காவற் பணிதுறந்து
......காரிய நோக்கத்தின்
ஆவலில் மாறாமல்
......அன்றொருநாள்- பூவனமாய்
வெற்றி இயக்குநரின்
......நேசமிகு சீடராய்க்
கற்றறிந்து செய்தார்
.....கலை!
கற்றகலை காட்டவொரு
....காலம் கனிந்துவிட்டால்
கற்றதெல்லாம் விற்பதையேக்
.....கண்டுள்ளோம்- பற்றின்றி
தாமறிந்தத் துன்பத்தைத்
....தள்ளிவட எண்ணாமல்
நாமறியச் செய்யவைத்தார்
....நன்கு!
வெள்ளித் திரையோங்க
.....வெற்றிபல தந்திடவும்
புள்ளி பெரிதென்றே
......போற்றிடவும்- உள்ளத்தால்
மக்களின் சார்பாக
......மன்றத்தில் வாழ்த்துகின்றேன்!
திக்கெட்டும் வெல்வீர்
.....சிறந்து
#எண்ணைத்தேடி (#என்னை அல்ல)
திரைத்துறையில் உள்ள மிகப்பெரிய பிரபலங்களின் கைப்பேசி எண்ணை வாங்குவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவர்களுக்கு இருக்கும் பளுவான வேலையின் இடையில் தேவையற்ற அழைப்புகள் வந்து தொந்தரவு செய்வதே அதில் மிக முக்கியமான காரணம்.
எப்போதெல்லாம் ஊருக்குப் போகிறேனோ, அப்போதெல்லாம் சினிமாவில் எனக்குத் தெரிந்தவர்கள் அனைவரையும் சென்று சந்திப்பது என் வழக்கம். இருப்பினும், உச்சத்தில் உள்ளவர்களின் எண் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. அவர்களின் மேலாளரின் எண் கிடைத்தாலும், அவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வை வேறுவிதமாக இருக்கும்.
கடந்த மூன்று நாட்களாக கத்தருக்கு வருகை புரிந்திருந்த இயக்குநர் தமிழ் ஐயா அவர்களைத் தொடர்ந்து சந்தித்தாலும், கூட்ட நெரிசலில் அவரிடம் கைப்பேசி எண்ணைக் கேட்க முடியவில்லை. இவ்வளவிற்கும், அவரின் மனதில் நன்கு பதியும் அளவுக்கு அடியேன் உரை நிகழ்த்தியிருந்தேன் (அப்படித்தான் நினைக்கிறேன்); இருப்பினும் ஒரு தயக்கம் இருந்தது. அவரே என்னிடம், "உங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள்" என்று கூறியிருந்தார். அதற்கு எண் வேண்டுமல்லவா? சரி, "ஊருக்கு வந்தால் சந்திப்போம்" என்றும் பேசியிருந்தோம். அதற்கும் எண் வேண்டுமே!
சரி... முக்கியமானவர்களிடம் கேட்டால், "சிலரிடம் இந்திய எண் இல்லை" என்றார்கள். ஒருவரோ, தமக்கு எண் தெரிந்திருந்தும் வேறு ஒரு நபரிடம் கேட்டு வாங்கும்படி பணிவன்புடன் கூறினார் (ஆஹா... மரியாதையாக மறுத்த விதம் அருமை தம்பி, நல்லா வருவீங்க!).
இந்த விஷயத்தைக் கூறியவுடனே, எனது நண்பர் ராஜ்குமார், "சார், நீங்கள் வாருங்கள்; எனக்கு விமான நிலையத்திற்கு உள்ளேயே எங்கு வேண்டுமானாலும் செல்லும் அனுமதிப் பாஸ் (Pass) இருக்கிறது. நான் சென்று அவரிடம் கேட்டு வாங்கித் தருகிறேன்" என்று என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் போய்ச் சேர்ந்த பின்புதான் தமிழ் ஐயா வந்தார். அவர் எங்களைப் பார்த்து, "வாங்க கவிஞரே" என்று அன்புடன் அழைத்தார். நான் அவரிடம், "உங்கள் எண்ணைக் கேட்க சற்றே தயங்கினேன்... கிடைக்குமா?" என்றேன். அதற்கு அவர், "அட, இதில் என்ன இருக்கிறது... இந்தாருங்கள்..." என்று கூறித் தன் எண்ணைத் தந்தார்.
ஒரு எண் வாங்கவே இவ்வளவு மெனக்கெடல் என்றால் சற்றே யோசித்துப் பாருங்கள்.... எதுவும் எளிதல்ல.... ஆனால், எண்ணம் திண்ணமாக இருந்தால் எதுவும் சாத்தியமே!
No comments:
Post a Comment