ஐந்தாறு மாதங்களாய்
அலைந்தேதான் திரிந்தேன் நான்
அச்சமயம் எனக்கான
நற்சமயம் அமையவில்லை...
வேலையில்லா பட்டதாரி
வேதனையில் உழல்கையிலே
அறிவுரை வள்ளல்களோ
அதிகமாக நோகடிப்பர்....
அக்கொடுமை ஒன்றுதானே
அந்நேரம் பெருங்கொடுமை
அதிலிருந்து தப்பிக்கவே
ஆண்டவனைத் தேடிச்சென்றேன்....
கஷ்டம் மட்டும் இல்லையெனில்
கடவுளை யார் கண்டிடுவார்?!
சகல கஷ்டம் தீரவேண்டி
சபரிமலை போயி வந்தேன்...
மலையிரங்கி வந்ததுமே
மகத்தான ஆச்சரியம்
மனசெல்லாம் குளிரும்படி
மடலில்வந்த ஒரு கடிதம்
மின்னஞ்சல் திறந்தவுடன்
என்நெஞ்சில் பெருங்குழப்பம்...
எந்நாட்டை வெறுத்தேனோ
அந்நாட்டில் மீண்டும் வேலை....
வேண்டா வெறுப்போடு
வேண்டாம் என்றாலோ
நானே வேண்டுமென்று
மீண்டும் மீண்டும் அழைக்கின்றார்...
விமானச் சீட்டுக்கூட
வீட்டிற்கே அனுப்பி வைத்தார்
என்னடா புதுமையென்று
ஏற்றுக்கொண்டு ஏறிவிட்டேன்...
அங்கேதான் ஆச்சரியம்
வண்டிகட்டி நின்றதன்றோ?!!
கொடுத்த அறைக்கதவை
படக்கென்று நான் திறந்தால்....
அங்கேயும் சிரிக்கின்றார்
என் அப்பன் அய்யப்பன்...
அப்பப்பா........என் சொல்வேன்
அப்படியே உறைந்துவிட்டேன்
அடியேனின் பொய்க்கணக்கு
அன்றோடு தோற்றதன்றோ?!
ஆண்டவனின் மெய்க்கணக்கு
அன்றேதான் புரிந்ததன்றோ?!
சுவாமியே சரணம் ஐயப்பா
✍️செ. இராசா
No comments:
Post a Comment