் கையாண்டே
உலகம் உயரத்தைக் கணிப்பதையே
இரண்டு கோட்டில் விளக்குவதாய்
உணர்ந்தேன் உண்மைப் பொருளாக!
உள்ளத்தில் பதிந்த உட்கருத்தை
உரைத்திட இங்கே முயலுகின்றேன்!

அறிவில் சிறந்த அறிஞர்களின்
அறிவின் லட்சியம் அதுவாக
அமைப்போம் பெரிய கோட்டினையே!
அறிவில் என்றும் உயர்ந்தவரை
அகத்தில் என்றும் உயர்வாக
அமர்ந்திடச் செய்வோம் அழகாக!

செல்வம் குறைந்த வறியவரின்
செல்வத்தை நினைத்து பார்த்திடவே
வரைவோம் சிரிய கோட்டினையே!
நமக்கும் கீழே உள்ளவரை
நினைத்துப் பார்த்திடச் சொன்னவரின்
வரிகளை நினைப்போம் ஆழமாக!

செ. இராசா

கவிஞன் --கவிஞர் வாழ்த்து


கசக்கிப் பிழிந்திட முயலாமல்
கசிந்து உருகிடும் எண்ணங்களை
கவிதையில் பதித்திடும் கவிஞர்களின்
கர்மத்தின் சிறப்பை யாதென்பேன்?

கவிதைமீது காதல் செய்து
காதலிபோலே ஊடல் செய்து
கவிதையில் கொஞ்சிடும் கவிஞர்களின்
காதல் பக்தியை யாதென்பேன்?

பலருக்கு சிலவேலை உதிக்கின்ற
சிலருக்கு முழுவேலை மலர்கின்ற
கவிதைகள் தருகின்ற கவிஞர்களின்
கற்பனை சக்தியை யாதென்பேன்?

கதைக்கும் கவிதை எழுதுகின்ற
கவிதைக்குள் கதையைச் சொல்லுகின்ற
தமிழினம் காத்திடும் கவிஞர்களின்
தமிழின் செழுமையை யாதென்பேன்?

ஞானக் கருத்தைக் கவிதையிலே
ஞாலம் பயனுறச் சொல்கின்ற
ஞானம் நிறைந்த கவிஞர்களின்
ஞான திருஷ்டியை யாதென்பேன்?

தூரிகை தூக்கிடும் ஓவியன்போல்
உளியைப் பிடித்திடும் சிற்பியைப்போல்
வார்த்தைகள் வார்க்கின்ற கவிஞர்களும்
வாழ்வது தமிழின் சிறப்பென்பேன்!

தங்கமடி நீ எனக்கு----களஞ்சியம் கவிதைப் போட்டி-59 (வெற்றிக் கவிதை)



(அடியேனுக்கு இரண்டாம் இடம் அளித்தமைக்கு, நடுவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்)



அத்தைமடி மெத்தையிலே
அல்லிக்கொடி ஆனவளே!
ஆசைக்கொடி நீ உறங்க-இந்த
அத்தான்மடி ஏங்குதடி!

தங்கமடி நீ எனக்கு
தங்க மடி நான் உனக்கு!

---------------------------------

கண்டபடி பேசிநீயும்
திட்டிக்கடி இஷ்டம்போலே
கட்டிப்பிடி வேலையிலே....
கவிதையடி ஆகுமடி!

தங்கமடி நீ எனக்கு
தங்க மடி நான் உனக்கு!

--------------------------------------

அதிர்ஷ்டமடி இவனுக்கென்று
சொல்லுதடி இவ்வுலகம்...
உள்ளபடி சொல்வதாலே
உண்மையடி ஊர் வார்த்தை!

தங்கமடி நீ எனக்கு
தங்க மடி நான் உனக்கு!

--------------------------------------

கண்அடி விழியலகால்- பிறர்
கண்ணடி பட்டதன்றோ?!
குறளடி அழகுபோல- உன்
குரலடி உள்ளதன்றோ?!

தங்கமடி நீ எனக்கு
தங்க மடி நான் உனக்கு!

----------------------------------
செ. இராசா


https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1861102527541988/

சிற்பியையும் சிற்பக்கலையையும் வாழ்த்திடுவோம்



கல்லில் ஒளிந்த கடவுளையும்
கண்ணில் தெரியச் செய்கின்ற
கருணைக் கடலாய் உள்ளவனை
கரங்களால் வணங்கிட வேண்டாமா?!


மனதில் உதித்த மறைபொருளை
கனவில் தோன்றிய மனஉருவை
கற்பனை கலந்து வடிக்கின்ற
கலையைப் போற்றிட வேண்டாமா?!

 வள்ளுவன் சிலையை வடித்தவனின்
ஒளவையை அழகுறச் செய்தவனின்
கண்ணகி கோபத்தைச் சொன்னவனின்
சிறப்பினை வாழ்த்திட வேண்டாமா?!

வாழ்க சிற்பிகள்! வாழ்க வளமுடன்!
வாழ்க சிற்பக்கலை! வாழ்க வளமுடன்!


(புகைப்படத்தில் உள்ள வள்ளுவர் சிலை அடியேன் வீட்டில் நிறுவியுள்ளேன் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்தி, இச்சிலை செய்த சிற்பிக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்திக்கொள்கிறேன். நன்றி ஐயா)

தமிழ்ப்பட்டறை



எழுத்துத் தமிழ் சிறப்புறவே
தமிழ்ப்பட்டறைத் தளம்மூலம்
எழில்தமிழ் வளம்காக்கும்
எந்தமிழ்ச் சான்றோர்களை
என்னசொல்லி வாழ்த்திடுவேன்?!

எல்லோருக்கும் ஒரு மூச்சு!
எப்பொழுதும் தமிழ் மூச்சு!
என்நேரம் தமிழ் தாகம்!
எல்லோர்க்கும் ஒரே நோக்கம்!
எல்லாமும் இருந்தாலும்
எங்கேயும் கர்வமில்லை!

எப்படி முடிந்ததென்று
எனக்குள்ளே வியக்கின்றேன்!
எளிமையும் நேர்மையும்
எந்தமிழர் குணமன்றோ?!
எள்ளவும் ஐயமில்லை
எதுவும் சாத்தியமே!

எம்மதமும் சம்மதமாய்
எல்லோரும் தமிழ்மதமாய்
எடுத்தாளும் ஆளுமையால்
எழுத்துப்பட்டறை ஆகியதோ?!
எத்தளமும் கொள்ளாத
எழுச்சியுடன் சிறக்கிறதே!!!

என்தமிழ் உறவுகள்
என்றென்றும் சிறப்புறவே
என் மனமார வாழ்த்துகின்றேன்!

தமிழ்ப்பட்டறைத் தலைவரையும்
தமிழ்ப்பட்டறைத் தளத்தினையும்
என் மனம் மொழி இரண்டாலும்
என்வழியில் வாழ்த்துகிறேன்!
எம்சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்!

எல்லோரும் வாழ்க வளமுடன்!
எல்லோரும் வாழ்க வளமுடன்!
எல்லோரும் வாழ்க வளமுடன்!

செ. இராசா