22/06/2018

மறதியின் முரணா......?

மறக்க வேண்டியவை
மறக்காமல் தொடர்வதும்
மறக்கவே கூடாதவை
மறந்து போவதும் மறதியின் முரணாகும்

20/06/2018

புனித ரமலான்-110வது களஞ்சியம் கவிதைப் போட்டி (வெற்றிக்கவிதை)



கிடைத்த இடம்: இரண்டாமிடம்
நடுவர்_________:திரைப்படப் பாடலாசிரியர், திரு. நிகரன் அவர்கள்
அமைப்பு_______: தமிழ்ப்பட்டறை
(8 இலக்கியப் பேரவைகள் உள்ளது)
தலைவர்_______: திரு. சேக்கிழார் ஐயா
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

புனித ரமலான்
**************
🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙
இனிய இசுலாம் மார்க்கத்திலே
புனித ரமலான் மாதத்திலே
நோன்பு நோற்கும் அனைவருமே
என்றும் ஆண்டவர் பிள்ளைகளே

அல்லா அருளியத் திருமறையை
எல்லா மனிதரும் அறிந்தாலே
பொல்லாத் துயரங்கள் எல்லாமே
இல்லா தென்றே ஓடிடுமே...

முகமது நபிகள் சொல்லியதை
அகமதில் நிறுத்தி நடந்துகொள்ள
சகமது அளவின் துயர்கூட
நகமது அளவாய் மாறிடுமே...

மக்கா நோக்கியத் தொழுகையினை
எக்கா லத்திலும் தவறாதோர்
எல்லா வளமும் பெற்றிடவே
எல்லாம் வல்லோன் அருள்வானே....

அன்பே சிவமென அறிந்தோரே
அன்பே இயேசுவாய்ப் புரிந்தோரே
அன்பே அகிலமாய்க் காண்போரே
அல்லா உறவென்று நாமறிவோம்!

✍️செ. இராசா

🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

பிற்சேர்க்கை:

எனது குரலில்

https://youtu.be/1wbasz8IMok

என் நிறத்து ராத்திரி





என் நிறத்து ராத்திரியும்
கண் திறக்கும் நேரத்திலே
தேனெடுக்கும் தேனியைப்போல்
தேனீரை நான் ருசிக்க....
அப்போது சுட்ட படம்
எப்படீங்க உள்ளது?!




மனிதநேயம்


கடவுள் பாதி.... மிருகம் பாதி
கலந்து செய்த கலவைகளாய்
மண்ணில் இங்கே பல உயிர்கள்
அங்கும் இங்கும் அலைகிறதே!

ஆறறிவின் மகத்துவமாய்
அன்பு கருணைப் பெருகினால்
மனிதரென்ற நிலை உயர்ந்து
புனிதரென்று மாறுமே!

ஆறறிவை இழந்தவராய்
அறங்களின்றி விளங்கினால்
மனிதரென்ற நிலை இழந்து
மிருகமென்று மாறுமே!

*************************************
ஆம்......மனிதநேயம் இல்லாத உயிரினங்கள் இனி மனித இனத்தில் சேராது
************************************

அதிகாலை


சுத்தமான பிராணவாயு
..........சுத்திவரும் காலை
சுத்தவெளி சக்திவந்து
..........சுறுசுறுப்புத் தருமே!

சப்தமின்றி ஊருசனம்
..........உறங்குகின்ற காலை
சப்தம்போட்டு பறவையினம்
..........சுத்திச்சுத்தி வருமே!

சந்திரனும் சூரியனும்
...........பணிமாற்றும் பொழுதே
சந்திரனால் வந்தமர்ந்த
...........பனிமாய்ந்து விடுமே!

சிந்திக்கின்ற மனிதமூளை
..........எந்திரிக்கும் பொழுதே
எந்திரத்தின் ஓசைகளும்
..........மெல்லமெல்ல எழுமே!

19/06/2018

என் ஆன்மீக அனுபவம்


ஐந்தாறு மாதங்களாய்
அலைந்தேதான் திரிந்தேன் நான்
அச்சமயம் எனக்கான
நற்சமயம் அமையவில்லை...

வேலையில்லா பட்டதாரி
வேதனையில் உழல்கையிலே
அறிவுரை வள்ளல்களோ
அதிகமாக நோகடிப்பர்....

அக்கொடுமை ஒன்றுதானே
அந்நேரம் பெருங்கொடுமை
அதிலிருந்து தப்பிக்கவே
ஆண்டவனைத் தேடிச்சென்றேன்....

கஷ்டம் மட்டும் இல்லையெனில்
கடவுளை யார் கண்டிடுவார்?!
சகல கஷ்டம் தீரவேண்டி
சபரிமலை போயி வந்தேன்...

மலையிரங்கி வந்ததுமே
மகத்தான ஆச்சரியம்
மனசெல்லாம் குளிரும்படி
மடலில்வந்த ஒரு கடிதம்

மின்னஞ்சல் திறந்தவுடன்
என்நெஞ்சில் பெருங்குழப்பம்...
எந்நாட்டை வெறுத்தேனோ
அந்நாட்டில் மீண்டும் வேலை....

வேண்டா வெறுப்போடு
வேண்டாம் என்றாலோ
நானே வேண்டுமென்று
மீண்டும் மீண்டும் அழைக்கின்றார்...

விமானச் சீட்டுக்கூட
வீட்டிற்கே அனுப்பி வைத்தார்
என்னடா புதுமையென்று
ஏற்றுக்கொண்டு ஏறிவிட்டேன்...

அங்கேதான் ஆச்சரியம்
வண்டிகட்டி நின்றதன்றோ?!!
கொடுத்த அறைக்கதவை
படக்கென்று நான் திறந்தால்....

அங்கேயும் சிரிக்கின்றார்
என் அப்பன் அய்யப்பன்...
அப்பப்பா........என் சொல்வேன்
அப்படியே உறைந்துவிட்டேன்

அடியேனின் பொய்க்கணக்கு
அன்றோடு தோற்றதன்றோ?!
ஆண்டவனின் மெய்க்கணக்கு
அன்றேதான் புரிந்ததன்றோ?!

சுவாமியே சரணம் ஐயப்பா

✍️செ. இராசா

ஒரு குழந்தையின் கேள்வி


நீ பிறந்த காரணத்தை
நீயே அறியுமுன்னே
என்னை ஏன் பெற்றடுத்தாய்
சொல்லு தந்தையே?

குடிக்கவும் கஞ்சி இல்லை
படிக்கவும் பணம் இல்லை
குடிக்கமட்டும் காசிருக்கா
சொல்லு தந்தையே?

துணிக்கும் வழி இல்லை
துணைக்கும் யாருமில்லை
உனக்குமட்டும் குடிக்கனுமா
சொல்லு தந்தையே?

மனமே எல்லாம்



அதே கண்கள்தானே
கடவுளையும் காண்கிறது
கண்டதையும் காண்கிறது

அதே கைகள்தானே
அறமும் செய்கிறது
அசிங்கமும் செய்கிறது

அதே வாய்தானே
போற்றவும் செய்கிறது
தூற்றவும் செய்கிறது

அதே மெய்தானே
தொழவும் செய்கிறது
தொடவும் செய்கிறது

அதே மனம்தானே
அதையும் செய்கிறது
இதையும் செய்கிறது

ஆம்....
செயலையும் தூண்டி
செயலோடு ஒன்றி
செயலுக்கு சாட்சியுமான
அதே மனமே எல்லாம்....

மனம்போல் வாழ்வு......

18/06/2018

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்==செல்வி ரித்திகா



அன்பையே ஆதாரமாக்கி
ஆரம்பித்த மணவாழ்வில்
இடர்கள் சூழ்ந்தாலும்
ஈகையை நீர் விடவில்லை....

உண்மையான உன் வாழ்வில்
ஊறு நிறைய வந்தாலும்
எழிலரசி கிருத்திகாவால்
ஏறுபோன்று நடை நடந்தாய்....

ஐங்கரனின் அருளாலே
ஒரு மகனும் ஒரு மகளும்
ஓவியமாய் பெற்றெடுத்து
ஓளதாரியப் புகழ் பெற்றாய்...

அஃதெல்லாம் சிறப்பு என்றால்
அஃதைவிட வெகு சிறப்பு
இன்று நீ செய்ததன்றோ?!!!

ஆம்....

இருக்கும்போது ஈவதிலே
இல்லை ஐயா சிறப்பு
இல்லாதபொழுதினிலும்
ஈந்தாயே அது சிறப்பு....

அன்பு மகள் ரித்திகாவின்
அழகான பிறந்தநாளில்
பள்ளிக் குழந்தைகளின்
பசிபோக்க உணவளித்து

எட்டாவது பிறந்தநாளில்
எட்டா உயரம் தொட்டுவிட்டீர்
எப்படி நான் வாழ்த்திடுவேன்?!!
எப்படி நான் போற்றிடுவேன்?!!

தமிழாலே வாழ்த்துகின்றேன்!
தமிழாலே வணங்குகின்றேன்!

வாழ்க வளமுடன் மாப்பிள்ளை Ramesh M
வாழ்க வளமுடன் தங்கை கிருத்திகா
வாழ்க வளமுடன் செல்வன் ரதிஷ்
வாழ்க வளமுடன் செல்வி ரித்திகா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

மருமகள் #ரித்திகா!

லப்டப்


(ஆங்கிலம் கலந்தமைக்கு தயவுகூர்ந்து மன்னிக்கவும்)

தனிமையிலே என் இதயம்
“லப்டப் லப்டப்” என்றதடி

நெருங்கி நீ வந்தபோது
“லவ்குட் லவ்குட்” (love good) என்றதடி

நேசத்தை நீ ஏற்றபோது
“லவ்செட் லவ்செட்” (love set) என்றதடி

அன்போடு விரல்பிடிக்க
“லவ்டச் லவ்டச்” (love touch) என்றதடி

அடுத்த அடி எடுத்து வைக்க
“லவ்பிக்ஸ் லவ்பிக்ஸ்” (love fix) என்றதடி

திருமணம் முடிந்தவுடன்
“லவ்கட் லவ்கட்” (love cut) என்றதடி

நீ பேச நான் கேட்க
“லவ்பேட் லவ்பேட்” (love bad) என்குதடி

மாறி மாறித் துடித்ததினால்
மனதெல்லாம் காயமடி....

மனதாரச் சொல்லுகின்றேன்
லப்டப்பே நல் ஓசையடி